ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

உலகின் உண்மை மார்க்கம் உண்மை நெறி !

*உலகின் உண்மை மார்க்கம் உண்மை நெறி !*


தமிழ்நாட்டில்... இறைவனால் வருவிக்க உற்ற  ஒரே அருளாளர் திருஅருட்பிரகாச வள்ளலார்.

உலக ஒருமைப்பாட்டிற்கு வழிகாட்டியவர் வள்ளலார் ஒருவரே !

ஆன்மநேய  ஒருமைப்பாட்டு உரிமையைப் பற்றி உலக மக்களுக்கு தெளிவுபடுத்தியவர் வள்ளலார்.

சாதி சமய மதங்களின் வேற்றுமையால் மக்கள்
மருள் நெறிகளான இருள் நெறியில்  வாழ்ந்து அழிந்து கொண்டே உள்ளார்கள்.

மக்களை உண்மையான ஒழுக்க நெறியை காண்பித்து. நல்வழிக்கு கொண்டு செல்லவே .உலகப் பொது நெறியான *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்ற தனிநெறியை வள்ளலார் தோற்றுவித்துள்ளார்..

அதுதான் சமரச சுத்த சன்மார்க்க திருநெறியாகும்.

வள்ளலார் பாடல் !

திருநெறி ஒன்றே அதுதான் சமரச சன்மார்க்கச்
சிவநெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு

வருநெறியில் எனை யாட்கொண்டு அருளமுதம் அளித்து

வல்லப சத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்

பெரு நெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்

பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே

கருநெறி வீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்

கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.!

என்னும் பாடலின் வாயிலாக மக்களுக்கு தெளிவுப்படுத்தி விளக்கம் அளிக்கிறார் வள்ளலார்.

மேலும் வள்ளலார் நிறைய பாடல்களிலும் உரைநடைப் பகுதியிலும் விளக்கம் அளிக்கின்றார்

வள்ளலார் பாடல் !

பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும் ஓர்

பவநெறி இதுவரை பரவியது அதனால்

செந்நெறி  அறிந்திலர் இறந்து இறந்து உலகோர்

செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ

புன்னெறி தவிர்த்து ஒரு பொதுநெறி எனும் வான்

புத்தமுது அருள்கின்ற சுத்த சன்மார்க்கத்

தன்னெறி செலுத்துக என்ற என் அரசே

தனிநட ராஜஎன் சற்குரு மணியே.!

என்னும் பாடலிலே.. உலகம் முழுவதும் பல சமயங்கள் மதங்கள் தோன்றினாலும். உண்மையான ஆன்மீகத்தில் வாழ்வதற்கும். மக்கள் இறைவன்  அருளைப் பெறுவதற்கும்   மனித குலத்திற்கு எந்த சமயமும். மதமும்  நல்வழி காட்டவில்லை. போதிக்கவில்லை..

மனிதன் மாண்டு போவதற்கே..
உண்மைக்கு புறம்பான இருள் நெறியான.மருள் நெறியே  காட்டினார்கள்  அதனாலே மக்கள் உண்மை அறியாமல்  மாண்டு கொண்டே உள்ளார்கள்...

*என் மார்க்கம் இறப்பை ஒழிக்கும் சன்மார்க்கம் என்பார் வள்ளலார்*

எனவேதான் இறப்பை ஒழித்து பிறப்பை ஒழித்து என்றும் அழியாமல் வாழும் அருள் நெறியை வள்ளலார் தோற்றுவித்து உள்ளார்.

*மற்ற மார்க்கங்களுக்கு போட்டியாக சுத்த சன்மார்க்கம்  தோற்றுவிக்கவில்லை..*

இறைவனால் படைக்கப்பட்ட உயர்ந்த அறிவுள்ள மனித குலம் .புனித குலம் பெற வேண்டும் என்ற அருள் நோக்கத்தோடு.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் துணைக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டது தான் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்ற பொது மார்க்கமாகும்...

அகம் கருத்து புறம் வெளுத்து அறியாமையால் வாழும் மக்களை காப்பாற்றவே இறைவன் என்னை இவ்வுலகிற்கு அனுப்பி வைத்தார் என்கிறார் வள்ளலார்.

வள்ளலார் பாடல் !

அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்

சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்

இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த

உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.!

மேலே கண்ட பாடலில் தெளிவாக விளக்கி உள்ளார் வள்ளலார்..

*நான் இறைவன் அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டுதான் இந்த உண்மையைச் சொல்லுகின்றேன் என்கிறார்*

உலகில் உள்ள அனைத்து மனித குலத்தையும் திருத்தவே  இறைவன் அனுமதியோடு வந்துள்ளேன் .மக்களை
திருத்தியே தீருவேன்.

*எனவே மனித குலம் இனிமேல் மூடமான மதங்களையும். சமயங்களையும்.சாதிகளையும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை..*.

ஏன் என்பதை வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்

முடுகி அழிந்திடவும் ஒரு மோசமும் இல்லாதே

இயன்ற ஒரு சன்மார்க்கம் எங்கும் நிலை பெறவும்

எம்மிறைவன் எழுந்தருளல் இது தருணம் கண்டீர்

துயின்று உணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்

தோன்ற எழுகின்றது இது தொடங்கி நிகழ்ந் திடும் நீர்

பயின்று அறிய விரைந்து வம்மின் படியாத படிப்பைப்

படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.!

மேலே கண்ட பாடலில்.. *இதுவரையில் நீங்கள் படிக்காத படிப்பை இனிமேல் படிக்க போகின்றீர்கள்*

இதுவரையில் படித்தது எல்லாம் சந்தைப் படிப்பு.இனிமேல் படிக்கப் போவதுதான் சொந்தப் படிப்பு என்கிறார் வள்ளலார்..

எனவேதான் படியாத படிப்பை படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே என்கிறார் ...

சாகும் படிப்பை மாற்றி சாகாமல் வாழ்வதற்கு வழிகாட்டும் சாகாக்கல்வி என்னும் கல்வியை கற்றுத்தரவே சுத்த சன்மார்க்கத்தை இறைவனால்  தோற்றுவிக்கப் பட்டதாகும்.

எனவே திருநெறியாம் பெருநெறியாம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் உண்மை நெறியை பின்பற்றி மேன்மை அடையுங்கள் என்கிறார் வள்ளலார்.

வள்ளலார் பாடல் !

சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரச சன் மார்க்கத்

திருநெறியே பெருநெறியாம் சித்தி எலாம் பெறலாம்

ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர்

உலகமெலாம் கண்டிடும் ஓர் உளவைஅறிந் திலிரே

வார்ந்த கடல் உலகறிய மரணம்உண்டே அந்தோ

மரணம் என்றால் சடம் எனும் ஓர் திரணமும் சம் மதியா

சார்ந்திடும் அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர்

தனித்திடு சிற் சபை நடத்தைத் தரிசனஞ் செய் வீரே.!

என்னும் பாடலிலே தெளிவாக விளக்கி உள்ளார்..

மக்கள் உண்ணுதற்கும் உறங்குதற்கும்.பின்பு மரணம் அடைவதற்கும் மட்டுமே தெரிந்து கொண்டு உள்ளீர்கள்..

*மரணம் அடையாமல் வாழ்வதற்கு ஓர் உளவு உள்ளது இருக்கின்றது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வள்ளலார் தெளிவுப் படுத்துகின்றார்.*

வள்ளலார் ஆரம்ப காலத்தில் 1865 ஆம் ஆண்டின் முதலிலே சங்கங்கள் அமைத்தார்கள்

சமய மதங்களை சார்ந்த *சமரச வேத
சன்மார்க்க சங்கம்* என்று பெயர் வைத்து சமரசத்தை கொண்டு செல்லாம் என்று நினைத்து ஆரம்பித்தார் ..அதன் மூலம் சமரசத்தை உருவாக்க முடியவில்லை... என்பதை அறிந்த வள்ளலார் அதை  கைவிட்டு விட்டார்.

அடுத்ததாக..எல்லாச் சமயங்களுக்கும் மதங்களுக்கும்  பொதுவாகிய.   *ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்கம்*  என்று பெயர் வைத்து ஆரம்பித்தார்.

மேலே கண்ட இரண்டு மார்க்கத்திலும் உலக சமரசத்தை. சகோதர உரிமையை.ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை கொண்டு ஒருங்கிணைந்த சமுதாயத்தை உருவாக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட காலத்தில் ..

வள்ளலாருக்கு ஓர் அருள்  அறிவிப்பு வருகின்றது..அதுதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அறிவிப்பு.

*திருஅருட்பாவில் நீண்ட விளக்கம் உள்ளது..சுருக்கமாக சொல்கிறேன்.*

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் அறிவிப்பால் புதிய. பொதுவான.தனிநெறியான. திருநெறியை.
அருள்நெறியை.சுத்த சிவநெறியை.சுத்த சன்மார்க்க உண்மை நெறியை வள்ளலார் 1872 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கிறார் வள்ளலார்.....

உண்மை இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அமர்ந்து உலக மக்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்பதற்காக..

தமிழ்நாட்டில் உள்ள வடலூரில் .. ஒரு சத்திய ஞானசபையை  1872 ஆம் ஆண்டு தோற்றுவித்து .சங்கம்.சாலை.ஞானசபையை தோற்றுவித்துள்ளார்.

அவைகளுக்கு தனிப்பெயர் சூட்டுகின்றார்.

வள்ளலார் இறைவன் அனுமதியோடு பெயர் மாற்றம் செய்கின்றார்...

வள்ளலார் பெயர் மாற்றம் செய்யும் போது எவ்வாறு  சொல்கின்றார்.
பாருங்கள் !

அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம்.

இன்று தொடங்கி ..

சபைக்கு...
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை என்றும்.

சாலைக்கு....
சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை என்றும்.

சங்கத்திற்கு...
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்றும்

பெயர் வழங்குதல் வேண்டும் என்று சுத்த சன்மார்க்க கட்டளையாக வெளிப்படுத்துகின்றார்.

சுத்த சன்மார்க்க அன்பர்கள் சங்கங்கள் அமைத்தால். சாலைகள் அமைத்தால். சபைகளை அமைத்தால். வள்ளலார் சொல்லிய வண்ணம். வள்ளலார் கட்டளை வண்ணம் பெயர் வைக்க வேண்டும்..

இதுவரை அவரவர் விருப்பம் போல் பெயர் வைத்து இருந்தாலும் இனிமேலாவது வள்ளலார் சொல்லிய வண்ணம் பெயர் மாற்றம் செய்து கொள்ளுவதே நல்லதாகும்.

இதுவே நீங்கள் செய்யும் நற்பன்புகளாகும். நற்செயல்களாகும்....

ஒவ்வொரு சங்கங்களும் தலைப்பில் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்ற தலைப்பில் இருக்க வேண்டும்..அதற்கு கீழே உங்கள் அறக்கட்டளைகள்.
மற்றும் உங்கள் வசதிக்கேற்ப
புனைப்பெயர்கள் போன்ற பெயர் இருந்தாலும் தவறில்லை.

மற்றபடி இது எனது தனிப்பட்ட கட்டளை அல்ல ஒவ்வொரு சன்மார்க்கிகளும் சிந்தித்து செயல்படுங்கள்....
அனைவருக்கும் நல்லது...

இப்போது நடந்து கொண்டு இருப்பது சுத்தசிவ சன்மார்க்க காலம் என்பதை வள்ளலார் *உண்மை பத்திரிகை* என்னும் தலைப்பில் வெளியிடுகின்றார்...

மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் 1874 ஆம் ஆண்டு வெளிப்படுத்துகின்றார்.

சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் விளங்கும்.இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை.தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந் தொட்டு.அளவிறந்த நெடுங்காலம் வரையில் வழங்கும்.அதன் மேன்மேலும் வழங்கும்.

பலவகைப்பட்ட சமய பேதங்களும் .சாத்திர பேதங்களும். சாதி பேதங்களும்.ஆச்சார பேதங்களும் போய் .சுத்த சன்மார்க்கம் பெருநெறி ஒழுக்கம் விளங்கும் .
**அது கடவுள் சம்மதம்**இது 29 ஆண்டுகளுக்கு மேல்..(கலி 5000 க்கு மேல் )

இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்த்தாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள்.மூரத்திகள்.கடவுள்.தேவர்.அடியார்.யோகி.ஞானி முதலானவர்களில் ஒருவர் அல்ல..

இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும்.எல்லாத் தேவர்களும்.எல்லாக் கடவுளரும்.எல்லாத் தலைவர்களும்.எல்லா யோகிகளும்.எல்லா ஞானிகளும் தாங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பாரக்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி..அவர்தான் அருட்பெருஞ்ஜோதி!

இது உண்மையாயின் அந்தப் பதியின் அருளை நான் பெறுவேன் ! பெறுகின்றேன் !! பெற்றேன்!!!

என்னை அடுத்தவர்களும் பெறுவதற்கு யாதொரு தடையும் இல்லை.பெறுவீர்கள் ! பெறுகின்றீர்கள்!! பெற்றீர்கள் !!! அஞ்சல் வேண்டும்..

இப்படிக்கு
சிதம்பரம் இராமலிங்கம்.

இந்த உண்மைப் பத்திரிகை செய்திகள் அருள் நியதியின்படி வெளிப்படுத்துகின்றார்.

எனவேதான் வள்ளலார்  சொல்லுகிறார் !

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன்

சுத்த சிவ சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் என்மார்க்கம்

நன்மார்க்கம் என்றே வான் நாட்டார் புகழ்கின்றார்

மன்மார்க்கத்தாலே மகிழ்ந்து !

என்று வள்ளலார் தெளிவாக சுத்த சன்மார்க்கத்தின் உண்மையை வெளிப்படுத்துகின்றார்..
சுத்த சன்மார்க்கம் என்பது உண்மை ஒழுக்க நெறியான ஜீவகாருண்ய ஒழுக்கத்தை போதித்து அதன்மூலம் சத்விசாரத்தால்  இறைவனை அறிந்து.அருளைப் பெற்று மரணத்தை வெல்லும் மார்க்கமாகும் .

எனவே பேரின்ப சித்திப் பெருவாழ்வை பெறுவதற்கு ஒரே மார்க்கம் அதுவே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்ற புனித மார்க்கமாகும்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு