வெள்ளி, 12 மே, 2017

சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ?



சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ?

சுத்த சன்மார்க்கம் என்பது உண்மையான ஆன்மீக அருளைப் பெரும் வழியைக்  காட்டும்  மார்க்கம் என்பதாகும்.

அந்த உண்மையான சுத்த சன்மார்க்கத்தின் வழியாகச் சென்று  உண்மையான இறைவனைக் கண்டு அவருடன் நேரடியான  தொடர்பு கொண்டு,பூரண அருளைப் பெற்று மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அமமயமாகும் மார்க்கம் தான் சுத்த சன்மார்க்கம் என்பதாகும்.

இதற்கு வள்ளலார் வைத்துள்ள முழுப் பெயர் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் '' என்பதாகும்.இந்த மார்க்கத்தின் வழியாகத் தான்  உண்மையான  ''அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை'' அறிந்து,தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும் என்பது இறைவன் ஆணையாகும் .இதற்குமேல் எங்கும் இல்லையா என்றால் இல்லை என்றுதான் தீர்க்கமாக சொல்ல வேண்டும்.

சமய மதங்கள் !

இந்த உலகத்தில் மனிதன் நல்லின்ப வாழ்வு சிறக்க ,அறியாமையாலும்,முன்பு உள்ள பழக்க  வழக்கத்தாலும் லட்சியக் குறைவாலும்,பழமையான பலவகை நெறி முறைகளாலும் ,உண்மை வெளிப்படாமல் இருந்தது.ஆதலின் மக்கள் பல பல வழிகளில் சென்று சென்று ,அருள் அறிவு இல்லாத,அருள்   இன்பம் அல்லாத வற்றையே, இன்பம் என நினைந்து நினைந்து,தேடித் தேடி அலைந்து   வாழ்ந்து அழிந்து கொண்டே உள்ளார்கள். , ,

தினமும் இந்தத் தொல்லை நெறிகளில் சுற்றித் திரிந்து அல்லல் பட்டு அழிவதைத் தவிர்க்க ,ஒரு நல்ல உண்மையான நெறியை மக்கள்  காண வேண்டும்,அவற்றை பின் பற்ற வேண்டும்  என்பதே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ,..வள்ளலாருக்கு இட்டக் கட்டளையாகும்.அதனை சிரமேற்க் கொண்டு தோற்று விக்கப்பட்டது தான் சுத்த சன்மார்க்க புதிய நெறியாகும்.

மயக்கம் தரும் பகுத்தறிவைக் கொண்டு சமய ,மத ஆன்மீக நெறியாளர்கள்  பல பல கற்பனைத் தெய்வங்களையும், அத் தெய்வங்கள் பெயரால்  பல பலக் கொள்கைகளையும்  வகுத்து, உண்மைக்கு புறம்பான கருத்துக்களை,கொள்கைகளை  மக்கள் மத்தியில் புகுத்து விட்டார்கள் .அதனால்  சாதாரண உலக  இன்பத்தை அனுபவித்து வந்தார்கள்.இப்போது  சுத்த சன்மார்க்க நெறியில் மெய் இன்பமான பேரின்பத்தைப்  பெரும் வாய்ப்பு கிடைத்து உள்ளது .எனவே
 எல்லா உண்மைகளையும்,மயக்கம் இன்றி தெளிவாகத்  தெரிந்து கொள்ளும் ஒரு நல்ல நெறியாகிய சுத்த சன்மார்க்க நெறியை பின்பற்றும்  வாய்ப்பு உலக மக்கள் அனைவருக்கும்  கிடைத்து உள்ளது.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

தெய்வங்கள் பலபல சிந்தை செய்வாரும்
சேர்கதி பலபல செப்பு கின்றாரும்
பொய் வந்த கலை பல புகன்றிடு வாரும்
பொய்ச் சமயாதியை மெச்சு கின்றாரும்
மெய் வந்த திருவருள் விளக்கம் ஒன்றும் இல்லார்
மேல் விளைவு அறிகிலார் வீண் கழிக்கின்றார்
எய்வந்த துன்பம் ஒழித்து அவர்க்கு அறிவு அருள்வீர்
எனைப் பள்ளி எழுப்பி மெய் இன்பம் தந்தீரே !

என்னும் பாடல் வாயிலாக மிகவும் தெளிவாக பதிவு செய்து உள்ளார்.

ஒரு நெறி என்றால் ,உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக,எல்லார்க்கும் உரிய ஒன்றாக இருக்க வேண்டுவது அவசியமாகும்.ஏன் என்றால் அனைவரும் உயர்ந்த அறிவு படைத்த ஒரே இனத்தவர்கள் ஆவார்கள். ஆதலால் கடவுள் கொள்கையில் ''ஒரே தெய்வம்,ஒரே கொள்கை' இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்...அவசரமாகும்.

அப்படி இல்லை என்றால்,..கடவுளை தோற்று வித்தவர்களுக்கும், அவற்றைப் பின் பற்று பவர்களுக்கும் தெளிந்த பூரண அறிவும்,அதற்குமேல் அருள் அறிவும்  இல்லை என்பதை வள்ளலார் கீழே கண்ட பாடலில்   பதிவு செய்கின்றார் .

எவ்வகை சார் மதங்களிலே பொய் வகைச் சாத்திரங்கள்
எடுத்து உரைத்தே எமது தெய்வம் எமது தெய்வம் என்று
கைவகையே கதறு கின்றீர் தெய்வம் ஒன்று என்று அறியீர்
கரி பிடித்துக் கலகம் இட்ட பெரியரினும் பெரியீர்
ஐ வகைய பூத உடம்பு அழிந்திடில் என் புரிவீர்
அழி உடம்பை அழியாமை ஆக்கும் வகை அறியீர்
உய்வகை என் தனித் தந்தை வருகின்ற தருணம்
உற்றது இவண் உற்றிடுவீர் பெற்றுடுவீர் உவப்பே !

இது வரையில் சமய மதங்கள் யாவும் மனிதன் மரணம் அடைந்து அழியும் வகையே காட்டி உள்ளது .வள்ளலார் காட்டிய ''சுத்த சன்மார்க்கம்'' ஒன்றே அருளைப் பெரும் வழியைக் காட்டுகின்றது. அழியும் உடம்பை அழிக்காமல் காக்கும்( மரணம் வராமல் ) வழியைக் காட்டுகின்றது..அந்த வழியைத் தெரிந்து கொண்டு அதன் வழியாக கற்றுக் கொள்ளும் கல்விக்கு  சாகாக் கல்வி''என்று பெயர் வைத்துள்ளார்.

சுத்த சன்மார்க்கம் ஒன்றினால் மட்டுமே மனித உடம்பையும் ,உயிரையும் காப்பாற்றி இறைவனோடு சேர்க்க முடியும் என்பது அழுத்தமான இறை  உண்மையாகும் .மேலும் எல்லா உயிர்களையும் துன்பம் இல்லாமல் இன்புற்று வாழ வைக்க முடியும் என்பது பேர் உண்மையாகும்.    

மக்கள் இனம் !

மக்கள் பல நாடுகளில் வாழ்ந்து கொண்டு வருகின்றார்கள் .அவர்கள் .இடத்தாலும்,வெப்ப தட்ப நிலையாலும்,.ஆகார அலங்காரப் பழக்க வழக்கங்களாலும் ,புறத் தோற்றங் களாலும் .தேக இந்திரிய,கரணங்களின் பயிற்ச்சி வசத்தாலும்,அறிவு ஆற்றல்களாலும்,வாழ்க்கை முறைகளாலும் ,வேறு வேறு வண்ணமாய் ,அனந்த பேத இயல்பாயத் தோன்றுகின்றார்கள்.

இந்த தோற்ற நிலைகளை எல்லாம் கடந்து உள் நோக்கும் போது  ,யாவரும் ஆன்ம நிலையில் ஒரேத் தன்மை உடையவர்களாய் இருப்பதால் ஓர் உரிமை உடைய ''இயற்கை உண்மை ஏக தேச  சகோதர்களே ஆவார்கள்''..என்ற உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்...இதைத்தான் வள்ளலார் சொல்லுகின்றார் . நாம் அனைவரும் ''ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமை'' உடையவர்கள்.இறைவனுடைய குழந்தைகள் .. எனவே நமக்குள் சாதி ,சமய,மதம் என்ற பேதம் இல்லாமல் ஒரே  உரிமையுடன்  ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்கின்றார்.இதைதான் சுத்த சன்மார்க்கம் சொல்லுகின்றது

ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உள்ளவர்களாய்,ஒற்றுமையுடன் உலகியல் நடத்த வேண்டும் என்கின்றார்..

ஒரே கடவுள் !

ஒரே கடவுள் என்ற உண்மையை அறிந்து அதனுடன் தொடர்பு கொண்டு பூரண அருளைப் பெற்று மரணத்தை வென்று கடவுள் நிலைக்குத் தன்னை மாற்றிக் கொண்டு ,கடவுளின் உண்மையை உலக மக்களுக்குத் தெரியப் படுத்துகின்றார் . அந்த உண்மைக் கடவுள் எவ் வண்ணமாய் விளங்கி இயங்கிக் கொண்டு உள்ளார் என்பதை தெரிவிக்கின்றார்.

அவர் இயற்கை உண்மையர் என்றும்,...இயற்கை அறிவினர் என்றும் ..இயற்கை இன்பினர் என்றும்  ..நிர்க்குணர்  என்றும் .. சிற்குணர் என்றும் ..   நித்தியர் என்றும்.... சத்தியர் என்றும் ....ஏகர் என்றும் ...அநேகர் என்றும் ...ஆதியர் என்றும்..அனாதியர் என்றும் ..அமலர் என்றும் ...அற்புதர் என்றும் ..நிரதிசயர் என்றும் ..எல்லாம் ஆனவர் என்றும் ..எல்லாம் உடையவர் என்றும் ..எல்லாம் வல்லவர் என்றும் ...அளவு கடந்த திருக்குறிப்பு திரு வார்த்தைகளால் சுத்த சன்மார்க்க ஞானிகள் துதித்தும் நினைத்தும்,உணர்ந்தும் புணர்ந்தும்

அனுபவிக்க விளங்குகின்ற தனித் தலைமைப் பெரும் பதியாகிய கடவுளைக் கண்டவர் வள்ளலார் ...அவர்தான் ''அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்'' என்னும் ஒரே கடவுளாகும்  ..அந்தக் கடவுளின் ஆணைப்படி தோற்றுவிக்கப் பட்டதுதான் ..சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் .என்பதாகும்.அதற்குப் பெயர்தான் சுருக்கமாக  சுத்த சன்மார்க்கம் என்பதாகும்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

கடல் கடந்தேன் கரை அடைந்தேன் கண்டு கொண்டேன் கோயில்
கதவு திறந்திடப் பெற்றேன் காட்சி எலாம் கண்டேன்
அடர் கடந்த திரு அமுதம் உண்டு அருள் ஒளியால் அனைத்தும்
அறிந்து தெளிந்து அறிவு உருவாய் அழியாமை அடைந்தேன்
உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன்
உள்ளபடி உள்ள பொருள் உள்ளவனாய் நிறைந்தேன்
இடர் தவிர்க்கும் சித்தி எலாம் என் வசம் ஓங்கினவே
இத்தனையும் பொது நடஞ் செய் இறைவன் அருட் செயலே !

மேலும் ;--

காட்டை எலாம் கடந்து விட்டேன் நாட்டை அடைந்து உனது
கடிநகர்ப் பொன் மதிற்காட்சி கண் குளிரக் கண்டேன்
கோட்டை எலாம் கொடி நாட்டிக் கோலம் இடப் பார்த்தேன்
கோயிலின் மேல் வாயிலிலே குறைகள் எலாம் தவிர்த்தேன்
சேட்டை அற்றுக் கருவி எலாம் என் வசம் நின்றிடவே
சித்தி எலாம் பெற்றேன் நான் திருச்சிற்றம் பலமேல்
பாட்டை எலாம் பாடுகின்றேன் இது தருணம் பதியே
பலந்தரும் என் உளந்தனிலே கலந்து நிறைந்து அருளே !

என்னும் பாடல்கள் வாயிலாக அருட்பெருஞ்ஜோதியைக் கண்டதும் களித்ததும் கலந்து கொண்டதையும் ,மிகத் தெளிவாக தெரிவித்து உள்ளார்.
இறைவன் அருளை எவ்வாறு பெற்றேன் என்பதையும்.எல்லா சித்தி வல்லபத்தையும் எனக்கே இறைவன் தந்தான் என்பதையும்,உள்ளபடி உள்ள பொருளாக என்னை இறைவன் மாற்றிக் கொண்டான் என்பதையும்.இவை எல்லாம் இறைவன் அருட்செயலே என்பதையும் மிகத் தெளிவாக தந்து உள்ளார் ..

சாதி, சமயம்,மதம் கலவை இல்லாத ஒரே மார்க்கம் தான் வள்ளலார் தோற்று   விக்கப்பட்ட ,தனித்தன்மை வாய்ந்த மார்க்கமாகும் அது  தான்  சுத்த சன்மார்க்கம் என்பதாகும்.

சுத்த சன்மார்க்கத்தை வழிநடத்த எவரிடமும் பொறுப்பை  வள்ளலார்  ஒப்படைக்கவில்லை  ..

நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் என்கின்றார் !

உலகம் எலாம் போற்ற ஒளிவடிவனாகி
இலக அருள் செய்தான் இசைந்தே ---திலகன் என
நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் நம் பெருமான்
தானே எனக்குத் தனித்து .

சன்மார்க்கிகள் எவரும் சன்மார்க்கத்தை வழி நடத்த வேண்டிய அவசியம் இல்லை ..வள்ளலார் சொல்லிய வண்ணம்  சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறிகளை கடைபிடித்து வாழவேண்டும் .வள்ளலார் போல் வாழ்ந்து காட்ட வேண்டும்.அதை விடுத்து சமய மத வாதிகள் போல் பட்டம் பதவி புகழுக்கு ஆசைப்பட்டு அழிந்து விடக்கூடாது.அதற்கு நமக்கு காலம் இல்லை என்கின்றார் .

சாகாக் கல்வியை வள்ளலார் சொல்லியபடி கற்க வேண்டுமேத் தவிர . சாகாக் கல்வியை கற்காமல், மரணத்தை வெல்லாமல்,நரை ,திரை,பிணி,மூப்பு,பயம், ,மரணம் போன்றவைகளை வர வைத்துக் கொண்டு  மற்றவர்களுக்கு போதிப்பது அறியாமையாகும்.அதனால் எந்த ஆன்ம லாபமும் கிடையாது,கிடைக்காது.

வள்ளலார் அழைக்கின்றார் !

திருநெறி ஒன்றே அதுதான் சமரச சன்மார்க்கச்
சிவநெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு
வருநெறியில் எனை ஆட்கொண்டு அருள் அமுதம் அளித்து
வல்லப சத்திகள் எல்லாம் வழங்கிய ஓர் வள்ளல்
பெருநெறியில் சித்தாடத் திருவுளங் கொண்டு அருளிப்
பெருங் கருணை வடிவினொடு வருதருணம் இதுவே
கரு நெறி வீழ்ந்து உழலாதீர் கலக்கம் அடையாதீர்
கண்மையினால் கருத்து ஒருமித்து உண்மை உரைத்தேனே !

உற்ற மொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே
உறவன் அன்றி பகைவன் என எண்ணாதீர் உலகீர்
கற்றவரும் கல்லாரும் அழிந்திடக் காண்கின்றீர்
கரணம் எலாம் கலங்க வரும் மரணமும் சம்மதமோ
சற்றும் இதைச் சம்மதியாது என் மனந்தான் உமது
தன் மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்
இற்றி இதனைத் தடுத்திடலாம் என்னோடும் சேர்ந்திடுமின்
என் மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம் தானே !

என்னும் பாடல்கள் வாயிலாக ...உலகில் உண்மையான ஒரே ஒரு  மார்க்கம் தான் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' என்னும் மார்க்கமாகும்...இங்கே சாதி,சமயம்,மதம் இல்லாத  சமரசம் இருக்கின்றது ,,கலப்படம் இல்லாத,பொய் இல்லாத சுத்தம் இருக்கின்றது ,...ஒழுக்கம் நிறைந்த புதிய மார்க்கமாக  உள்ளது, சத்தியம் தவறாத உத்தமன் ஆகும் வழி இருக்கின்றது.இவை அனைத்தும் சங்கமிக்கும் இடம்தான் சுத்த சன்மார்க்கம் என்பதாகும்.

முன் உள்ள மார்க்கங்கள் யாவும் முடிந்தன !

பன்மார்க்கம் எல்லாம் பசை அற்று ஒழிந்தனவே
சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே ---சொன்மார்க்கத்
எல்லா உலகும் இசைந்தனவே எம் பெருமான்
கொல்லா நெறி அருளைக் கொண்டு !

முன் உள்ள மார்க்கங்கள் யாவும் முடிந்தன
மண்ணுள சுத்த சன்மார்க்கம் சிறந்தது
பன்னுளம் தெளிந்தன பதி நடம் ஓங்கின
என் உளத்து அருட் பெருஞ்ஜோதியார் எய்தவே !

துன் மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன் சுத்த சிவ
சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் --என் மார்க்கம்
நன் மார்க்கம் என்றே வான் நாட்டார் புகழ் கின்றார்
மன்  மார்க்கத்தாலே மகிழ்ந்து !

வள்ளலார் இயக்கும்  சுத்த சன்மார்க்கத்தை வான் நாட்டார்கள் எல்லாம் புகழ்கின்றார்கள் என்கின்றார் .சுத்த சன்மார்க்கத்தின் பெருமையை, புகழை,மகிழ்ச்சியை ...  அருள் பெற்று வானத்தில் உள்ளவர்கள் எல்லாம் இஃது என்னே ! இஃது என்னே ! என்று ஆச்சரியத்துடன் மகிழ்ந்து போற்றி புகழ்கின்றார்கள் என்கின்றார் வள்ளலார் .

காரணம் என்ன ?

எத்துணையும் பேதம் உறாது எவ் உயிரும்
தம் உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்து உரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்து உருவாய் எம் பெருமான் நடம் புரியும்
இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர் தம் அடிக்கேவல் புரிந்திட என்
சிந்தை விழைந்த தாலோ !

உயிர் எலாம் ஒரு நீ திருநடம் புரியும்
ஒரு திருப் பொது என அறிந்தேன்
செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்
சித்து எலாம் வல்லது ஒன்று அறிந்தேன்
மயிரெலாம் புளகித் உளமெலாம் கனிந்து
மலர்ந்தனன் சுத்த சன்மார்க்கப்
பயிரெலாம் தழைக்கப் பதி எலாம் கழிக்கப்
பாடுகின்றேன் பொதுப் பாட்டே !

என்னும் பாடலின் வரிகள் வானாட்டாரை மகிழ்விக்க செய்துள்ளது .

கடவுள் எல்லா உயிர்களிலும் இயங்கிக் கொண்டு உள்ளார் .,,அந்த சுத்த சன்மார்க்க பயிரான உயிர்களை காப்பாற்றுவதே என்னுடைய முக்கிய பணியாகும் .அதே நேரத்தில் அந்த உயிருக்குள் இருக்கும் இறைவனை  அறிந்து ஜீவ காருண்ய வழிபாடு செய்துதான் இறைவன் அருளைப் பெற வேண்டும் என்பதை தெளிவாக்கியவர்தான் வள்ளலார்...அதனால் தான் ''ஜீவ காருண்யமே சுத்த சன்மார்க்கம்'' என்றார்.

எல்லா உயிர்களும் ஒரேத் தன்மை உடையது ஆகவே எத்துணையும் பேதம் இல்லாமல் எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் என்னும் உரிமை வரவேண்டும்.அதற்குமேல் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையை கடைபிடிக்க வேண்டும் என்றார். ஜீவன் என்றால் உயிர் என்பதாகும்,உயிரை இயக்கும் ஆன்மாதான் கடவுளின் ஏக தேசமாகும்.

உயிர் இரக்கத்தால் அன்பு உண்டாகும்,,, அன்பு உண்டானால் அறிவு உண்டாகும் ..அறிவு உண்டானால் அருள் உண்டாகும்... அருள் உண்டானால்  ஆன்மாவைக் காணலாம்,...ஆன்மாவைக் கண்டால் கடவுளைக் காணலாம் . என்பதை வள்ளலார்

உன்னைபார்த்து உன்னுள்ளே என்னைப் பாராதே
ஊரைப் பார்த்து ஒடி உழல் கின்றாய் பெண்ணே
என்னைப் பார் என்கின்றார் என்னடி அம்மா
என் கை பிடிக்கின்றாய் என்னடி அம்மா !

என்னும் வரிகளின் வாயிலாக ..உன்னைப்பார் ..உன்னுள்ளே நான் இருக்கின்றேன் என்கின்றார் இறைவன் . ,எனவே  உன்னைப்பார்க்க ஜீவ காருண்யம் பெரும் உதவியாக இருக்கின்றது .. ஜீவ காருண்யம் விளங்கும் போது அன்பும் அறிவும் தானாக விளங்கும்,அப்போது எல்லா நன்மைகளும் கிடைக்கும். ..ஜீவ காருண்யம் மறையும் போது அன்பும் அறிவும் தானாக மறையும்,அப்போது  எல்லா துன்பங்களும் நம்மை வந்து சேரும். என்கின்றார் .

அதனால் ஜீவ காருண்யமே கடவுள்  வழிபாடு என்றார் ...உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றார்..  ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல் என்றார்.
சுத்த சன்மார்க்கம் என்றால் உயிர்க் கருணை என்பதாகும். .

அந்த அளவிற்கு மிகவும் உயர்ந்த நெறியான சுத்த சன்மார்க்க பெருநெறியை ,தனி நெறியை ,அருள் நெறியை பின்பற்றி சுத்த சன்மார்க்க,ஜீவ காருண்ய ஒழுக்க நெறியைக் கடைபிடித்து ,பூரண அருள் பெற்று மரணம் இல்லாப் பெருவாழ்வாகிய சுத்த பிரணவ ஞான தேகத்தைப் பெற்று பேரின்ப சித்திப்  பெருவாழ்வில்  வாழ்வாங்கு வாழ்வோம்.

இன்னும் விரிக்கில் பெருகும் ;--

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896..








0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு