திங்கள், 8 மே, 2017

உத்தம மனிதனை தேடுகிறேன் !


உத்தம  மனிதனை தேடுகிறேன் !

இந்த உலகில் மனிதனைத் தேடுகிறேன் கிடைக்க வில்லை என்கின்றார் சென்னையில் வாழ்ந்த ''தோப்பா சாமியார்'' என்னும் பெயர் உடைய துறவியார் ! .அவர் சென்னையில் நெல்லிக்காய் பண்டாரத் தெருவிற்கு அடுத்த தேரடித் தெருவில் உள்ள ஒரு திண்ணையில் அமர்ந்து கொண்டு இருந்தார் .

இந்த உலகில் மனித குணம் உள்ளவன் எவரும் இல்லை என்பதால் ஆடை அணியாமல் நிர்வாணமாக வாழ்ந்து வருகின்றார் .

மனிதன் முன்னால் வாழ்ந்தால்  ஆடை வேண்டும் ,எல்லா மனிதர்களும் மனித உருவிலே வாழ்கின்ற மிருகங்கள் என்பதால் ,மனித  மிருகங்கள் வாழும் இடத்தில், தான் இருப்பதால் ஆடை அணிய தேவை இல்லை என்பதால் ஆடை அணியாமல் இருக்கின்றார் .

அந்தத் தெரு வழியாக போகிற ஒவ்வொருவரையும்  பார்த்து ,கழுதை போகிறது ,...மாடு போகிறது,...நாய் போகிறது,..நரி போகின்றது ..  பன்றி போகின்றது ,என்று மிருகங்களின் பெயரைச் சொல்லி அழைத்துக் கொண்டே இருப்பார் .

மக்கள் அவரைப்  பைத்தியக் காரன் என நினைந்து கண்டும் காணாமல் சென்று  கொண்டே இருப்பார்கள் .

ஆனால்  அவன் பைத்தியக் காரன் இல்லை,மனிதனை தேடிக் கொண்டே இருக்கின்றான் .

வள்ளல்பெருமான் வருகை !

வள்ளலார் ஏழு கிணறு வீராசாமி தெருவில் உள்ள தன் வீட்டில் இருந்து  எப்பொழுதும் திருஒற்றியூருக்குக் கீழ் அண்டை மாடவீதி   வழியாகச் செல்லாது ,ஆங்குள்ள நெல்லிக் காய்ப் பண்டாரர் சந்து வழியாக செல்வது வழக்கமாக கொண்டு இருந்தார் .

ஒரு நாள் வழக்கத்திற்கு மாறாகத் தேரடித் தெரு வழியாகச் சென்று கொண்டு இருந்தார் ..அத்தெருவில் உள்ள ஒரு திண்ணையில் அமர்ந்து இருந்த ''தோப்பா   சாமியார்'' .வள்ளல்பெருமான் வருவதைக் கண்டு ''இதோ ஓர் உத்தம மனிதன் வருகிறார் ''என்று உள்ளம் களிசிறக்க உரைத்தான் .உரைத்ததோடு அல்லாமல், அடுத்து தம் உடம்பினையும்,உறுப்புகளையும்  தனது கரங்களைக் கொண்டு மறைத்துக் கொண்டார் .

அதைக் கண்ட மக்கள் அங்கு கூட்டமாக கூடி விட்டார்கள்...அதைக் கேட்ட ,அதைக் கண்ட நம் வள்ளல்பெருமான் அவர் பக்கத்தில் சென்று தன்னுடைய மேலாடையைக் கொடுத்து அணிந்து கொள்ளச் சொல்லி சில புத்திமதிகளை சொல்லி அன்றே அவ்விடத்தை விட்டு வெளியேறச் சொன்னார் ..

அந்த நிர்வாண சந்நியாசி வள்ளல்பெருமானை வணங்கி அவ்விடம் விட்டு அகன்று விட்டார் ..

அங்கு கூடி இருந்த அத்துணை மக்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போயினர் .இது வரையில் அந்த சன்னியாசியை பைத்தியக் காரன் என நினைத்து இருந்தோம் ..அவன் மனிதனை தேடிக் கொண்டு இருந்து இருக்கின்றான் .வள்ளல்பெருமானைப் பார்த்ததும் இதோ ''ஒரு உத்தம மனிதன்'' வருகிறான் என்பதை கண்டு தனது கைகளால் தன் அவயங்களை மறைத்துக் கொண்டான் .

அப்போ நாம் எல்லாம் மனித உருவில் இருக்கும் மிருக குணம் உள்ளவர்கள் என்பதை அவன் கண்டு கொண்டான் ....உண்மையில் அவன் எல்லாம் தெரிந்தவன் .அவனை விட வள்ளல்பெருமான் முற்றும் தெரிந்த  அருளாளர் என்பதை மக்கள் அன்று புரிந்து கொண்டார்கள். அன்றில் இருந்து வள்ளல்பெருமான்  புகழ் சென்னை மாநகரம் முழுவதும் பரவியது ....மக்கள் அவரைப்  பின் தொடர ஆரம்பித்து விட்டார்கள் .

சென்னையில் இருக்க பிடிக்காமல் வள்ளலார் சென்னையை விட்டு வெளியேறுகிறார் ..

வள்ளலார் பாடல் !

தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால்
சிலுகுறும் என்று உளம் பயந்தே
நாட்டிலே சிறிய ஊர்ப் புறங்களிலே
நண்ணினேன் ஊர்ப் புறம் அடுத்த
காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க்
களத்திலே திரிந்து உற்ற  இளைப்பை
ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள்
எந்தை நீ அறிந்தது தானே !

என்ற பாடல் வாயிலாக சென்னையை விட்டு வெளியேறிய விபரத்தைத் தெரியப்படுத்து கின்றார் .

வள்ளல்பெருமான் உத்தம மனிதனாக வாழ்ந்து..பல ஆலயங்களுக்கு சென்று இறுதியில் கருங்குழிக்கு வந்தார்,அங்கு திருஅருட்பா  ஐந்து திருமுறைகளை எழுதி வெளியிட்டார்.

பின்பு வடலூர் வந்தார் .சத்திய தருமச்சாலையை  தோற்றுவித்தார் ,பின்பு மேட்டுக்குப்பம் சென்றார் இறைவன் அருளைப் பெற்றார் .பின்பு வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினார்,

பின்பு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்''...''சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை'' ,..''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை''..என்று பெயர் மாற்றம் செய்தார்.பின்பு  மேட்டுக்குப்பம் சென்றார் ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்  ஆணைப்படி ''ஆறாம் திருமுறையை'' எழுதினார் ..   பின் இறைவன் பூரண அருள் பெற்று அருளாளராக வாழ்ந்து,..திரு அருட்பிரகாசர் என பெயர் பெற்று ,..சுத்த பிரணவ ஞான தேகம் பெற்று,சித்திவளாக திருமாளிகையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்தார் .

நாமும் அவர் காட்டிய ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்  தனி'' நெறியைப்  பின்பற்றி உத்தம மனிதனாக வாழ்ந்து இறைவன் பூரண  அருள் பெற்று  வள்ளல்பெருமான் போல்  வாழ்வாங்கு வாழ்வோம்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896 ...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு