திங்கள், 13 ஏப்ரல், 2015

அறிவு எங்கே ? எப்படி உள்ளது ? எப்படி அறிந்து கொள்வது ?

அறிவு எங்கே எப்படி உள்ளது ?

அறிவு என்பது மனிதனுக்கு மட்டும் இறைவனால் பதிய வைக்கப் பட்டுள்ளது.

உலகில் உள்ள ஜீவ ராசிகளுக்கு அறிவு என்பது வெளிப்படாது.மனிதர்கள் தம்முள் இருக்கும் அறிவை தெரிந்து கொண்டால் மட்டுமே,உலகின் உண்மைகள் யாவும் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

புத்தி என்பது வேறு ,அறிவு என்பது வேறு/!

உலகில் வாழும் மனிதர்கள் புத்தியைக் கொண்டுதான் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.உடம்பில் உள்ள மூன்றாவது அடுக்காண கரணங்களில் புத்தி என்பது இருக்கின்றது .

கரணங்களில் நான்கு பகுதிகள் உள்ளன ,மனம்,புத்தி ,சித்தம்,அகங்காரம்,என்னும் கருவிகளாகும்.அந்த கருவிகள்தான் மனித உடம்பில் உள்ள கருவிகளை இயங்க வைத்துக் கொண்டுள்ளன.''மனம்'' என்ன நினைக்கின்றதோ,அதை ''புத்தி'' ஏற்று,''சித்தம்'' என்னும் கருவிக்கு அனுமதி வழங்கி அகங்காரம் என்னும் கருவியின் மூலம், இந்திரியங்கள் என்னும் கருவிகளான ,கண்,காது, மூக்கு,வாய்,மெய் என்னும் உடம்பில் உள்ள கால், கைகளுக்கு வேலைகளைக் கொடுத்துக் கொண்டு உள்ளது.

இவைகள் யாவும் புத்தியின் செயல்களாகும்.புத்தியின் செயலால் செய்யப்படும் செயல்கள் யாவும் அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும்.இறுதியில் மரணம் வந்து சேர்ந்து விடும்.

மனத்தினால் செயல்படுவதால் மனிதன் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மனிதன் புத்தியைத்தான் அறிவு என்று நினைத்துக் கொண்டு உள்ளான் .

அறிவு எங்கே எப்படி உள்ளது !

ஜீவன் என்னும் உயிருக்குள் ஒளிர்ந்து கொண்டு இருப்பது அன்பு.அந்த அன்புக்குள் ஒளிர்ந்து கொண்டு இருக்கும் ஒளியே அறிவு என்பதாகும்.

அதைத்தான் வள்ளல்பெருமான் ''அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே '' என்கின்றார்.உயிரை நன்கு உணர்ந்து பார்த்தால் அது உணர்வு மயமாகவே இருக்கும்.அந்த உணர்வே அறிவு என்பதாகும்.

அறிவின் பட்டியல்கள் .

1,,புறப்புறம் என்னும் மெய் ,வாய்,கண்,மூக்கு ,செவி,என்கின்ற பொறியால் அறியும் பொறி அறிவு ஐந்தும் ,இந்திரிய அறிவு என்பதாகும் .

2,, ..அடுத்து புறம் என்னும் ,மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்,என்னும் காரணங்களினால் அறியும் அறிவுக்கு கரண அறிவு என்பதாகும்.

3,,அடுத்து அகப்புறம் என்னும் ''ஜீவன்'' உயிரால் அறியும் அறிவுக்கு ஜீவ அறிவு என்பதாகும்.

4,,, அடுத்து அகம் என்னும் ஆன்மாவால் அறியும் அறிவுக்கு ஆன்ம அறிவு என்பதாகும்.

ஆன்ம அறிவுக்கு மேல் உள்ள அறிவுகள் !

1,அறிவு,2,பேரறிவு,3,அறிவுக்கு அறிவு,4,அறிவுள் அறிவு,5,அறிவுள்,அறிவுள் அறிவு,6,இயற்கை உண்மை அறிவு ,7,இயற்கை உண்மைத் தனி அறிவு,8,செயற்கை மன்னும் அறிவுக்குரிய தாரக அறிவு,9,தாரக முதல் அறிவு,10,அம்முதற்கோர் அறிவு,11,துரிய அறிவு,12,துரிய நிலைகடந்து அதன்மேல் சுத்த அறிவு ,13,சிவநிலை அறிவு.

அடுத்து ஒரு நான்கு அறிவுகள் வருமாறு !

1,தோற்றும் அறிவு .2,தோன்றும் அறிவு,3,தோற்றுவிக்கும் அறிவு ,4,பதி அறிவு ,

அடுத்து ஒரு ஆறறிவு வகை !

1,அறிவு,2,பேரறிவு ,3,மெய் அறிவு,4,சுத்த அறிவு,5,அறிவுக்கு அறிவு,6,அருள் அறிவு .

எல்லா அறிவையும் விட உயர்ந்த அறிவு அருள் அறிவாகும் !

முன்னர் அறிவு என்பதற்கு உயிருள் உள்ள ஒளியே அறிவு என்று பார்த்தோம்.இந்த அறிவானது மனம் எல்லாம் ஒழிந்து போக ,அதன்பின் வாக்கு எல்லாம் ஒழிந்து போக ,அதன்பின் மதிஎல்லாம் ஒழிந்து போக ,மதியின் வாதனையும் ஒழிந்து போன ,அந்த இடமே அறிவு உள்ள இடமாகும்.இவற்றை எல்லாம் கடந்து உள்ளது அருள் அறிவாகும்.

வாக்கு ஒழிந்து மனம் ஒழிந்து,மதி ஒழிந்து மதியின்
வாதனையும் ஒழிந்து அறிவாய் வயங்கி நின்ற இடம் .. என்பார் வள்ளல்பெருமான் .

அறிவுக்கு அறிவு என்பது யாது !

அறிவுக்கு அறிவு என்பது திருவருள் என்னும் அறிவாகும்.அதை தெரிந்து கொள்வது.

அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுது அங்கு
அனுபவம் ஆவது என்னடி தாயே
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
திருவருள் உருவம் என்று அறியாயே மகளே !

ஆன்ம அறிவைக் கொண்டு தேடுகின்ற போது இறை அருளின் உருவம் என்னவென்று தெரியும்.

அருளின் நடனம் எப்போது தெரியும் !

அருளாலே அருளிறை அருள்கின்ற பொழுது அங்கு
அனுபவம் ஆகின்றது என்னடி தாயே
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்
திரு நட இன்பம் என்று அறியாயோ மகளே !

அருளைக் கொண்டு ,அருளைத் தேடுகின்ற போது,அருளை வழங்கும் இறைவன் யார் என்பது அப்போது தான் தெரியும்...உடம்பு உயிர் இல்லாமல்,நினைப்பு  மறைப்பு  இல்லாமல்,ஊன உடம்பை ஒளியாக மாற்றம் அடைகின்ற போது,இறைவனுடைய திரு நடனமும்  அவற்றால் கிடைக்கும் இயற்கை இன்பம் யாவும் மறைப்பு  இல்லாமல்,வெட்ட வெளியாகத் தெரியும்.

பேரறிவின் சுகம் !

மறப்பாகிய மறதியே இல்லாத பேரறிவே அருள் அறிவு என்பதாகும்.மறைப்பு என்பது,,, ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கின்ற மாயா திரைகள் என்னும் அஞ்ஞான திரைகள் நீங்கி ,அந்த திரை அகன்ற பின் தோன்றுவதே பேரறிவு என்னும் அருள் அறிவாகும் .அதனால் கிடைக்கும் இன்பமே இயற்கை இன்பமாகும்.

''மறப்பறியாப் பேரறிவில் வாய்த்த பெருஞ் சுகமே'' என்பார் வள்ளல்பெருமான்.
மெய்யறிவின் ஆற்றல் !

மறைப்பே இல்லாத,அதாவது வியப்பே இல்லாத அறிவே மெய்யறிவு ஆகும்.அந்த மெய்யறிவு தான் இறைவனின் இயற்கை உண்மை அறிவாகும்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் !

இயற்கை உண்மையான இறைவனிடம் ,...இயற்கை விளக்கமான அருளைப் பெற்று ...இயற்கை இன்பமான பேரின்பம் அடைவதுதான்  ..மரணத்தை வெல்லும் வழியாகும் அதற்கு  மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும் ...பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பதாகும்....கடவுள் நிலை அறிந்து அம்மயமாய் மாறும் நிலையாகும்.

அருள் அறிவு ஒன்றே அறிவு மற்று எல்லாம்
மருள் அறிவு எனவே வகுத்த மெய்ச்சிவமே !

இந்த அருள் அறிவை வள்ளல் பெருமானாருக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வழங்கிய பொழுது ,இந்த உலகம் ,மற்றும் உள்ள பலகோடி உலகங்கள் யாவும்,வள்ளல்பெருமானை நீடுழி வாழ்க என வியப்பால் வாழ்த்திக் கொண்டே இருக்கின்றது.

அதே நேரத்தில் அருள் அறிவைப் பெற்று அருள் ஜோதியான  வள்ளல்பெருமான் இறைவனை எப்படி புகழ்ந்து பாடுகின்றார் என்பதைப் பாருங்கள் .

பேரிடர் தவிர்த்துப் பேரருள் புரிந்த பெரும நின்தன்னை என்தனக்கே
சாருறு தாயே என்று உரைப்பேனோ தந்தையே என்று உரைப்பேனோ
சீருறு குருவே என்று உரைப்பேனோ தெய்வமே என்று உரைப்பேனோ
ஆரென உரைப்பேன் என்னெனப் புகழ்வேன் யாது ஒன்றும் அறிந்திலன் அந்தோ .

யாராலும் தவிர்க்க முடியாத பேரிடர்களையும் துன்பங்களையும் ,என்னுடைய உடம்பையும்,உயிரையும் ஒளியாக மாற்றுவதற்கு ,உண்மையான அறிவையும் ,உண்மையான அருளையும் தந்து என்னை வேதித்த என்னுடைய அன்பே ,..உன்னை தாய் என்பதா ?,தந்தை என்பதா ?,குரு என்பதா ?,தெய்வம் என்பதா ? ,வேறு என்ன பெயர் வைத்து அழைப்பது என்பதும்  எப்படி புகழ்வது என்பதும்  ஒன்றுமே தெரியவில்லையே !

இனிமேல் உனக்கு என்னுடைய பெயர்தான் பொருத்தமானதாகும்,என்பதை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல்பெருமானுக்கு கொடுத்து ,இனிமேல் அனைத்து உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் நின்னையே குறி கொள்வார்கள் .என்பதை வள்ளல்பெருமானிடம் ஆணையிட்டு சொல்லுகின்றார். சொல்லுகின்றார் .

அந்தப் பாடலைப் பாருங்கள்.

ஆணை ஆணை நீ அஞ்சலை அருள் ஒளி தருகின்றாம்
கோணை மா நிலத்தவர் எலாம் நின்னையே குறிக்கொள்வர் நினக்கே எம்
ஆணை அம்பலத்து அரசையும் அளித்தனம் வாழ்க நீ மகனே என்று
எனை பெற்றிட  எனக்கு அருள் புரிந்த நின் இணை மலர்ப் பதம் போற்றி

என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அரசையும் அதாவது அவருடைய அருள் ஆட்சியும் வள்ளல்பெருமானிடம் கொடுத்து தானும் வள்ளல்பெருமானும் ஒன்றாக இணைந்து விட்டார்கள் இப்போது வள்ளல்பெருமான் வேறு ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வேறு என்பது இல்லை.என்பதை அறிவு உள்ளவர்கள் அறிந்து கொள்வார்கள்.

ஆதலால்  தான் .உண்மையான இரக்கம் உள்ளவர்களுக்கு உண்மையான அறிவு விளக்கம் தோன்றும்.உண்மையான அறிவு தோன்றுகின்ற போது,உண்மையான அருள் தோன்றும்.உண்மையான அருள் தோன்றுகின்ற போது ,உண்மையான இறைவன் யார் என்பது தோன்றும்.உண்மையான இறைவனைத் இடைவிடாது தொடர்பு கொண்டால்,ஊன உடம்பானது  உண்மையான ஆன்ம தேகமாக அதாவது ஒளிதேகமாக மாற்றம் அடையும் .

அந்த ஒளிதேகம் தான்  இறைவன் தேகம்என்பதாகும்..அதைத்தான் கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்று வள்ளல்பெருமான் மிகத் தெளிவாக விளக்குகின்றார்.

ஆதலால் நம்முடைய தலைப்பாகத்தில் சிரனடுவில்.உள்ள ஆன்மாவில் உள்ளதுதான் உண்மையான அறிவு .அந்த அறிவு மட்டுமே உண்மையை அறியும் அறிவாகும்.அதற்கு பொய் பேசத் தெரியாது..அதற்கு உண்மை எது .பொய் எது என்பது தெளிவாகத் தெரியும்.அந்த அறிவு இருக்கும் இடம்தான் சிற்சபை என்பதாகும்.அதைக் கண்ணால் கண்டவர் வள்ளல்பெருமான் ஒருவரே !

சிற்சபை அப்பனைக் கண்டு கொண்டேன் அருட் தெள்ளமுதஞ்
சற்சபை உள்ளம் தழைக்க உண்டேன் உண்மை தானறிந்த
நற்சபை சித்திகள் எல்லாம் என் கைவசம் நண்ணப் பெற்றேன்
பொற்சபை ஓங்கப் புரிந்து ஆடுதற்குப் புகுந்தனனே !

என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளும்படி தெளிவாகத் தெரியப் படுத்துகின்றார்.உண்மையான சிற்சபையில் உள்ள ஆன்மா என்னும் உள் ஒளியைக் கண்டு அதனுள் இருக்கும் அறிவைக் கொண்டு  அறிவின் துணையாக அருளைப் பெறவேண்டும்.

வெளியில் உள்ள தத்துவங்களான தெய்வங்களை வழிபாடு செய்வதாலோ .வெளியில் அமர்ந்து தியானம் தவம்,யோகம்,போன்ற புறச்செயல்களில் ஈடு படுவதாலோ எந்த நன்மையையும் பெறமுடியாது.அறிவும் விளங்காது அறிவு இருக்கும் இடமும் தெரியாது.

அதனால்தான் வள்ளல்பெருமான் .ஜீவ காருண்ய ஒழுக்கத்தினால் அருளைப் பெறக்கூடும் என்றார்.

அருள் என்பது ;-கடவுளுடைய இயற்கை விளக்கம் அல்லது கடவுள் தயவு என்பதாகும்.

ஜீவ காருண்யம் என்பது ,ஆன்மாக்களின் இயற்கை விளக்கம் அல்லது ஆன்மாக்களின் இயற்கை தயவு என்பதாகும்.

இதனால் ஒருமைக் கரணமாகிய சிறிய விளக்கத்தைக் கொண்டு பெரிய விளக்கத்தைப் பெறுதலும் வேண்டும் என்கின்றார்

சிறிய தயவைக் கொண்டு பெரிய தயவைப் பெறுதல் வேண்டும் என்றார் .

சிறு நெருப்பைக் கொண்டு பெரு நெருப்பைப் பெறுதல் போல் என்று அறிய வேண்டும் என்கின்றார்.

இதனால் ஜீவ காருண்ய ஒழுக்கமே சன்மார்க்கம் என்று அறியவேண்டும் என்று தெளிவாக விளக்கம் தந்துள்ளார் நமது வள்ளல்பெருமான் அவர்கள்.

அறிவு எப்போது விளங்கும் !

ஜீவ காருண்யம் விளங்கும் போது ;--அறிவும் அன்பும் உடனாக விளங்கும்.அதனால் உபகார சக்தி விளங்கும்.அந்த உபகார சக்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும்.

ஜீவ காருண்யம் மறையும் போது;-- அறிவும் அன்பும் உடனாக நின்று மறையும்.அதனால் உபகார சக்தி மறையும்.உபகார சக்தி மறையவே ,எல்லா தீமைகளும் தோன்றும்.

ஆகலின் புண்ணியம் என்பது ஜீவ காருண்யம் ஒன்றே என்றும்.

பாவம் என்பது ஜீவ காருண்யம் இல்லாமை ஒன்றே என்றும் அறிய வேண்டும்.

ஆதலால் ஜீவ காருண்ய ஒழுக்கத்தினால் வரும் விளக்கமே கடவுள் விளக்கம் என்கின்றார் .அதாவது அறிவு விளக்கம் உண்டாகும் என்கின்றார்.

அதனால் வரும் இன்பமே கடவுள் இன்பம் என்கின்றார் அதாவது அருளைப் பெரும் வழி என்கின்றார் .அவ்விளக்கத்தையும் இன்பத்தையும் பலகால் அறிந்து அடைந்து அனுபவித்து நிறைவு பெற்ற சாத்திய ஞானிகளே பேரின்ப லாபத்தைப் பெற்ற முத்தர்கள் என்பவர்களாகும்.

அவர்களே கடவுளை அறிவால் அறிந்து  கடவுள் மயமானவர்கள் என்றும் சத்தியமாக அறிய வேண்டும் என்று சத்தியம் வைத்து உலக மக்களுக்கு பறை சாற்றுகின்றார் .

எனவே ;--ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமை உடைய சகோதர சகோதரிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது .அறிவு எங்கே உள்ளது ? அதை எப்படி அறிந்து கொள்வது ? என்பதை அறிந்து கொள்வதற்கு ஜீவ காருண்யமே வழி ,ஜீவ காருண்ய ஒழுக்கமே உண்மையான அறிவையும்,உண்மையான அன்பையும் கொண்டு ,உண்மையான அருளைப் பெற்று மரணத்தை வென்று மரணம் அடையாமல்,

ஆன்ம இன்ப வாழ்க்கை வாழ்ந்து ஆன்ம இன்ப லாபத்தைப் பெற்று,ஆன்ம இன்ப பேரின்பத்தை அடைந்து  வாழ்வோம் .

ஆன்ம இன்ப வாழ்க்கையில் மூன்று இன்பங்கள் அடங்கி உள்ளன .அவைகள் ;--
இம்மை இன்ப லாபம் ..மறுமை இன்ப லாபம் ..பேரின்ப லாபம். என்ற மூன்று லாபத்தையும் பெற்று மூன்று விதமான இன்பத்தையும் அடைந்து முழுமைப் பெறுகின்ற போதுதான் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் முத்தேக சித்தியைப் பெற்று என்றும் அழியாத பேரின்ப சித்தியைப் பெற வேண்டும் .


உங்கள் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .


 .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு