செவ்வாய், 25 ஜூலை, 2023

தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்!

 *தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் !*   


             *நமது மனத்தினால்  எண்ணங்களினால் உலக இன்பத்தில்  வாழ்ந்த வாழ்க்கை பதிவுகள் அனைத்தும் ஆன்மாவில் பதிந்துள்ளது. அந்த அசுத்த குப்பைகள் யாவும் ஆன்மாவில் பதிவாகி ஆனமாவை தெரிய வொட்டாமல் மறைத்துக் கொண்டு இருப்பதே அசுத்த காரிய மாயா திரைகள் என்னும் அஞ்ஞான திரைகள் என்பதாகும்* 


*மனத்தால்  எண்ணங்களினால் பதிவான அசுத்த பதிவுகளான குப்பைகளை அகற்றி  சுத்தமான மனத்தையும் சுத்த எண்ணங்களையும்  உருவாக்குவதற்கு நாம் தினமும்  ஆன்மாவில் மனத்தை செலுத்தி தொடர்பு கொள்வதே தியானம் என்பதாகும்*...


*ஆனால் நாம் அவ்வாறு செய்கிறோமா என்றால் இல்லை என்பதே விடையாகும்.*

*புற வழிபாட்டில் தொடர்ந்து அலைந்து கொண்டே இருக்கிறோம்*


*ஒரே மனமானது இரண்டு நிலைகளில் செயல்படுகிறது ஒன்று அகத்திலும் ஒன்று புறத்திலும் செயல் படுகிறது*


*புறத்தில் செல்லும் மனம், அசுத்த  எண்ணங்களினால் விகாரமான குணங்களைக் கொண்டு மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை போன்ற அசுத்த குப்பைகள் ஆன்மாவில் நிறைந்துள்ளது. புறத்தில் செல்லும் அதே மனத்தை அகத்தில் உள்ள ஆன்மா என்னும் உள் ஒளியை இடைவிடாமல் தொடர்பு கொண்டால் அங்கே சுத்த உஷ்ணம் உண்டாகும், அந்த சுத்த உஷ்ணத்தினால் அசுத்த குப்பைகளை  அகற்றி விடலாம் அதாவது கரைத்து விடலாம்.*


*எவ்வாறு என்றால் ஆன்மாவில் இருந்து சுரக்கும் இறை ஆற்றல் எனும் அருள் என்ற சக்தியால் மட்டுமே அசுத்த மாயா திரைகளைக் கரைக்க முடியும்.*


*ஆதலால் புறத்தில் செல்லும் மனத்தை அகத்தில் உள்ள ஆன்மாவை இடைவிடாது தொடர்பு கொள்வதே யோகம் என்பதாகும்.* 


*அகத்தில் உள்ள ஆன்மாவில் இடைவிடாமல் மனத்தை செலுத்தும் போது ஒரு மயக்க நிலை உண்டாகும் ஆழ்ந்த மயக்க நிலை வரும்போது விழிப்புநிலை குறைந்து தூக்கம் வந்துவிடும்,தூக்கம் வராமல் விழிப்பு நிலைக்கு கொண்டு செல்வதே ஞான யோகம் என்பதாகும்*.


*நீங்கள் விழித்துக் கொண்டு இருக்கும் போது மனம் அடங்கி எண்ணங்கள் மறைந்து குணங்கள் மறைந்து சுழித்தி நிலைக்கு வர வேண்டும்*..


*எண்ணங்கள் மறைந்து குணங்கள் மறைந்த*

*அதே நேரத்தில் விழிப்புணர்வு இல்லாமல்* *சுழுத்தி நிலை இல்லாமல்  இருந்தால் தன்னை மறந்த ஆழ்ந்த தூக்கம் என்பதாகும்*


  *அதே சமயத்தில் நீங்கள் தூக்கத்தை அடக்கி ஜீவ உணர்வோடு விழிப்புணர்வுடன் தூங்காமல முழு ஓய்வில் இருப்பது ஞானயோகம்..*


*இந்திரியங்கள் கரணங்கள் ஜீவன் ஆகிய மூன்றையும் ஒன்றாக இணைத்து ஆன்மாவைத் தொடர்பு கொள்வதே ஆன்ம இன்ப லாபம் பெறும் நிலையாகும்.* 


*ஆன்ம இன்ப லாபத்தைப் பெறும் சூழல் வரும் போது தூக்கம் மயக்கம் சுழுத்தி துரியம் துரியாதீதம் போன்ற நிலைகள் எல்லாம் கடந்து ஆன்ம விழிப்புடன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடரபு கொள்வதே தூங்காமல் தூங்கி சுகம் பெறும் நிலையாகும*


   **இந்த நிலையில்  அண்ட பிண்ட பிரபஞ்ச ரகசியங்கள் யாவும் நமது அகக் கண்ணான நெற்றிக் கண்ணில் கண்டு தெரிந்து கொள்ளலாம்.*



*தன்னைத்தான் அறிந்து தன்னில் தானாயிருப்பதுதான்*

*சும்மாயிருப்பது,* *இதைத்தான் சுகமாயிருப்பதே சுகம் என்பார் வள்ளலார் !*


*நினைப்பு மறைப்பு, பிறப்பு இறப்பு, இரவு பகல் எதுவும் இல்லாததே, சுத்த மெய்ஞானம் ஞானம்,சுத்த மெய் அறிவு என்பதாகும்*

  

*எப்போதும் சத்து பெற்று சித்தி அடைந்து பேரின்ப லாபம் என்னும் நித்திய ஆனந்தமாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்*


*வள்ளலார் பாடல்!*


தூங்குகநீ என்கின்றாய் தூங்குவனோ எனது

துரைவரும்ஓர் தருணம்இதில் தூக்கமுந்தான் வருமோ


ஈங்கினிநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்

என்னுடைய தூக்கம்எலாம் நின்னுடைய தாக்கி


ஏங்கலறப் புறத்தேபோய்த் தூங்குகநீ தோழி

என்னிருகண் மணிஅனையார் எனைஅணைந்த உடனே


ஓங்குறவே நான்அவரைக் கலந்தவரும் நானும்

ஒன்றான பின்னர்உனை எழுப்புகின்றேன் உவந்தே.! 


மேலும்.....


தூங்காதே விழித்திருக்கும் சூதறிவித் தெனைஆண்ட துரையே என்னை


நீங்காதே என்னுயிரில் கலந்துகொண்ட பதியேகால் நீட்டிப் பின்னே


வாங்காதே விரைந்திவண்நீ வரல்வேண்டும் தாழ்த்திடில்என் மனந்தான் சற்றும்


தாங்காதே இதுநினது தனித்ததிரு வுளமறிந்த சரிதம் தானே.!


மேலும்.....


தூக்கங் கெடுத்தான் சுகங்கொடுத்தான் என்னுளத்தே

ஏக்கந் தவிர்த்தான் இருள்அறுத்தான் - 


ஆக்கமிகத்

தந்தான் எனைஈன்ற தந்தையே என்றழைக்க

வந்தான்என் அப்பன் மகிழ்ந்து.!


*என்னும் பாடல்கள் வாயிலாக அனுபவித்து தெரியப்படுத்துகிறார் வள்ளல்பெருமான் அவர்கள்*


*இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்* *இயங்கிக் கொண்டு இருக்கும்* *ஆன்மாவில் மனத்தை இடைவிடாது* *செலுத்தி விழிப்பு நிலையில் இருப்பதே தூங்காமல் தூங்கி சுகம் பெறும் நிலையாகும்*


*அவ்வாறு இருந்தோமானால் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே எந்நேரமும்  தோன்றா துணையாக இருந்து நம்மைக் காப்பாற்றுவார்!*


*நாம் அடைய வேண்டுவது ஆன்ம இன்ப லாபம் என்பதாகும்*


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு