திங்கள், 16 ஆகஸ்ட், 2021

கொடிகட்டிக் கொண்டோம்!

 *கொடிகட்டிக் கொண்டோம்!*


*வள்ளலார் பாடல்*


கொடிகட்டிக் கொண்டோம் என்று சின்னம் பிடி

கூத்தாடு கின்றோம் என்று சின்னம் பிடி

அடிமுடியைக் கண்டோம் என்று சின்னம் பிடி

அருளமுதம் உண்டோம்என்று சின்னம்பிடி. 


மேலே கண்ட பாடலில் அருள் அமுதம் உண்டோம் என்றும் அதனால்  கொடிகட்டிக் கொண்டோம் என்று ஆனந்தமாகப் பாடுகின்றார்.


வடலூருக்கு அடுத்த மேட்டுகுப்பம் என்னும் இடத்தில் கொடி ஏற்றி வைத்து  பேருபதேசத்தில் வள்ளலார் சொல்லியது!


*இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.*


*இதற்குச் சாக்ஷியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது* அக்கொடி இப்போதுதான் கட்டிக் கொண்டது. அக்கொடி உண்மையில் யாதெனில்: 


நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி யிருக்கின்றது; அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது; அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்; அச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது; 


இக்கொடி நம் அனுபவத்தின்கண் விளங்கும். இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும் என நீண்ட உபதேசம் செய்கிறார்.


*கொடி என்பது ஒரு அடையாளம்!*

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு அடையாளமாக கொடி இருக்கும்.

அதேபோல் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும்.

ஆன்மீகத்திற்கும்.இயக்கத்திற்கும் அடையாளமாக  வெளிமுகத்தில் கொடி கட்டிக்கொள்வது உலகியல் வழக்கம்.


வள்ளலார் தன்னுடையக்   கொள்கைக்காகவும் இயக்கத்திற்காகவும் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை* தோற்றுவித்து அதன் அடையாளக் குறிப்பாக இன்றையதினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டிக் கொண்டது என்கிறார். இனி எல்லோருக்கும் நல்ல அறிவின்கண் அனுபவம் தோன்றும் என்கிறார். 


*அக்கொடியின் வண்ணம்* !


நமது நாபிமுதல் புருவமத்தி ஈறாக  ஒரு ஜவ்வு தொங்குகிறது யாதெனில் ?


அதாவது ஆன்மா இருக்கும் இடம் புருவமத்தி என்பதாகும்.

ஆன்மாவிற்கும் தொப்புள் கொடிக்கும் ஒரு ஜவ்வு ஏறவும் இறங்கவும் இடைவிடாது இயங்கிக் கொண்டே இருக்கும்.


தாயின் கருவறையில் தாயின் தொப்புளுக்கும்  குழந்தையின் தொப்புளுக்கும் ஒரு ஜவ்வுபோன்ற கொடியின் தொடர்பு இருக்கும்.அதன் வழியாக தாயின் தொப்புள் கொடிக்கும் அக்குழந்தையின் தொப்புள் கொடிக்கும் அமுதக்காற்றை மெல்லென லேசாக அனுப்பி உணவாக வழங்கப்படுகிறது. 


தாயின் கருவறையில் இருந்து குழந்தை வெளியே வந்த போது தாய்க்கும் குழந்தைக்கும் தொடர்புள்ள தொப்புள் கொடி துண்டிக்கப் படுகிறது.


வெளியில் துண்டிக்கப் பட்டதும் குழந்தையின் இயக்கத்திற்கு அதன் அகத்தில் புருவமத்தியில் உள்ள உள் ஒளியான ஆன்மாவைத் தொடர்பு கொள்கிறது. குழந்தையின் தொப்புளுக்கும்    ஆன்மாவிற்கும்  உள்ள ஒரு ஜவ்வுன் வழியாக வெளிக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்து விடுகிறது.

அக்காற்றுக்கு பிராணவாயு என்றும் பிராணன் என்றும் ஜீவன் என்றும் உயிர் என்றும் சொல்லப்படுகிறது


அக்காற்றானது மூக்கின் வழியாக சுவாசித்து ஆன்மாவில் சூடுஏற்றி அங்குள்ள ஜவ்வின் வழியாக தொப்புள் கொடிக்கு சென்று சுத்தகாற்றான பிராணவாயுவை தேவையான அளவை எடுத்துக்கொண்டு அசுத்த காற்றை வெளியே தள்ளிவிடுகிறது.அந்த இயக்கம் தொடர்ந்து இடைவிடாது நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.


அந்த இயக்கம் எப்போது துண்டிக்கப்படுகிறதோ அப்போது உயிர்வேறு உடம்பு வேறாக பிரிந்துவிடுகிறது.அதற்குத்தான் மரணம் என்று பெயர்.


புருவ மத்தியில் தொங்கும் ஜவ்வின் வண்ணம் அடிப்புறம் வெள்ளைவர்ணம்.மேற்புறம் மஞ்சள் வரணமாக உள்ளது என்கிறார்.

 

*ஆன்மாவின்  மேற்புறம் மஞ்சள் வர்ணம் என்பது அருளைக் குறிக்கும். அடிப்புறம் வெள்ளை வர்ணம் என்பது அருள் பிரகாசத்தை குறிப்பதாகும்*.


ஒவ்வொரு ஆன்மாவும் பிராணவாயுவை சுவாசிக்கின்ற வரை மரணம் வந்து கொண்டே இருக்கும்.


*ஏறவும் இறங்கவும் இயங்கிக் கொண்டு இருக்கும்  ஜவ்வுபோன்ற நரம்பின் வழியாக செல்லும் பிராணவாயுவு உள்ளே செல்ல வொட்டாமல் நிறுத்திக் கொள்கிறார் அதுவே கொடிக்கட்டிக் கொண்டதாகும்*


பொருள் உணவை நிறுத்தி அருள் உணவால் உயிரையும் உடம்பையும் அழிக்காமல் இயங்க வைப்பதே சுத்த சன்மார்க்க அனுபவமாகும். 


அருளைப் பெற்று அருள் உணவால்  அனுபவிக்கின்ற  பொழுது பொருள் சார்ந்த பிராணவாயுவுக்கு வேலை இல்லாமல் போகிறது.


அருள் உடம்பில் நிறைகின்ற போது  ஒன்பது துவாரங்களும் அடைக்கப்பட்டு பஞ்சபூத அணுக்களை அருள் அணுக்களாக (வேதியல்) மாற்றம் செய்யப்படுகிறது.


தன்னையே யெனக்குத் தந்து அருள் ஒளியால்

என்னை வேதித்த என்றனி யன்பே! (அகவல்)


அந்த உடம்பிற்கு பொன் உடம்பு என்றுபெயர். அந்த மாற்றத்தைத்தான்  வள்ளலார்.

*பொன்னுடம்பு  எனக்குப்* *பொருந்திடும் பொருட்டாய்* 

*என்னுளங் கலந்த என்றனி யன்பே !* ( அகவல்)


பொன்னடி கண்டு அருட் புத்தமு துணவே

என்னுளத் தெழுந்த வென்னுடை யன்பே! ( அகவல்)


என்று அருள் உணவை உட்கொண்டு தான் அனுபவித்ததை  வெளிப்படையாக சொல்லுகிறார்.

இதைத்தான் அனுபவத்தால் அறிக என்கிறார்.


 புருவ மத்தியில் உள்ள சவ்வின் வழியாக மேலும் கீழுமாக இயங்கிக் கொண்டு இருந்த நரம்பின் வழியாக செல்லும் காற்றை நிறுத்த வேண்டுமானால்.அந்நரம்பை கட்டிவிட்டு கொடியை பறக்கவிட வேண்டும்.  

அகத்தில் கண்ட இயற்கைஉண்மை அனுபவத்தை  புறத்தில் அதன் விளக்கமாக   கொடி  கட்டிக் கொண்டது என்கிறார் வள்ளலார்.


சுத்த சன்மார்க்கத்தில் சாகாமல் வாழும் கல்வியை போதிப்பதே சாகாக்கல்வி என்றும்.

*சாகாதவனே சன்மார்க்கி* என்றும் அழுத்தமாக சொல்லிஉள்ளார்.


*வள்ளலார் பாடல்!*


காட்டைஎலாம் கடந்துவிட்டேன் நாட்டைஅடைந் துனது

கடிநகர்ப்பொன் மதிற்காட்சி கண்குளிரக் கண்டேன்


*கோட்டைஎலாம் கொடிநாட்டிக் கோலமிடப் பார்த்தேன்*

*கோயிலின்மேல் வாயிலிலே குறைகளெலாம் தவிர்ந்தேன்*


சேட்டைஅற்றுக் கருவிஎலாம் என்வசம் நின் றிடவே

சித்திஎலாம் பெற்றேன்நான் திருச்சிற்றம் பலமேல்


பாட்டைஎலாம் பாடுகின்றேன் இதுதருணம் பதியே

பலந்தரும்என் உளந்தனிலே கலந்துநிறைந் தருளே.! 


செயற்கையால் பஞ்சபூதக் கருவிகளால் கட்டிக் கொடுக்கப்பட்ட அசுத்த பூதகாரிய உடம்பை மாற்று இவ்வளவு என்று சொல்லமுடியாத.

எதனாலும் அழிக்கமுடியாத

பசும் பொன்னாக மாற்றி சுத்த பிரணவ ஞானதேகத்தை பெற்று எங்கு செல்ல வேண்டுமானாலும் நினைத்த மாத்திரத்தில் செல்லும் ஆற்றலைப் பெறுவதே கொடிக்கட்டிக் கொள்வதாகும். 


*சிறிய உதாரணம்*


*ஆன்மா இயங்கும் புருவமத்தி கோழி முட்டை போன்ற வடிவமானது.*


*கோழி முட்டையின் மத்தியில் ஒருபுள்ளி வடிவமாக உள்ளதே உள்ஒளியாகும்*

*அதன் மேல்புறம் மஞ்சள் வர்ணம்.கீழ்புறம் வெள்ளை வர்ணம்.அதில் கரு உருவாகிவிட்டால்  மஞ்சள்வர்ணமும் வெள்ளை வர்ணமும் உடம்பாகவும் உயிராகவும் மாற்றம் அடைந்துவிடும்*


*முட்டை உடைந்து கோழிக்குஞ்சு வெளியே வந்துவிடும்*.

*அவ்வாறே பிறப்பு இறப்பு தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.*


*மஞ்சள் வர்ணம் வெண்மை வர்ணம் உயிராகவும் உடம்பாகவும் உற்பத்தி செய்யாமல் அருளைப்பெற்று இயங்க வைப்பதே ஆன்மதேகம் அருள்தேகம் ஒளிதேகம் சுத்த பிரணவ ஞானதேகம் என்றும் சொல்லப்படுகின்றது*. 


*மீண்டும் பிறப்பு இறப்பு இல்லாமல் உடம்பிற்கும் உயிருக்கும் வேலை கொடுக்காமல் அருளைப்பெறுவதே கொடிகட்டிக் கொள்வதாகும்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு