செவ்வாய், 31 மார்ச், 2015

கருணை என்றால் என்ன ?

கருணை என்றால் என்ன ?

கற்றேன் சிற்றம்பலக் கல்வியைக் கற்று கருணை நெறி
உற்றேன் எக்காலமுஞ் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்
பெற்றேன் உயர் நிலை பெற்றேன் உலகில் பிற நிலையைப்
பற்றேன் சிவானந்தப் பற்றே என் பற்று என பற்றினேனே !

கருணை என்ற சொல் ஆன்மீகம் தோன்றிய காலத்தில் இருந்தே மிகச் சகஜமாக ,மிகச்சாதாரணமாக வழக்கில் வழங்கி வருகின்றது.

கருணை என்றால் என்ன என்று கேட்டால் மிகச் சாதாரணமாக ,அட அது தெரியாதா ? இரக்கம் தானய்யா  கருணை என்பார்கள் இன்னும் சிலர் இரக்கம் தயவு, பச்சாதாபம் என்பார்கள் .ஆக கருணை என்பதற்குரிய சரியான பொருளை வள்ளல்பெருமான் காலம் வரை உலகம் அறிந்து இருக்கவே இல்லை.

கருணை என்னும் உண்மையைத் தெரியாமல் மறைத்துக் கொண்டு இருந்த,.. யாராலும் திறக்க முடியாத மறைக்கப் பட்டு இருந்த பூட்டை அருள் என்னும் சாவியைப் போட்டு திறந்து மக்களுக்கு காட்டியவர்தான் வள்ளல்பெருமான் ஆவார்கள் .

வேறு எதனாலும் திறக்க முடியாது ,முயன்றவர்கள் அனைவரும் தோற்றுப் போயினரே அன்றி வெற்றிப் பெறவில்லை .

வள்ளல்பெருமான் பூரண அருளைப் பெற்று அந்த அருள் நிமித்தமாக புதிய கருணை என்னும் சாவியைப் போட்டு, அந்த பழைய பூட்டை திறந்து,அந்த பூட்டை உடைத்து எறிந்துவிட்டு   உள்ளே நுழைந்து அங்குள்ள காட்சிகளைக் கண்டு அனுபவித்து மக்களுக்கு ''திருஅருட்பா'' வாயிலாக காட்டி உள்ளார்,ஆதலால் நாம் இனிமேல் கோட்டையைத் திறந்து உள்ளே போவதற்கு எவ்விதத் தடைகளும் இல்லை .

வள்ளல்பெருமான் கண்ட காட்சிகளின் பாடல் ;--

கடல் கடந்தேன் கரை அடைந்தேன் கண்டு கொண்டேன் கோயில்
கதவு திறந்திடப் பெற்றேன் காட்சி எல்லாம் கண்டேன்
அடர் கடந்த திருவமுதம் உண்டு அருள் ஒளியால் அனைத்தும்
அறிந்து தெளிந்து அறிவு உருவாய் அழியாமை அடைந்தேன்
உடல் குளிர்ந்தேன் உயிர்க்கு கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன்
உள்ளபடி உள்ள பொருள் உள்ளவனாய் நிறைந்தேன்
இடர் தவிர்க்கும் சித்தி எலாம் என் வசம் ஓங்கினவே
இத்தனையும் பொது நடஞ் செய் இறைவன் அருட்செயலே .!

கருணை என்பது அருட்பெருஞ் ஜோதியிடம் பெரும் அருளாகும் .அருளே கருணை என்பதாகும்.

எங்கே கருணை இயற்கையில் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே

என்கின்றார் வள்ளல்பெருமான் .மேலும் ;--

இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றி இருக்கின்றார் ,இப்போது எல்லா வற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது !

நமது ஆண்டவர் கட்டளை இட்டது யாதெனில் ;-- நமக்கு முன் சாதனம் கருணை ஆனதினாலே .ஆண்டவர் முதற் சாதனமாக ---

அருட்பெருஞ்ஜோதி        அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங் கருணை   அருட்பெருஞ்ஜோதி !

என்னும் திருமந்திரத்தை ,வெளிப்படையாக எடுத்துக் கொண்டார் ,எனவும்,மேலும் தயவு,கருணை ,அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும் .

ஆதலால் பெரிய தயவு உடைய அறிவே பூரண இன்பமாம் --அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம்.என்கின்றார்

ஆகவே கருணை என்பது அருளையே குறிக்கும் .அந்த அருளைப் பெறுவதற்கு கடவுளின் துணை வேண்டும் .கடவுளின் துணையைப் பெறுவதற்கு ஜீவ காருண்யம் என்னும் உயிர் இரக்கம் வேண்டும் .

ஜீவ காருண்யம் உண்டானால் அன்பு உண்டாகும் ,அன்பு உண்டானால் அறிவு உண்டாகும் ,அறிவு உண்டானால் அருள் என்ன என்பது தெரியும்.அருளைத் தெரிந்து கொண்டால்  ,உண்மையான மெய்ப்பொருள் அருட்பெருஞ் ஆண்டவர் என்பது தெரியும்.அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் துணையால் அவரின் அன்பால்,தயவால்  கருணை என்னும் அருள் கிடைக்கும் .  

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பெருங் கருணையால் மரணத்தை வென்று மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழலாம் .

அகவே  கருணைதான் என்னை மேலே ஏற்றி விட்டது .நீங்களும் கருணையைப் பெறுவதற்கு எவ்வித தடைகளும் இல்லை ,அதற்கு சாட்சி நானே இருக்கின்றேன் என்று மக்களுக்கு தெளிவுப் படுத்துகின்றார் .

நாமும் கருணை என்னும் அருளைப் பெற்று பேரின்ப லாபத்தைப் பெற்று மகிழ்சியுடன் வாழ்வோம்

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு