திங்கள், 20 ஆகஸ்ட், 2018

சீவ காருண்யத்தின் வல்லபம் !

சீவகாருண்யத்தின் வல்லபம் !

ஒவ்வொருவரும் பொருமையாக கண்டிப்பாக படிக்க வேண்டும்..

நீங்கள் வணங்கும் வழிபடும் தெய்வங்கள் யாவையும்.அனைத்தும். எக்காலத்திலும் எந்த நேரத்திலும் உங்களைக் காப்பாற்றாது..
காப்பாற்றவும் முடியாது..அவைகள் எல்லாம் ஜடப்பொருள்.மனிதர்களால் படைக்கப் பட்ட கற்பனைக் கடவுள்கள்.எனவே அவைகளினால் எந்த பயனும் இல்லை...

இப்போது கர்நாடகத்திலும்.கேரளாவிலும்.மற்ற இடங்களிலும் பலத்த மழையினால் பல உயிர்கள் அழிந்து விட்டன.அழிந்து கொண்டும் உள்ளன. விட்டன

எந்த கடவுளாவது காப்பாற்றியதா ? சிந்திக்க வேண்டும் !

உங்களை நீங்கள் தான் காபாபாற்றிக் கொள்ள வேண்டும்.அதற்குண்டான சக்தி ஆற்றல் செய்கை எல்லாம் நம்மிடமே உள்ளது..கடவுள் நம்மிடமே கொடுத்துள்ளார்.

கீழே உள்ள.. வள்ளலார் வழங்கிய ஜீவகாருண்யத்தின் வல்லபத்தைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்....

உண்மை வழி !

சீவகாருணிய மில்லாது செய்யப்படுகிற செய்கைக ளெல்லாம் பிரயோஜன மில்லாத மாயாசாலச் செய்கைகளே யாகுமென்று அறியவேண்டும்.!

எல்லாச் சீவர்களும் கடவுள் இயற்கையுண்மை ஏகதேசங்களாதலாலும் அவரவர் இடங்களிற் கடவுள் அருள்விளக்கம் விளங்குதலாலும், சமுசாரிகளுள் தமது தாய் தந்தை புணர்ந்தோர் மக்கள் துணைவர் முதலிய குடும்ப மட்டில் பசியாற்றிக் கொள்ளத் தக்க அற்பசக்தியுள்ள சமுசாரிகள் தாய் பிதா மக்கள் துணைவர் முதலிய குடும்பத்தாரைப் பசியினாற் பரிதபிக்க விட்டு அயலார்க்குப் பசியாற்றத் தொடங்குதலும், தம்மிடத்துப் பசித்து வந்த அயலாரை அந்தப் பசியால் பரிதபிக்க விட்டுத் தம் குடும்பத்தார் பசியை யாற்றத் தொடங்குதலும், கடவுளருளுக்குச் சம்மதமல்ல.

ஆதலால், தமது குடும்பச் செலவைக் கூடியமட்டில் சிக்கனஞ் செய்து இருதிறத்தார் பசியும் நீக்குதல் வேண்டுமென்றும்; அற்பசத்தியினுங் குறைபட்டுத் தமது குடும்பம் மட்டிலும் பசியாற்றுவிப்பதற்குப் பிரயாசையால் மிகச் சிறிய முயற்சியுடைய சமுசாரிகள் தமது குடும்ப மட்டிலாவது பசியாற்றுவித்துக் கொண்டு, தம்மிடத்துப் பசித்துவந்த அயலார் விஷயத்தில் மிகவும் தயவுடையவர்களாகி அவர் பசியை மற்றொருவரைக் கொண்டாவது ஆற்றுவிப்பதற்குத் தக்க முயற்சி யெடுத்துக் கொள்ளவேண்டு மென்றும்;

இயல்புள்ள பிரபல சமுசாரிகள் தங்கள் தங்கள் வருவாய்க்குத் தக்கவரையில் தாய், பிதா, புணர்ந்தோர், மக்கள், துணைவர், உறவினர், சினேகர், அதிதிகள், பெரியர், அடிமைகள், அயலார், பகைவர் முதலியவர்களுக்கும், தமது குடும்பத்திற்குச் சகாயமாகத் தேடிய பசு, எருது, எருமை, ஆடு, குதிரை, தாவர முதலிய பிராணிகளுக்கும், பசியை ஆற்றுவித்துத் திருப்தியின்பத்தை உண்டுபண்ண வேண்டுமென்றும்;

விவாகம் புத்திரப்பேறு தெய்வம் படைத்தல் முதலிய பலவகைச் செய்கைகளில் வேறு வேறு சடங்குகளும் வேறு வேறு வினோதங்களும் வேறு வேறு பெருமைப்பாடுகளும் குறித்துப் பொருட் செலவு செய்தலை அமைத்து, விவாக முதலிய அந்தந்தச் செய்கைகளிலும் பசித்த சீவர்களுக்குப் பசியை ஆற்றுவித்து இன்பத்தை யுண்டுபண்ணுகின்ற சிறப்பினையே செய்யவேண்டுமென்றும், அப்படிச் செய்யில் பசித்தவர் பசி நீங்கி அடைந்த இன்பத்திலும் அனேக மடங்கு அதிகமான இன்பத்தைத் தாம் அடைவார்களென்றும் சத்தியமாக அறியவேண்டும்.

சமுசாரிகள் விவாக முதலிய விசேஷ காரியங்களில் பந்தலை அலங்கரித்தும், அவ்விடத்தில் வேறு வேறு சடங்குகளைச் செய்வித்தும், ஆடல் பாடல் வரிசை ஊர்வலம் முதலிய வினோதங்களையும் அப்பவர்க்கம் சித்திரான்னம் முதலிய பெருமைப்பாடுகளையும் நடத்தியும், எக்களிப்பில் அழுந்தியிருக்குந் தருணத்தில் பசித்த ஏழைகள் முகத்தைப் பார்க்கவும் சம்மதிக்கவில்லை. இப்படிப்பட்ட சந்தோஷ காலத்தில் தமக்காயினும் தமது மக்கள் துணைவர் முதலியோர்க்காயினும் ஒவ்வோர் ஆபத்து நேரிடுகின்றது.

அப்போது அவ்வளவு சந்தோஷத்தையும் இழந்து துக்கப்படுகிறார்கள். இப்படித் துக்கப்படும்போது அலங்காரஞ் செய்த பந்தலும், சங்கல்ப விகல்பமான சடங்குகளும் ஆடல் பாடல் வாத்தியம் வரிசை ஊர்வலம் முதலிய வினோதங்களும் அப்பவர்க்கம் சித்திரான்னம் முதலிய பெருமைப்பாடுகளும் அந்த ஆபத்தைத் தடைசெய்யக் கண்டதில்லை.

அந்தச் சுபகாரியத்தில் உள்ளபடியே பசித்த சீவர்களுக்கு ஆகாரங் கொடுத்துப் பசியை நீக்கி அவர்கள் அகத்திலும் முகத்திலும் கடவுள் விளக்கத்தையும் கடவுளின்பத்தையும் வெளிப்படச் செய்திருந்தார்களானால், அந்த விளக்கமும் இன்பமும் அத்தருணத்தில் நேரிட்ட ஆபத்தை நீக்கி விளக்கத்தையும் இன்பத்தையும் சத்தியமாக உண்டுபண்ணுமல்லவா?

ஆகலில் விவாக முதலிய விசேஷச் செய்கைகளிலும் தங்கள் தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களது பசியை ஆற்றுவித்துத் திருப்தியின்பத்தை உண்டுபண்ணுவது முக்கியமென் றறியவேண்டும்.

துன்பம் நீங்கும் வழி !

சூலை குன்மம் குஷ்டம் முதலிய தீராத வியாதிகளால் வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களுக்குப் பசி யாற்றுவிப்பதே விரதமாக அனுசரித்தார்களானால், அந்தச் சீவகாருணிய அனுசரிப்பே நல்ல மருந்தாக அந்த வியாதிகளை நிவர்த்தி செய்து, விசேஷ சௌக்கியத்தை உண்டு
பண்ணுமென்பது உண்மை.

 பல நாள் சந்ததி யில்லாமல் பலபல விரதங்களைச் செய்து வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளது பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருண்ய அனுசரிப்பு நல்ல அறிவுள்ள சந்ததியை உண்டுபண்ணு மென்பது உண்மை.

அற்ப வயதென்று குறிப்பினால் அறிந்துகொண்டு இறந்து போவதற்கு அஞ்சி விசாரப்படுகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த சீவகாருணிய அனுசரிப்பு தீர்க்காயுளை உண்டுபண்ணுமென்பது உண்மை.

கல்வி அறிவு செல்வம் போகம் முதலியவைகளைக் குறித்து வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருணிய அனுசரிப்பு கல்வி அறிவு செல்வம் போகம் முதலானவைகளை உண்டு பண்ணுமென்பது உண்மை.

இதுதான் ரொம்ப முக்கியமானது !

பசித்தவர்களுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாகக் கொண்ட சீவகாருணிய முள்ள சமுசாரிகளுக்குக் கோடையில் வெயிலும் வருத்தாது,

மண்ணும் சூடு செய்யாது -

பெருமழை, பெருங்காற்று, பெரும்பனி, பேரிடி, பெருநெருப்பு முதலிய உற்பாதங்களும் துன்பம் செய்விக்கமாட்டா -

விடூசிகை* விஷக்காற்று விஷசுரம் முதலிய அசாத்திய பிணிகளுமுண்டாகா -

அந்தச் சீவகாருணியமுள்ள சமுசாரிகள் ஆற்று வெள்ளத்தாலும் கள்ளர்களாலும் விரோதிகளாலும் கலக்கப்படார்கள் - அரசர்களாலும் தெய்வங்களாலும் அவமதிக்கப்படார்கள் -

சீவகாருணிய முள்ள சமுசாரிகளது விளைநிலத்தில் பிரயாசை யில்லாமலே விளைவு மேன்மேலும் உண்டாகும் -

வியாபரத்தில் தடையில்லாமல் லாபங்களும், உத்தியோகத்திற் கெடுதியில்லாத மேன்மையும் உண்டாகும் -

சுற்றங்களாலும் அடிமைகளாலும் சூழப்படுவார்கள் - துஷ்டமிருகங்களாலும் துஷ்ட ஜந்துக்களாலும் துஷ்டப் பிசாசுகளாலும் துஷ்ட தெய்வங்களாலும் பயஞ்செய்யப்படார்கள் -

சீவகாருணியமுள்ள சமுசாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களும் அஜாக்கிரதையினாலும் ஊழ்வகையினாலும் சத்தியமாக வராது.

பசித்தவர்களுக்குப் பசியாற்றுவித்து இன்பத்தை உண்டு பண்ணுகின்ற சீவகாருண்ய ஒழுக்கமாகிய மேலான விரதமானது தேவர்கள், மனிதர்கள், பிரமசாரிகள், சமுசாரிகள், தவசிகள், சந்நியாசிகள், ஆண்சாதியர், பெண்சாதியர், வார்த்திபர், வாலிபர், உயர்ந்தோர், தாழ்ந்தோர் முதலிய யாவராலும் அவசியம் செய்யத்தக்க தென்பது கடவுளாணை யென்றறிய வேண்டும்.

மேலே கண்ட ஜீவகாருண்யத்தின் வல்லபம்  பற்றி. வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார்...

படித்து தெரிந்து பயன் பெருங்கள்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு