வியாழன், 23 நவம்பர், 2017

சுத்த கங்கை எங்கே இருக்கின்றது ?

சுத்த கங்கை எங்கே இருக்கின்றது ? சொர்க்கம் ,வைகுண்டம்,கைலாயம்,எங்கே இருக்கின்றது.? "என் தந்தை தைத் திங்கள் பதினோராம் தேதி நன்னாளில் வைகுண்டப் பதவியடைந்தார்" என்று அச்சிட்டத் தாளை தன் உற்றார் உறவினருக்கு அனுப்பி வைப்பர். அவரை "வைகுண்டம் என்பது எங்குள்ளது?" என்று கேட்டுப்பாருங்கள் "மேலே யிருக்கிறது" என்று ஆகாயத்தைக் காட்டுவார். "வைகுண்டம் மேலேயுள்ளது என்பது தங்களுக்கு  எப்படித் தெரியும்" என்று கேட்டால் "பெரியோர்கள் சொல்லி இருக்கின்றார்கள்,என்றும். சாஸ்திரங்களும் சொல்லுகின்றன" என்று சொல்வார். எந்தப் பெரியோராவது வைகுண்டத்தைப் பார்த்து விட்டுத் திரும்பி பூலோகத்திற்கு வந்து வைகுண்டத்தின் நிலையைச் சொல்லி நாம் கேட்டது உண்டா?. என்றால் எவரும் சொல்லியது கிடையாது. *செத்தவனுக்கு இருப்பவனைப் பற்றித் தெரியாது.இருப்பவனுக்குத் செத்தவனைப் பற்றித் தெரியாது.* மேலே போனவன் திரும்பமாட்டான் " என்று எல்லா சாஸ்திரங்களும் அறை கூவுகின்றன. "புண்ணியம் செய்தவன் கைலாயமடைகிறான் , பாபம் செய்தவன் நரகத்தை அடைகிறான்.புண்ணியம் செய்தவன் சொர்க்கலோகம் அடைந்து தனக்கு வேண்டிய சுக போகங்களை அனுபவிக்கிறான். தேவலோக மாதர்களின் இன்பத்தை. வேண்டிய அளவு நுகருவான்" என்றெல்லாம் புராணங்கள் கூறுகின்றன. மக்களும் அவற்றை உண்மை என்றே நம்பிக்கை வைத்து பேசுகின்றனர். இப்படிப்பட்ட மக்களின் கதியை நினைந்து நினைந்து வள்ளலார் வேதனையடைந்தவராய் எழுதுகின்றார், "உண்டதே யுணவு தான் கண்டதே காட்சி இதை உற்றறிய மாட்டார்களா உயிருண்டு, பாவ புண்ணிய முண்டு வினைகளுண்டு உறு பிறவியும் உண்டு துன்பந் தொண்டதே செயுநரக வராதையுண்டு இன்பமுறு சொர்க்க முண்டு, இவநையுமன்றி தொழு கடவுளுண்டு கதியுண்டென்று சிலர் சொலுந் துர்ப்புத்தி யாலுலகிலே ..... ..... வண்டர் வாயற வொரு மருந்தருள்க. ஆறாம் திருமுறை மேலும் ;-- இறந்தவரை எடுத்திடும் போது அரற்று கின்றீர் உலகீர் இறவாத பெரும் வரம் நீர் ஏன் அடைய மாட்டீர் மறந்து இருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ உமக்கு மறந்தும் இதை நினைக்கில் நல்லோர் மனம் நடுங்கும் கண்டீர் சிறந்திடு சன்மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம் சேராமல் தவிர்த்திடும் காண் தெரிந்து வம்மின் இங்கே பிறந்த  பிறப்பில் இதில் தானே நித்திய மெய் வாழ்வு பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்து ! என்று சொல்லுகின்றார், மக்கள் வைகுண்டம்,கைலாயம், பிரம்ம பதம், அமுதம், வேதவாக்கியம், கருணை நோக்கம், பரமசுகம் என்பன வெல்லாம் எவ்விதம்  அ னுபவிக்கின்றார்கள் என்பதை வள்ளலார் சொல்கிறார், "ஓகை மட வாரல் குலே பிரமபதம் அவர்கள் உந்தியே வைகுந்தம் மேலோங்கு முலையே கைலாயம் யவர் குமுத வாயினில்  ஊறமுறலே அமுதம் அவர் தம் பாகனைய மொழியே நல் வேத வாக்கியம், அவர்கள் பார்வையே கருணை நோக்கம் வாங்கின வரோடு விளையாட வரும் சுகமதே பரம சுகமாகும்  இந்த ..... .....வீணர் ..... வாய் மதம் அற மருந்தருள்க." என்று வேண்டுகிறார். "ஏழைக் குடும்பத்தில் பிறந்தார் ; கார்ப்பரேசன் விளக்கொளியில் படித்தார்; பெரிய வக்கீலானார்;  உயர்நீதி மன்றத்து நீதிபதியானார்; பிறகு பிரதம நீதிபதியானார்; அது மாத்திரம் தானா! பெரும் சட்ட நிபுணரும் கூட பதவி வகித்தார் ! ஆனால் திடீரென மாரடைப்பால் இந்த நிபுணர் உயிர் துறந்தார்" என்ற செய்தி திடீரென செய்தித் தாள்களில் வருகிறது. இத்துணை மேதாவி ஏன் இறந்து விட்டார்? என்ற கேள்வி நாம் போடுவதில்லை. கூட்டங்கள் போட்டு மேடைகளில் ஏறி அவரவர் கற்றதெல்லாம் பேசிவிட்டு அவர் ஆத்மா சாந்தியடையட்டும் என்று கதறிவிட்டு வீடு திரும்புகிறோம்.  அவர் ஆத்மா எங்குள்ளது! நம்முடைய விருப்பமும் துக்கச் செய்தியும் எங்கு போய்ச் சேருகின்றது என்பதை நாம் ஆலோசிக்கிறோமா? இல்லை மாமூல் பழக்கத்தைக் கொண்டாடிவிட்டு ஏதோ செய்து விட்டதாக நினைத்துக் கொள்ளுகிறோம். இத்தனை பதவிகள் பெற்றாரே அந்த மேதாவி! ஆனால் உண்மையில் அடைய வேண்டிய  பதவியை அடைந்தாரா? உண்மைப் பதவியடைந்திருந்தால் அவர் பிணமாகியிருப்பாரா?. பசித்திரு, தனித்திரு விழித்திரு  என்கின்றார் (வள்ளலார்) அப்படி வள்ளலார் சொல்லியுள்ளபடி வாழ்ந்தால் ''ப, த, வி'' ...பதவி ! கிடைத்து இருக்கும் .அவை தான் என்றும் அழியாத பதவியாகும். இந்தப் பதவியல்லவா பதவி! இந்தப் பதவி அடைந்திருந்தால் அவர் ஏன் பிணமாக வேண்டும்? இந்தப் பதவியல்லவோ வைகுண்டப்பதவி, சிவலோக பதவி,சொர்க்கப் பதவி. சிவபதம் பதவி.,பரலோகப் பதவி, பதவி  என்பது என்ன? "படியளவு சாம்பலை உடம்பு முழுவதும் பூசியே மூத்த சைவ பழம்" என்றும் ,நெற்றியின் நடுவே பட்டையா நாமம்,போட்டுவிட்டு மூத்த வைணவப் பழம் என்றும் உரக்கக் குரலில் கத்துகின்றீர்கள். என்று வள்ளலார் சொல்லுகின்றார்.  சாம்பலைப் பூசி உரத்த குரலில் தேவாரம் பாடிவிட்டால் சைவமாகுமா? ஆழ்வார் பாடல்களைப் பாடிவிட்டால் வைணவமாகுமா ? சிவன்,பெருமாள்  இந்த பூதக் கண்களுக்கு காட்சியளிப்பாரா? விரதமென்ற பெயரால் பட்டினி கிடந்து அங்குமிங்கும் ஓடி வெறும் வெளியில் சுகம் பெற முடியுமா?. சிவம் என்ற பதத்தில் 'சி' என்னும் எழுத்தின் தலை மேலுள்ள சுழியை எடுத்துவிட்டால் சிவம் சவமாகி விடும். இந்த ரகசியத்தை அறிந்தவனே சுத்த சிவத்தை அறிய முடியும். அதன்றி, "பெண் கொண்ட சுகமதே கண்கண்ட பலனிது பிடிக்க வறியாது சிலர் தாம் பேரூரிலாத வொறு வெறு வெளியிலே சுகம் பெறவே விரும்பி வீணிற் புண் கொண்ட வுடல் வெழுத்துள்ளே நரம்பெலாம் பசையற்று மேலெம்பப் பட்டினிகிடந்து சாகின்றார்களீ தென்ன பாவம் இவருண்மை யறியார் ....." என்று வருந்தி வருந்தி வள்ளலார் எழுதியுள்ளார். பரமபதம், வைகுண்டம், சிவபதம் என்று பொய்யான அனுபவத்தை அடைந்தவனுடைய நிலையை எண்ணி வேதனைப் படுகின்றார்.தான் அனுபவித்த உண்மை அனுபவங்களை நமக்கு வள்ளலார் சொல்கின்றார், பாடல் ! கடல் கடந்தேன் கரை அடைந்தேன்  கண்டு கொண்டேன்  "கோயில் கதவு திறந்திடப் பெற்றேன் காட்சி யெல்லாங் கண்டேன் அடற்கடந்த திருவமுதம்  உண்டு அருள் ஒளியில் அனைத்தும் அறிந்து, தெளிந்து அறிவுருவாய் அழியாமை யடைந்தேன், உடல் குளிர்ந்தேன், உயிர் கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்  உள்ளபடி உள்ள பொருள் உள்ளவனாய் நிறைந்தேன் இடர்தவிர்க்கும் சித்தியெலாம் என்வசம் ஓங்கினவே! இத்தனையும் பொது  நடஞ் செய் இறைவன் அருட்செயலே ! என்ற சித்தி நிலை யல்லவோ சுத்த சிவகதி! அதுவல்லவா வைகுண்டம்! அதுவல்லவோ சொர்க்கம்.அதுவல்லவோ கைலாயம். வள்ளலார் சொல்லும் கோயிற்கதவு மனிதனால் ஆக்கப்பட்ட மறக்கதவா? இல்லை இரும்புக் கதவா? இல்லை! இல்லைவே இல்லை.அது அருள் மணிக்கதவு.அருள் சுரக்கும் வாயிற்க் கதவு! அந்த வாயிற்கதவைத்தான் வள்ளலார் பல பாடல்களில் தெரிவிக்கின்றார். தன்னுள் இருக்கும் ஆன்மாவின் வாயிற் கதவையே அவர் குறிப்பிடுகிறார். அந்தக் கதவு திறந்தது. காட்சி யெல்லாம் புலப்பட்டன. திருவமுதம்  வாயில் சொட்ட ஆரம்பித்தது. அதை உண்டேன் உடல் குளிர்ந்தது. சித்தியெல்லாம் என் வசம் ஓங்கின என்பதை தெளிவாக விளக்குகின்றார். வைஷ்ணவக் கோயில்களில் ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் ஒருவரோடு ஒருவர் இடித்துக் கொண்டு கால்களை மிதித்துக் கொண்டு உள்ளே ஓடோடிக் கண்ட பயன் என்ன? உடல் குளிர்ந்ததா? அமிர்தம் பொழிந்ததா? உள்ளமெலாம் தழைத்ததா? ஐயோ பாவம்!. கைலயங் கிரியில் வீற்றிருக்கும் சிவன் முடியிலிருந்து கங்கை இறங்கினாள். பகீரதன் மூதாதைகளின் பிணங்கள் மேல் கங்கை நீர் பாய்ந்தது. எல்லோரும் உயிர் கொண்டு எழுந்தனர்.என்பதாக சாத்திரம் அல்லது புராணம்.சொல்லுகின்றது என்கின்றனர். . வசதி உள்ளவர்கள் அக் கைலயங்கிரிக்கே போய்த் திரும்புகிறார்கள். "கைலாயத்திற்கே போய் வந்தோம்" என்று பறை யடித்துக் கொள்கிறார்கள். கங்கை உற்பத்தியாகும் சிவனது முடியைக் கண்டோம் என்பார்கள். கங்கையில் நீராடி நேராக வருகிறோம் என்பார்கள். அப்படிப்பட்டவர்களைப் பெருமைபடுத்த அவரை அண்டிப் பிழைக்கும் கூத்தாடிகள் நாற்பது பேர்கள் சேர்ந்துகொண்டு, "ஆஹா சிவகதி பெற்ற பெருமானே! தங்களுடைய தரிசனத்தால் நாங்கள் புண்ணியர்கள் ஆனோம்! நாங்கள் நேரிடையாக  கைலாய நாதரைப் பார்க்க முடியா விடினும் அவரை தரிசித்து வந்த தங்களின் பாத சேவை கிடைக்கப் பெற்றோம்" என்றெல்லாம் புகழ்வது உலக இயல்பாகி விட்டது. கங்கை நீர் பருகுங்கள்; உங்கள் பாபங்களெல்லாம் கூண்டோடு தொலைந்து விடுமென்று கங்கை நீர் கொண்டு வந்த புண்ணியர் ஒருவர் ஒரு தேக்கரண்டியில் செப்புக் கலசத்தில்  உ ள்ள நீரைச் சிரத்தையுடன் கொடுப்பார். கூத்தாடிகளும் இரு கைகள் ஏந்தி மெல்ல தலையை தூக்கிப் பருகிவிட்டு தலை முடியில் சிவநீரை துடைத்துக் கொள்ளுவார்கள். "கொலை,மாமிசம், களவு, காமம்,பொய்  முதலிய தீமைகள் அன்றி நன்மை யென்பதனைக் கனவிலும் கண்டறியா மக்கள் கங்கை யெனும் ஆற்றில் குளிக்கின்றதும் ,தீயில் மூழ்கி யெழினும் அவ் அழுக்கு சுத்தம் நீங்காது கண்டாய்" என்று வள்ளலார் சொல்வதை யோசிக்க வேண்டாமா?. ஆகவே அசுத்தங்களை அகற்றி உடல், உயிர், ஆவியெல்லாம் குளிரச் செய்யும் அருள் கங்கை எப்படி இருக்க வேண்டும். அசுத்த மண்ணும் அசுத்த கல்லும் அசுத்த சாக்கடை நீரும்,துர்நாற்றமுள்ள மலமும் சிறு நீரும்,மேலும் ஒன்று பாதியுமாய்ச் சுட்டுத் தள்ளிய பிணங்களும் கலந்த கங்கை நீரில் மூழ்கினால் எந்த பாபம் தொலையும்? எந்த புண்ணியம் கிடைக்கும்.எந்த சிவபதம் அடைய முடியும்? சாக்கடை நீரில் அழுக்குத் துணியை துவைத்துப் பரிசுத்த மாக்க முடியுமா? எது சுத்த கங்கையோ அதுவல்லவோ மற்ற அசுத்தங்களை நீக்க வல்லது. அந்த சுத்த கங்கை எங்கு உள்ளது? கோவிலில் வைத்திருக்கும் பஞ்ச பாத்திரத்திலா? அங்கு இருக்கும் தீர்த்தக் குளங்களிலா? அந்த தீர்த்த மிருக்குமிடத்தைத் திருமூலர் சொல்கிறார்; "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோபுர வாசல் தெள்ளத் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காணா மணி விளக்கே" இந்த ஊன் உடம்பில் தலைப் பாகத்தில் உச்சிக்கும் கீழே .உள் நாக்கிற்கும் மேலே வச்ச விளக்கில் திரி எண்ணை இல்லாமல் இடைவிடாது எரிந்து கொண்டு உள்ளது.ஜீவ காருண்ய ஒழுக்கத்தாலும்.சத்விசாரத்தாலும். ஆன்ம நெகிழ்ச்சி உண்டாகி.அந்த சுத்த உஷ்ணத்தின் சூட்டில் உருகி வெளியே வருவது தான் சுத்த கங்கை என்னும் அருள் அமுதம். .அதைப் பருகுபவனே அருளாளன்.அவனே மரணத்தை வெல்லும் தகுதிப் பெற்றவன்.அவனே எல்லாம் அறிந்தவன். வள்ளலார் சொல்லுவதைப் பாருங்கள். சுகம் அறியீர் துன்பம் ஒன்றே துணிந்து அறிந்தீர் சூதரிந்தீர் வாதரிந்தீர் தூய்மை அறிந்திலிரே இகம் அறியீர் பரம் அறியீர் என்ன உம் கருத்தீர் என்புரிவீர் மரணம் வரில் எங்கு உறுவீர் அந்தோ அகம் அறியீர் அனகம் அறிந்து அழியாத ஞான அமுத வடிவம் பெறலாம் அடைந்திடுமின் நீண்டே முகம் அறியார் போல் இருந்தீர் என்னை அறியீரோ முத்தர் எலாம் போற்றும் அருட் சித்தர் மகன் நானே ! இந்த சிவ நீரையே வள்ளலார் அருள் அமுதம் என்கிறார். இதைப் பருக பருக நரை, திரை,பிணி.மூப்பு ,மரணம், இல்லாமல் .உடம்பு மாற்றம் அடையும்.. உடல் பொன்கலந்த வன்மை பெறும், மூப்பு சாக்காடு ஒழிந்து உடல் இளமை  அடையும். பழம் காயாகும்.,காய் பிஞ்சு வாக மாறும்,.பிஞ்சு பூ வாக மாறும்,பூ அரும்பாகும்,அரும்பு உயிராக மாறும்,உயிர் ஒளியாக மாறும்,ஒளி ஆன்மாவுடன் சேரும்.ஆன்மாவில் இருந்து அமுதம் சுரக்கும்.அந்த அமுதமே மரணத்தை நீக்கும் வல்லபம் உடையதாகும்.  உடம்பை காப்பாற்றுவதாக எண்ணி காய கல்பம் தேடி ஊரூராய் அலைந்து திரிவதினால் என்ன பயன்? காயத்தை ஒளியாக்கும் மருந்து வெளியில் இல்லை. உள்ளே தான் உள்ளது . இந்த சிவநீர் என்னும் அமுதம் இருக்குமிடம் தான் ஆன்மாவாகும். அதை இறைத்துப் பருகும் மார்க்கம் தான் வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்கமாகும். இவற்றை சொல்ல வல்லார் யாராவது உலகில் இருக்கிறார்களா? அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்னும் கேள்வி இது வரை யாருக்கும் உதிக்க வில்லை . தமிழ் நாட்டில் பிறந்து வாழ்ந்து அருளைப் பெற்று மரணத்தை வென்றவர்தான் வள்ளல்பெருமான் .அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளலாமல் அலைந்து திரிந்து அழிந்து கொண்டு உள்ளார்கள். எத்தனையோ யோகிகள் .சித்த பிரான்கள் உலாவிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அருளைப் பெற்று மரணத்தை வென்று உள்ளார்களா என்றால் இன்று வரை இல்லை. வள்ளலார் சொல்வதைக் கேட்டு அப்படியே நடக்க நாம் தயாராயிருக்கிறோமா !.என்றால் இல்லை இன்னும் பொய்யான சமய மதங்களையே பிடித்து அலைந்து கொண்டு உள்ளோம். எதுவரினும் சரி, எது போயினும் சரி, இன்றே அந்த சுத்த சிவநீர் என்னும் அருளைப் பெற்று பருக வேண்டும்; என் உடல் , உயிர், ஆவி அத்தனையும் இந்த நேரமே சமர்பித்து விடத் தயார் என்று உறுதி கொண்ட நேரமே நல்ல நேரமாகும். அந்த நல்ல நேரத்தைக் குறித்துதான் வள்ளலார். வருவார் அழைத்து வாடி வடலூர் வட திசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே என்று வள்ளல்பெருமான் அனைவரையும் அழைத்து வரும்படி சொல்லுகின்றார்.வடலூர் வந்தால் வழி பிறக்கும். சிவநீர் என்னும் அமுதம் கிடைக்கும் ஆன்மாவில் இருந்து அருள் சுரக்கும். சுத்த அமுதம் அருந்தி நரை,திரை ,பிணி,மூப்பு பயம்,மரணம் இல்லாமல் மரணத்தை வெல்லுவோம்.அதி தீவிர முயற்சி செய்யுங்கள் நன்மையே நடக்கும் நன்மையே கிடைக்கும். அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு