வெள்ளி, 1 மே, 2020

அருட்பெருஞ்ஜோதி அகவலின் சிறப்பு !

அருட்பெருஞ்ஜோதி அகவலின் சிறப்பு!

(பெரிய பதிவு பொறுமையாக கடைசிவரை படிக்கவும்!)

அகவல் என்றால் என்ன?

மயிலின் ஓசையை 'அகவல்' என்பார்கள்.

ஆண் மயில் தன் இணையைக் கூட முற்படும்போது ஏற்படுத்தும் ஓர் இனிய ஓசையினையே நாம் 'அகவல்' என்கிறோம்.

அது போல, ஓர் அருளாளர் இறைவனுடன் இரண்டறக் கலக்கும் போது தன்னுடைய அருள் ஆனந்தக் களிப்பினை / நிலையினை தமிழ் பாடல் வழியாக வெளிப்படுத்துவதற்கு 'அகவல்' என்று பெயர் வைத்தனர்.

இதனைப் பின்பற்றி நமது வள்ளலார், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில் இணைந்த அனுபவத்தினை 'அகவல்' மொழியாக / பாடலாக இயற்றிக் களிப்புற்றார்.

இலக்கியத்தில் 'அகவல்' என்பது:-

ஆசிரியப்பா மூன்றடிச் சிறுமையும் ஆயிரம் அடி பெருமையும் பெற்று வரும், என்று கூறுகிறது தொல்காப்பியம்,

'ஆசிரியப்பாட்டி நளவிற் கெல்லை ஆயிர மாகும் இழிபு மூன்றடியே' என்பது தொல்காப்பியம்.

'அருட்பெருஞ்ஜோதி அகவல்' சிறப்புகள்:-

'அருட்பெருஞ்ஜோதி அகவல்' என்பது 1596 அடிகளைக் கோண்ட ஒரே பாடல் ஆகும்.

இதனை வள்ளலார் ஒரே இரவில் எழுதியாக கூறுவர்.

தொல்காப்பியம் கூறுவது போன்று ஆயிரம் அடியால் வந்த ஆசிரியப்பா இதற்கு முன்னர் தமிழ் இலக்கியத்தில் எதுவும் இல்லை.

சங்க இலக்கியத்தில் அடியால் மிகுந்து வந்த பாட்டு 'மதுரைக் காஞ்சி' மட்டுமே.

இது 782 அடிகளைக் கொண்டது. சங்க காலம் முதல் வள்ளலார் காலம் வரை இதனினும் மிகுந்து வந்த பாட்டு இல்லை.

தமிழ் இலக்கியத்தில் ஆயிரம் அடிகளையும் மிகுந்து வந்த பாட்டு வள்ளலார் அருளிய 'அருட்பெருஞ்ஜோதி அகவல்' மட்டுமே என்பது வியப்பளிப்பதாய் உள்ளது.

 அ....க ..த .. போன்ற எழுத்துக்களை குறில் எழுத்து என்பார்கள்.

ஆ ....கா ....தா போன்ற எழுத்துக்களை நெடில் எழுத்து என்பார்கள்.

அகவலில் முதல் வரி தொடங்கி 874 வரிகள் வரை சற்று கூர்ந்து பாருங்கள்.

முதல் வரி குறில் எழுத்தில் ஆரம்பித்தால் அடுத்த வரி அ என்ற எழுத்தில் மட்டுமே தொடங்குகிறது.

முதல் வரி நெடில் எழுத்தில் ஆரம்பித்தால் அடுத்த வரி ஆ என்ற எழுத்தில் மட்டுமே தொடங்குகின்றது.

இரண்டாவது வரி இந்த இரண்டு எழுத்துக்களில் மட்டுமே தொடங்க எவ்வளவு வார்த்தைகள் ?

வள்ளலாரின் பேர் அறிவிற்கு இது நல்ல எடுத்துக்காட்டு.

 வள்ளலார் அவர்கள் இத் திருஅகவலை, தாம் 'இறைத்திருவாய் சாகாநிலை அடைந்த' மேட்டுக்குப்பம் 'சித்திவளாகத் திருமாளிகையில்' ஆங்கிரச ஆண்டு சித்திரை மாதம் எட்டாம் நாள் வியாழக்கிழமை (18-04-1872) நன்நாளில் எழுதி அருளினார்கள்.

வள்ளலார் தமது தெய்வத் திருக்கரத்தினால் எழுதிய 'அருட்பெருஞ்ஜோதி அகவல்' மூலம் ஒரு காகித நோட்டுப் புத்தகமாக உள்ளது.

இது தற்போது 'சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையில்' (வடலூர்) நமது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நோட்டுப் புத்தகம் மொத்தம்
58பக்கங்களைக் கொண்டது.

இத்திரு அகவல், அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரத்தில் துவங்கி அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரத்தில் முடித்திருப்பது சிறப்பு.

இத்திரு அகவல், உயிர் எழுத்து பன்னிரண்டும், ஆய்த எழுத்து ஒன்றுமாய் அடித் துவக்கத்தில் பொருத்தி துவக்கத்திலேயே சகாக்கல்விக்குண்டான உயிரினை அளித்திருப்பது மிகவும் சிறப்பு.

இத்திரு அகவலில் - ஐம்பூத இயல்வகை, மண்ணியல், நீரியல், தீஇயல், காற்றியல், வெளியியல், அகம் புறம், ஐம்பூதக் கலப்புகள், வெளிவகை, அண்டப் பகுதிகள், கடல்வகை, எண்வகை, வித்தும் விளைவும், ஒற்றுமை வேற்றுமை, அகப்பூ, நால்வகைத் தோற்றம், ஆண் பெண் இயல், காத்தருள், அடக்கும் அருள், திரை விளக்கம், அருளில் தெருட்டல், தனிப்பொருள், மெய்ப் பொருள், பராபர இயல், பதவியல், சிவரகசியம், திருவருள் வல்லபம், சிவபதி, அருட்குரு, உயிர்த் தாய், உயிர்த் தந்தை, உயிர்த் துணை, உயிர் நட்பு, உயிர் உறவு, இயற்கை உண்மை (சத்து), இயற்கை விளக்கம் (சித்து), இயற்கை இன்பம் (ஆனந்தம்), அருள் அமுதம், மணி, மந்திரம், மருந்து, மாற்றறியாப் பொன், உலவாநிதி, ஜோதிமலை, இயற்கை பொருண்மை, தனி அன்பு, நிறைமதி, கருணை மழை, செஞ்சுடர், அருட்கனல், பரஞ்சுடர் ஆகிய 52 வகையான இறையாண்மைகளை - முழுவதும் மகாமந்திரத்தின் வாயிலாக நமது வள்ளலார் பாடியிருப்பது மிகச் சிறப்புவாய்ந்தது ஆகும்.

மேற்கண்ட சிறப்புகளைவிட நாம் ஒவ்வொருவரும் இத்திரு அகவலை உணர்ந்து படித்து இறைதன்மையில் கலப்பதுதான் வான்சிறப்பு.   

அருட்பெருஞ்ஜோதி அகவலின் சிறப்பு சிறிய வினா விடை வடிவில்

1. நண்பரே எங்குப் போகின்றீர் இவ்வளவு வேகமாக‌?

மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகைக்கு

2. என்னய்யா விஷேசம்?

இன்று வள்ளலார் அகவல் எழுதிய நாள், அதனால் சிறப்பு வழிபாடு, அகவல் பாராயணம் செய்வார்கள், அதற்காகப் போகின்றேன்

3. ஓகோ, அது என்னய்யா அகவல்?

ஓய் உமக்கு இதுபற்றி ஆதியும் அந்தமும் தெரியாது, உமக்குச் சொல்ல இப்போது நேரமில்லையே.

4. கொஞ்சமாவது சொல்லய்யா,

உனக்கு புண்ணியமாய் போகும்,
சரி சொல்கின்றேன், நீர் கேளும்.

5. இன்று ஏதோ அகவல் எழுதிய நாள் என்றீரே?

குறும்புக்கார மனிதரே! ஏதோ அகவல் இல்லை, அது அருட்பெருஞ்ஜோதி அகவல்.

6. அருட்பெருஞ்ஜோதியா? அது என்ன சாமி?

அது தான் சாமி, தனிப்பெருங்கடவுள், எல்லாவற்றிற்கும் மூல ஆதாரம்.

7. ஓகோ, சரி அருட்பெருஞ்ஜோதி அகவல் என்றால்?

அந்த மூலப்பரம்பொருளின் சொரூபம், ரூபம், சுபாவம், இயற்கை உண்மை முதலிய பல இரகசியங்களைக் கூறும் பாடல், அதோடு இறைவனின் போற்றிபாடலும் ஆகும்.

8. யார் எழுதியது?

வள்ளலார் இராமலிங்க அடிகள்

9. எனக்குத் தெரியுமே, முக்காட்டு சாமிகள் தானே?

ஆமாம், நம் இக்கட்டை (துன்பத்தை) தீர்க்க வந்தவரே இம்முக்காட்டு  சாமி!

10. ஏன் எழுதினார்?

உயிர்கள் இறைவனை அறிந்து, அடைந்து, அனுபவிக்க, தன் அனுபத்தை பாடலாகப் பாடினார்.

11. அது என்ன பாடல்?

அது தான் ஏறத்தாழ ஆறாயிரம் பாடல்களைக் கொண்ட "திருஅருட்பா".

12. அப்போது அகவல் என்றால்?

திருஅருட்பா ஆறாயிரம் பாடல்களுக்கும் நெற்றிக்கண் போன்றது.

13. அது திருஅருட்பா இல்லையா?

அகவலும் திருஅருட்பா தான், அருட்பாவின் ஒருபகுதி

14. அகவல் அருட்பாவில் எங்குள்ளது?

ஆறாம் திருமுறையில் முதற்பகுதியில் உள்ளது.

15. அகவலில் எத்தனைப் பாடல்கள் உள்ளன?

798 இரண்டடி செய்யுளை உடைய (1596 வரிகளைக் கொண்ட) ஒருபாடல்,

16. திருக்குறளைப் போலவா?

கிட்டதட்ட அப்படித்தான், ஆனால் இது ஒரு தொடர் செய்யுள்.

17. அப்படி என்றால் அகவல் எத்தனை வரிகளைக் கொண்டது.

1596 வரிகளைக் கொண்ட தமிழ் இலக்கிய உலகத்தில் மிக நீண்ட பாடல்.

18. அப்பப்பா? அவ்வளவு பெரிதா?

பெரியது, அரியது, எளியதும் கூட

19. எளியது என்றால்?

பாமரர்க்கும் படித்தால், கேட்டால் விளங்கும், அதனால் அவர்களின் மாயா திரைகள் விலகும்.

20. பெரியபாடலை எழுத‌ வள்ளலார் எவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டாரோ?

பல நாட்கள் இல்லை, ஓர் இரவில் எழுதினார்.

21. அப்படியா? உண்மையா?

உம்மிடம் பொய் சொல்லி, நரகத்துக்குப் போக நான் விரும்பவில்லை.

22. எப்போது எழுதினார்?

சித்திரை மாதம் 8 ஆம் தேதி, ஏப்ரல் 1872 என்று சன்மார்க்க மரபில் வெளிப்படுத்தி உள்ளனர்.

23. எங்கு எழுதினார்?

மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில்

24. வள்ளலார் சொல்ல சீடர்கள் எழுதினார்களா?

இல்லை, வள்ளலாரே தன் கைப்பட எழுதினார்கள்

25. ஓகோ அப்படியா?

ஆமாம், பல பக்கங்களைக் கொண்ட ஒரு வெள்ளைக் காகித புத்தகத்தில்.
வள்ளலார் எழுதிய அகவல் மூல புத்தகம் மொத்தம் 58 பக்கங்களைக் கொண்ட நோட்டுப் புத்தகமாக
இப்போதும் வடலூர் தருமச்சாலையில் அன்பர்களின் தரிசன‌த்திற்காக உள்ளது

26. அம்மாடி, வள்ளலார் பெரிய ஆளய்யா!

ஆமாம் அதில் என்ன உமக்குச் சந்தேகம், அவர் அருட் ஜோதி அரசரின் முதற்பிள்ளையும், சன்மார்க்க மரபின் தலைவரும் ஆவார்.

27. அகவலில் ஒரு அடி உதாரணம் சொல்லுங்களேன்?

"தன்கையில் பிடித்த தனி அருட்ஜோதியை என்கையில் கொடுத்த என்னுயிர் தந்தையே" என்பது அகவல் வரி.

28. எனக்கு ஒரு புத்தகம் வாங்கிக் கொடுங்கள் நானும் படிக்கிறேன்.
நிச்சயமாக ஆனால்...

29. என்னய்யா ஆனால்?

அசைவம்/மாமிசம் கலந்த உணவுகள், மது முதலிய எந்தத் தீய பழக்கமும் கூடாது, அவற்றை விடுவதாகச் சொன்னால் வாங்கித் தருகின்றேன்.

30. அட ஒரு புத்தகம் படிக்க இவ்வளவு தகுதி வேண்டுமா?

இது வெறும் புத்தகம் அல்ல, எல்லாம் வல்ல கடவுளின் முழு சரித்திரம்.

31. சரி விட்டுவிட்டால் போகின்றது.

நீர் பிழைத்துக்கொள்வீர்!

32. அகவல் படிப்பதால் பணம் வருமா?

பணமா, கோடி கோடியாக வரும் ஆனால் அவை எல்லாம் அருட்செல்வங்கள்.

33. அப்போது பொருட்செல்வம்?

அதுவும் வரும் தன்னலம் இன்றி பொது நலச் சேவை செய்தால், ஜீவகாருண்யம் செய்தால், உயிர்களுக்கு இன்பம் செய்தால்

34. ஆதாரம்?

"இருநிதி எழுநிதி இயல்நிதி முதல் திருநிதி எல்லாம் தரும்" என்று வள்ளலார் அகவலில் குறிப்பிட்டுள்ளார்.

34. வேறு என்ன கிடைக்கும்?

யாராலும் தரமுடியாத ஆன்ம ஞானம் அகவல் படித்தால் உண்டாகும்.

35. ஞானம் என்றால்?

எல்லாவற்றையும், அறிந்த அறிவு.

36. அப்படி என்ன சொல்கின்றார் அகவலில்?

பஞ்ச பூதங்களின் தோற்றம், அவற்றின் சொரூப, ரூப, சுபாவம், பிரபஞ்ச தோற்றதின் இரகசியம், பல்வேறு வெளிகளின் பெயர்கள், ஆண், பெண் தோற்றம், இன்னும் இன்னும்......

37. அப்படியா? வேற்றுலக வாசிகள் குறித்து சொல்கின்றாரா?

ஆமாம், அதற்கும் குறிப்புகள் அகவலில் உள்ளது.
"எவ்வுலக உயிர்களும் உகந்திட மணக்கும் சுகந்த நன்மணமே" என்கிறார்.

38. அதிசயம் தான்!

அதுமட்டுமின்றி, உயிர்களின் தோற்றம், இயக்கம், பூதங்கள் மற்றும் உயிர்களை இயக்கும் சத்தி சத்தர்களின் வகை, தொகை, விரிவுகள் ........

38. ஆச்சரியம்! ஆச்சரியம்!

மிகவும் ஆச்சரியம்! தான்.

39. இவை எல்லாம் வள்ளலாருக்கு எப்படித் தெரிந்தது?

வள்ளலே அருட்பெருஞ்ஜோதியாய் ஒன்றிக் கலந்து "ஞான நிறைவை" பெற்றதால்.

40. பஞ்சபூதம் என்றீரே? அதில் என்ன சொல்கின்றார்?

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், மண்ணிற்குத் திண்மையாம் தன்மையையும், அதற்குப் பொன்மையாம் நிறத்தையும், அதற்கு மணத்தையும் வகுத்தார் என்கின்றார்.

41. அப்புறம் என்ன சொல்கிறார்?

மண்ணினில் பல்வேறு கரு நிலைகள் உள்ளதையும், இதை இயக்கும், மண் செயல் சக்திகள், கலைச் சக்திகள் கருச்சத்திகள் இன்னும் பலவகை சக்திகள், சத்தர்கள் உள்ளதையும் குறிப்பிடுகின்றார்.

42. மண்ணுக்கே இவ்வளவா?

ஆமாம் இதுபோல், மற்ற பூதங்களான நீர், நெருப்பு, காற்று, ஆகாயத்திற்கும், பல்வேறு வெளிகளுக்கும் உள்ளதையும் தெளிவாகக் கூறுகின்றார்.

43. ஓகோ, அப்புறம்?

சொல்கின்றேன் அய்யா, ஐந்து தொழில் செய்யும் கருத்தர்கள், பற்றியும் குறிப்பிடுகின்றார்.

44. மாதப்பூசத்தில் ஜோதி பார்க்கும்போது பல திரைகள் உள்ளனவே?

ஆமாம் அவற்றைப் பற்றிய குறிப்பும் அகவலில் உள்ளது.

45. என்ன குறிப்பு?

உயிர்கள் பக்கும்வம் பெரும் பொருட்டு மாயத்திரைகள் இறைவனை மறைத்து உயிர்களை உலகியலில் நடந்துகின்றன, அத்திரைகள் விலகினால் தான் அருளியல் வாழ்வில் பயன் கிடைக்கும்.

47. என்னென்ன திரைகள் உள்ளன நம்மிடத்தில்?

கருப்பு முதல் கலப்பு நிறைவாக ஏழு திரைகள், இவை மறைக்கும் வெளிகள் மற்றும் அனுபவங்களை வள்ளலார் அகவலில் கூறுகின்றார்கள்.

48. பிறகு?

977 வது அடி தொடங்கி அருளின் சிறப்புகளையும், அருளின்றி அணுவும் அசைந்திடாது எனவும் அந்த அருளைப்பெற நாம் முயல வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றார்.

49. அருள் என்றால் என்ன?

அருள் என்பது கடவுளின் தயவு,

50. கடவுளின் தயவா? அதை எப்படிப் பெறுவது?

தயவைக்கொண்டு தயவைப்பெறலாம்.

51. நண்பரே கொஞ்சம் விளக்கமாகத்தான் சொல்லுமே?

சரி சரி.

52. சொல்லுங்கள்!

தனி மனிதராகிய நாம் ஒவ்வொருவரும் நம்மைப் போன்ற பிற உயிர்கள் இடத்தில் தயவு காட்டி, அவற்றுக்கு வரும் துன்பத்தை இயன்றவரைப் போக்கி, புலை, கொலை தவிர்த்து வாழ்ந்தால் இந்தச் சிறிய தயவினால் இறைவனின் பெரிய தயவைப் பெறலாம் என்று வள்ளலார் கூறுகின்றார்.

53. இந்த விளக்கம் எங்கு உள்ளது?

வள்ளலார் தம் கைப்பட எழுதிய "ஜீவகாருண்ய ஒழுக்கம்" என்னும் நூலில் உள்ளது.

54. அட நான் அகவலில் உள்ளதா என்று கேட்டேன்?

என்னைய்யா? அதற்குள் அகவல் ரசிகர் ஆகிவிட்டீரா என்ன?

55. அட ஆமாம் அய்யா? நீர் ஆதாரம் சொல்லும்.

"எங்கே கருணை இயற்கையில் உள்ளன‌
அங்கே விளங்கிய அருட்பெருஞ்சிவமே" என்றும்,

" உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே
உயிர்நலம் பரவுக என உரைத்த மெய்ச்சிவமே" என்றும் இன்னும் பல இடங்களில் குறிப்பிடுகின்றார், போதுமா?

55. போதும், அப்படியானால் கருணையால் தான் கடவுளின் அருளை அடைய முடியும் என்கின்றீர்கள்?

அப்படித்தான் வள்ளலாரே கூறுகின்றார்,

56. வேறு ஒன்றும் வேண்டாமா?

பாலோடு கொஞ்சம் தேன் கலந்து உண்பது போல், காருணியத்தோடு கடவுளிடத்தில் அன்பும் பக்தியும் மேலும் பலன் கொடுக்கும்.

57. கடவுளிடத்தில் எப்படி அன்பு செய்வது?

அது சரி, உமக்குக் காரணமா இல்லை?

58. நீங்கள் தான் கொஞ்சம் காரணம் சொல்லுங்களேன்?

உமக்கு இந்த கிடைப்பதற்கு அரிய மானுடப் பிறப்பை கொடுத்து, வேண்டியது எல்லாம் கடவுள் கொடுத்துள்ளாரே, அது போதாதா அவரிடம் அன்பு செலுத்த.

59. இந்த பிறப்பு அவ்வளவு உயர்ந்ததா என்ன?

இல்லை என்கின்றீரா நீர்?

60. அப்படிச் சொல்லவில்லை, வள்ளலாரின் வாய் மொழியைக் கேட்கின்றேன்?

"உலகத்தில் உயர்பிறப்பாகிய மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்கத் தலைப்பட்ட ஆன்ம இன்ப சுகத்தைக் காலமுள்ள போதே விரைந்து அறிந்து அடைய வேண்டும்." என்று ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் குறிப்பிடுகின்றார்.

61. சரி சரி, எப்படி கடவுளிடம் அன்பு செலுத்துவது?

அவரே நமக்குப் பதியானார், குருவானார், தாயானர், தந்தையானார், துணையானார், நட்பானார், உறவானார்  எல்லாமுமானர்.
என்று அன்பு செலுத்தவேண்டும்.

61. வள்ளலார் அப்படியா அன்பு செலுத்தினார்?

ஆமாம்

62. அகவலில் ஆதாரம் இருக்கின்றதா?

கொஞ்ச நேரத்தில் நீர் ஓர் அகவல் இரசிகராக மாறிவிட்டீர் போல?

63. ஆமாம், இல்லையா என்ன?

அகவலில் பல தகவல் உள்ளது அதுதான் உம்மை இப்படி இழுக்கின்றது.

64. ஆதாரத்தைச் சொல்லும் அய்யா?

சரி வள்ளலார் இறைவனைத் தாயாக இப்படி அன்பு செலுத்துகின்றார்.
"பசித்திடு தோறுமென் பாலணைந் தருளால்
வசித்தமு தருள்புரி வாய்மைநற் றாயே ".

65. தந்தையாக?

'துன்பெலாந் தவிர்த்துளே யன்பெலாம் நிரம்ப
இன்பெலா மளித்த வென்றனித் தந்தையே ".

66. குருவாக?

"அறிபவை யெல்லா மறிவித் தென்னுள்ளே
பிறிவற விளங்கும் பெரியசற் குருவே" .

67. துணையாக?

"எங்குறு தீமையு மெனைத்தொட ராவகை
கங்குலும் பகலுமெய்க் காவல்செய் துணையே"

68. நட்பாக?

"குணங்குறி முதலிய குறித்திடா தெனையே
அணங்கறக் கலந்த அன்புடை நட்பே"

69. அற்புதம் அற்புதம்.!!

ஆமாம், வள்ளலார் என்றால் சும்மாவா?

70. அடுத்த செய்தியை சொல்லும்?

அகவலில் வள்ளலார் தன்னுடைய இறை அனுபவங்களையும், தான் பெற்ற சித்துக்களையும் கூறுகின்றார்.

71. என்ன சித்துக்களை வள்ளலார் பெற்றார்?

என்ன சித்துக்களை வள்ளலார் பெறவில்லை.

72. என்னய்யா எதிர்க்கேள்வி கேட்கின்றீரே?

அட குறும்புக்காரரே, இது கேள்வி அல்ல பதில்.

73. விளக்கமாய் சொல்லும் அய்யா?

நான் படிக்காத பாமரன்.
எல்லா உலகத்தில் உள்ள எல்லாச் சித்துக்களையும் வள்ளலார் பெற்றுவிட்டார்,

74. ஆச்சரியம்!

ஆச்சாச்சரியம் தான்.

75. இது பற்றி அகவலில் உள்ள தகவல்?

வள்ளலாருக்கு இறைவன் 647 கோடி சித்திகளைக் கொடுத்தான் என்று குறிப்பிடுகின்றார்.
"ஆடுறு சித்திக ளறுபத்து நான்கெழு
கோடியும் விளங்கக் குலவுமெய்ப் பொருளே".

76. பிறகு?

எண்ணிக்கை இட முடியாத கூட்டுறு சித்திகள், அறிவுறு சித்திகள், கரும, யோக, ஞான சித்துக்களையும் இறைவன் வள்ளல் பெருமானுக்கு கொடுத்தார்.

77. இவற்றை வைத்துக் கொண்டு வள்ளலார் என்ன செய்கின்றார்?

அண்டாண்ட கோடிகளைப் படைத்தும், காத்தும், ஒடுக்கியும், மறைத்தும், அருளியும் ஐந்தொழில் செய்கின்றார்.

78. வள்ளலாரின் அந்த ஐந்தொழிலால் விஷேச பயன் என்ன?

வள்ளலாரின் ஆட்சியில், உயிர்கள் கால தாமதம் இன்றி விரைவில் ஞானத்தை அடைந்து, ஆன்ம லாபத்தை பெறும்.

79. அப்படி என்றால் நமக்கும் பாஸ் மார்க் கிடைக்குமா?

நிச்சயம் கிடைக்கும் ஆனால் அதற்கு நம் எல்லாருக்கும் உயிர்களிடத்தில் கருணையும், கடவுளிடத்தில் அன்பும் வேண்டும்.

80. நிச்சயம் வேண்டும் தான் போலத் தெரிகின்றது!

வேண்டும் வேண்டும்.

81. உயிர்களிடம் எப்படிக் கருணை செய்வது?

வள்ளுவர் சொல்வது போல "அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை".

82. அய்யா நான் படிக்காதவன் புரியும் படி சொல்லுங்களேன்?

பிற உயிர்களை தன் உயிர்போல் பார்க்க வேண்டும், துன்பம் நீக்க வேண்டும், புலாலைத் தவிர்க்க வேண்டும், கொலையைத் தடுத்து நிறுத்த வேண்டும், பசியைப் போக்க வேண்டும்.

83. எல்லாம் சரிதான், கொசு கடிக்கின்றதே என்ன செய்வது?

கொசுவுக்கு பக்கத்தில் தட்டினால் அதுவும் பறந்து போகும் நீங்களும் தப்பிக்கலாம்.

83. புலை கொலை தவிர்த்தல் சாத்தியமா?

அதை சாத்தியப் படுத்தத்தான் வள்ளலார் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ளார்.

84. அது சரிதான்.

முடிந்தால் அச்சில் வார்ப்பார், இல்லையேல் மிடாவில் வார்ப்பார்.

85. அவர் சொன்னால் நம்பவேண்டியது தான்!
நிச்சயம் கைவிடார்.

86. வேறு என்ன செய்திகள் அகவலில் உள்ளன?

உமக்கு இன்னும் ஆர்வம் குறையவில்லையா?

87. வள்ளலார் இடத்தில் ஆர்வம் அதிகமாகின்றது, சொல்லும்!

தன் நிறைவான ஞான அனுபவத்தைக் கூறுகின்றார், தன் தேகத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் கூறுகின்றார்.

89. அப்படியா?

ஆமாம், தோலெலாங் குழைந்திட என்னும் அடி தொடங்கி கூறுகின்றார்,

90. அதிசய அனுபவம் தான்!

ஆமாம் அருட்பெருஞ்ஜோதி அளிக்கும் ஆனந்த அனுபவமும் கூட.

91. இனிமேல் அகவல் படிக்க வேண்டியது தான்!

சும்மா படித்தால் பயன் இல்லை, உணர்ந்து ஓதுதல் வேண்டும்.

92. சரி சரி,

அதற்கு முன் நீர் புலை, கொலை தவிர்த்தல் வேண்டும்.

93. நீர் சொன்ன மாத்திரத்தில் அவற்றை விட்டு விட்டேன்!

உமக்கு வள்ளலாரின் அருளரசில் இடம் முன்பதிவாகிவிட்டது.

94. கேட்கவே ஆனந்தம்!

உங்களின் குடும்பத்தார்க்கும் இதைச் சொல்லுங்கள்.

95. நிச்சயம் சொல்கின்றேன்.

சொன்னால் உமக்குத் தான் புண்ணியம். வேண்டியதை வள்ளலார் செய்து தருவார்.

96. அகவலை எப்போது படிக்கலாம்?

ஆறு காலமும், அன்போடு எப்போது வேண்டுமானாலும்.
(மலம், ஜலம் கழிக்கும் காலம் தவிர)

97. எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் படிக்க வேண்டுமா?

இயன்றால் படிக்கலாம், இல்லை என்றால் பகுதி பகுதியாகக் கூட படிக்கலாம், படிப்பதை விடவும் அகவலை உணர்வது முக்கியம்.

98. நிச்சயம் படிக்கின்றேன்!

குடும்பத்தோடு படியுங்கள்,

99. நானும் உங்களோடு சித்திவளாகம் வரலாமா?

வாருங்கள் உங்களின் பொற்காலம் தொடங்கட்டும்.

100. உங்களின் விளக்கங்களுக்கு நன்றி,

நன்றி வள்ளலாருக்குத் தான் சொல்ல வேண்டும், அவர் சொல்லாவிட்டால் நமக்கென்ன தெரியும்.

இராமலிங்காய நம!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!

தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்ஜோதி!

நன்றி:வினா விடை தொகுப்பு :
ஆனந்த பாரதி, வள்ளலார் இளைஞர் மன்றம், பெங்களூரூ.

1 கருத்துகள்:

12 மே, 2024 அன்று 6:03 PM க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

நன்றிகள் கோடி

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு