வியாழன், 19 நவம்பர், 2015

வள்ளல்பெருமான் படத்தை வழிபடலாமா ?

வள்ளல்பெருமான் படத்தை வழிபடலாமா ?

வள்ளல்பெருமான் படத்தை வைத்து வழிபடலாமா ? ஊர்வலமாக கொண்டு செல்லலாமா ? என்ற சந்தேகம் பல சுத்த சன்மார்க்க அன்பர்களின் கேள்வியாக இருக்கின்றது .

வள்ளல்பெருமான் படத்தை வைத்து வழிபடுவதும்,வள்ளல்பெருமான் படத்தை வைத்து ஊர்வலமாக கொண்டு செல்வதும் முற்றிலும் தவறானது .
வள்ளல்பெருமான் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கைகளுக்கு முற்றிலும் விரோதமானது .

அப்படி செய்வது சமய மத வாதிகளின் ஆசார சங்கற்ப விகற்பங்கள் போன்ற  உருவ வழிபாடு போல் ஆகிவிடும் .

படத்தை வைத்து வழிபாடு செய்வதை வள்ளல்பெருமான் ஏற்றுக் கொள்ள மாட்டார் .

உண்மையானக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி என்பதாகும் .

வள்ளல்பெருமான் மரணத்தை வென்று அருட்பெருஞ்ஜோதியாக தன்னை மாற்றிக் கொண்டார் .

அருட்பெருஞ்ஜோதியை வணங்கினால்,அவற்றை  வழிபட்டால் அதில் வள்ளல் பெருமான் இருக்கின்றார்.

வள்ளல் பெருமான் படத்தை வழிபட்டால் வணங்கினால் அதில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இல்லை என்பதை சன்மார்க்கிகள் தெரிந்து கொள்ளவேண்டும்.

வள்ளல்பெருமான் படம் !

வள்ளல்பெருமான் உருவத்தை போட்டோ எடுக்க சன்மார்க்க அன்பர்கள் விருப்பம் கொண்டு ...சென்னை மாசிலாமணி முதலியார் அவர்களைக் கொண்டு எட்டு தரம் புகைப்படம் எடுத்தும் வள்ளலாரின் திரு உருவம் படத்தில் அமையவில்லை, விழவில்லை பின்னர் அந்த அவ் எண்ணத்தையும் முயற்ச்சியையும் அவர்கள் விட்டு விட்டனர் .

ஞான தேகம் என்னும் ஒளி தேகத்தை படைத்த பெருமானார் திருமேனி புகைப் படத்தில் விழுமா என்ன ?

அதன்பின் சிறிது காலத்தில் பண்ணுருட்டியில் உள்ள குயவர் ஒருவர்  வள்ளலார் திரு உருவத்தைப் பல கால் பார்த்த பழக்கத்தினால் வள்ளலார் உருவத்தை காண்போர் கண்ணைக் கவரும் வகையில், மண்ணினால் செய்து
வள்ளலாரிடம் கொடுத்தார் .

அத் திருஉருவைக் கரத்தில் வாங்கிய வள்ளல்பெருமான் ''பொன்னான மேனி மாண்ணாய் ஆயிற்றே''என்று சொல்லி அப்படியே கை நழுவ கீழே போட்டுவிட்டார் .அவ்வுருவமும் கீழே விழுந்து உடைந்து போனது.

அதன்பின் வள்ளல்பெருமான் மீது உள்ள பக்தியின் காரணமாக, அன்பின் காரணமாக அவருடைய படத்தை பல வடிவங்களில் பல கோணங்களின் வரைந்து சன்மார்க்க சங்க அன்பர்கள் வைத்துள்ளனர்.

சன்மார்க்க அன்பர்கள் அடையாளத்திற்காக வேண்டுமானால் வள்ளலார் படத்தை வைத்துக் கொள்ளலாம் .

அவர் உருவத்தை வழிபடுவதால் எந்த பயனும் இல்லை.

சன்மார்க்கமும் சாதி,சமயம் மதங்கள் போல் ஆகிவிடும்.

வள்ளல்பெருமான் தெளிவாக சொல்லி உள்ளார் .!

சன்மார்க்க அன்பர்கள் வழிபாடு விஷயத்தில் மிகவும் ஜாக்கிரத்தையாக இருக்க வேண்டும் என்கின்றார் .

கடவுள் ஒருவர் உள்ளார் என்றும்.அவர் பொதுப்பட உலகத்தில் உள்ளார் யாவரும் சன்மார்க்கப் பெரும் பயன் பெற்று நித்திய வாழ்வு வாழ்தற் பொருட்டு ''அருட்பெருஞ்ஜோதியாக'' வெளிப்படையாக காரியப் படுகின்றார் .

அது காலையில் நாமும் ஆன்ம லாபத்தைப் பெற்றுக் கொள்ளுவோம் எனவும் நம்பி இங்கே வசிக்கும் யாவரும் வழிபாடு விஷயத்தில் ஒரு தடையும் சொல்லாது இங்கு இருத்தல் அவசியம் என்பதை மிகவும் தெளிவுப் படுத்தி உள்ளார் .

மேலும் ;---ஸ்ரீ முக வருடம் கார்த்திகை மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் உள் இருந்த விளக்கைத் திரு மாளிகைப் புறத்தில் வைத்து ''தடைபடாது ஆராதியுங்கள் '' இந்தக் கதவை சார்த்திவிடப் போகிறோம் .இனி கொஞ்ச காலம் எல்லோரும் ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகின்ற படியால் உங்களுடைய காலத்தை வீணிற் கழிக்காமல் ....

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருள் அமுதே நன் நிதியே ஞான
நடத்து அரசே ஏன் உரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துது நாம் வம்மின் உலகயிலீர்
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே !

என்று வழிபடும் முறையையும் சொல்லி உள்ளார் .மேலும் ஞான சரியையில் உள்ள 28,பாசுரங்களில் அடங்கி உள்ள பாடல்களில் கண்டபடி ,''தெய்வ பாவனையை'' இந்த தீபத்தில் செய்யுங்கள் நாம் இப்போது ''இந்த உடம்பில் இருக்கின்றோம் இனி எல்லா உடம்புகளிலும் புகுந்து கொள்வோம் என்கின்றார் .

வள்ளல்பெருமான் இவ்வளவு தெளிவாக சொல்லியும் சன்மார்க்க அன்பர்கள் எதை வைத்து வழிபட வேண்டும் என்பதை இன்னும் புரிந்து கொள்ளாமல் சமய மத வாதிகள் போல் உருவத்தை வைத்து வழிபடலாமா ? என்பதை சுத்த சன்மார்க்கத்தைப் பின் பற்றுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் வள்ளல்பெருமான் சன்மார்க்கிகளுக்கு பதிவு செய்துள்ள பாடல் ;---

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாள் வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்
என் மார்க்கத்தில் எனை உமக்குள் ஒருவன் எனக் கொள்வீர்
எல்லாம் செய் வல்ல நமது இறைவனையே தொழுவீர்
புன் மார்க்கத்தவர் போல் வேறு சில புகன்றே
புந்தி மயக்கம் அடையாதீர் பூரண மெய்ச் சுகமாய்த்
தன் மார்க்கமாய் விளங்கும் சுத்த சிவம் ஒன்றே
தன் ஆணை என் ஆணை சார்ந்து அறிமின் ஈண்டே !

மேலே கண்ட பாடலில் சன்மார்க்கிகள் எல்லோருக்கும் புரியும் படி சொல்லி உள்ளார் .

சன்மார்க்கிகளின் காலில் விழுந்து சொல்லுகிறேன் என்கின்றார்...

என்னை உங்களில் ஒருவனாக நினைத்துக் கொண்டு என்னை வணங்காதீர்கள் .எல்லாம் வல்ல நமது இறைவன் ஒருவர் உண்டு ''அவரே அருட்பெருஞ்ஜோதியர்'' .அவரை வணங்குங்கள் என்கின்றார் .

புன் மார்க்கத்தவர் போல் என்கின்றார் .பொய்யான சமய மத வாதிகளைப் போல் உருவத்தையோ,படத்தையோ,வைத்து வழிபாடு செய்யாதீர்கள் என்கின்றார் .

மேலும் தன் ஆணை,என்ஆணை என்று சத்தியம் வைத்து சொல்லுகின்றார் .

வள்ளல்பெருமான்  இவ்வளவு சொல்லியும் நாம் கேட்க வில்லை என்றால் நாம் வருவதை அனுபவிக்க வேண்டியதுதான் .அதற்குமேல் அவரவர் விருப்பம் .

இப்போது உள்ள சன்மார்க்கிகளில் நிறையப்பேர் சமய மத வாதிகள் தான் உள்ளனர் .அவர்களை திருத்துவது கொஞ்சம் கடினம் .இனி வருபவர்கள் வள்ளலாரின் கொள்கைகளை முழுதும் தெரிந்து,வள்ளலார் சொல்லியவாறு பின்பற்றி  அதன்படி நடந்தால் மேல் நிலைக்கு செல்ல முடியும் .

எனவே வள்ளலார் படத்தையோ, உருவத்தையோ,வைத்து ஊர் வலமாகவோ வழிபாடு செய்வதாலோ எந்த பயனும் எக்காலத்திலும் கிடைக்க வாய்ப்பே இல்லை ..

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவர் உள்ளார் என்பதை உணர்ந்து உண்மை அன்பால் ..உண்மை அறிவால்,..உண்மை இரக்கத்தால் வழிபாடு செய்வதே சிறந்த வழிபாடாகும்.

''அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு'' என்பதை தெளிவாக, விளக்கமாக,உறுதியாக  சொல்லியும் சன்மார்க்கிகள் கேட்காமல் அவரவர்கள் விருப்பம் போல் செய்வது ...வள்ளல்பெருமான் வாக்கை மீறிய செயலாகும்.

மேலும் வள்ளல்பெருமான சொல்லியது ;---

அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு
அருள் ஆட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு
மருட் சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு
மரணம் தவிர்த்தேன் என்று அறையப்பா முரசு .

வள்ளல்பெருமான் அருட்ஜோதியாக ஆகிவிட்டார் .அருள் ஆட்சியையும்,பெற்று விட்டார் .மற்ற சார்புகளை எல்லாம் ஒழித்து விட்டார் .மரணத்தையும் தவிர்த்து விட்டார் .

இப்போது வள்ளல்பெருமான் எந்த வடிவில் உள்ளார்,''ஒளி வடிவில் உள்ளார்''  என்பதை சன்மார்க்கிகள் அறிந்து புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.எதை வழிபட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்...மேலும்

ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
அருட்பெருஞ்ஜோதி என் உளத்தே
நீதியில் கலந்து நிறைந்தது நானும்
நித்தியன் ஆயினன் உலகீர்
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே
சத்தியச் சுத்த சன்மார்க்க
வீதியில் உமைத்தான் நிறுவுதல் உண்மை
விளம்பினன் வம்மினோ விரைந்து .

நான் என்றும் அழியாத அருட்பெருஞ்ஜோதி உருவில் கலந்து நிறைந்து நித்தியனாக இருக்கின்றேன் ...சாதி,சமயம்,மதம் ,போன்ற கொளகைகளை அழித்து, இருக்கும் இடம் தெரியாமல் நிறுவி விடுவேன் என்கின்றார் .

மேலும் நாம் தெளிவு இல்லாமல் இருந்தால் என்ன பயன் ?.உங்களுக்கு ஆண்டவர் துணை செய்வாரா ? நீங்கள் அருளைப் பெற்று மரணத்தை வெல்ல முடியுமா ? சாதாரண ஒரு படத்தையே விட முடியாதவர்கள் எப்படி பற்றுகளை விடப் போகின்றீர்கள்.

நான் சொல்லுவதால் எவரும் வருத்தப் படாதீர்கள் .வள்ளல்பெருமான் சொல்லியதை நான் சொல்லுகின்றேன்.மேலும் உங்கள் விருப்பம் .

வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க நெறியை உங்களால் மக்களுக்கு போதிக்க முடியாது என்பதை தெரிந்து கொண்டுதான் ,''நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன்'' என்றார்.

சுத்த சன்மார்க்கத்தில் தெளிவாக உள்ளவர்களை தட்டி எழுப்பி மேல் நிலைக்கு வள்ளலார் கொண்டு வந்து விடுவார் ..நீங்கள் யாவரும் வாயைத் திறந்து பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.

இதை மனத்தில் வைத்துக் கொண்டுதான் நான் சொல்லுகிறேன் நீங்கள் கேட்க மாட்டீர்கள் .பின்னால் வருவதை அனுபவியுங்கள். என்றார்.

மேலும் வள்ளல்பெருமான் சொல்லியது.

அகில உலக சகோதர ஆன்மநேய ஒற்றுமையைப் பாராட்டும் இச்சங்கத்தில் அங்கத்தினராக வர நீங்கள் அருகர் அல்லர் ..இச்சங்கத்தின் உண்மை அங்கத்தினர்.இந்தியாவிற்கு வடக்கே வெகு தூரத்தில் வசிக்கிறார்கள் .

நீங்கள் நான் சொல்வதைக் கேட்பதில்லை ,எனது போதனையின் கருத்தின்படி நடக்கவும் இல்லை.நான் சொல்லுவதைக் கவனிக்க மாட்டோம் என்று திடப்படுத்திக் கொண்டீர்கள் போலும்.

என்றாலும் காலம் நெருங்கி விட்டது ,ரஷ்யாவில் இருந்தும் அமெரிக்காவில் இருந்தும் இன்னும் இதர நாடுகளில் இருந்தும் அறிவாளிகள் இந்தியாவிற்கு வந்து ,இதே அகில உலக ஆன்மநேய ஒருமைப்பாட்டு கொளகைகளை
பிரசங்கிப்பார்கள் .

நான் இப்போது உங்களுக்கு வீணில் சொல்லும் சிறந்த உண்மைகளை ,அப்போது நீங்கள் தெரிந்து கொண்டு மதித்து நடப்பீர்கள் .

வடக்கே வெகு தூரத்தில் வசிக்கும் அம்பல சகோதரர்கள் ,இந்தியாவில் ,அநேக அற்புதங்களை நிகழ்த்தி நமது தேசத்திற்கு அளவிடமுடியாத நன்மைகளை விளை விப்பதை ,சீக்கிரம் நீங்கள் காண்பீர்கள்

என்று வள்ளலார் சொல்லியதாக ...முதல் சீடரான வேலாயுதம் தெளிவாக சொல்லி உள்ளார் .அதனால் தான் வேலாயுதத்தைக் கேட்டால் மனித தரத்தில் சொல்லுவார் என்று பேருபதேசம் என்ற பகுதியில் வள்ளலார் சொல்லி உள்ளார்.

வள்ளல்பெருமான் உடன் இருந்தவர்களைப் பார்த்து நீங்கள் இன்னும் நான் சொல்லும்  சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன வென்று தெரிந்து கொள்ளவில்லை என்று வேதனையுடன் சொல்லுகின்றார்.

இப்போது அறிவு விளக்கம் உள்ள நாம் அப்படி இருக்கலாமா ?

சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள்.!

சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய தடையாகிய சமயம்,மதம்,முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கை விட்டவர்களும் ,காமம்,குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும் கொலை ,புலை தவித்தவர்களும் ;--ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள் ஆவார்கள்.

மரணம் ,பிணி மூப்பு ,பயம்,துன்பம் --இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள் ,அதாவது --செயற்கையாகிய குணங்களை நன் முயற்ச்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிகார மரணம் நீங்கும்.

அப்படி இல்லாது இவ்விடம் காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக் கொள்ள மாட்டார்கள்...அருள் விளங்கும் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்  கூடும்,பரலோக ஞான சித்திகளை பெற மாட்டார்கள்..

சாகாதவனே சன்மார்க்கி ;-சன்மார்க்கத்தின் முடிபு சாகாத கல்வியைத் தெரிவிப்பதே அன்றி வேறில்லை.சாகிறவன் சன்மார்க்க நிலையைப் பெற்றவன் அல்லன்.

சுத்த சன்மார்க்கிகளின்  மிகவும் ஜாக்கிரதையாக அசட்டை செய்யாமல் வள்ளல்பெருமான் சொல்லிய வண்ணம் வாழ்க்கையை  அமைத்துக் கொண்டு வழிபாடு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஆதியும் அந்தமும் இல்லாதோர் அம்பலத்தே ஆடும்
ஜோதி தன்னையே நினைமின்கள் சுகம் பெற விழைவீர்
நீதி கொண்டு உரைத்தேன் இது நீவீர் மேலே ஏறும்
வீதி மற்றைய வீதிகள் கீழ்ச் செல்லும் வீதி.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு