புதன், 10 மே, 2017

பாம்புக்கும் கருணை காட்டிய வள்ளல் !

பாம்புக்கும் கருணை காட்டிய வள்ளல் !

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள்.

பாம்பு கடித்தால் ஒருமணி நேரத்தில் அதன் விஷம் தலைக்கு ஏறி நடம்பு மண்டத்தையும்,சுவாச மண்டலத்தையும் தாக்கி மரணத்தை விளைவித்து விடும் என்பது மனித குலத்திற்குத் தெரியும்.

வள்ளல்பெருமான் ஒருநாள் சென்னையை அடுத்துள்ள வியாசர் பாடிக்கு பிரசங்கம் செய்ய தன் நண்பர்களுடன் சென்றார் .பிரசங்கம் செய்துவிட்டு அன்று  இரவு நேரத்தில் அங்கு இருந்து நண்பர்களோடு   திரும்பி வரும் பொழுது ,

நடுவழியில் ஒரு பெரிய நல்ல பாம்பு அவர்களை நோக்கி வர.. எல்லோரும் பயந்து அலறி அடித்துக் கொண்டு  ஓடி விட்டனர் .வள்ளல்பெருமான் மட்டும் அவ்விடத்தை விட்டு அகலாது அச்சமின்றி நின்று கொண்டு இருந்தார்கள் .அப்பாம்பும் அடிகளுடைய திருவடிகளில் சிறிது நேரம் சுற்றிக் கொண்டு இருந்து பின்னர் அடிகள் ஏவுமாறு கூற,பாம்பும்  அவரை தலை வணங்கி  அமைதியாக சென்று விட்டது .பாம்புக்கும் கருணை காட்டிய நம் வள்ளல்பெருமான் போல் உலகில் எவரும் உண்டோ.!

பாம்பு வள்ளலாரைத் தீண்டியது !

செஞ்சிக்கு அடுத்து உள்ள அப்பாசாமி அய்யா வாழைத் தோட்டம் வழியாக நண்பர்கள் உடன் சென்று கொண்டு இருந்தார் .அத்தோட்டத்தில் ஒரு ''பேயன் வாழை'' மரத்தின் மீது அமர்ந்து இருந்த ஒரு நாகப் பாம்பு வள்ளலார் தலையில் தீண்டிவிட்டது .அதனைக் கண்ட உடன் வந்தவர்கள் ,ஐயோ ! பெருமானைப் பாம்பு கடித்து விட்டதே என்று பதறியவர்களாய் பெருமானுக்கு சிகிச்சை செய்யவும் ,,அப்பாம்பினை அடிக்கவும்  முயன்றார்கள் .

நம் வள்ளல்பெருமானோ ? அவர்களை நோக்கி அவ்விஷம் நம்மை ஒன்றும் செய்யாது ,அப்பாம்பை ஒன்று செய்ய வேண்டாம் ..என்று கூறி அப் பாம்பும் இறந்து போவதற்காகவே நம்மைத் தீண்டியது .இன்னும் சிறிது நேரத்தில் தானாகவே மடிந்து விடும் என்றார் ..ஆகவே அதனை நீங்கள் அடித்தலும் வேண்டாம் கொல்லவும் வேண்டாம் என்றார் .

வள்ளல்பெருமான் கூறியவாறே அப்பாம்பின்  விஷமும் அடிகளை ஒன்றும் செய்யவில்லை அப் பாம்பும் சிறிது நேரத்தில் இறந்து கீழே விழுந்தது .

வள்ளல்பெருமானை தீண்டிய  அப்பாம்பு மோட்சம் அடைந்தது ..

வள்ளல்பெருமான் உடம்பு அருள் உடம்பு !

அருள் பெற்ற உடம்பினரை எந்த தீய சக்திகளும் ஒன்று செய்யாது ..உயிருக்கு எந்த ஆபத்துக்களும் எக்காலத்திலும்  நெருங்காது ..என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.கருணையே வடிவான ,அருள் பூரணம் பெற்ற வள்ளல்பெருமானை . பஞ்ச பூத  மாயா சக்திகளும்,கூற்றுவன் என்ற எமனும் கிட்டே நெருங்காது ..என்பதுதான் வள்ளலார் பெற்ற பெருங் கருணையாகும் .அதுதான் தனிப் பெருங் கருணையாகும்....

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

காற்றாலே புவியாலே ககனம் அதனாலே
கனலாலே புனலாலே கதிர் ஆதியாலே
கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே
கோளாலே பிற இயற்றும்  கொடுஞ் செயல்களாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாத விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவு என நினையாதீர் உலகீர்
என் தந்தை அருட்பெருஞ்ஜோதி இறைவனைச் சார்வீரே !

என்பதை ஒரு பட்டியல் போட்டு,எதனாலும் அழிக்க முடியாத உடம்பு அளிக்க வேண்டும் என்று கேட்டேன் விரைந்து அளித்தான் எனக்கே என்பதை மேலே கண்ட  பாடலாக வாயிலாக பதிவு செய்துள்ளார்

வள்ளலார் காலத்தில் !

வள்ளல்பெருமான் 1870 ஆம் ஆண்டில் இருந்து  எப்பொழுதும் தனித்தே இருப்பார்.அவரை எவரும் தொட்டு பார்க்கவோ ,அருகில் அமரவோ முடியாது .அவரை நேருக்குநேர் எவரும் பார்க்க முடியாது, அவர் மற்ற ஞானிகள் போல் எவருக்கும் கைகளை தூக்கி  ஆசீர் வாதம் செய்யவே  மாட்டார் .கைகளைக் கட்டிக் கொண்டே இருப்பார் .

வள்ளலார் மீது மழை படாது..வெய்யில் படாது,மண் காலில் படாது காற்று படாது,ஆகாயம் தடுக்காது,நெருப்பு சுடாது,பஞ்ச பூதங்களும் அவர் சென்றால் விலகிவிடும்.அவ்வளவு அருள் பூரண ஆற்றல் படைத்தவர் தான் நமது வள்ளலார் .

மக்கள்  அவர்கள் காலில் விழுந்து வணங்க, எவருக்கும் அனுமதி வழங்க  மாட்டார் . அருட்பெருஞ்ஜோதியை மட்டுமே வணங்க வேண்டும் .வழிபட வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக அறிவுறுத்துவார் . எல்லாம் வல்ல பரம் பொருள் ஒன்று உண்டு .அவர்தான் ''அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்'' .அவரை உண்மை அன்பால்,எப்போதும் இடைவிடாது  வழிபாடு செய்ய வேண்டும் என்று அடிக்கடி போதித்துக் கொண்டே இருந்தார்.

எப்படி வழிபாடு செய்யவேண்டும் என்பதை வள்ளலார் பதிவு செய்துள்ள ஞான சரியை முதல் பாடல் !

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருள் அமுதே நன் நிதியே ஞான
நடத்தரசே என் உரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துதும் நாம் வம்மின் உலகியலீர்
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே !

என்னும் பாடலில் கண்டபடி வழிபாடு  செய்தால் என்றும் அழியாத நன் நிதியாகிய அருள் அமுதம் கிடைக்கும் . ,அதாவது என்றும் அழியாத  அழிக்க முடியாத அருள் நிதியாகிய அருள் அமுதம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் தனிப்பெருங் கருணையோடு வழங்கப்படும்  ..என்பது தான் உண்மையான வழிபாடாகும். அந்த நல்ல நிதியாகிய அருள் அமுதம் கிடைத்தால் மட்டுமே வள்ளலாரைப் போல் மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ முடியும்.

விஷமுள்ள பாம்புக்கும் கருணைக் காட்டிய வள்ளலார் போல், நாமும் எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கின்றார் என்ற உண்மையை அறிந்து, எவ்வுயிருக்கும் தீங்கு செய்யாமல் ஜீவ காருண்யத்துடன் வாழ்ந்தால் ..எல்லா உயிர்களும்  இன்புற்று வாழ வேண்டும் என்ற உண்மை விளங்கும்... அப்போதுதான் இறைவன் பார்வை நம்மீது விழும் .இறைவன் பார்வை நம் மீது திரும்பினால் போதும் .நாம் அருள் பெரும் தகுதி உடையவர்களாய் மாறிவிடுவோம்...இறைவன் நம்மைப் பார்க்கும்படி,வழிபாடு செய்து  வாழ்வதுதான் சுத்த சன்மார்க்க வழிபாடாகும்.

உயிர்கள் மீது உண்மையான இரக்கம் உண்மையான தயவு,உண்மையான அன்பு,உண்மையான கருணைக் காட்டி வாழ்ந்தால்,மட்டுமே  .இறைவன் பார்வை  நம்மீது திரும்பி உண்மையான  கருணைக் காட்டுவார் .

தொடரும்

 அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு