வியாழன், 2 ஜனவரி, 2020

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் விளையாட்டு !

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் விளையாட்டு !

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் விளையாட்டு ஞானம் விளையும் அருள் விளையாட்டு.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல்பெருமானை கருவியாகக் கொண்டு  5-10-1823 ஆம் தொடங்கி 30-1-1874 வரை தனது அருள் விளையாட்டை முடித்துக் கொண்டார்.

*அவர் நடத்திய நாடகத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே கதாநாயன்.வள்ளலார் கதாநாயகி*

மனித குலம் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி தெரியாமல் சாதி சமய மதக் கொள்கையில் பிடியுண்டு மரணத்தையே தழுவிக் கொண்டு பிறந்து பிறந்து.இறந்து இறந்து வீண்போது போக்கிக் கொண்டு இருந்தார்கள்.

தான் படைத்த உயர்ந்த அறிவுள்ள  மனித குலத்தை காப்பாற்றவே தந்தையாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலார் உருவில் வாழ்ந்து காட்டி உள்ளார்.

எனவேதான் நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் தன் வார்த்தை என்கின்றார்.

மேலும் உண்மை உரைக்கின்றேன் என்கின்றார் வள்ளலார்.

இந்த இரண்டு பாடலும் மிகவும் முக்கியமானதாகும்.

பாடல் ஞானசரியை !

நான் உரைக்கும் வார்த்தை எலாம் நாயகன்றன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே

வான்உரைத்த மணிமன்றில் நடம்புரி
எம்பெருமான்
வரவெதிர்கொண்டு அவன்அருளால் வரங்களெலாம் பெறவே

தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
தெரிந்து அடைந்து என்உடன் எழுமின் சித்திபெறல் ஆகும்

ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
யானடையும் சுகத்தினை நீர் தான்அடைதல் குறித்தே.!

நான் அடையும் சுகம் அனைத்தும் மனித குலம் அடைய வேண்டும் என்பதற்காகவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னுள் கலந்து இயங்கிக் கொண்டுள்ளார் என்பதை தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டுகின்றார் வள்ளலார்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னுள் இருந்து இயங்குவதால் தான் உலக மக்களுக்கு வெளிப்படையான உண்மையை உரைக்க முடிகின்றது என்கிறார் வள்ளலார்.

இதோ வள்ளலார் பாடல் !

உண்மை உரைக்கின்றேன் இங்கு வந்தடைமின் உலகீர்
உரை இதனில் சந்தேகித்து உளறி
அழியாதீர்

எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான்
என்னுள் அமர்ந்து இசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர்

தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில்
சார்ந்து விரைந்து ஏறுமினோ சத்தியவாழ் வளிக்கக்

கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள் எனப் புகலும்
கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே.!

மேலும் சொல்லுகின்றேன்.. நான் சொல்லும் வார்த்தைகள் யாவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வார்த்தையாகும் .

ஆதலால் வெல்லுகின்ற வார்த்தை அன்றி வெறும் வார்த்தை என் வாய் விளம்பாது என்கிறார்.

பாடல் ! 

சொல்லுகின்றேன் பற்பலநான் சொல்லுகின்ற வெல்லாம்
துரிசலவே சூதலவே தூய்மையுடை யனவே

வெல்லுகின்ற வார்த்தை அன்றி வெறும் வார்த்தை என்வாய்
விளம்பாது என்ஐயர் நின்று விளம்புகின்ற படியால்

செல்லுகின்ற படியே நீ காண்பாய்
இத்தினத்தே
தேமொழி அப்போது எனை நீ தெளிந்துகொள்வாய் கண்டாய்

ஒல்லுகின்ற வகைஎல்லாம் சொல்லுகின்றேன் அடிநான்
உண்மைஇது உண்மைஇது உண்மைஇது தானே.!

என்னும் பாடல்களிலே தீர்க்கமாக தெளிவுப் படுத்தி விளக்கி உள்ளார்.

வள்ளலாருக்கு முன் பிறவியும் இல்லை.பின் பிறவியும் இல்லை..

எந்த அருளாளர்களின் கருத்துக்களையும் வள்ளலார் பின்பற்றவில்லை.

வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வருவிக்க உற்றவர்.

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் வள்ளலார்*!
*வள்ளலார்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்*.

எனவேதான் வள்ளலார் உருவம் போட்டோவில் விழவில்லை.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் படம் போட்டோவில் விழாது என்பதை சுத்த சன்மார்க்கிகளும்  மக்களும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

தற்போதுள்ள வள்ளலார் படங்கள் யாவும் உண்மையான படங்கள் அல்ல என்பதையும் சன்மார்க்கிகள் அறிந்து கொள்ள வேண்டும்.

எனவேதான் நான் வள்ளலார் என்ற உருவம் அல்ல.
அருட்பெருஞ்ஜோதியே நான் என்கிறார்.

என்னை வணங்காதீர்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மட்டுமே வணங்குங்கள் வழிபடுங்கள் என்கிறார்.

ஆதியும் நடுவும் முடிவும் இல்லாது அம்பலத்தாடும்

ஜோதி தன்னையே நினைமின்கள் சுகம் பெற விழைவீர்.

நீதி கொண்டு உரைத்தேன் நீவீர் இது மேலே ஏறும் வீதி

மற்றைய வீதிகள் யாவும் கீழ் செல்லும் வீதி !

என்கிறார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

மேலும் சன்மார்க்கத்தை பின் பற்றும் சுத்த சன்மார்க்க மெய் அன்பர்களுக்கு என்றே ஒரு பாடலை பதிவு செய்கின்றார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

பாடல் !

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்

என்மார்க்கத்தில்  எனை உமக்குள் ஒருவன் எனக் கொள்வீர்
எல்லாம்செய் வல்லநமது இறைவனையே தொழுவீர்

புன் மார்க்கத்தவர் போலே வேறுசில புகன்றே
புந்தி மயக்கம் அடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்

தன்மார்க்க மாய் விளங்கும்
சுத்தசிவம் ஒன்றே
தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே.!

என்னும் பாடலிலே புன் மார்க்கத்தவர்கள் போல்  தவறான வழிகளில்  செல்லாமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மட்டுமே வழிபட வேண்டும் என்று தாள் வணங்கி சாற்றுகிறேன் என்று தெளிவாக பதிவு செய்துள்ளார்.

அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஞானம் விளங்கும் அருள்  விளையாட்டு ஆட்டம் உலகம் எல்லாம் விளங்கி கொண்டுள்ளது.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆடும் ஆட்டத்தில் பங்கு பெற்று ஞானம் என்னும் அருளைப் பெற்று மரணத்தை வென்று முத்தேக சித்தி என்னும் பேரின்ப சித்தி பெற்று வாழ்வாங்கு வாழ்ந்து வெற்றி பெறுவோம்.

நாம் செய்ய வேண்டியது. செல்ல வேண்டியது இரண்டே வழிதான்.
*ஒன்று பரோபகாரம்*
*ஒன்று சத்விசாரம்*

முடிந்த அளவு உயிர்களுக்கு உபகாரம் செய்தல்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இடைவிடாது தொடர்பு கொள்ளுதல்.

இந்திரியங்களினால் உயிர்களுக்கு உபகாரம் செய்தல் இந்திரிய ஒழுக்கம்.

கரணங்களினால் ஆன்ம சிற்சபையில் மனத்தை செலுத்துதல் கரண ஒழுக்கம்.

இந்த இரண்டு ஒழுக்கங்களை முழுமையாக கடைபிடித்தால்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஜீவ ஒழுக்கத்தையும்.ஆன்ம ஒழுக்கத்தையும் போனஸாக கொடுத்து இணைத்துக் கொள்வார்.

அருளை தடை இல்லாமல் வழங்கி அணைத்து கொள்வார்.

முயற்சியே வெற்றி தரும்

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு