வியாழன், 19 ஆகஸ்ட், 2021

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடம் மாற்றிக் கொண்டார்!

 *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடம் மாற்றிக் கொண்டார்*!


18-7-1872 ஆம் ஆண்டு  வள்ளலார் வெளியிட்ட *ஞானசபை விளக்க விபவ பத்திரிகை!*


அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம் ! 

இன்று தொடங்கி சபைக்கு *சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை என்றும்* சாலைக்கு *சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை* என்றும் *சங்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்றும் திருப்பெயர் வழங்குதல் வேண்டும்.


*இன்று தொடங்கி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரது அருட்பெரும் சித்தி வெளிப்படும் வரைக்கும்* *ஞான சபைக்கு உள்ளே தகரக் கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும் என்கிறார்*. 


(மேலே கண்ட வாக்கியத்தை ஊன்றி கவனிக்க வேண்டும். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரது *அருட்பெரும் சித்தி வெளிப்படும் வரைக்கும்* வள்ளலார் சொல்லியவாறு ஞானசபை செயல்பட வேண்டும் என்பதே வள்ளலார் விருப்பமாகும்)


பித்தளை முதலியவற்றால் செய்த குத்துவிளக்கு வேண்டாம். மேலே ஏற்றுகிற குளோப்பு முதலிய விளக்குகளும் வேண்டாம் தகரக் கண்ணாடி விளக்கு வைக்கும் காலத்தில் தகுதியுள்ள நம்மவர்கள் *தேகசுத்தி கரணசுத்தி உடையவர்களாய் திரு வாயிற்படிப் புறத்தில் இருந்து கொண்டு விளக்கு ஏற்றி 12 பன்னிரண்டு வயதிற்கு உட்பட்ட சிறுவர் கையில் கொடுத்தாவது. 72 எழுபத்திரண்டு வயதிற்கு மேற்பட்ட பெரியர் கையில் கொடுத்தாவது *உட்புற வாயில்களுக்குச் சமீபங்களில்  வைத்து வரச் செய்வித்தல் வேண்டும்*


*நான்கு நாளைக்கு ஒருவிசை* காலையில் மேற்குறித்த சிறியரைக் கொண்டாயினும் பெரியரைக் கொண்டாயினும் உள்ளே தூசு துடைப்பிக்க வேண்டும்.


தூசு துடைப்பிக்க புகும்போது *நீராடி சுத்த தேகத்தோடு கால்களில் வத்திரம் சுற்றிக்கொண்டு புகுந்து முட்டிக்கால் இட்டுக்கொண்டு தூசு துடைப்பிக்கச் செய்விக்க வேண்டும்*. *விளக்கு வைக்கின்ற போதும் இங்கனமே செய்விக்க வேண்டும்* என்கிறார்


விளக்கு வைத்தற்கும் தூசு துடைத்தற்கும் தொடங்குகின்ற 12. பன்னிரண்டு வயதிற்கு உட்பட்ட சிறுவரும்.72.எழுபத்திரண்டு வயதிற்கு மேற்பட்ட பெரியரும் *பொருள். இடம். போகம் முதலியவற்றில் சிறிதும் இச்சை இல்லாதவர்களாய்  தெய்வ நினைப்பு உடையவர்களாய் அன்புடையவர்களாய் இருத்தல் வேண்டும்*.


விளக்கு வைக்கும்போதும் தூசு துடைக்கும்போதும்.

*நம்மவர்களில் நேர்ந்தவர்கள் புறத்தில் நின்று பரிசுத்தராய் மெல்லெனத் துதிசெய்தல் வேண்டும்*.

*யாவரும் யாதொரு காரியம் குறித்தும் தற்காலம் உள்ளே போதல் கூடாது.ஞானசபைத் திறவுகோல் ஒருவர் கையிலும் வெளிப்பட இருக்கப்படாது.*


அத் திறவுகோலை வேறொரு பெட்டிக்குள் வைத்து அப்பெட்டியைப் பூட்டி அப்பெட்டியைப் பொற்சபைக்குள் வைத்து அப்பெட்டித் திறவுகோலை ஆஸ்தான காவல் உத்தரவாதியாய் இருக்கின்றவர் கையில் ஒப்புவித்தல் வேண்டும்.


*தொடர்ச்சி காலம் நேர்ந்த தருணம் எழுதுகிறேன்*.

இங்கனம்

சிதம்பரம் இராமலிங்கம்.

என்று கையொப்பம் இட்டு  தெரிவிக்கின்றார்.


மேற்குறித்தபடி ஞானசபையில் உட்புற வாயில்களுக்குச் சபீபங்களில் வைத்து வரச் சொன்னாரேத் தவிர சபையின்  மத்தியில் தகரக் கண்ணாடி விளக்கு வைக்க சொல்லவில்லை. 


*அந்த செயல்பாடுகள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரது அருட்பெருஞ்ஜோதி சித்தி வெளிப்படும் வரைக்கும் அவ்வாறு செய்து வரவேண்டும் என்று வள்ளலார்  கட்டளை இடுகின்றார்*.


*வள்ளலார் சொல்லியவாறு ஞானசபையில் ஒருவரும்  பின்பற்றவில்லை. கடைபிடிக்கவில்லை. ஆதலால் கோபமாக வெளியில் சொல்லாமல் சத்திய ஞானசபையை பூட்டிக் கொண்டு மேட்டுக்குப்பம் சென்றுவிடுகின்றார்* 


*தைப்பூசம் ஜோதிதரிசனம் காட்டச் சொல்லவில்லை!* 


வடலூரில் தைப்பூச ஜோதிதரிசனம். மற்றும்

மாதப்பூச தரிசனம் வள்ளலார் காட்டவும்இல்லை.

காட்ட சொல்லவும் இல்லை.


வள்ளலார் சித்தி அடைந்த பின்பு பின்னாளில்  சமய மதம் சார்ந்த ஆடூர் சபாபதி குருக்கள் அவர்கள் வேட்டவலம் ஜமீன்தார் அவர்களின் ஆதரவுடன் மற்றும் சில சமய மதவாதிகளின் துணைக் கொண்டு.  சுத்த சன்மார்க்க கொள்கைகளுக்கு விரோதமாய் தைப்பூச ஜோதிதரிசனம் மாதப்பூச தரிசனம் காட்டும் பழக்கம் உருவானதாகும்.

அந்த பழக்கம் இன்றுவரை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு வருகிறது. 


*வள்ளலார் கொள்கை மக்கள் மத்தியில்  பரவவிடாமல் தடுக்கும் நோக்கத்துடன் சமய மதவாதிகள் செய்த சூழ்ச்சி என்பதை சன்மார்க்கிகள் அறிந்து கொள்ள வேண்டும்*


*அவற்றை எதிர்த்து தடைசெய்யும் தைரியம் ஒழுங்குபடுத்தும் நெறிமுறைகள் எந்த சன்மார்க்கிகளுக்கும் தோன்றவில்லை. காரணம் அப்போது வள்ளலார் உடன் இருந்த சன்மார்க்கிகளுக்கு வள்ளலார் சொல்லியுள்ள சுத்த சன்மார்க்கம் என்னவென்றும் தெரியாது. கடவுளின் உண்மை என்னவென்றும் தெரியாது*.


*(அந்த உண்மைக்கு புறம்பான பழக்க வழக்கங்கள் எதிர்காலத்தில் சுத்த சன்மார்க்கிகளால் அருள் உண்டாகும் காலத்தில் மாற்றம் கண்டிப்பாக வெளிப்படும் இது ஆண்டவர் கட்டளை.)*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தன் விருப்பத்தை மாற்றிக் கொண்டார்*.


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விருப்பபடி வள்ளலார் சொல்லியவாறு சத்திய ஞானசபைக்குள்  சென்று  அருட்பெருஞ்ஜோதியுடன் வள்ளலார் கலந்து இருக்க வேண்டும்*. 


அதற்கு சாட்சியாக மேட்டுகுப்பத்தில் சன்மார்க்க  கொடியேற்றி பேருபதேசம் செய்யும் தொடக்கத்திலேயே  கீழ் கண்டவாறு விளக்கம் தருகிறார்.


*இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக்கொண் டிராதீர்கள்.*


 *இது முதல் சாலைக்கு ஆண்டவர் போகிற - பத்து தினமாகிய கொஞ்சக் காலம் - வரையில், நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள்*என்கிறார்*

அதனுடைய விளக்கம் என்னவென்றால்.? 


*சாலைக்கு போகும் தினம் என்பது வடலூர் சத்திய தருமச்சாலை அருகில் உள்ள ஞானசபையை குறிப்பதாகும்*.


அதுவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கட்டளை என்று பேருபதேசத்தை நிறைவு செய்கிறார்.


1865 ஆம் ஆண்டு ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் தொடங்கியது.


23--5--1867 சத்திய தருமச்சாலை தொடங்கியத்.


18-7-1872 ஆம் நாள் ஞானசபை வழிபாட்டு விதி விபரம்  வெளியிட்டது..சங்கம் சாலை சபை பெயர் மாற்றம் செய்த்து.


25-11-1872 ஆம் நாள் சத்திய ஞானசபை விளம்பர பத்திரிகை வெளியிட்டது.


22-10-1873.ஆம் நாள் கொடி ஏற்றி உபதேசம் செய்த்து.


30-1-1874 ஆம் நாள் வெள்ளிக்கிழமை இரவு சித்தி பெற்றது.


*இடையில் நடந்தது என்ன ?*


25-1-1872 ஆம் ஆண்டு சத்திய ஞானசபை  முதற்பூசை அதாவது தைப்பூசத்தன்று தொடங்கியதாக திருஅருட்பாவில் எழுதி வைத்துள்ளார்கள்.


( தைப்பூசம் முதற்பூசை என்பது முன்னுக்குபின் முரண்பாடாக உள்ளது. அவற்றைப்பற்றி பிறகு சிந்திப்போம்.) 


*வள்ளலார் மேட்டுக்குப்பத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் தொடர்புகொண்டு ஆறாம்திருமுறை எழுதிக்கொண்டு இருக்கும் காலத்தில்*.

வடலூரில் மாமிசம் உண்பவர்களைக்கொண்டு ஆடம்பரமான பெரிய பந்தல் அமைத்து விழா எடுக்க ஆரம்பித்து உள்ளார்கள்.

அவற்றை அறிந்து வள்ளலார் நினைத்த மாத்திரத்தில் பந்தலை  எரித்துள்ளார்கள்.

தீயினால் ஞானசபைக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது அன்பர்கள் சொல்லிய  வரலாற்று உண்மையாகும் .


*வள்ளல் பெருமான் பேருபதேசத்தில் சொல்லியவாறு பத்து நாட்கள் கழித்து ஞானசபையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்து அமர்ந்து இருக்க வேண்டும் அப்படி எதுவும் நடைபெறவில்லை*.


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வடலூர் ஞானசபைக்குச் செல்லாமல் வள்ளலார் தங்கி இருக்கும் இடமான மேட்டுகுப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் உள்ள திருவறையில் வந்து அமர்ந்து கொண்டார்*.

*அந்த உண்மையை அறிந்து கொண்ட வள்ளலார் அவசரம் அவசரமாக மக்களுக்குத் தெரிவிக்கிக்கின்றார்*.


*ஞானதீப விளக்கம் என்னும்*

தலைப்பில் 

ஸ்ரீமுக வருடம் கார்த்திகை மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் உள்ளிருந்த விளக்கைத் திருமாளிகைப் புறத்தில் வைத்து தடைபடாது ஆராதியுங்கள்.


இந்தக் கதவை சார்த்திவிடப் போகிறோம்.இனி கொஞ்சகாலம் எல்லோரும்.ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகிறபடியால் உங்களுடைய காலத்தை வீணே கழிக்காமல்.


நினைந்து நினைந்து  என்னும் தொடக்கம் உடைய *ஞானசரியை 28 பாசுரங்கள் அடங்கிய பாடலிற் கண்டபடி* தெய்வப் பாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள் .


நாம் இப்போது இந்த உடம்பில் இருக்கிறோம் இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம் என்று


*ஸ்ரீமுக வருடம் தைமாதம் வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொள்ளும் தருணம் வெளியிட்டவை..*


நாம் உள்ளே பத்துப் பதினைந்து தினம் இருக்கப் போகிறோம். பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள்.

ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறுவீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார்.

என்னைக் காட்டிக்கொடார்.


சுத்த பிரணவ ஞான தேகத்துடன் வெளிப்படுவோம்.

நாம் திருக்கதவை மூடியிருக்கும்கால் அதிகாரிகள் திறக்கும்படி ஆக்ஞாபிக்கின் ஆண்டவர் அருள் செய்வார். என்று அன்பர்களுக்குத்  தெரியப்படுத்துகின்றார்.


மேலும் இதற்கு ஆதாரமான *சத்திய அறிவிப்பு என்னும் தலைப்பில் 4 நான்கு பாடல்களை பதிவுசெய்கின்றார்*


1. ஐயன்அருள் வருகின்ற தருணம்இது கண்டீர்

ஐயமிலை ஐயமிலை ஐயன்அடி ஆணை


மெய்யன் எனை ஆட்கொண்ட வித்தகன் சிற் சபையில்

விளங்குகின்ற சித்தன் எலாம் வல்ல ஒரு விமலன்


துய்யன் அருட் பெருஞ்சோதி துரிய நடநாதன்

சுகஅமுதன் என்னுடயை துரைஅமர்ந்திங் கிருக்க


வையமிசைத் திருக்கோயில் அலங்கரிமின் விரைந்தே

மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே.! 


2.தனித்தலைமைப் பெரும்பதி என் தந்தை வருகின்ற

தருணம் இது சத்தியம்காண் சகதலத்தீர் கேண்மின்


இனித்த நறுங் கனிபோன்றே என்னுளம் தித்திக்க

இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகும் போற்ற


மனித்தஉடம்பு இதைஅழியா வாய்மை 

உடம்பாக்கி

மன்னிய சித் தெல்லாம் செய் வல்லபமும் கொடுத்தே


கனித்த சிவா னந்தமெனும் பெரும்போகம் தனிலே

களித்திட வைத் திடுகின்ற காலையும் இங்கிதுவே.!


3. சத்தியவான் வார்த்தை இது தான்உரைத்தேன் கண்டாய்

சந்தேகம் இலை இதனில் சந்தோடம் உறுவாய்


இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்

இனிவரும் அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்


சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும்

தூய்மைஉறும் நீஉரைத்த சொல் அனைத்தும் பலிக்கும்


செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்து மகிழ்ந் திருப்பார்

திருவருட்செங் கோல் எங்கும் செல்லுகின்ற தாமே.!


4. *என்சாமி எனதுதுரை* *என்உயிர்*

*நாயகனார்*

*இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில் அமர் கின்றார்*


பின்சாரும் இரண்டரை நா ழிகைக்குள்ளே எனதுபேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்


தன்சாதி உடைய பெருந் தவத்தாலே நான்தான்

சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம் சத்தியமே


மின்சாரும் இடைமடவாய் என்மொழி நின் தனக்கே

வெளியாகும் இரண்டரை 

நாழிகை கடந்த போதே.!


 இத்திருப்பாட்டின் கீழ் *இங்ஙனம் எல்லாம் வல்லவர் ஓதுக என்றபடி உரைத்துள்ளேன்* என வள்ளலார் தெரிவித்துள்ளார்.


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி வள்ளல் பெருமான் சத்திய ஞானசபையின் உள் சென்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து இருக்க வேண்டியது.* *அவ்வாறு நடைபெறாமல் வள்ளல்பெருமான் இருக்கும் இடத்திற்கே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வந்து கலந்து கொண்டது உலகின் பெரிய அதிசயம் அற்புதமாகும்.*


*வள்ளலார் பாடல்*! 


ஐயுறேல் இதுநம் ஆணை நம்மகனே

அருள்ஒளித் திருவை நின் தனக்கே


மெய்யுறு மகிழ்வால் மணம் புரிவிப்பாம்

விரைந்து இரண் டரைக்கடி கையிலே


கையற வனைத்தும் தவிர்ந்து நீ மிகவும்

களிப்பொடு மங்கலக் கோலம்


வையமும் வானும் புகழ்ந்திடப் புனைக

என்றனர் மன்றிறையவரே.!


மேலும் பாடல்


ஐயர் எனக் குள்ளிருந்திங் கறிவித்த வரத்தை

யார்அறிவார் நான்அறிவேன் அவர்அறிவார் அல்லால்


பொய்உலகர் அறிவாரோ புல்லறிவால் பலவே புகல்கின்றார் அதுகேட்டுப் புந்திமயக் கடையேல்


மெய்யர்எனை ஆளுடையார் வருகின்ற தருணம்

மேவியது மாளிகையை அலங்கரிப்பாய் விரைந்தே


தையல் ஒரு பாலுடைய நடத்திறைவர் ஆணை

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம் சத்தியமே.!


இந்த உண்மை சம்பவம்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் வள்ளல் பெருமானுக்கும் மட்டுமே தெரியும்.வேறு எவருக்கும் தெரியாது இது சத்தியம் என்கிறார்.


வள்ளலார் மக்களுக்கு சொல்லியது *வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே* என்று மட்டுமே சொல்லி உள்ளாரேத்தவிர *நேரம் காலம் நாள் மாதம் வருடம் போன்ற நாட்களில்தான் ஜோதிதரிசனம் காண்பிக்கப்படும் என்று எந்த இடத்திலும் (திருஅருட்பாவில்) சொல்லவில்லை.* 

*காலங் கடந்த கடவுளைக் காணற்குக்*

*காலங் கருதுவ தேன்* - நெஞ்சே

காலங் கருதுவ தேன்!  என்னும் பாடலிலும் தெரிவிக்கின்றார்.


*வடலூர் பொறுத்தவரை மக்கள் எந்த நேரம் வந்தாலும் ஜோதிதரிசனம் காணலாம் சத்திய ஞானசபை  திறந்தே இருக்கவேண்டும் என்பதே வள்ளலார் விருப்பமாகும்*


*எது எப்படியோ வள்ளல் பெருமான் உலகிற்கு போதித்த சுத்த சன்மார்க்க கொள்கையானது.*


எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்று *சுத்த பிரணவ ஞானதேகத்தோடு பேரின்ப சித்தி பெருவாழ்வு வாழவேண்டும் என்பதே சத்திய வார்த்தையாகும்*.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு