வெள்ளி, 21 ஏப்ரல், 2017

அன்பு அறிவு அருள் !

அன்பு அறிவு  அருள் !

அன்பும், அறிவும் நமக்கு இருந்தால் நமக்கு எல்லா உண்மைகளும் தெரியும் .
நாம் யார் ? என்பதும் தெரியும் ,நம்மை அனுப்பியவர் யார் ? என்பதும் தெரியும்.நமது வாழ்க்கையின் லாபம் எவை  என்பதும் தெரியும் ,அவற்றை எப்படி பெற வேண்டும்  என்பதும் தெரியும்.அந்த லாபத்தினால் நாம் அடையும் பேரின்ப லாபம் எவை  என்பதும் தெரியும்.

அந்த பேரின்ப லாபம் எவை என்பது  தெரியாமல்,புரியாமல்,அறியாமல்  இருப்பதற்கு காரணம் ,நம்மிடம் அன்பும் அறிவும் இல்லை என்பதை வள்ளலார் தெரிந்து கொண்டு ,அன்பும் அறிவும் விளக்கம் அடைந்து விளங்குவதற்க்காக  உண்மையான வழியைக் காட்டுகின்றார். அதற்குப் பெயர்தான் சுத்த சன்மார்க்கம் ஒழுக்கம் என்பதாகும்.

அவைதான் ஜீவ காருண்யம்.!

அதற்கு ஜீவ காருண்ய வல்லபம் என்கின்றார்.ஜீவ காருண்ய வல்லபம் எவை    என்றால், பிற உயிர்கள் இடத்துப் பசி கொலை முதலியவற்றால் எதனால் காருண்யம் தோன்றியதோ அதனால் அவ்வுயிர் வருந்தாத படி அதை நீக்குதற்கு முயற்ச்சிப்பது அதன் வல்லபம் என்று அறிய வேண்டும்,என்கின்றார்..

இந்த வல்லபத்தால்  நமக்கு என்ன கிடைக்கின்றது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

ஜீவ காருண்யம் விளங்கும் போது அறிவும் அன்பும் உடனாக விளங்கும் ,அதனால் உபகார சத்தி விளங்கும் அந்த உபகார சத்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும் என்கின்றார்.வள்ளலார் ...

எனவே ஜீவ காருண்யத்தால் அன்பும் அறிவும் விளங்கும் என்கின்றார் ..அன்பும் அறிவும் விளங்குவதற்குத்தான் ஜீவ காருண்யம் செய்ய வேண்டும் .   அந்த ஜீவ காருண்யம்  மட்டுமே மரணத்தை வெல்ல முடியுமா ? என்றால் வெல்ல முடியாது .புறத்தில் செல்லும் மனத்தை அடக்குவதற்கு ,அன்பும் அறிவும் தேவைப்படுகின்றது

எனவேதான் ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்றும்.ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல் எனவும் என்றும் வள்ளலார் தெளிவுபட சொல்லி உள்ளார் ..ஜீவ காருண்யத்தால் அருள் என்னும் கோட்டையின் சாவி கிடைத்து விடும்.சாவி கிடைத்து  விட்டால் மட்டுமே கதவு திறக்க முடியுமா ? என்றால் திறக்க முடியாது...ஜீவ காருண்யத்தால் ஆன்ம நெகிழ்ச்சி ,ஆன்ம உருக்கம் உண்டாகும் .ஆன்ம நெகிழ்ச்சியால் ஆன்ம உருக்கத்தால் அன்பும் அறிவும் முழுமையாக வெளிப்படும்...

சத் விசாரம் !

அதற்குமேல் ஜீவ காருண்யம் என்ற  ஒழுக்கம் வேண்டும் என்கின்றார் அதாவது நம்முடைய,உடம்பையும்  உயிரையும் ஆன்மாவையும் காப்பாற்றும் ஒழுக்கமாகும்  அதற்கு சுத்த சன்மார்க்க ஒழுக்கம் என்கின்றார்.சுத்த சன்மார்க்க ஒழுக்கம் என்பது ,சத் விசாரம் என்பதாகும்.சத்விசாரம் என்பது,அன்பையும்,அறிவையும் கொண்டு உண்மையான .இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான்  என்பதை அறிவாலே அறிந்து இடைவிடாது தொடர்பு கொள்வதாகும்.

சத்விசாரத்தில் இரண்டு வகை உள்ளது என்கின்றார் .பரம் ,அபரம் என்று இரண்டு வகையாக உள்ளது.இவற்றில் பரம் பரலோக விசாரம்,அபரம் இகலோக விசாரம்.இவை இரண்டில் இகலோக விசாரம் விசாரம் அல்ல ,சாதாரணமாக ஒருவன் வி -சாரம் செய்து கொண்டு இருக்கின்றானே என்றால் அவ்விசாரம் விசாரம் ஆகாது.உண்மை விசாரமும் இல்லை .மேலும் பரலோக விசாரத்தையே குறிக்க வந்தது...இகலோக விசாரத்தை மறுக்க வந்தது என்கின்றார்.

அவ் விசாரத்தால் என்ன உண்டாகும் என்றால்,அன்பும் அறிவும் விளங்கி  ஆன்மாவை இடைவிடாது  தொடர்பு கொள்ளுகின்ற போது,அந்த மோதலால் சுத்த உஷ்ணம் உண்டாகும் என்கின்றார்.அந்த சுத்த உஷ்ணத்தால் .நமது ஆன்மாவைத் தெரிய வொட்டாமல் மூடி இருக்கின்ற,கருமையில் பச்சைவண்ணம் கலந்த  முதல் திரையாகிய பச்சைத் திரையை  நீக்கிக் கொள்ளலாம் என்கின்றார்.

இந்த உஷ்ணத்தை  சாதாரண மனித தரத்தில் உண்டு  பண்ணுவதற்குத் தெரியாது .இங்கே தான் நாம்  மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டியது அவசியமாகும்.

உண்மையான ஆண்டவரை இடைவிடாது ஸ்தோத்திரம் செய்கின்றதிலும்,நினைக்கின்றதிலும்,அதிக உஷ்ணம் உண்டாகும் என்கின்றார்.இதற்கு சுத்த சன்மார்க்க ஒழுக்கம் என்கின்றார்.,இதற்கு எவை எவைகள் தடையாக இருக்கின்றதோ அவற்றை எல்லாம் தூக்கி அப்புறப் படுத்திவிட வேண்டும் என்கின்றார். அதைத்தான் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள் என்று ஒரு பட்டியல் போடுகின்றார் ..

எல்லாம் உடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே ! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய,சமயங்கள்  மதங்கள்,மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் ,வருணம்,ஆசிரமம்,முதலிய உலக ஆசார சங்கற்ப விகற்பங்களும்,எங்கள் மனத்தில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும் ,

அதற்குமேல் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை எங்களுக்குள் ,எக்காலத்தும் ,எவ்விடத்தும்,எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தல் வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகின்றார்.இதற்குப் பெயர் சத்விசாரம்  என்பதாகும்

ஜீவ காருண்யம் என்பதைக் கருத்தில் கொண்டு  உணவு மட்டும் வழங்கிக் கொண்டு .சாதி,சமயம்,மதங்களில் பற்று வைத்து கொண்டு இருப்பதால் எந்த  பயனும் கிடைக்காது ஆன்ம லாபமும் கிடைக்காது.

சத் விசாரத்தைக்  கடைபிடிக்காமல் அருள்  கிடைக்காது ,அருள் சுரக்காது  மரணம் இல்லாப் பெருவாழ்வு கிடைக்காது. இவற்றைத் தெரிந்து கொள்வதற்கு அன்பும் அறிவும் வேண்டும்.

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே
அன்புருவாம் பர சிவமே !

என்கின்றார் .ஜீவ காருண்யத்தால் அன்பும் அறிவும் விளங்கும் ,அதற்குமேல் அறிவைக் கொண்டு அறிவைத் தொடர்பு கொள்ள வேண்டும்.அதாவது ஆன்ம அறிவைக் கொண்டு கடவுள் அறிவைத் தொடர்பு கொள்ள வேண்டும்.அப்போதுதான் உண்மையான அனுபவம் தோன்றும்.அந்த உண்மை அனுபவத்தால் அருள் உருவம் என்னவென்பதும்,அதன் தன்மை என்னவென்பதும்,தெரியும்.

அதற்குமேல் அருளைக் கொண்டு அருள் கொடுக்கும்  இறைவனைத் தொடர்பு கொள்ளவேண்டும்.அப்போதுதான் அருளின் நடமும்,ஆண்டவரின் நடனமும் உண்மையான அருட்பெருஞ்ஜோதி  உருவமும் தெரிந்து கொள்ள முடியும்   அவரின் அருளாலே அவர் தாள் வணங்கி அருள்பெற முடியும். அதன்பின்பு தான்,அருளைக் கொண்டு கோட்டையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைய முடியும்.அதன் பின்பு தான்  பேரின்ப பெரு லாபமும், பேரின்ப பெரு வாழ்வும்,கிடைக்கும்,அதன்  பின்பு தான் மரணம் இல்லாப் பெருவாழ்வு கிடைக்கும்.;;;

கடல் கடந்தேன் கரை அடைந்தேன் கண்டு கொண்டேன் கோயில்
கதவு திறந்திடப் பெற்றேன் காட்சி எலாம் கண்டேன்
அடர் கடந்த திருவமுதம் உண்டு அருள் ஒளியால் அனைத்தும்
தெரிந்து தெளிந்து அறிவு உருவாய் அழியாமை அடைந்தேன்
உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன்
உள்ளபடி உள்ளபொருள் உள்ளவனாய் நிறைந்தேன்
இடர் தவிர்க்கும் சித்தி எலாம் என்வசம் ஓங்கினவே
இத்தனையும் பொது நடம் செய் இறைவன் இறைவன் அருட் செயலே !

என்ற பாடல் வாயிலாக வள்ளலார்  உண்மையை உரக்க சொல்லுகின்றார்

 மேலும்  வள்ளலார் பாடல் !

அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுது அங்கு
அனுபவம் ஆகின்றது என்னடி தாயே
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
திருவருள் உருவம் என்று அறியாயோ மகளே !

அருளாலே அருள் இறை அருள்கின்ற பொழுது அங்கு
அனுபவம் ஆகின்றது என்னடி தாயே
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்
திரு நட இன்பம் என்று அறியாயோ மகளே !

எனவே ஜீவ காருண்யத்தைக் கொண்டு அன்பும் அறிவையும் பெற வேண்டும்..சத் விசாரத்தால் கடவுள் அறிவையும்,கடவுள்  அருளையும் பெற வேண்டும்.எனவே தான் ஜீவ தயவைக் கொண்டு கடவுள் தயவைப் பெற வேண்டும் என்கின்றார் ..அன்பு,தயவு,அறிவு கருணை அருள் என்பது ஒரு பொருளையே குறிப்பதுபோல் தோன்றும்.,,ஒவ்வொன்றுக்கும்.வெவ்வேறு தன்மையும்,ஆற்றலும்,செயலும்  உண்டு.இவற்றை அறிவாலும்  அனுபவத்தாலும் தெரிந்து கொள்ள வேண்டும்.

தொடரும் ;--

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு