செவ்வாய், 20 நவம்பர், 2018

வள்ளலார் வாழ்க்கையின் உடல் மாற்றங்கள் !

வள்ளலார் வாழ்க்கையின் உடல் மாற்றங்கள்...!

வள்ளல் பெருமான் ஐந்து மாதக் குழந்தையாக இருந்த போதே இறைவன் எல்லாவற்றையும் வெட்ட வெளிச்சமாக காட்டிவிட்டார் என்பதை ஆறாம் திருமுறையில் அருள் விளக்க மாலையில் 44 வது பாடலில்  தெரிவிக்கின்றார்...

வள்ளலார் இறைவனால் வருவிக்க உற்றவர் எனவே இறைவனே வள்ளலாரை இயக்கிக் கொண்டு உள்ளார்

பாடல் !

தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில் தில்லைத்

தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது

வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்

வெளியாகக் காட்டியஎன் மெய்உறவாம் பொருளே

காய்வகைஇல் லாதுளத்தே கனிந்தநறுங் கனியே

கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே

தூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும்

சோதிநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.!

இந்த பாடல் எத்தனையாவது வயதில் பதிவு செய்கிறார் என்றால் ..வள்ளலார் வயது சுமார் 48 ஆவது ஆண்டில் பதிவு செய்கிறார்..அப்போது  வள்ளலாருக்கு *சுத்த பிரணவ ஞானதேகம்* கிடைத்த காலக்கட்டம்..

வள்ளலார் தேகம் மூன்று மாற்றங்கள் அடைகின்றன...

ஒவ்வொரு காலக் கட்ட மாற்றத்திலும் திருஅருட்பா பாடல்கள் மாற்றம் அடைகின்றன.

சுத்த தேகம் !

குழந்தைப் பருவத்தில் இருந்து சமய மத தெய்வங்களைப் பற்றிய பக்தி பாடல்களைப் பாடி முதல் நான்கு திருமுறைகளை வெளியிடுகின்ற வரை சுத்த தேகத்தில் வள்ளலார் வாழ்ந்து கொண்டு உள்ளார்..

பிரணவ தேகம் !

வள்ளலார் 1858.ஆம் ஆண்டு கருங்குழியில் வந்து தங்குகிறார்..அங்கு தண்ணீரில் விளக்கு எரித்தார் என்பது அனைவரும் அறிந்த்தே.. 1865 ஆம் ஆண்டு சமரச வேத சன்மார்க்கம் சங்கம்.பின்பு சமரச சுத்த ஷடாந்த சன்மார்க்கம் என்றும் மாற்றம் செய்கின்றார்..

  1867 ஆம் ஆண்டு வடலூரில் தருமச்சாலையைத் தோற்றுவிக்கிறார் .சில காலம் தருமச்சாலையிலே தங்குகிறார் ..
ஜீவகாருண்யத்தின் வல்லபமான  கொள்கைகளை.. அச்சமயம் மக்களுக்கு போதிக்கின்றார்.முதல் நான்கு திருமுறைகளோடு மீண்டும் ஐந்தாவது திருமுறையும் வெளியிடப் படுகின்றது..

அதுசமயம் வள்ளலாருக்கு 47 ஆம் ஆண்டு துவக்கமாக இருக்கலாம்..

சுமார் 1858. ஆண்டில் இருந்து 1870 ஆம் ஆண்டு வரை வள்ளல் பெருமானுக்கு பிரணவ தேகம் முழுவதும் கிடைக்கின்றது..

ஞான தேகம் !

1870 ஆம் ஆண்டு தனிமையைத் தேடி வடலூருக்கு அடுத்த மேட்டுக்குப்பம் சென்று விடுகிறார்....

தருமச்சாலைக்கு போவதும் வருவதுமாக இருக்கின்றார்..

தன்தேகத்தை ஞான தேகமாக இறைவன் அருளைப் பெற்று.. மாற்றம் அடைய செய்வதை முழுமையாக அறிந்து கொள்கிறார்...

அந்த நேரத்தில் அவர் பட்டபாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல..

தன் தேகத்தை மாற்றம் அடைய செய்யும்.
உண்மைக் கடவுள்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான.... என்ற உண்மையை அருள் வல்லபத்தால். தெரிந்து கொள்கிறார் ...

ஞானதேகத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தன் தேகத்தில் அமர்ந்து கொண்டு வள்ளலாரை தன் விருப்பபடி இயங்க இயக்கிக் கொண்டு வருகிறார். எனவே தான் நான் உரைக்கும் வார்த்தைகள் யாவும் நாயகன் வார்த்தை என்கிறார்.

வள்ளலார் பதிவு செய்த பாடல் !

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை

நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே

வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்

வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே

தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்

தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்

ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்

யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே!

என்னும் பாடலை ஞானசரியை தலைப்பில் உள்ள  ..ஆறாம் திருமுறைகளில்  தெளிவாக சொல்லுகின்றார்...

மற்ற ஐந்து திருமுறைகளில் அப்படி சொல்லவில்லை....

மேலும் இப்போது உண்மைச் சொல்லுகிறேன்..ஏன்
என்றால் ? என் உள் இருந்து இறைவன் இயக்கிக் கொண்டு உள்ளார் அதனால் உண்மைச் சொல்ல வைக்கின்றார்..என்கிறார்.

பாடல் !

உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர்

உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர்

எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான்

என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர்

தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில்

சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்

கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும்

கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே !

என்ற பாடலில் தெளிவுப் படுத்துகின்றார்

*வள்ளலார் ஞான தேகத்தில் எழுதியது தான் ஆறாம் திருமுறை அனைத்தும்...*

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணப்படித் தான் வெளிப்படுத்துகின்றார்

வடலூரில் சத்திய ஞானசபையைத் தோற்றிவைக்கிறார்

18-7-1872 ஆம் ஆண்டு சத்திய ஞான சபை வழிபாட்டு விதிமுறைகளை வெளியிடுகின்றார்...

25-11-1872 ஆம் ஆண்டு சத்திய ஞான சபை விளம்பரம.என்ற தலைப்பில் எதற்காக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சத்திய ஞான சபையை தோற்றுவிக்க சொன்னார் என்ற விளக்கத்தை வெளிப்படுத்துகின்றார்.

மேலும் பழைய சங்கம் .சாலை.சபை அனைத்தையும் இறைவன் ஆணைப்படி மாற்றம் செய்கிறார்..

அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம் .

இன்று தொடங்கி சபைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை என்றும் .

சாலைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை என்றும்.

சங்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்றும்

பெயர் மாற்றம் செய்கின்றார்...

22-10-1873 அன்று  மேட்டுகுப்பத்தில் மஞ்சள் வெள்ளை வண்ணத்தில் சுத்த சன்மார்க்க கொடியேற்றி

 *மகா உபதேசம் என்னும் பேருபதேசம் செய்கின்றார்...*

அதில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் யார் ?  என்பதைச் சொல்லி *மகாமந்திரத்தை* வெளிப்படுத்துகின்றார்.

நமது ஆண்டவர் கட்டளை யிட்டது யாதெனில் நமக்கு முன் சாதனம் கருணை யானதினாலே ஆண்டவர் முதற் சாதனமாக

**அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி !**

என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார்..

என்று வெளிப்படையாக  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி தெரிவிக்கின்றார்....

ஏன் இவற்றைத் தெரியப்படுத்துகிறேன் என்றால்...

வள்ளல்பெருமான் சுத்த பிரணவ ஞான தேகத்தில் எழுதியது தான் ஆறாம் திருமுறை...அதில் தான்  எல்லா உண்மைகளையும் ஆண்டவர் சொல்லிய வண்ணம்.
வெளிப்படையாக வெளிப்படுத்துகின்றார்.

ஆறாம் திருமுறை எழுதியது தன் தொண்டர்களுக்கும் .வேறு எவருக்கும் தெரியாது...

வள்ளலார் சித்தி பெற்ற பின் பல ஆண்டுகள் கழித்துதான் ஆறாம் திருமுறை வெளியிடப் பட்டது...

ஒன்றில் இருந்து ஐந்து திருமுறைகள் எழுதியது தொண்டர்களுக்குத் தெரியும்..தன் தொண்டர்கள் வள்ளலாருக்குத் தெரிந்தே ஐந்து திருமுறை புத்தகம் வெளியிட்டார்கள்...

 நித்திய தேகமான. சுத்த பிரணவ ஞானதேகம் முழுமையும் (பூரணமாக ) வள்ளலார் பெற்ற பின்பு தான் 30-1-1874...ஸ்ரீமுக ஆண்டு தைத்திங்கள் 19 ஆம் நாள் வெள்ளிக்கிழமை இரவு 12 மணிக்கு

மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையின் தமது திருவறையில் வள்ளல் பெருமான் அருட்பெருஞ்ஜோதி யானார்கள்..

எனவே சுத்த பிரணவ ஞான தேகம் பெற்று மரணத்தை வென்ற அருளாளர்களால்  தான் வெளிப்படையான உண்மையை மக்களுக்குத் தெரியப்படுத்த முடியும்.

அருளைப் பெறும் நேர் வழியை மக்களுக்கு தெளிவு பெற வழி காட்டவும் முடியும்..மரணத்தை வெல்லும் வழியை பூரணமாக தெரிந்து கொள்ளவும் முடியும்.

உலக மக்கள் இந்த உண்மையைத் தெரிந்து கொண்டால் தான். வள்ளலார் கொள்கை எவ்வளவு.உண்மையானது. தூய்மையானது என்பதை அறிந்து கொள்ள முடியும்...

சில மேதாவிகள் எனக்குப் பாடம் சொல்லித் தருகிறார்களாம்..
அவர்கள் எழுதி விற்பனை செய்யும் புத்தகத்தை படித்து சுத்த சன்மார்க்கம் தெரிந்து கொள்ள வேண்டுமாம்..

நான் யாருடைய புத்தகத்தையைம் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை...

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கருணையால் வள்ளலார் எழுதி வெளியிட்ட திருஅருட்பா ஒன்றே எனக்கு போதுமானது...
அவையே என்னை வாழ வைக்கும்..

மேலும் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே

கற்வாழ்க்கை பொய்யேநீர் களித்ததெலாம் வீணே

உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே

உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே

விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க

மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே

எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்

இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.!

என்று வள்ளலாரே சொல்லி உள்ளார் ...

கண்டது.கேட்டது.
கற்றது.களித்தது.
உண்டது .உட்கொண்டது எல்லாம் குறையே..எல்லாம் பொய்யே ! இதுவரையில் உண்மை அறிந்திலிரே....
என்கிறார்...

எனவே நான் திருஅருட்பா தவிர வேறு எந்த நூல்களையும் படிக்க மாட்டேன்....படிக்க வேண்டிய அவசியமும் இல்லை..

திருஅருட்பா வில் உள்ளது வேறு எந்த நூல்களிலும் கிடையாது..

மற்ற நூல்களில் உள்ளது அனைத்தும் திருஅருட்பா வில் உள்ளது என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்...

நான் எழுதியதில் வருடம் நாட்கள் தவறாக இருந்தால் திருஅருட்பா வைப் பார்த்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்..

வள்ளலார் வாழ்க்கை வரலாற்றை வள்ளலாரே தெளிவாக.திருஅருட்பாவில்  எழுதி வைத்துள்ளார்...படித்து தெரிந்து கொள்ளுங்கள்..

மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பது சாதாரண காரியம் அல்ல...

மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை என்கிறார்...

வள்ளலார் போல் வாழ்ந்தால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்..

என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே என்று சொல்கின்றார்....

சுத்த தேகம்.
பிரணவதேகம் .
ஞானதேகம் .
பூரண ஒழுக்கத்தினால் மட்டுமே.. அருள் தன்மைக்குத் தகுந்தவாறு  மாற்றம் அடையும்..

வள்ளலார் முத்தேக சித்தி பெற்று இறைவனோடு கலந்தவர்...

வள்ளலார் இறுதிப் பாடல்.!


சத்திய அறிவிப்பு !

1. ஐயன்அருள் வருகின்ற தருணம்இது கண்டீர்
ஐயமிலை ஐயமிலை ஐயன்அடி ஆணை
மெய்யன்எனை ஆட்கொண்ட வித்தகன்சிற் சபையில்
விளங்குகின்ற சித்தன்எலாம் வல்லஒரு விமலன்
துய்யன்அருட் பெருஞ்சோதி துரியநட நாதன்
சுகஅமுதன் என்னுடயை துரைஅமர்ந்திங் கிருக்க
வையமிசைத் திருக்கோயில் அலங்கரிமின் விரைந்தே
மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே.

2. தனித்தலைமைப் பெரும்பதிஎன் தந்தைவரு கின்ற
தருணம்இது சத்தியம்காண் சகதலத்தீர் கேண்மின்
இனித்தநறுங் கனிபோன்றே என்னுளம்தித் திக்க
இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகும் போற்ற
மனித்தஉடம் பிதைஅழியா வாய்மைஉடம் பாக்கி
மன்னியசித் தெல்லாம்செய் வல்லபமும் கொடுத்தே
கனித்தசிவா னந்தமெனும் பெரும்போகம் தனிலே
களித்திடவைத் திடுகின்ற காலையும்இங் கிதுவே.

3. சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்
சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்
இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்
இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்
சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்
தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்
செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்
திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.

4. என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார்
இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார்
பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது
பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்
தன்சாதி உடையபெருந் தவத்தாலே நான்தான்
சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம்சத் தியமே
மின்சாரும் இடைமடவாய்இரண்டரை என்மொழிநின் தனக்கே
வெளியாகும் இரண்டரைநா ழிகைகடந்த போதே. !

மேலே கண்ட பாடல்களை பொறுமையாக  ஊன்றி படித்து தெரிந்து கொள்ளவும்....

சுத்த சன்மார்க்க கொள்கைகளில் மிகவும் முக்கியமானது முதன்மையானது.

**கடவுள் ஒருவரே !
அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்**
என்பதாகும்..

இன்னும் விரித்தால் பெருகும்......

எல்லா உயிர்கள் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்...
9865939896.

2 கருத்துகள்:

28 டிசம்பர், 2022 அன்று PM 10:21 க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

நன்றி அய்யா

 
21 ஜூலை, 2023 அன்று PM 3:51 க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

🙏🏾 நன்றி அய்யா!

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு