செவ்வாய், 7 ஜனவரி, 2020

மனிதன் வாழ்க்கை !

மனிதன் வாழ்க்கை !

புவனத்தின் பற்று ( உலகப்பற்று) உள்ளவன் அருள் பெற முடியாது.

இந்த உலகம் மாயையை சார்ந்துள்ளது.பஞ்ச பூத புவனம் மாயையின் பிடியில் உள்ளன.

ஆன்மாவை பஞ்ச பூதங்கள் கவ்விக் கொண்டுள்ளது.ஆன்மாவை உலக போகத்தில் இழுப்பது மனம்.

ஆன்மா உலக போகத்தில் இருந்து விடுபட மனத்தை தன்வசமாக மாற்ற முயற்சிக்கிறது.

மனம் மாயையைச் சார்ந்த்து.
ஆன்மா அருட்பெருஞ்ஜோதியைச் சார்ந்த்து.

இதில் ஆன்மாவிற்கும் மனதிற்கும் போட்டி நடந்து கொண்டே உள்ளது.

ஆன்மாவின் வீட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கும் மனம் புற இன்பத்தில் வாழ்வதற்கு அலைந்து கொண்டு உள்ளது.

ஆன்மாவானது மனத்தை புற இன்பத்தில் சென்று அழிவதை நிறுத்த பல துன்பங்களை சோதனைகளைக் கொடுத்து தன் பக்கம் திரும்ப வழிவகை செய்து கொண்டுள்ளது.

மனம் பொருள் இன்பத்தை தேடுகிறது.
ஆன்மா அருள் இன்பத்தை தேடுகிறது.

ஆன்மா வென்றால் மரணம் நீங்கும்.
மனம் வென்றால் மரணம் நிச்சயம்.

ஆன்மா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் துணையுடன் வாழ்கிறது.

மனம் மாயையின் துணை கொண்டு வாழ்கிறது.

ஆன்மாவிற்கும் மனதிற்கும் நடக்கும் போராட்டம் முடிவு பெறாமல் இறுதியில் மனம் அளவில்லா துன்பங்களான பசி.பிணி.தாகம்.இச்சை.எளிமை. பயம்.துன்பங்களை அனுபவித்து இறுதியில் மரணம் அடைந்து விடுகிறது.

இறுதியில் நட்டம் அடைவது.மீண்டும் பிறப்பு எடுப்பது ஆன்மாதான்.

இதுவே மனித பிறவியின் வாழ்க்கை முறையாக உள்ளது.

இந்த வாழ்க்கை முறையை வென்றவர் வள்ளலார்.
மனத்தை தன் வசமாக மாற்றியவர் வள்ளலார்.

வள்ளலார் பாடல் !

மனம்எனும் ஓர் பேய்க்குரங்கு மடப்பயலே நீதான்
மற்றவர் போல் எனை நினைத்து மருட்டாதே கண்டாய்

இனமுற என் சொல்வழியே இருத்திஎனில் சுகமாய் இருந்திடு நீ என் சொல்வழி ஏற்றிலை யானாலோ

தினை அளவும் உன் அதிகாரம் செல்ல வொட்டேன் உலகம் சிரிக்க உனை அடக்கிடுவேன் திருஅருளால் கணத்தே

நனவில் எனை அறியாயோ யார் என இங்கு இருந்தாய் ஞானசபைத் தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே !

வள்ளலார் மனத்தை அடக்கி வென்றார். நம்மாலும் மனத்தை அடக்க முடியும் என்று வாழ்ந்து வழிகாட்டி உள்ளார்.

இந்த வாழ்க்கை முறையை மாற்றி தூய்மைப்படுத்த வேண்டும் என்பதுதான் வள்ளலார் காட்டும் சுத்த சன்மார்க்க கொள்கை வாழ்க்கை முறையாகும்.

திருஅருட்பா முழுவதும். புறத்தில் செல்லும் மனத்தை அகத்தில் செலுத்தி  ஆன்ம லாபம் பெறும் வாழ்க்கை முறையை போதிக்கிறது.

ஆன்மலாபம் என்பது அருள் பெறும் வாழ்க்கை முறையாகும்.

அருள் வழங்கும் தகுதியான ஒரே கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மட்டுமே.

வள்ளலார் பாடல் !

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்

எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே  என்தந்தை நினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்

செப்பாத மேனிலைமேற் சுத்த சிவசன்மார்க்கம் திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்

தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவ நினை பிரியாத நிலைமையும் வேண்டுவனே !

என்னும் பாடலில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பெருமையும் உண்மையும் எளிய தமிழில் தெளிவுப் படுத்தி உள்ளார்.படித்து உணர்ந்து தெளிந்து வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.

அருளைப் பெறுவதே மனிதனின்  ஆன்மலாபமாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு