ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

வள்ளலார் பெற்ற மரணம் இல்லாப் பெருவாழ்வு !

வள்ளலார் பெற்ற மரணம் இல்லாப் பெருவாழ்வு !

வரலுரில் உள்ள  சத்திய ஞான சபையில் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரிடம்
வேண்டும் விண்ணப்பம் .

உத்தர ஞான சித்திபுரம் என்றும் உத்தர ஞான சிதம்பரம் என்றும்,திருவருளால் ஆக்கப்பட்ட ஆக்கச் சிறப்புப் பெயர்களும் .பார்வதிபுரம் என்றும் , வடலூர் என்றும் உலகியலால் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப்பதியின் இடத்தே ,

இயற்கை விளக்க நிறைவாகியுள்ள ஓர் சுத்த சிவானுபவ ஞான சபையில் ,இயற்கை உண்மை நிறைவாகிய திருவுருவைத் தரித்து,இயற்கை இன்ப நிறைவாகிய சிவானந்த ஒருமைத்  திரு நடச் செய்கையை எவ்வுயிரும் இன்பம் அடைதல் பொருட்டே செய்து அருளுகின்ற ,

எல்லாம் வல்லத் தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே !  தேவரீரது திருவருட் சமூகத்தில் யான் செய்து கொள்ளுகின்ற சமரச சுத்த சன்மார்க்க சத்திய விண்ணப்பம் .

இவ்வுலகத்தின் இடத்தே உயர்ந்த அறிவு உடைத்தாகிய  தேகத்தைப் பெற்ற யான் இத்தேகத்திற்கு இடைக்கிடை நேருகின்ற  மரணம்,பிணி,மூப்பு ,பயம்,துன்ப முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்து,

இத்தேகத்தையே நித்திய தேகமாக்கிக் கொண்டு ,எக்காலத்திலும் ,எவ்விடத்தும்,எவ்விதத்தும் ,எத்துணையும்,தடைப்படாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் வேண்டும் என்பதே எனது சத்தியமான அதி தீவிர முயற்சியாக இருக்கின்றது.

எனது விருப்ப முயற்சி இங்கனமாக,அவத்தைகள் எல்லாவற்றையும் நீக்கி இத்தேகத்தை நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் எதனால் பெறுதல் கூடும் என்று அறியத் தொடங்கிய தருணத்து ,வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது.

எல்லாம் உடைய கடவுளது திருவருட் சுதந்திரம் ஒன்றாலே பெறுதல் கூடும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன் .

பின்னர் ,திருவருட் சுதந்திரம் நமக்கு எந்த வழியால் கிடைக்கும் என்று அறியத் தொடங்கிய தருணத்து .

எனது யான் என்னும் தேக சுதந்திரம் ,போக சுதந்திரம்,ஜீவ சுதந்திரம் என்னும் மூவகைச் சுதந்தரங்களும் நீங்கிய இடத்தே கிடைக்கும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.

ஆகலில்,எனது சுதந்தரமாகக் கொண்டு இருந்த தேக சுதந்தரத்தையும்,போக சுதந்தரத்தையும்,ஜீவ சுதந்தரத்தையும்,தேவரீர் திருவருட்கே சர்வ சுதந்தரமாகக் கொடுத்து விட்டேன்.

கொடுத்த தருணத்தே ,இத்தேகமும்,ஜீவனும்,போகப் பொருள்களும்,சர்வ சுதந்தரராகிய கடவுள் பெருங் கருணையால் கொடுக்கப் பெற்றன அன்றி, நமது சுதந்தரத்தால் பெற்றன அல்ல என்னும் உண்மையை அருளால் அறிவிக்கவும் அறிந்து கொண்டேன்.

இனி இத்தேகத்தின் இடத்தும்,சீவனிடத்தும் ,போகப் பொருகள் இடத்தும் தேவரீர் திருவருட் சாட்சியாக எனக்கு எவ்விதத்தும் யாதோர் சுதந்தரத் தோற்றமும் தோற்றமாட்டாது .தேவரீர் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே வைத்தருளி ,

மரணம்,பிணி,மூப்பு,பயம்,துன்பம் முதலிய அவத்தைகள் எல்லா வற்றையும் தவிர்த்து ,இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப ,சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல் வேண்டும்.

இத்தேகத்தைப் பெற்ற எல்லாச் ஜீவர்களுக்கும் எனக்கு அறிவித்த வண்ணமே அறிவித்து,அவரவர்களையும் உரிமை உடையவர்ளாக்கி வாழ்வித்தல் வேண்டும்.

தேவரீர் பெருங்கருணை ஆட்சிக்கு வந்தனம் ! வந்தனம் !

என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கின்றார் நமது வள்ளல்பெருமான்.

நாம் இந்த உலகத்தில் வாழ்வதற்கு முன்று சுதந்திரம் இறைவனால் கொடுக்கப் படுகின்றது.இந்த சுதந்தரத்தை அனுபவிக்கின்ற வரையில் மரணத்தை வெல்ல முடியாது.மரணம் வந்து கொண்டே இருக்கும்.

வல்லாரைப் போல் நாம் தேக சுதந்தரத்தையும் ,போக சுதந்தரத்தையும் ,ஜீவ சுதந்தரத்தையும் திருப்பி கொடுத்து விட்டு இறைவனிடம் உள்ள ''அருள்'' சுதந்தரத்தைப் பெற்று மரணத்தை  வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வோம் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.   

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு