திங்கள், 1 ஏப்ரல், 2019

மகிழ்ச்சியுடன் வாழும் வழி !


*மகிழ்ச்சியுடன் வாழும் வழியைத் தெரிந்து கொள்வோம்...!*

உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் மகிழ்ச்சி யைத்தான் விரும்புகிறார்கள் விரும்புவார்கள் 

துன்பத்தை எவரும் விரும்புவதில்லை..

தீதும் நன்றும் பிறர்தர வாரா ! என்பது முன்னோர்கள் கண்ட உண்மை..

மகிழ்ச்சியும் துன்பமும் தானாக வருவதில்லை.

அவரவர்கள் செய்யும் செயகையினால் தான் நன்மை தீமை உண்டாகின்றது.

எல்லாவற்றிலும் பெரிய துன்பம் மரணம் மட்டுமே ! 

எல்லாத் துன்பங்களிலும் மிகப்பெரிய துன்பம் மரணம் என்பது உலகமே அறிந்துள்ள விஷயம்..

மரணம் என்பது பெரியபிணி என்கிறார் வள்ளலார்.

அந்த பெரிய பெரும் பிணியை போக்கும் மருந்தை கண்டு பிடித்தவர் வள்ளலார்.

மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு கரணப் பெருந்திரல் காட்டிய மருந்தே !

என்றும்...

உடற்பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி அனைத்தையும் அடர்ப்பறத் தவிர்த்த அருட்சிவ மருந்தே !

என்கிறார் வள்ளலார்.

உடற்பிணியால் தான் உயிர்ப்பிணி வருகின்றது..உயிர்ப்பிணியால் ஆன்மாவானது உயிரையும் உடம்பையும்  விட்டு வெளியே சென்று விடுகின்றது..

அதற்குப் பெயர் தான் மரணம் என்று பெயர் வைத்துள்ளார்கள்.

மரணத்தை எவரும் விரும்பி ஏற்றுக் கொள்வதில்லை...!

உலகியல் துன்பத்தக தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்பவர்களும் உண்டு.

வறுமையை ஏற்றுக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்பவர்களும் உண்டு.

மேலும் தங்களால் தாங்கிக் கொள்ள முடியாமல் துன்பம் வருகின்ற போது தற்கொலை செய்து கொள்பவர்களும் உண்டு..

உடல் மெலிந்தும் முதுமை அடைந்தும்.செயல்
இழந்தும்.நோய்வாய்ப்பட்டும்.
நோய்வராமலும் இறுதியில் மரணம் வந்து விடுகிறது..

இவைகள் எல்லாமே மரணத்திற்கு பின் துன்பம் தீர்ந்துவிடும் என்பது அறியாமையாகும்.மேலும்.தற்கொலை செய்து கொண்டாலோ தீர்ந்து விடும் என்பது அறியாமையிலும் அறியாமையாகும்.

எந்த வகையில் மரணம் அடைந்தாலும் மீண்டும் பிறப்பு உண்டு என்பதை அறியாமல் செய்யும் தவறுகள் ஆகும்..

மனிதர்கள் மகிழ்ச்சி யுடன் வாழ்வதற்குத்தான் மனிதப் பிறப்பு இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளன.

உடற்பிணி உயிர்பிணி !

இரண்டுமே நோய் என்கிறார் வள்ளலார்..

உடற்பிணி உயிர்பிணி .இந்த இரண்டு பிணிகளுமே துன்பத்திற்கு காரண காரியமாக உள்ளன. மரணத்திற்கும் இதுவே காரண காரியமாக உள்ளன.

உடற்பிணியால் தான் உயிர்பிணி வருகின்றன.

உடற்பிணி வரும்போது.அந்த துன்பத்தை தாங்க முடியாமல் உயிர் பிரிந்து விடுகின்றது...

துன்பமே காரணம் !

மக்கள்  மரணம் அடைவதற்கு காரணமே துன்பம் தான் என்பதை நாம் ஒவ்வொரு மனித ஜீவர்களும் அறிந்து கொள்ள வேண்டும்..

உடம்பையும் உயிரையும் காப்பாற்றத் தெரியாமல் மனிதர்கள் மரணம் அடைந்து விடுகிறார்கள்.

உலகில் தோன்றிய ஞானிகள் என்னும் அருளாளர்களும் மரணத்தை வெல்லும் வழியை சரியாக முறையாக தெரிந்து கொள்ளவில்லை.கற்றுக் கொள்ளவில்லை..ஆதலால் அருள் கிடைத்தும் அருள் பூரணம் அடையாமல் .கிடைக்காமல் மரணம் வந்து மாண்டு போகிறார்கள்.

*அருளால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்*.

அறிவியல் வளர்ச்சியில் முன்னேறிய அறிவியல் வல்லுனர்களும்.அணு ஆராய்ச்சி யாளர்களும்.அளவில் அடங்கா விஞ்ஞான ஆராய்ச்சி யாளர்களும் இறைவனால் படைக்கப்பட்ட அணுக்களைக் கொண்டு நிறைய அணு ஆராய்ச்சிகள் கண்டுபிடிப்புகள்  கண்டு பிடித்து அதிர்ச்சியை உள்ளாக்கி இருக்கிறார்கள்..

இருந்தாலும் மனிதன் மரணத்தை வெல்லும் வழியை எவரும் கண்டுபிடிக்கவில்லை...

மனித உடம்பின் அணு சேர்கையை அழிக்காமல் பிரித்து எடுக்கும் உளவை எவரும் கண்டுபிடிக்கவில்லை.

மரணத்தை வென்றவர் வள்ளலார் மட்டுமே  !

மரணத்தை வெல்லும் வழியைக் கண்டுபிடித்தவர் அருள் விஞ்ஞானி வள்ளலார் ஒருவர் மட்டுமே என்பது உலகம் அறிந்த உண்மையாகும்...

வேதங்கள் ஆகமங்கள் புராணங்கள் இதிகாசங்கள் சாத்திரங்களிலும் சொல்லி இருக்கிறது என்று சிலர் சொல்வார்கள்.அவைகள் எல்லாமே கற்பனைக் கதைகளேத் தவிர உண்மை அல்ல என்பதையும் வள்ளலார் தெரியப்படுத்தி உள்ளார்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !


வேதநெறி ஆகமத்தின் நெறி பவுராணங்கள்
விளம்புநெறி இதிகாசம் விதித்த நெறிமுழுதும்
*ஓதுகின்ற சூது அனைத்தும் உளவு அனைத்தும் காட்டி*
உள்ளதனை உள்ளபடி உணர உணரத்தனையே
ஏதமற உணர்ந்தன்ன் வீண்போது கழிப்பதற்கு ஓர்
எள்ளளவும் எண்ணம் இலேன் என்ணொடு நீ கலந்தே
தீதறவே அனைத்தும் வல்ல சித்தாடல் புரிவாய்
சித்த சிகாமணியே என் திருநட நாயகனே....!

என்கிறார் மேலும்

வேதம் ஆகமங்கள் என்று வீண் வாதம் ஆடுகின்றீர்
வேதாகமத்தின் விளைவு அறியீர் சூதாகச்
சொன்னது அலால் உண்மை வெளி தோன்ற உரைக்க வில்லை
என்ன பயனொ இவை...!

என்கிறார்.. கற்பனைக் கதைகளை உருவாக்கி சூதாக.உண்மைக்கு புறம்பான கற்பனைக் கதைகளை கற்பனைகளாக தோற்றுவித்து மக்களை அலைய விட்டு விட்டார்கள்.

இதுசமயம் எல்லா உண்மைகளையும் ஒளிவு மறைவு இல்லாமல் எனக்கு உண்மை உணர்த்தி விட்டாய் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ! என்கிறார் வள்ளலார்.

எனவே என்னுடைய ஆன்மநேய உடன் பிறப்புகளாகிய உங்களுக்கு உண்மையை உண்மையாக எடுத்து சொல்வதற்கு உண்மை அறிவை விளக்கி உள்ளாய் ஆதலால் உண்மை உரைக்கின்றேன் என்கின்றார் வள்ளலார்.

என்மார்க்கம் இறப்பை ஒழிக்கும் சன்மார்க்கம் என்று வெளிப்படுத்துகின்றார்..!

இறைப்பை ஒழிப்பது சாத்தியமா ? என்று எல்லோரும் வியக்கின்றார்கள்.
சாத்தியம் சத்தியம் என்று உணர்ந்து அறிந்து அனுபவித்து வாழ்ந்து மரணத்தை வென்றுதான் உலக மக்களுக்கு பறை சாற்றுகிறார்...

சாகாக்கல்வி !

வள்ளலார் கண்டுபிடித்த சுத்த சன்மார்க்க கொள்கைகளுக்கு சாகாக்கல்வி என்றே பெயர் சூட்டுகின்றார்...

இதுவரையில் பொருள் ஈட்டும் கல்விக்கு சாகும் கல்வி என்றும்..நான் அருள் ஈட்டும் கல்வியைத் கற்றுத் தருகிறேன்.அதற்கு சாகாக்கல்வி என்றும் பெயர் மாற்றம் செய்கின்றார்.

சாகாக்கல்விக்கு நான்கு மரபுகளை அதாவது நான்கு பாடங்களைச் சொல்லித் தருகின்றார்..அதில் வெற்றி பெற்றால் மரணத்தை வென்று விடலாம் என்கிறார்...

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

சாகாத கல்வியே கல்வி

ஒன்றே சிவம் தான் என அறிந்த அறிவே தகும் அறிவு

மலம் ஐந்தும் வென்ற வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம்

வேகாத காலாதி கண்டுகொண்டு எப்பொருளும் விளைய விளைவித்த தொழிலே மெய்த் தொழிலாகும்

இந்நான்கையும் ஒருங்கே வியந்து அடைந்து உலகம் எல்லாம்

மா காதல் உற எல்லாம் வல்ல சித்தாகி நிறைவான வரமே இன்பமாம்

மன்னும் இது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின் மரபு என்று உரைத்த குருவே...

தேகாதி மூன்றும் நான் தருமுன் அருள் செய்து எனைத்தேற்றி  அருள் செய்த சிவமே

சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே தெய்வ நடராஜபதியே !

என்ற பாடல் வாயிலாக சுத்த சன்மார்க்க மரபைப் பற்றித் தெளிவாக விளக்கி உள்ளார்..

சாகாத கல்வி கற்க வேண்டுமானால் ஒரே கடவுள் என்ற உண்மையும்..அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்ற உண்மையை அறிந்து கொள்பவரே ! சிறந்த உயர்ந்த உண்மை அறிவு பெற்றவர் ஆவார்...

அவரால் மட்டுமே ஐந்து மலங்களை வெல்ல முடியும்.

ஐந்து மலங்களை வென்றவர்களால் மட்டுமே வேகாத காலாகிய அமுதக் காற்றை சுவாசிக்க முடியும்.

*அமுதக் காற்றை சுவாசிப்பவர்களால் மட்டுமே .உடம்பில் உள்ள ஒன்பது துவாரங்களை அடைக்க முடியும்.*

ஒன்பது துவாரங்களை அடைக்க கற்றுக் கொண்டவர்களால் மட்டுமே துரியமலை துவாரம் திறக்கப்படும்.அதாவது தலையின் உச்சி (கபாலம் ) திறக்கப்படும்..

உச்சி திறந்தால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின்  மெய் அருள் கனல் ஆன்மாவைத் தொடர்பு கொள்ளும்  .

மெய் அருள் கனலின் (சுத்த உஷ்ணம்) சூட்டினால்.ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள திரைகள் ஒவ்வொன்றாக விலகிவிடும்.

திரைகள் நீங்கியவுடனே ஆன்ம ஒளியும் அருட்பெருஞ்ஜோதி ஒளியும் தொடர்பு கொள்ளும்.

ஆயிரத்தெட்டு கமல இதழ்களால் மூடிக்கொண்டு இருக்கும் ஆன்மாவானது இதழ்கள் விரிந்து மலர்ந்து அருட்பெருஞ்ஜோதி யை அனைத்துக் கொள்ளும்.

அனைகின்ற போது உண்டாகும் அருள் *சுகத்தை மகிழ்ச்சி யை* சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை என்கிறார்

அனுபவமாலையில் பதிவு செய்கின்றார் !

கண்கலந்த கணவர் எனைக் கை கலந்த தருணம் கண்டறியேன் என்னையும் என்கரணங்கள் தனையும்

எண்கலந்த போகம் எல்லாம் சிவபோகம் தனிலோர் இறையளவு என்று உரைக்கின்ற மறையளவின் றறிந்தேன்

விண் கலந்த திருவாளர் உயிர் கலந்த தருணம் வினைத் துயர் தீர்ந்து அடைந்த சுகத்தை நினைத்திடுந் தோறும் எல்லாம்

உண்கலந்த ஆனந்தப் பெரும் போகம் அப்போது உற்றது எனை விழுங்க்க் கற்றது காண் தோழி !

என்னும் பாடல் வாயிலாக தன் அனுபவத்தை அனுபவமாலை என்னும் பதிகத்தின் மூலம் வெளிப்படுத்துகிறார் வள்ளல் பெருமான்..

மேலும் ஒரு பாடலிலே அருள் அமுத்த்தை எப்படி அனுபவித்தேன் அகம் மகிழ்ந்தேன் என்பதை பதிவு செய்கின்றார் பாருங்கள்...

*மாடமிசை யோங்கும் நிலா மண்டபத்தே எனது மணவாளர் கொடுத்த திரு அருள் அமுதம் மகிழ்ந்தே*

ஏடவிழ் பூங்குழலாய் நான் உண்ட  தருணம் என்னையும் அறிந்திலேன் உலகம் தன்னையும் நான் அறியேன்

தேடரிய நறும்பாலும் தேம்பாகும் நெய்யும் தேனும் மொக்கக் கலந்த்து எனச் செப்பினும் சாலாதே

ஈடறியாச் சுவை புகல என்றால் முடியாது தென்னடியோ அவ்வமுதம் பொன்னடி தானிகரே !

மேலே கண்ட அனுபவமாலையில் தான் அடைந்த அருள் சுகத்தை இன்பத்தை மகிழ்ச்சியை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை என்கிறார்..

எனவே சுத்ந சன்மார்க்க சான்றோர்களே! என்றும் அழியாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரிய வாழ்வை வாழ்வதற்கு இந்த மனித தேகமே தகுதி வாய்ந்த்து .

ஆதலால் நாம் அடைய வேண்டியது ஆன்மலாபம்.ஆன்ம சுகம் ஆன்ம மகிழ்ச்சி என்பதாகும்.

ஆன்மா மகிழ்ச்சி அடைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தொடர்பு அவசியம் ...

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொள்ள எவைகள் எல்லாம் தடையாக இருக்கின்றதோ அவற்றை எல்லாம் விளக்கி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொண்டால் மட்டுமே அருள் கிடைக்கும்.

*வேறு எந்த தெய்வத்தின் தொடர்பாலும் அருள் கிடைக்காது* என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே தான் இயற்கை உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி என்கிறார் வள்ளலார்.

அதற்கு இயற்கை உண்மை.இயற்கை விளக்கம்.இயற்கை இன்பம் என்று பெயர் சூட்டி விளக்குகின்றார்.

அந்த அருட்பெருஞ்ஜோதி அருள் கிடைத்தால் மட்டுமே மரணத்தை வென்று மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழலாம்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு