திங்கள், 26 ஜூலை, 2021

ஆன்மசுதந்தரம் அருள்சுதந்தரம் பெற வேண்டும்!

 *ஆன்ம சுதந்தரம் அருள் சுதந்தரம் பெற வேண்டும்!*

*வள்ளலார் பாடல்*!

*படமுடியாது இனித்துயரம்* *படமுடியாது அரசே*

*பட்டதெல்லாம் போதும்*  இந்தப் பயந்தீர்த்து இப் பொழுது *என்*

உடல் உயிராதியை எல்லாம் நீ எடுத்துத் கொண்டு *உன்*

*உடல் உயிராதியை எல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்*

வடலுறு சிற் றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள்

மணியே என் குருமணியே மாணிக்க மணியே

நடனசிகாமணியே என் நவமணியே ஞான

நன்மணியே பொன்மணியே நடராஜ மணியே.!

என்ற பாடல் வாயிலாக சொல்லுகிறார். *இவ்வுலகியல் வாழ்க்கையில் துன்பம் துயரம் அச்சம் பயம் சூழ்ந்து கொண்டே உள்ளது*. *அவற்றை என்னால் தாங்கமுடியவில்லை.என்னுடைய பயத்தை நீக்க வேண்டும் ஆதலால் நீங்கள் வழங்கிய உடல் பொருள் ஆவியை எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன்னுடைய உடல் பொருள் ஆவியை உவந்து (மகிழ்ந்து) எனக்கு அளிக்க வேண்டும் என்று முறையிடுகிறார்*.

*ஆன்மா பஞ்சபூத உலகில்  வாழ்வதற்கு அருட்பெருஞ்ஜோதி அனுமதியோடு மாயையால் கொடுக்கப்பட்ட  சுதந்தரம் மூன்று.*

அவை *தேகசுதந்தரம்*

*போகசுதந்தரம்*

*ஜீவசுதந்தரம் என்பவைகளாகும்*

மூன்று சுதந்தரத்தையும் வைத்துக்கொண்டு இவ்வுலகில் பொருள் சம்பாதித்து எந்த எந்த வகையில்  எவ்வாறு வேண்டுமானாலும் விருப்பம் போல் வாழலாம். *ஆனால் அருள் சுதந்தரம் பெறமுடியாது*

*அருள் சுதந்தரம் பெறவில்லை என்றால்   துன்பம் துயரம் பிணி மூப்பு அச்சம் பயம் மரணம் வந்து கொண்டே இருக்கும்*.

மேலும் இறந்து இறந்து பிறந்து பிறந்து  வீண்போது கழித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

*மீண்டும் மனித்தேகம் கிடைப்பது என்பது உறுதியல்ல*

*ஆன்ம சுதந்தரம் அருள் சுதந்தரம் பெறும் ரகசியத்தை கண்டுபிடித்தவர் வள்ளலார்*.

*உயர்ந்த அறிவு பெற்ற மனித்தேகத்திற்கு இடைக்கிடை நேருகின்ற மரணம் பிணி மூப்பு பயம் துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்து இத்தேகத்தையே நித்திய தேகமாக்கிக் கொள்ள வேண்டும்*.

*எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும்  எத்துணையும் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் வேண்டும் என்பதே எனது சத்தியமான அதிதீவிர விருப்ப முயற்சியாக இருக்கின்றது என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில் கோரிக்கை வைக்கிறார் வள்ளலார்*.

*வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது*

*எல்லாம் உடைய கடவுளது திருவருட் சுதந்தரம் ஒன்றாலே பெறுதல் கூடும்* *என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க அறிந்து கொண்டேன் என்கின்றார்.*

*திருவருட் சுதந்தரம் நமக்கு எந்தவழியால் கிடைக்கும் என்று அறியத் தொடங்கிய தருணத்தே*.

*எனது யான் என்னும்* *தேகசுதந்தரம்* *போகசுதந்தரம்*

*ஜீவசுதந்தரம் என்னும் மூவகைச் சுதந்தரங்களும்* *நீங்கியவிடத்தே கிடைக்கும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்*.

*ஆதலால் மூவகைச் சுதந்தரத்தையும் திருவருட்கே சர்வ சுதந்தரமாக திருவருட் சாட்சியாக கொடுத்துவிட்டேன்*

*ஆதலால் தேவரீர் திருவருட் (ஆன்மசுதந்தரம்) சுதந்தரத்தை என்னிடத்தே வைத்தருளி மரணம் பிணி மூப்பு பயம் துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத  பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்வித்தல் வேண்டும்* என்கிறார்.

*ஆன்மா எந்த சுதந்தரம் இல்லாமல்   இவ்வுலகில் தனித்து வாழமுடியாது.*

*ஆதலால் வள்ளலார் வேண்டுதல்படியே ஆண்டவரின் அருள் சுதந்தரத்தை ஆன்மாவிற்கு கொடுத்து மகிழ்கின்றார்*.

வள்ளலார் பாடல்! 

என்உயிரும் என்உடலும் என்பொருளும் யானே

இசைந்துகொடுத் திடவாங்கி இட்டதன்பின் மகிழ்ந்தே

*தன்உயிரும் தன்உடலும் தன்பொருளும்* *எனக்கே*

*தந்துகலந்* *தெனைப்புணர்ந்த தனித்தபெருஞ் சுடரே*!

மேலும்

*சுதந்தரம் உனக்கே கொடுத்தனம்* *உனது*

*தூயநல் உடம்பினில்* *புகுந்தேம்*

*இதந்தரும் உளத்தில் இருந்தனம்* *உனையே*

*இன்புறக்* *கலந்தனம்*   *அழியாப்*

*பதந்தனில் வாழ்க* *அருட்பெருஞ் சோதிப்*

*பரிசுபெற்றிடுக* *பொற் சபையும்*

*சிதந்தரு சபையும்* *போற்றுக என்றாய்*

*தெய்வமே வாழ்கநின் சீரே.!*

தன்னையே யெனக்குத் தந்தரு ளொளியால்

என்னைவே தித்த என்றனி யன்பே!(அகவல்)

வள்ளலார் விரும்பி கேட்டவாறு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மகிழ்ந்து நன்நிதியான அருள் சுதந்தரத்தையும் ஆன்ம சுதந்தரத்தையும்  கொடுத்துள்ளார் என்பதை மேலே கண்ட பாடலில் தெளிவாக பதிவு செய்கிறார்.

மேலும் மனித தேகம் பெற்ற எல்லாச் ஜீவர்களுக்கும் எனக்கு அறிவித்த வண்ணமே அறிவித்து அவர்களையும் உரிமை உடையவர்களாக்கி வாழ்வித்தல் வேண்டும் என நமக்காக வேண்டுகிறார்.

என்வே உயர்ந்த அறிவுபெற்ற  மனித தேகம் எடுத்த நாம் அறிவைப் பயன்படுத்தி அருளைப்பெற்று அருள்தேகமாக மாற்றி மரணத்தை வென்று வாழ்வதே சிறந்த உயர்ந்த பேரின்பசித்திப் பெரு வாழ்க்கையாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு