புதன், 26 செப்டம்பர், 2018

வள்ளலார் சொல்லியதை கவனமாக படியுங்கள் !

வள்ளலார் சொல்லி உள்ளதை கவனமாக படியுங்கள் !

இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்தலாபம் இது.

ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.

இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை.

நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை.

என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், "எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ*

என, "தேடியதுண்டு நினதுருவுண்மை" என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன். மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில்.

"கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக"** என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில்

தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.

மேலும் வள்ளலார் சொல்லியது !

சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம்.

அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம்.

 ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது.

ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும்,

இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும்.

அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற - திருவருட்பாவில் அடங்கியிருக்கிற - ஸ்தோத்திரங்களே போதும்.

அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும்.

ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் **அற்ப அறிவாக** இருந்தது.

இதை விட வேறு விளக்கம் தேவையா ?

சன்மார்க்கிகளும் புரிந்து கொள்ளவில்லை..
வள்ளலாரைப் பின் பற்றும் சமய மத வாதிகளும் புரிந்து கொள்ளவில்லை...

வீண் வாதம் செய்து கொள்வதால் எந்த பயனும் இல்லை...

மேலும் வள்ளலார் சொல்லியது...

இத் தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு, முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை -

தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை - எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம், எனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த - உண்மையறிவனுபவானந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும்

என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கியஆன்ம நேய உரிமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன்; குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன்.

நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில்: நமக்கு முன் சாதனம் கருணையானதினாலே, ஆண்டவர் முதற்சாதனமாக

"**அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதிதனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி**

என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார்.

தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம்.

அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை.

"சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்"* என்னும் பிரமாணத்தால் உணர்க.

என்னும் உண்மைக்கடவுளின் உண்மை மகா மந்திரத்தை (கடவுளின் பெயர் ) உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வள்ளலார் இடம் சொல்லி வெளியிடச் சொல்லுகின்றார்.

உலக மக்கள் அனைவரும் உண்மைக் கடவுளை தெரிந்து கொள்ள வேண்டும்.தெரிவிக்க வேண்டும் என்பதை ஆண்டவரின் அருள் வாக்கை சிரமேற்க் கொண்டு ஆணையின் படி வெளியிடுகின்றார்

பாடல் !

 ஆணை ஆணைநீ அஞ்சலை அஞ்சலைஅருள்ஒளி தருகின்றாம்

கோணை மாநிலத் தவரெலாம் நின்னையேகுறிக்கொள்வர் நினக்கேஎம்

ஆணை அம்பலத் தரசையும் அளித்தனம்வாழ்கநீ மகனே

என்றேணை பெற்றிட எனக்கருள் புரிந்தநின்இணைமலர்ப் பதம்போற்றி.!

என்னும் பாடலில் ஆணையிட்டு சொல்கிறார்..்

அந்த அம்பலத்து அரசர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் .தன் அருள் ஆட்சியும் வள்ளலார் வசம் கொடுத்து வாழ்த்துகின்றார்..

வள்ளலார் பாடல் !

அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்

பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்

இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்

தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.!

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எங்கெங்கு இருந்து எப்படி எல்லாம் செயல் படுகின்றார் என்பதையும் விளக்கமாக தெளிவாக எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் தெரியப்படுத்தி பறை சாற்றுகின்றார்

உண்மை உணர்ந்து அறிவால் அறிந்து தெரிந்து கொள்வதே.ஒவ்வொரு ஆன்மாவின்.கடமையாகும். அதுவே வெற்றியாகும்.அதுவேஆன்ம லாபம் பெறும் வழியாகும்.

அதுவே அருளைப் பெற்று மரணத்தை வெல்லும் துவாரமாகும்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு