புதன், 22 ஜனவரி, 2020

பொய் பொய்யே !

பொய் பொய்யே !

குறித்து உரைக்கின்றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
கோணும் மனக்குரங்காலே நாணுகின்ற உலகீர்

வெறித்த உம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது
மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறு நினையாதீர்

பொறித்த மதம் சமயம் எலாம் பொய் பொய்யே அவற்றில்
புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்

செறித்திடு சிற்சபை நடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்
சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.!

மேலே கண்ட பாடலில் சவுக்கடி கொடுக்கிறார் வள்ளலார்.

*வேதங்கள் ஆகமங்கள் புராணங்கள் இதிகாசங்கள் யாவும் பொய்யான கற்பனைக் கதைகள் என்றவர் வள்ளலார்*.

வள்ளலார் பாடல் !

வேதம் ஆமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்
வேதம் ஆமத்தின் விளைவறியீர் - சூதாகச்
சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
என்ன பயனோ இவை.

ஆன்மீக ஆதிக்கவாதிகள் ஆன்மீகம் என்ற போர்வையில் மனித குலத்தின் அறியாமையைப் பயன்படுத்தி நம்ப வைத்து மக்களை படுகுழியில் தள்ளியது தான் வேதம் ஆகம்ம் புராணம் இதிகாசம் போன்ற கற்பனைக் கதைகளாகும்.

எனவேதான் சூதாக சொல்லி உள்ளது உண்மையை வெளிப்படையாக உரைக்கவில்லை.அதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று சாடுகின்றார்.

*மேலும் கலையை உரைக்க வந்த கற்பனைக் கதைகள். கற்பனை என்பது உண்மை ஆகாது என்கிறார் வள்ளலார்*.

வள்ளலார் பாடல் !

வேதநெறி ஆகமத்தின் நெறி
புராணங்கள்
விளம்புநெறி இதிகாசம் விதித்த நெறி முழுதும்

ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி
உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே

ஏதமற உணர்ந்தனன் வீண்போது
கழிப்பதற்கோர்
எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடு நீ புணர்ந்தே

தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.!

* உலகில் உள்ள எல்லாக் கதைகளுமே பொய்யானது .அவற்றில் உள்ள சூது அனைத்தும் ஒளிவு மறைவு இல்லாமல்  காட்டிய இயற்கை உண்மைகடவுளான  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப் போற்றி புகழ் பின்னர்*

மேலும் ஆயிரக்கணக்கான பாடல்களிலும்.உரைநடைப்பகுதிகளிலும் தெளிவாக விளக்கி பதிவு செய்துள்ளார் .

அதில் ஒரு பாடலில் கடுமையாக சாடுகின்றார். !

கலையுரைத்த கற்பனையே நிலைஎனக் கொண் டாடும்
கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக

மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்
வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே

உலைவறும் இப்பொழுதே நல் தருணம் என நீயே
உணர்த்தினை வந்தணைந்து அருள்வாய் உண்மைஉரைத் தவனே

சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.!

கலை உரைத்த கற்பனைக் கதைகளை எல்லாம் ஆழமாக்க் குழிதோண்டி உள்ளே போட்டு மீண்டும் வெளியே வராமல் மூடி விடுங்கள் என்கிறார் வள்ளலார்.

*வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கை கடவுள் மறுப்புக் கொள்கை அல்ல*

கடவுள் உண்மையில் உண்டு. ஆனால் சமய மதங்கள் சொல்லும் பல கடவுள்கள் அல்ல. 

கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ! என்னும் உண்மையை உலகிற்கு காட்டியவர் வள்ளலார்.

அந்த உண்மைக் கடவுள் எல்லா உயிர்களிலும் உள் ஒளியாக ஆன்ம ஒளியாக இயங்கிக் கொண்டு இருப்பதை தொடர்பு கொள்வதே மனித அறிவு சார்ந்த செயலாகும் என்கிறார். வள்ளலார்.

நமது சக ஆன்மாக்களும் ஜீவன்களும்.பசி.பிணி.தாகம்.இச்சை.
எளிமை.பயம் துன்பம் இல்லாமல் வாழ்வதற்கு உபகாரம் செய்வதே கடவுள் வழிபாடு என்றவர் வள்ளலார்.

எனவேதான் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றார்.ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்று ஆணத்தரமாக அழுத்தமாக உண்மையை வெளிப்படுத்துகிறார்.

மனிதகுலம் அறியாமையில் இருந்தும் மூடநம்பிக்கையில் இருந்தும் வெளியேறி.உண்மை அறிந்து மகிழ்ச்சி யுடன் வாழவைக்க வேண்டும் என்பதே வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு