வியாழன், 12 நவம்பர், 2015

உலக சமாதானம் !

உலக சமாதானம் !

உலக சமாதானத்திற்கு ஒரே வழி சமயங்கள் மதங்கள் ஒழிய வேண்டும்.

சமயங்கள் மதங்கள் ஒழிந்தால் உலக ஒற்றுமை அதிவேகமாக உண்டாகும்.

கடவுள் ஒருவரே என்ற  உண்மையை உலக மக்களுக்குப் போதிக்க வேண்டும்.

சமயங்கள் மதங்கள் காட்டிய கடவுள்கள் உண்மைக்குப் புறம்பானது பொய்யானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வேதங்கள்,ஆகமங்கள்,புராணங்கள்,இதிகாசங்கள்,சாத்திரங்கள் அனைத்தும் பொய்யானது என்பதை மக்களுக்கு ஆதாரத்துடன் போதிக்க வேண்டும்.

மனித நேயமும்,ஆன்ம நேயமும் என்ன என்பதை மக்கள் தெரிந்து புரிந்து கொள்ளும் அளவிற்கு போதிக்க வேண்டும்.

உலகத்தைப் படைத்தது யார் ?,ஆன்மாவைப் படைத்தது யார் ?,உயிர்களைப் படைத்தது யார் ? ,பொருள்களைப் படைத்தது யார் ? அந்த  உண்மையான இறைவன் யார் ? என்பதை மக்களுக்கு தெளிவுப் படுத்த வேண்டும்.

இதை எல்லாம் போதிக்க யார் தகுதி யானவர்கள் ?

உலக மக்களை திருத்தி உண்மையான பொது நெறியை உலக மக்களுக்கு அறிமுகப் படுத்தி ,உலக மக்களை ஒற்றுமைப் படுத்த   வேண்டும் என்பதற்காகவே  இறைவனால் வருவிக்க உற்றவர் தான் ,''திரு அருட்பிரகாச வள்ளலார் ''என்பவராகும்.

அவர் போதித்த உண்மையான நெறிதான் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ''என்ற நெறிதான் தனிப்பெரும்  புனித நெறியாகும்.

இந்த புனிதமான நெறியை உலக மக்களுக்குப் புரியும்படி போதிக்க வேண்டியது சுத்த சன்மார்க்கிகளின் பொறுப்பும் கடமையும் யாகும்.

சுத்த சன்மார்க்கிகள் என்பது,சாதி,சமயம்,மதம்,என்னும் கொள்கைகளை முற்றும் பற்று அற கை விட்டவர்களும், காமம் குரோதம் இல்லாதவர்களாகவும், எதிலும் பற்று இல்லாத பொது நோக்கம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.அவர்களே சுத்த சன்மார்க்கத்தைப் போதிக்கும் தகுதி உடையவர்கள்.

வள்ளலார் போதித்த சுத்த சன்மார்க்க நெறி ஒன்றாலேதான், உலகத்தை ஒன்று படுத்த முடியும்...உலக ஒற்றுமையை உருவாக்க முடியும்.உலக சமாதானத்தை படைக்க முடியும்.

உலக மக்களே உலகத்தை ஒருமைப் படுத்த உலக சமாதானத்தை உருவாக்க ,ஆன்ம நேயத்தையும்,மனித நேயத்தையும் புரிந்து கொண்டு மக்களை நல்வழிப் படுத்த  வள்ளலார் போதித்த ''சுத்த சன்மார்க்க
நெறியில் ''தங்களை இணைத்துக் கொண்டு உலக மக்களுக்கு நன்மையை  செய்வோம் வாரீர் வாரீர் .

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

அகத்தே கருத்துப் புறத்து வெளுத்து
இருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க
சங்கத்து அடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழந்து
இடுதற்கு என்றே எனை இந்த
உலகத்தே இறைவன் வருவிக்க
உற்றேன் அருளைப் பெற்றேனே !

எவ்வுலகும் அண்டங்கள் எத்தனையும் நான் காண
இவ்வுலகில் என் தந்தை எனக்களித்தான் --எவ்வுயிரும்
சன்மார்க்க சங்கம் அடையச் செய்வித்தே
என்மார்க்கம் காண்பேன் இனி .!

அகம் கருத்து புறம் வெளுத்துக் கொண்டு இருக்கும் மக்களைத் திருத்துவதற்காகவே இறைவன் என்னை இந்த உலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளான் .என்றும்.

உலகில் உள்ள மக்களை திருத்துவதற்காக எனக்கு அருளைப் பூரணமாக கொடுத்து மரணத்தை வென்று எக்காலத்தும் அழியாமல் இருக்கும் தேகத்தையும் கொடுத்து உள்ளான் ...ஆதலால மக்களை திருத்தி உலக சமாதானத்தையும்,ஆன்மநேயத்தையும்,மனித நேயத்தையும் உண்டாக்குவேன் .

இது இறைவன் கட்டளை இவற்றை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்கின்றார் வள்ளல்பெருமான்.

இறைவனால் தோற்று விக்கப்பட்டது தான் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ''என்பதாகும் எனவே எல்லா உயிர்களையும் இன்பம் அடைய செய்விப்பதே சுத்த சன்மார்க்க கொள்கைகளாகும் .

இன்னும் கொஞ்ச காலத்தில் இறைவன் ஆணைப்படியே உலக சமாதானம்,உலக ஒற்றுமைகள்  எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு