புதன், 8 ஜூன், 2011

வள்ளலார் வாய் மொழி !

ஆன்மநேய அன்புடையீர் வந்தனம் 

நோவாது நோன்பு எனைப்போல் நோற்ற வரும் எஞ்ஞான்றும்
சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும் --தேவா நின 
பேரருளை எனைப்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
யார் உளர் சற்றே அறை.

என்கிறார் வள்ளலார் 

தடையுறாப் பிரமன் விண்டு ருத்திரன்,மயேச்சுரன்,சதாசிவன் ,விந்து 
நடையுறாப் பிரமம் உயர்பராசத்தி நாவில் பரசிவம் எனும் இவர்கள் 
இடையுறாத் திருச்சிற்றம் பலத்தாடும் இடது கால் கட்டைவிரல் நகத்தின்
கடையுறு துகள் என்று அறிந்தணன் அதன் மேல் கண்டணன் திருவடி நிலையே !

என்கிறார் வள்ளலார் மேலே உள்ளவர்கள் நிலையே இப்படி இருந்தால் 
மற்றவர்கள் நிலை எப்படி என்பதை உணர்ந்து கொள்ள வேண்டியதுதான்.
அவர்கள் யாரும் உண்மையான அருட்பெரும் ஜோதி ஆண்டவர் நிலையை 
அடையவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது .

வள்ளலார் கண்ட காட்சியை விளக்குகிறார்.

கடல் கடந்தேன் கரை யடைந்தேன் கண்டு கொண்டேன் கோயில் 
கதவு திறந்திடப் பெற்றேன் காட்சி எல்லாம் கண்டேன் 
அடர் கடந்த திரு அமுதம் உண்டு அருள் ஒளியால் அனைத்தும் 
அறிந்து தெளிந்து அறிவு யுருவாய் யழியாமை அடைந்தேன் 
உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்த்தேன் உள்ளமெல்லாம் தழைத்தேன்
உள்ளபடி உள்ள பொருள் உள்ளவனாய் நிறைந்தேன் 
இடர் தவிர்க்கும் சித்தி எல்லாம் என்வசம் ஓங்கினவே 
இத்தனையும் போது நடஞ் செய் இறைவன் அருட் செயலே 

இப்படி தெரியப்படுத்தி யுள்ள வள்ளலார் வழியை விட்டு எப்படி 
என்னால் வெளியே செல்லமுடியும்.என்வழி வள்ளலார் காட்டிய 
தனிவழியாகும் உண்மையை விட்டு என்னால் வேறு வழியில் 
செல்லமுடியாது,

கண்டதெல்லாம் அணித்தியமே கேட்டதெல்லாம் பழுதே 
கற்றதெல்லாம் பொய்யே நீர் களித்த் தெல்லாம் வீணே 
உண்டதெல்லாம் மலமே உட்கொண்டதெல்லாம் குறையே 
உலகிலீர் இதுவரையில் உண்மை அறிந்திலிரே
விண்டதினால் என்ன இனி நீர் சமரச சன்மார்க்க 
மெய் நெறியைக் கடைபிடித்து மெய்ப் பொருள் நன்கு உணர்ந்தே
எண்டகு சிற்றம் பலத்தே என்தந்தை அருள் அடைமின் 
இறவாத வரம் பெறலாம் இன்பம் உறலாமே!

என்று வள்ளலார் சொல்லியுள்ளார் இதை படித்து விட்டு விட்டு 
வேறு ஒன்றை எப்படி நாடுவது.இந்த வழி எனக்கு சரியான வழியாக 
தோன்றுகின்றது.ஆதலால் இந்தவழியை விடாமல் பிடித்துக் கொண்டேன்.

நான் பல நுல்களை படித்தேன் பல யோகங்களை செய்தேன்,பல 
வழிபாடுகளை செய்தேன்,பல துறவிகளை சந்தித்தேன்,எங்கும் 
எனக்கு சரியான வழியை யாரும் காட்டவில்லை,வள்ளலார் 
எழுதிய திருஅருட்பா,எனக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் 
கிடைத்து,முதலில் உரைநடைப்பகுதியான ஜீவகாருண்ய ஒழுக்கம் 
என்ற பகுதிதான் எனக்கு சரியான வழியை காட்டியது.அதன் பின் 
அருட்பா முழுவதும் படிக்க படிக்க என்னுடைய அறிவுக்கண் 
திறந்தது.அதில் இருந்து இன்றுவரை,திரு அருட்பாவை விட எனக்கு 
வேறு பாதையில் செல்ல விருப்பம் இல்லை.

விடமாட்டேன் ஏமாந்து விடமாட்டேன் விட்டுவிடவும் மாட்டேன் 
உன் பதத்துணையே கதி என்று சரண் அடைந்து விட்டேன்,நான் 
யாரையும் குறை சொல்லவில்லை.உண்மை விளங்கும் போது 
அனைவரும் புரிந்து கொள்வார்கள்.ஆடாமல் அசையாமல் வேறு 
ஒன்றை நாடாமல் பொய் உலகை நம்பாமல் வாழ்கிறேன்.

அன்புள்ள ஆன்மநேயன் .;-கதிர்வேலு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு