ஞாயிறு, 25 ஜூலை, 2021

மனதை சிற்சபையின்கண் செலுத்தவேண்டும் !

 *மனத்தை சிற்சபையின் கண் செலுத்த வேண்டும்!* 

*வள்ளலார் சொல்லும் தியானமுறை!*

*குறித்துரைக்கின் றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின்*

*கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்*

*வெறித்த உம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன்* *எனது*

*மெய்யுரையைப்*பொய்யுரையாய்*வேறுநினை யாதீர்*

*பொறித்த மதம் சமயம் எலாம்* *பொய்பொய்யே அவற்றில்**புகுதாதீர்* 

*சிவம் ஒன்றே பொருள்எனக் கண் டறிமின்*

*செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்*

*சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.!* 

மேலே கண்ட பாடல் *ஞானசரியை*  (மரணம் இல்லாப்பெருவாழ்வு ) என்னும் தலைப்பில் 20 ஆவது பாடலாகும்.

*இந்த பாடலில் சத்தியம் வைத்து சொல்கிறேன் கேளுங்கள் என்கிறார் வள்ளலார்.*

உலக வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும் மனதை அருள்வாழ்க்கைக்கு மாற்ற  வேண்டுமானால் மனதை அடக்குவதற்கு பதில் மாற்றுவதற்கு ஒரே வழிதான் உள்ளது. *அவை சிற்சபையின் கண் மனத்தை செலுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்* *அதுவே சிறந்த தியான முறையாகும்*

 *சிற்சபை என்பது உடம்பில் ஆன்மா இயங்கும் இடம்*

*(அந்தக்கரணக் கூட்டத்தின் மத்தியில் தனித்து இயங்குவதே ஆன்மா என்னும் உள் ஒளியாகும்)*

மனித உடம்பின் ஒழுக்கத்தை  நான்கு வகைகளாக பிரிக்கிறார் வள்ளலார்

*1. இந்திரிய ஒழுக்கம்*

*2.கரண ஒழுக்கம்*

*3.ஜீவ ஒழுக்கம்*

*4.ஆன்ம ஒழுக்கம்*

என்பதாகும்.

*உடம்பு ஒன்றாக இருந்தாலும் நான்கு பிரிவுகளாக பிரித்து ஒன்றாக இணைத்து செயல்பட வைத்துள்ளது கடவுளின் மாயையின் அபாரமான படைப்பாகும்.*

*புறப்புறம் என்னும் இந்திரியங்களும்*

*புறம் என்னும்  கரணங்களும்  இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படும்*

*அதேபோல் அகப்புறம் என்னும்* *ஜீவனும்(உயிர்)*

*அகம் என்னும்* *ஆன்மாவும்* *ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படும்*

*இந்நான்கிற்கும் தலைமைஇடம் சிற்சபா அங்கமான ஆன்மாதான்*

*இந்த நான்கு ஒழுக்கங்களும் கடைபிடித்தால் மட்டுமே ஆன்மாவை மறைத்துக்கொண்டுள்ள அஞ்ஞானம் என்னும் மாயா திரைகள் விலகி ஆன்மாவில் உள்ள  அருள் சுரந்து உடம்பெல்லாம் நிறைந்து கலந்து பொன்னுடம்பு பெற்று என்று அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழவேண்டும் என்பதே இயற்கையின் நியதியாகும்*. 

*சமய மதங்கள்!* 

*பொறித்த மதம் சமயம் எல்லாம் பொய் பொய்யே அவற்றில் புகுதாதீர் என்கிறார்*.

இதுவரையில் சமய மதங்களில் சொல்லிய கடவுள்களும்.

கடவுள் பெயரால் செய்யப்படும் புற வழிபாட்டு முறைகளும் மற்றும் புற ஒழுக்கங்களையும் கடைபிடிப்பதால் எந்த விதமான ஆன்ம லாபமும். அருள் லாபமும். பயனும் பெறமுடியவில்லைபொய்யான வழிமுறைகளையே காட்டியுள்ளது  ஆதலால் அவற்றில் புகுதாதீர்.

*அவைகள் யாவும் பொய் பொய்யே* இனியும் பின்பற்றி ஏமாறாதீர்கள் நான் சொல்லுவதை தயவு செய்து கேளுங்கள்.

உங்களால் எனக்கு எந்த பயனும் வேண்டாம் என்று வெளிப்படையாக சொல்லுகின்றார்.

*மனமே காரணம்* 

*எல்லாவற்றுக்கும் காரணம் கரணங்களில் உள்ள மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் சூக்கும கருவிகளாகும்*.

*மனம் நினைப்பதை புத்தி விசாரித்து* *சித்தம் நிச்சயித்து* *அகங்காரம் அகங்கரித்து.*

*இந்திரியங்களான கண் காது மூக்கு வாய் கை கால் உடம்பு  போன்ற உறுப்புக்களை செயல்பட வைக்கிறது.*

*கரணங்களும் இந்திரியங்களும் செயல்படுவதற்கு காரணம் மனம் என்னும் சூக்கும கருவியாகும்*. *வெளியில் செல்லும் மனத்தை அகத்தில் செலுத்துவதே கரண ஒழுக்கம் என்பதாகும்.*

எனவே மனத்தைச்  சிற்சபை இடத்தே இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும். *அதுவே சிறந்த சுத்தசன்மார்க்க தியானம்*

*மனதை அடக்க முடியாது மாற்ற முடியும் என்கிறார் வள்ளலார்* 

மனதை ஆன்மாபக்கம் மாற்றினால் இந்திரியங்கள் கரணங்கள் யாவும் தானே மாற்றம் அடையும்.

*வள்ளலார் பாடல்!*

*மனம்எனும் ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே* *நீதான்*

*மற்றவர்போல்* *எனைநினைத்து*மருட்டாதே கண்டாய்*

இனமுற என் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்

இருந்திடு நீ என்சொல்வழி ஏற்றிலை ஆனாலோ

*தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன்* *உலகம்*

*சிரிக்கஉனை* *அடக்கிடுவேன்* *திருவருளால் கணத்தே*

நனவில்எனை அறியாயோ யார் என இங்கிருந்தாய்

*ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே*.! 

மனதை மாற்றிய வள்ளலார் ஞானசபை தலைவனுக்கு நல்லபிள்ளை நானே என்கிறார். 

நமது முயற்சியால் இந்திரிய ஒழுக்கம் கரண ஒழுக்கத்தை கடைபிடித்தால் போதும். ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் தானே மேல்நிலைக்கு அழைத்துசெல்லும்

மனக்குறை நீக்கி நல் வாழ்வளித் தென்றும்

எனக்குற வாகிய என்னுயிர் உறவே!(அகவல்)

மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட

இனம்பெறு சித்த மியைந்து களித்திட! (அகவல்)

மனம் ஆன்மாவில் தொடர்பு கொண்டால் மனம் புத்தி சித்தம் அகங்காரம் யாவும் கனிந்து உருகி. *ஜீவன் ஆன்மா மகிழ்ந்து அறிவு அருள் நிறைந்து உடம்பெல்லாம் ஊற்றெடுத்து ஓடி நிரம்பி பொன்னுடம்பு பொருந்திடும் பொருட்டாய் என் உளம் கலந்த என்தனி அன்பே என்ற நிலை  பெறலாம்*.   

அருளைப்பெற்று மரணத்தை வெல்வதற்கு நான்கு ஒழுக்கங்களே சாகாக்கல்வி கற்கும் பயிற்சியாகும்.

எனவே மனத்தை மாற்றி ஒழுக்கத்தை கடைபிடித்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு