சனி, 22 செப்டம்பர், 2018

அருட்பெருஞ்ஜோதி செய்தி !

🙏🔥
அருட்பெருஞ்ஜோதி !
அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
அருட்பெருஞ்ஜோதி !

       🙏🔥ஆன்மநேய சுத்த சன்மார்க்க சகோதர சகோதரிகளே உங்களின்  கவணத்திற்கு தயவுடன் ஒரு சிறு விண்ணப்பம் 🔥🙏
🌺🔥🌺🔥🌺🔥🌺🔥🌺🔥🌺🔥🌺🔥🌺🔥🌺🔥🌺
      எந்த ஒரு பதார்த்தத்தையும் உண்டு அனுபவிக்காமல், பார்த்தவுடன் அதன் சுவையை சொல்ல இயலுமா ?

அப்படி உண்டு அனுபவிக்காமல் அதன் சுவையை சொன்னால் அது வெறும் கற்பனை கணிப்பாகத்தான் இருக்குமே தவிர உண்மையை அடுத்தவர்களுக்கு விளக்கி சொல்ல முடியாததாகத்தானே இருக்கும்  🌺

அனுபவித்து அறிந்துகொள்ள வேண்டிய ஒருபொருளை அனுபிவிக்காமலேயே பேசி பேசி விவாதம் செய்து வீண்போவதைக் காட்டிலும் ;

அந்தப் பொருளை அனுபவிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டால் என்ன ?

நமது பெருமான் இப்புவியில் வருவிக்கவுற்றதன் நோக்கம் 🌺
     சாதி மதம் சமயம் என்ற பெயரால் ,
அனைவருக்கும் பொதுவான ஒரே கடவுளை,
கூறுபோட்டு அவரவருக்கு ஏற்றவாறு பெயரை வைத்து ஒற்றுமை இன்றி  சிதைந்து கிடக்கும் மானிடப்பிறவிகளை எல்லாம் ,

சுத்தசன்மார்க்கம் என்ற பெயரால் ஒன்றுபடுத்தி ,
அருட்பெருஞ்ஜோதி என்ற ஒரே கடவுளை அனைவரும் ஒருமையுடன் வணங்கி வழிபட்டு அவரவர்களின் வாழ்வும் நிலைக்க  சிற்றம்பலக் கல்வியாம் சாகாக் கல்வி கற்று ,
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திட வேண்டும் என்ற பெருங்கருணை நோக்கத்தில், இவ்வுலகிற்கு திருவருளால் வருவிக்கவுற்றார்கள் அருளைப் பெற்றார்கள் 💐

அப்படி வந்த நமது பெருமான் தாம் வருவிக்கவுற்ற நோக்கத்தையும்,
அதன்படி தாம் அடைந்த அருள் அனுபவத்தையும் இறையனுபவத்தையும்  இவ்வுலகவர்களுக்கு விளக்கி வெளிப்படக் கூறியது மட்டும் இல்லாமல் ,

அதை அடைவதற்கான வழிதுறையையும் நமக்கு தெளிவாக சொல்லி வைத்து விட்டார்கள் 🌺

அந்த வகையில் நாம் பெருமான் கூறிய சுத்தசன்மார்க்க சுகப் பெரும்நிலையாகிய அருட்பெருஞ்ஜோதி இயற்கை அனுபவ நிலையை பெறவேண்டியதற்கான  முயற்சியை அடிப்படையில் இருந்து ஒவ்வொன்றாகத்தான் நாம் கடந்து வரவேண்டும்  .

ஒரு ஜாமநேரம்🔥🙏
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦
பெருமான் நாம் பெறவேண்டியதைப் பெற்றுக்கொள்வதற்கு ஒரு ஜாமநேரம் போதும் என்கின்றார்கள் அதாவது
 மூன்று மணிநேரம் .

இதில் நாம் கவணிக்க வேண்டியது
அங்கு சொல்லபட்ட வார்த்தைகளைத்தான் .
அதன்படி தற்போது, நாம் இருக்கும் தரத்திற்கும் நமது அறிவின் பக்குவ நிலைக்கும் இது சாத்தியமாகுமா ?
என்று சற்று சிந்தித்து அதைப்பற்றிய தயவான விவாதம் செய்திடல் வேண்டும் .

அப்படி என்னதான் பெருமான் கூறியிருக்கின்றார்கள் என்றால் ;
     
    அருமை ஆன்மநேய  சகோதரர்களே ,
நமது ஆன்மாவை தெரியவிடாமல் மறைத்திருக்கும் திரைகளை அகற்ற வேண்டும் என்றால் அது விசாரம் என்ற "அதிஉஷ்ணத்தால் "மட்டுமே நீக்கமுடியும் என்பதும்.

அந்த உஷ்ணம் எப்படிப்பட்டது என்று
தெரிய வேண்டும் என்றால் ,
அது ஒரு யோகியினுடைய அனுபவத்தில் தெரிந்துக் கொள்ளலாம் என்பதுவாம்.

அப்படிபட்ட உஷ்ணத்தை மனுஷ தரத்தில் இருந்து உண்டுசெய்வதற்கு தெரியாது என்பதுவாம் .

ஒரு யோகி காடு மலை குகை முதலியவற்றிற்கு சென்று நூறு வருடம் ஆயிரம் வருடம் தவம் செய்து
உண்டாக்கிக் கொள்ளும் ,
இந்த உஷ்ணத்தைக்காட்டிலும் ,
கோடி பத்துக்கோடி பங்கு அதிகமாக உஷ்ணத்தை நாம் உண்டுபண்ணிக்கலாம் ;
எப்படி என்னில் ,

ஒரு ஜாம நேரம் மனத்தில் "இக விசாரம் இன்றி பர விசாரிப்புடன்" ஆன்ம நெகிழ்ச்சியோடு" தெய்வத்தை சிந்தித்துக்கொண்டாவது  அல்லது ஸ்தோத்திரம் செய்துகொண்டாவது இருந்தால்,
நாம் பெறவேண்டியதைப் பெற்றுக்கொள்ளலாம் .
என்று பெருமான் கூறுகின்றார்கள் 🌺

இதில் கூறப்பட்ட நேரம் என்னவோ வெறும் மூன்று மணிநேரம்தான் .
ஆனால் அதில் சொல்லப்பட்ட
நியதிகள்தான் இமயத்தை ஒத்ததாக
எட்டாத உயரத்தில் உள்ளது.

ஆம் சகோதரர்களே!
   மனத்தில் இகவிசாரிப்பு இன்றி பரவிசாரிப்புடன் ஒரு ஐந்து நிமிடம் நம்மால் ஒரு இடத்தில் உட்கார இயலுமா ?

இக விசாரிப்பு என்பது என்ன ?
இகலோக வாழ்வில் நம்மை சார்ந்துள்ள விஷயங்களைப் பற்றிய விசாரிப்புகளே ஆகும்.

மனம் வேறு எந்த விஷயங்களையும் நினைக்காமல் ஆண்டவர் ஒருவரையே நினைத்து அவரது அருளையே வேண்டி ,
ஆன்ம நெகிழ்வோடு அழுத கண்ணீர் ஆறாய் பெருகி உடம்பெல்லாம் நனைந்து ஓடவும் ,

ஆகாரம் என்ற நினைப்பே இல்லாத வண்ணம் இருந்து ஆண்டவரை சிந்தித்தோ அல்லது ஸ்தோத்திரம் செய்துகொண்டோ இருந்தால் பெருமான் கூறுகின்றபடி பெற்றுக்கொள்வது சாத்தியம்தான் 🌺

ஆனால் நம்முடைய பக்குவம் தற்போது எந்தவண்ணம் உள்ளது ?

இவ்வுலக விடய ஆசைகளில் நிராசையுற்று ,
சதா சர்வகாலமும் ஆண்டவரை நினைத்து அழுது புலம்புகின்றோமா ?

நமது மனம் வேறு எந்த விஷத்தையும் பற்றாமல் ஆண்டவரையே பற்றிக்கொண்டு சுற்றி வருகின்றதா ?

இல்லையே !
நாம் இன்னும் குடும்ப பந்தத்திலும் , இவ்வுலக பந்தத்திலும் மூழ்கி கிடக்கின்றோமே,
அந்தப் பற்றையே இன்னும் விடமுடியவில்லையே !

நமக்கு அடுத்தடுத்து  நடப்பதெல்லாம் இறைவன் செயலாலேயே நடக்கும், அவரே நமது பசியறிந்து உணவளிப்பார்,
உணவு கிடைத்தால் உண்போம் ,
இல்லை என்றால் ஆண்டவரை நினைத்துக்கொண்டே பசியோடு உறங்குவோம் என்ற தற்சுதந்திரம் இன்றி,
நம்மிடம் உள்ள பணத்தை அடுத்த வேலைக்கு தேவை என்று வைத்துக்கொள்ளாமல் கேணியிலும் குளத்திலும் கிணற்றிலும் பணத்தாசை இல்லாமல் வீசிவிட்டோமா ?

இல்லையே !
இன்னும் அடுத்தவேலை உணவுக்காகத்தானே ஊர்ஊராக வேலையைத் தேடி பணத்தக்காக பதறி ஓடுகின்றோம் ,
இன்னும் ஓடிக்கொண்டே இருக்கின்றோம் .

ஓய்ந்து ஒரு இடத்தில் அமர்ந்து கண்ணை மூடினாலே மனம் ஒரு நிமிடத்தில் ஓராயிரம் எண்ணங்களை அசைபோடுகின்றதே 🌺

அவ்வளவு ஏன் ! சன்மார்க்க அருமை சகோதர சகோதரிகள் சுத்தசன்மார்க்க வழிபாட்டிலும்,
சன்மார்க்க நிகழ்ச்சிகளிலும் அருட்பெருஞ்ஜோதி அகவலை படிப்பதை பழக்கமாகவும், வழக்கமாகவும் படித்து வருகின்றோம் என்பது அனைவரும் அறிந்தது;

சிலர் நாள் தவறாமல் அகவலை படிக்கின்றார்கள்.

பலர் அகவலை பார்க்காமலேயே 1596 அடிகளையும் படிக்கின்றார்கள் .

ஆனால் அகவல் படிக்கின்ற அந்த ஒன்றரை மணிநேரம் நமது மனம் வேறு எதையும் நாடாமல் ,
வேறு எதையும் நினைக்காமல்  ,
வேறு எதையும் தொடாமல்
அகவலின் உட்கருத்தை மட்டுமே உன்னிநின்று ஆண்டவரையே நினைத்துக்கொண்டு படித்து முடிக்க
மனம் ஒத்துழைக்கின்றதா?

அப்படி படித்துவிட்டாலே மனம் நமது பக்குவத்திற்கு வரக்கூடிய தன்மையில் இருக்கின்றது என்பதை உணர்ந்துகொள்ளலாமே 🌺

நல்லது ;
இங்கு இவ்வெளியேன் சொல்ல வருவது என்னவென்றால்,
சுத்தசன்மார்க்கத்தில் பெருமான் , நாம் அடையவேண்டிய லஷியமாக கூறிய கருத்தை எல்லாம்  அறிந்துகொண்டு,

அதற்கு என்னென்ன உபாயமாக கூறினார்களோ அவற்றை எல்லாம்
தெரிந்து கொண்டு ,
ஒவ்வொன்றையும் வரிசைப்படி கடந்து வந்து , ஒவ்வொரு படியிலும் கிடைக்கும் அனுபவங்களே நமக்கு அடுத்தடுத்த நிலைக்கு செல்வதற்குரிய அறிவைக் கொடுக்கும் என்பதை உணர்ந்து , 

தற்போது நமது பக்குவத்திற்கு தக்கவாறு விசாரம் செய்வோம் ,
அதைப்பற்றி மட்டுமே விசாரிப்போம் என்பதுதான்🙏

அந்த விசாரம்கூட ,
நமது பக்குவத்திற்கும் தரத்திற்கும் ஒத்தவர்களாக உள்ளவர்களுடன் விசாரனை செய்வோம் .

நம்மைவிட மிகவும் மேலான தரத்தவர்களுடனும் விசாரம் செய்தல் கூடாது,
அல்லது நம்மைவிட தாழந்த தரத்தில் இருப்பர்களுடனும் விசாரம் செய்தல் கூடாது ;

அப்படி நமது தரத்திற்கு மாறுபட்டு உள்ளவர்களுடன் விசாரம் செய்தால் ,
நமது மனத்தில் எழும் கேள்விகளுக்கு தயவுடன் பதில்சொல்லும் பொறுமை அவர்களுக்கு இல்லாமல் போய்விடும்,

அது அவரவர்களின் தயவைப் பொறுத்து மாறுபட்டதாய் உள்ளது;

இதனால் நமக்கு தேவையான விளக்கம் கிடைக்காது  என்பதை உணர்ந்து ,
நம்தரத்திற்கு ஒத்தவர்களை அறிந்து விசாரனை செய்வோம் அல்லது தனித்து இருந்து கேள்விகளை நமக்குநாமே கேட்டுக்கொண்டு ,
பெருமான் துணைக்கொண்டு விசாரம் செய்வோம் ;

அந்த விசாரனை எப்படி இருக்கவேண்டும் என்றால் ,
நமது பக்குவத்திற்கு ஏற்றதாக இருக்கவேண்டும் .

ஆம் ,
விடய ஆசைகளையே அடக்கமுடியாத நாம் மரணமிலாப் பெருவாழ்வை  அடைவது எப்படி என்றும், இன்னும் ஏன் யாரும் அடையவில்லை என்றும் விசாரம் செய்வது அறியாமை .

அவற்றைதான் பெருமான் விளக்கமாக கூறியுள்ளார்களே !
அவற்றை படித்து தெரிந்துகொள்ளவேண்டும் அவ்வளவுதான் .

அதை விடுத்து அதைப்பற்றிய காரசாரமான விவாதம் கூடாது ,
ஏனென்றால் அதை அடைந்த ஒருவரிடம் விசாரம் செய்தால் அதற்கான விளக்கம் கிடைக்கும் .

ஆனால் நாமோ,
ஆசையை ஒழிக்க இன்னும் எத்தனைப்பிறவிகள் எடுக்க வேண்டுமோ?

மனத்தை வசப்படுத்த இன்னும் எத்தனைப் பிறவிகள் எடுக்கவேண்டுமோ?

தன்னை அறிந்துகொள்ள இன்னும் எத்தனைப் பிறவிகள் எடுக்க வேண்டுமோ ?

ஆண்டவரின் பரிபூரண அருளைப் பெறுவதற்கு இன்னும் எத்தனைப் பிறவிகள் எடுக்கவேண்டுமோ ?

மரமிணலாப் பெருவாழ்வு என்ற இலக்கை அடைய இன்னும் எத்தனைப் பிறவிகள் எடுக்க இருக்கின்றோமோ தெரியவில்லையே ? .

ஆனால் இவற்றை எல்லாம் அருளொளி கிடைக்கப் பெற்றால் கணத்தில் பெற்றுக்கொள்ளலாம் .

அருளொளி கிடைப்பதற்கான பக்குவத்தைப் பெறுவதற்கான தகுதிகளையும் தயவைப் பெறுவதுதானே நமது நோக்கம்.

ஆகலில் விசாரம் என்ற பெயரில், அனுபவித்து அறியாத ஒரு நிலையைப்பற்றி அனுபவித்தறியாத மற்றொருவரிடம் விவாதம் செய்கின்றபோது 
அது பலனற்று விகாரப்பட்டு நிற்கும் .

எனவே பெருமான் கூறிய அத்தனை அனுபவங்களையும் படித்து தெரிந்துகொள்வது நமது கடமை.

ஆனால் விசாரம் செய்வது என்பது நமது பக்குவத்திற்கு தக்கவாறு , நம்மால் அறிந்து கொள்ளக்கூடிய செயல்களான
ஜீவகாருண்யம் என்பது எப்படிப்பட்டது என்றும் ,
இகலோக வாழ்வு என்றால் என்ன ?
பரலோக வாழ்வு என்றால் என்ன ?

இம்மை இன்பம்,
மறுமை இன்பம்,
பேரின்பம் என்றால் என்ன ?

அண்டம் ,பிண்டம் ,
அகம் அகப்புறம் புறம் புறப்புறம்
இவற்றில் கடவுட் பிரகாசம் எப்படி விளங்குகின்றது என்பது பற்றி தனக்குள் கேள்விகளை எழுப்பி,
அதனால் உண்டாகும் பல்வேறு கேள்வியாலும் பதில்களாலும் பல மறைப்புகளை நமக்குள் விலக்கிக்கொள்ளலாம்.

இந்திரிய ஒழுக்கம்,
கரண ஒழுக்கம்,
ஜீவ ஒழுக்கம்,
ஆன்ம ஒழுக்கம் என்பது என்ன ?

இவற்றில் கூறப்பட்ட கட்டுப்பாடுகள் என்னென்ன என்று ஆராய்ந்து ,

முதலில் ஒழுக்கத்தை வகைபடுத்தி
அதன்படி வாழும்போது ,
அவ்வொழுக்கம் ஒத்த இடத்தில் ,
நமது அறிவு தானே வந்து கூடி அடுத்தடுத்த நிலைக்கு தேவையானவற்றை நமக்கு அறிவுறுத்தும்.

அதன்படி நாம் ஒவ்வொன்றாய் கடந்து செல்வதுதான் நிலையான ஏற்றத்தைக்கொடுக்கும் .
எனவே ,
பெருமான் கூறிய மேல்நிலை அனுபவங்களை அனுபவித்த சுத்தசன்மார்க ஞானிகள் நம்மை சார்ந்து தற்போது இல்லாத காரணத்தினால் ,
துரியம் துரியாதீதம் குருதுரியம் சுத்த சிவதுரியம் இதுபோன்ற அனுபவங்களைப் பற்றி யாரிடம் விசாரம் செய்வது ?

மரணமிலாப் பெருவாழ்வு என்பது பற்றிய விஷயங்களில் ஆரோக்கியமான விசாரம் யாரிடம் செய்வது ?

அவற்றை அடைந்தவர்கள்
யாரும் நமது கண்ணுற இருந்து அவர்களது தலைமையில் சுத்தசன்மார்க்கம் வழிநடத்தப்பட்டால் இங்கு மாறுபட்ட விவாதம் எழும்பாது ,

ஆனால் அப்படி யாரும் இன்னும் தோன்றவில்லை என்பதாலும் ,
பெருமான் ஒருவரே நம் அனைவருக்கும் தோன்றாத் துணையாக நின்று நம்மை வழிநடத்துகின்றார்கள் என்பதாலும்.

முதலில் நாம் அனைவரும் ,
நமக்குள் தயவை வளர்ப்பதற்கு தேவையான சுத்தசன்மார்க்க ஒழுக்கத்தை ,

இந்திரிய ஒழுக்கத்தில் இருந்து ஒவ்வொன்றாய் கடைபிடித்து ஒழுகினால் ,
அவ்வொழுக்கத்தின் வாயிலாக எல்லா நிலைகளும் கைகூடும் என்பதை உணர்ந்து ,

நம்முள் தயவைப் பெருக்குவோம் .
பெருமான் கொடுத்துள்ள திருவருட்பா பாடல்களையும் கருத்துகளையும் உள்ளதை உள்ளபடி பதிவுசெய்வோம் .

அருட்பாவில் எதுபற்றி கூறினாலும் பெருமான் கூறியுள்ளார்கள் என்பதை நமது அகங்காரம் வெளிப்படா வண்ணம் தயவுடன் பெருமான் பெயரை முன்வைத்துப் எழுதி பேசி பழகுவோம் 👏

இவ்வெளியவனின் கருத்தில் யாரும் வருத்தம் கொள்ளாமல் ,
எல்லாரும் எல்லா நிலைகளும் அடையவேண்டும் என்ற பொதுநலன் கருதியும், காலம் விரையமாகின்றது ,
நரையும் திரையும் மூப்பும் தழுவி எதிர்நிற்கின்றன .

பிறவியை முடித்துவைக்கும் ஆண்டவரின் சோதனையாம் மரணமும் வருவதற்கு காத்து நிற்கின்றதே என்று பயந்து,

அதற்குள் நாம் ஏதோ ஒரு நிலையில் ஏதோ ஒரு பக்குவத்தை அடைந்து விட்டால் அடுத்த அடுத்த பிறவிக்கு பயனுள்ளதாய் இருக்குமே என்ற ஆன்மநேயத்தில்  இவற்றையெல்லாம் கூறநேர்ந்தது ,

ஆகவே அருமை சகோதர சகோதரிகளே முதலில் நாம் சன்மார்க்க ஒழுக்கத்தின்படி வாழ முற்படுவோம் ,
ஒழுக்கத்தின் வாயிலாகவே எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளலாம்.

ஒழுக்கம் சார்ந்து நெறியில் பயணித்தால் மட்டுமே அந்நெறிக்குரிய நிலையை அடைய முடியும் என்று கூறி அணைவரையும் தயவுடன் பணிகின்றேன் 🔥🙏
...நன்றி🔥🙏
.....வள்ளல் மலரடிப் போற்றி !போற்றி ! 🔥🙏
....பெருமான் தயவில் 🔥🙏
...தயவுடன் வள்ளல் அடிமை 🔥🙏
...வடலூர் இரமேஷ்;
....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு