செவ்வாய், 14 மே, 2019

தயவு இரண்டு வகைப்படும் !

*தயவு இரண்டு வகைப்படும் !*

அவை ...
கடவுள் தயவு ! ஜீவ தயவு ! என இரண்டு வகை உள்ளது..

*ஜீவர்கள் தயவு வேறு.. கடவுள் தயவு வேறு..*

சில சன்மார்க்க அன்பர்கள் தயவு தயவு என்று சொல்லிக் கொண்டு உள்ளார்கள்.
கடவுள் தயவைச் சொல்கிறார்களா ! ஜீவ தயவைச் சொல்லுகிறார்களா ! என்பது தெரியவில்லை..

வள்ளலார் பேருபதேசத்தில் தெளிவாக சொல்லுகிறார்.

தயவு.கருணை.அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும் ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம் அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம்.

இஃது வாச்சியார்த்தம்.இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால் .முடிவான இன்பானுபவம் பெறுவதற்கு தடையில்லை என்கிறார்...

*முதலில் சாதனம் என்னும் ஜீவ தயவு வேண்டும் *.

சாதனம் என்பது எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவிக்கும் உண்மை உணர்ந்து தெளிந்து ஜீவர்களிடத்தில் உயிர் இரக்கம் கொண்டு ஜீவர்களிடத்தில் உண்டாகும்
பசி.பிணி.தாகம்.இச்சை.எளிமை.பயம் கொலை போன்ற துன்பங்களை நிறைவாக போக்க வேண்டும்.இதுதான் சுத்த சன்மார்க்க சாதனம் என்பதாகும்.

சாதனம் முதிர்ந்தால் சாத்தியம் கைகூடும்.

*சாத்தியம் என்பது கடவுள் தயவு !  கடவுள் தயவால் எல்லா நன்மை களும் தானே கிடைக்கும்.*

வள்ளலார் பாடல் !

எத்துணையும் பேதம் உறாது எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணி உள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளம்தான் சுத்த

சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடம் என நான் தெரிந்தேன் அந்த

வித்தகர் தம் அடிக்கேவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்த தாலோ !

என்னும் பாடலில் எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவிக்கும் குணம் உள்ளவர் எவரோ அவரே அருள் பெறும் தகுதி உடையவர் என்றும்.அவரையே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தொடர்பு கொள்வார்.அவரை நான் கடவுளாக நினைந்து வணங்குவேன் என்கிறார் வள்ளலார்.

இதுதான் ஜீவ தயவு என்னும் ஜீவகாருண்யம் முழுமை பெற்றதாகும்.

*மேலும் உரைநடைப் பகுதியில் ..
கடவுள் தயவும் ..ஜீவர்கள் தயவும் ! என்ற தலைப்பில் தெளிவாக பதிவு செய்துள்ளார்.*

கடவுள் தயவு .ஜீவ தயவு என தயவு இரண்டு  வகைப்படும்.!

கடவுள் தயவு என்பது
1.இறந்த உயிரை எழுப்புதல்.

2.தாவரங்களுக்கு மழை பெய்வித்தல்.

3.மிருகம்.பட்சி.ஊர்வனவாதிகளுக்கு ஆகாரம் நியதியின்படி அருட்சத்தியால்  ஊட்டி வைத்தல்.

4. சோம.சூரிய.அக்கினிப் பிரகாசங்களைக் கால.தேச வண்ணம் பிரகாசஞ் செய்வித்தல்.

5. பக்குவிகளுக்கு அனுக்கிரகித்தல்.

6.அபக்குவிகளைச் செய்ய வேண்டிய அருள் நியதியின்படி தண்டனை செய்வித்துப் பக்குவம் வருவித்தல்.என்பன கடவுள் தயவாகும்..

ஜீவ தயவு என்பது ....

தன் சக்தியின் அளவு உயிர்க்கு உபகரித்தல் அல்லது ஆன்ம நேய சம்பந்தம் பற்றித் தயவு வடிவாய் நிற்றல்.
இதுவே ஜீவ தயவாகும்.

*கடவுள் தயவு உள்ளவரேத் தவிர தயவே கடவுள் உருவம் அல்ல*

மக்கள் தவறாக புரிந்து கொள்வார்கள் என்பதால் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பெயரை எப்படி உச்சரித்து வழிபாடு செய்ய வேண்டும் என்பதற்காக...

 மகா மந்திரத்தை நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில்

நமக்கு முன் சாதனம் கருணை ஆனதினாலே ஆண்டவர் முதற் சாதனமாக

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி!!!!

என்னும் திருமந்திரத்தை  வெளிப்படையாக எடுத்துக் கொண்டார்.

*அன்பு.தயவு.அருள்.கருணை என்பது ஒன்று போலவே தெரியும்*

கருணைக்குள் அன்பு.தயவு.அருள்  எல்லாம் அடங்கி விடுகிறது.என்பதை ஆன்மநேய அன்பர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

கருணையும் சிவமுமே பொருள் !

கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெறுக மற்று எல்லாம்

மருள்நெறி என நீ எனக்கு அறிவித்த வண்ணமே பெற்று இருக்கின்றேன்

இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்தியது என் செய்வேன் எந்தாய்

தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும் சிறுநெறி பிடித்தது ஒன்றிலையே !

என்னும் பாடல் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்....

மேலும்

தருணம் இஞ்ஞான்றே சுத்த சன்மார்க்கத் *தனிநெறி* உலகெல்லாம் தழைப்பக்

கருணையும் சிவமே பொருள் எனக் கருதும் கருத்தும் உற்று எம்மனோர் களிப்பப்

பொருள் நிறை ஓங்கத் தெருள் நிலை விளங்கப் புண்ணியம்  பொற்புற வயங்க

அருள் நயந்து அருள்வாய் திருச்சிற்றம் பலத்தே அருட்பெருஞ்ஜோதி என் அரசே !

என்னும் பாடல் வாயிலாக வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார்..

எனவே மகா மந்திரத்தை மாற்றும் உரிமை எவருக்கும் இல்லை..

மகா மந்திரத்தில் கருணை தான் முதலிடம் பெறுகிறது என்பதை சன்மார்க்கிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

*சிறிய ஜீவ தயவைக் கொண்டு. பெரிய அருள் தயவைப் பெறுவதே சுத்த சன்மார்க்கிகளின் செயல்பாடுகளாக இருக்க வேண்டும்.*

நம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயற்கை உண்மையாய்.
இயற்கை விளக்கமதாய்
இயற்கை இன்பமுமாய்

செயல்பட்டுக் கொண்டு உள்ளார் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் .
கடவுளுடைய இயற்கை உண்மை என்பது கருணை.

இயற்கை விளக்கம் என்பது அருள்

இயற்கை இன்பம் என்பது அருளினால் அடையும் இன்பமான என்றும் அழியாத பேரின்பம்.

கருணையில் இருந்து பெறுவது அருள்...*அருள் என்பது தான் கடவுள்  தயவு என்பதாகும்.*

எனவே ஜீவதயவைக் கொண்டு கடவுள் தயவைப் பெற வேண்டும் என்பது தான் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையாகும்..

எனவே தான் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றார் வள்ளலார்..

ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றார்...

பக்தியால் எக்காலத்தும் அருள் பெற முடியாது.

*கல்லையும் மண்ணையும்.பொன்னையும் வணங்கி வழிபாடு செய்வதால் அருள் கிட்டாது*..

இறைவனால் படைத்த உயிர்களுக்கு உபகாரம் செய்தால் மட்டுமே அன்புண்டாகும்.அன்பு உண்டானால் அருள் உண்டாகும்.அருள் உண்டானால் மரணத்தை வெல்ல முடியும்.

மரணத்தை வென்றால் மட்டுமே பேரின்ப லாபத்தைப் பெற்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாக முடியும்...

வள்ளலார் பாடல் !

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்பு செலுத்தல் வேண்டும்

எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்று
எந்தை நின் அருட்புகழை இயம்பி யிடல் வேண்டும்

செப்பாத மேனிலையேல் சுத்த சிவமார்க்கம்
திகழ்ந்து ஓங்குக அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்

தப்பேது நான் செயினும் நீ பொறுத்தால் வேண்டும்
தலைவா நினை பிரியாத நிலைமையும் வேண்டுவனே !

மேலே கண்ட பாடலில் எளிய தமிழில்   ஆருயிர்க்கு எல்லாம் அன்பு செலுத்த வேண்டும்.என்கிறார் வள்ளலார்.

உயிர் உள்ள ஜீவர்களிடத்தில் அன்பு செலுத்தினால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நம்மீது அன்பு காட்டுவார் என்பதை அறிவுள்ள ஜீவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம்
விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க !

சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி !!!!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.








0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு