வியாழன், 22 ஜூலை, 2021

மோட்சவீட்டின் திறவுகோல் !

 *மோட்ச வீட்டின் திறவுகோல்!* 


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எழுந்தருளி இருக்கும் இடம் அருட்பெருவெளி என்னும் அருள் நிறைந்த கோட்டையாகும்*. *அவரைத் தொடர்பு கொள்ள அருள் என்னும் சாவி வேண்டும்*


*அவ்அருள் அன்பினால் அல்லது வேறு வகையில் அடைவது அரிது*


( *அன்பு இரண்டு  வகையாக உள்ளது* *உயிர்கள்மேல் காட்டும் அன்பு ஒன்று கடவுள்மேல் காட்டும் அன்பு ஒன்று*)


*இரண்டு அன்பும் ஒன்று சேர்ந்தால் பேரின்பம்* 

*அன்பால்தான் ஆன்ம இன்பமும் கடவுள் இன்பமும் பெறமுடியும்*


*உயிர் இரக்கம் என்னும் ஜீவகாருண்யத்தால். உலகியலில் உள்ள உயிர்களுக்கு செய்யும் உபகாரத்தின் மூலமாக கிடைக்கும் அன்பு. அதுவே ஜீவ காருண்யத்தின் லாபம் என்னும் அன்பாகும்*.


*ஜீவகாருண்யம் எவ்வாறு உண்டாகும்?* *அன்னிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாது நன்மை செய்தலே  ஜீவகாருண்யம் என்பதாகும்*.


*ஜீவ காருண்யத்தால் ஆன்ம நெகிழ்ச்சி ஆன்ம  உருக்கும்*. *ஆன்ம மகிழ்ச்சி  உண்டாகும்*. *அதை செய்பவருக்கும் பெறுபவருக்கும் இரு தரப்பினருக்கும் உண்டாகும்*

*அந்த அன்பு மகிழ்ச்சி செய்பவர் ஆன்மாவில் பதிந்து அறியாமை அஞ்ஞானம் என்னும் மாயா திரைகள் தயவின் அன்பின் மகிழ்ச்சியின் தன்மைக்குத் தகுந்தவாறு ஒன்று ஒன்றாய் விலக்கும்*  


*கடவுள் மேல் காட்டும் அன்பு!*


*இயற்கை உண்மை கடவுளான *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரது பெருமையும் நம்முடைய தரத்தையும் ஊன்றி விசாரித்துக் கொண்டே இருந்தால் ஆண்டவருடைய  அன்பு நமக்கு கிடைக்கும்* 


*ஜீவகாருண்யத்தால் ஜீவர்களிடத்தில் அதாவது உயிர்களிடத்தில் பெற்ற அன்பால் அருள் என்னும் திறவுகோல் கிடைக்கும் அதுவே ஆன்ம இன்ப லாபமாகும்*


*நாம் ஆண்டவரிடத்தில் தொடர்பு கொண்டு இடைவிடாது*

*சத்விசாரம் செய்து* *உடல் பொருள் ஆவி* *என்னும் தேகசுதந்தரம் போகசுதந்தரம் ஜீவசுதந்தரம் ஆகிய மூன்றையும்*ஆண்டவரிடத்தில் கொடுத்து சரணாகதி அடைந்தால் *ஆண்டவரிடத்தில் இருந்து கிடைக்கும் அன்பு  தயவு அருள் கருணை  என்பது  பேரின்ப  லாபமாகும்*. 


*ஜீவ காருண்யத்தால்  ஆன்ம இன்ப லாபமான அருளைப்பெற்று கிடைத்ததுதான் மோட்சவீட்டின் திறவுகோல் என்னும் சாவியாகும்*. 


*அந்த மோட்ச வீட்டின் திறவுகோலான அருள் என்னும் சாவியைக் கொண்டு திறந்தால் பூட்டு திறக்கும் கதவு திறக்காது*.


*உலகியல் பற்று அனைத்தையும் அதாவது பூரணமாக பற்றுஅற விட்டு அருள் அம்பலப்பற்றை பற்ற வேண்டும். நம்வாழ்க்கை நம்செய்கை நம் உணர்வு ஆகிய அனைத்தையும் ஆண்டவர் அறிந்து. பேரன்பின் பெருந்தயவால் பெருமகிழ்ச்சி பொங்க  தனிப்பெருங் கருணையுடன் ஆண்டவரே கதவு திறந்தால் மட்டுமே.அருள் நிறைந்த  கோட்டையின் கதவு திறந்து உள்ளே நாம் செல்லமுடியும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நேரில் காணமுடியும்.*


*எனவேதான் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள* 

*உயிர் இரக்கம் எனும் ஜீவகாருண்யமும்*.

*ஆண்டவரைத் தொடர்புகொள்ள உண்மையான வேண்டுதலாகிய தோத்திரம் செய்கின்றதாலும் உண்மையான*

*தெய்வத்தை இடைவிடாது நினைக்கின்றதாலும் ஆகிய சத்விசாரம் என்பது அவசியம் வேண்டும் என்கின்றார்*


*உயிர் இரக்கம் என்னும் பரோபகாரம் சத்விசாரம் இவை இரண்டும் இரட்டை மாட்டு வண்டிபோல் சம்மாக சென்றால் தான்  மேல்வீட்டுக் கதவு திறந்து உள்ளே செல்ல முடியும்*


*ஜீவர்களிடத்தில் பெற்ற  அன்பும்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில் பெற்ற அன்பும் இனைந்தால் மட்டுமே மோட்சம் என்கின்ற வீட்டின் பூட்டும் கதவும் திறக்கும். பின்பு உள்ளே சென்று பேரின்ப லாபத்தின் பெருமையை தங்கு தடையின்றி அனுபவிக்கமுடியும்* 


*வள்ளலார் சொல்லுவதை பார்ப்போம்*


*அருள் என்பது கடவுள் தயவு கடவுள் இயற்கை குணம்.ஜீவகாருண்யம் என்பது ஜீவர்கள் தயவு சீவர்கள் ஆன்ம இயற்கை விளக்கம்* *இதனால் தயவைக்கொண்டு தயவைப் பெறுதலும்*.

*விளக்கத்தைக் கொண்டு விளக்கத்தைப் பெறுதல் கூடும் என்கிறார்*


*கடவுள் தனிப்பெருங் கருணை உடையவர்*

*எல்லாம் வல்லவர்*.

*ஆகையால் நம்மையும் சர்வ ஜீவ தயவு உடையவர்களாய்ச் சர்வ வல்லமையும் பெற்றுக் கொள்ளும்படி மனித தேகத்தில் வருவித்துள்ளார்*.


*எந்த ஜீவர்களிடத்தில் தயா விருத்தியாகிய அருள் விசேடம் விளங்குகிறதோ அந்த ஜீவர்களிடத்தில் கடவுள் விளக்கம் விசேடமாய் இருக்கும்.மற்றவர்களிடத்தில் காரியப்படாது.*


ஆதலால் கடவுளிடத்தில் அன்பும் ஜீவர்களிடத்தில் இரக்கம் என்னும் பக்தியும் செலுத்த வேண்டும். *பக்தி என்பது மனநெகிழ்ச்சி மனவுருக்கம்.*

*அன்பு என்பது ஆன்ம நிகழ்ச்சி ஆன்ம உருக்கம் என்பதாகும்.*


எல்லா உயிர்களிடத்தும் கடவுள் வியாபித்து இருப்பதை அறிதலே கடவுள் பக்தியாகும்.


*எனவேதான் ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு என்பதாகும்*

*அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு எல்லாம் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்று அறிய வேண்டும் என்று மிகத் தெளிவாக அழுத்தமாக சொல்லுகிறார்*


*ஜீவகாருண்யம் உண்டானால் அன்பு உண்டாகும் அன்பு உண்டானால் அருள் உண்டாகும் அருள் உண்டானால் கடவுள் நிலை அறிந்து அம்மயமாகலாம்* 


*அன்பு தயவு கருணை அருள் ஒன்று சேர்ந்தால் ஊன் உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடையும்*


*இதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.* 


*வள்ளலார் பாடல்!*


*அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே*

*அன்பெனும் குடில்புகும் அரசே*

*அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே*

*அன்பெனும் கரத்தமர் அமுதே*


*அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே*

*அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே*

*அன்பெனும் *அணுவுள் ளமைந்தபே ரொளியே*

*அன்புரு வாம்பர சிவமே*.! 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன்

ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு