வியாழன், 6 ஆகஸ்ட், 2015

திருஅருட்பிரகாச வள்ளலார்

உலககுரு
திருஅருட்பிரகாச வள்ளலார்

இப்பதிவில் நாம் 19ம் நூற்றாண்டில் பிறந்து தன்னை அறிந்து, எல்லாம் வல்ல இறைவனை உணர்ந்து, இறைவனின் பரிபூரண அருளால் ஒளிஉடல் பெற்று சிரஞ்சீவியான கருணை கடல் ஞானகுரு திருஅருட்பிரகாசவள்ளலார் பற்றி காண்போம்.
ஞானம் என்றால் என்ன? பரிபூரண அறிவே ஞானம். பூரணம் என்றால் முழுமை. முற்றும் அறிந்தவனே – உணர்ந்தவனே பரிபூரணன். ஞானி. சந்தேகமின்றி தெளிந்தவனே எல்லாம் தெரிந்தவன் ஆவான். அவனே எல்லோருக்கும் தெரிவிப்பான். அவனே ஞானி.
“தெள்ளத்தெளிந்தோருக்கு ஜீவனே சிவலிங்கம்” என்கிறார் ஞானி திருமூலர். இரக்கமே உருவானவன். கருணையே வடிவானவன். எவ்உயிரையும் தம் உயிர் என கருதுபவன். அவனே ஞானி. அப்படி ஒருவர் இருந்தாரா? இருக்கிறாரா? இருக்க முடியுமா? அப்படிப்பட்டவர்கள் உலகெங்கும் பலர். பற்பல காலங்களிலும் வாழ்ந்திருகிறார்கள். இன்றும் இறவாப் புகழ் கொண்டும், இறவா நிலை பெற்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
19-ம் நூற்றாண்டிலே இப்படி ஒரு வள்ளல் தமிழ்நாட்டில் பிறந்து – வளர்ந்து – வாழ்ந்து – எல்லோருக்கும் வழிகாட்டி – விழிகளின் மேலாண்மையை உணர்த்தி – வள்ளலாராக – இன்றும் இறை தன்மையான ஒளியாகி பேரொளியாகி எங்கும் நிறைந்திருகிறார். மரணமில்லா பெருவாழ்வு பெற்ற அந்த மாபெரும் ஞானி , ஒப்பற்ற சித்தர் , வெள்ளாடை துறவி , சிரஞ்சீவி நம் அகக்கண் திறக்க வந்த அருளாளர் . இராமலிங்கர் என்பது இவரின் இயற் பெயர். “வள்ளல் யார்” என்று ஆராய்ந்து அறிந்து அது இறைவனே என உணர்த்தி அம்மையம் ஆனதால் “வள்ளலார்” என்று அன்பர்களால் அழைக்கப்பட்டார்
உலக மக்கள் அனைவரும் மரணமில்லா பெரு வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக , இதுவரை இவ்வுலகில் மறையாக – பரி பாஷையாக சொல்லப்பட்ட ஞான இரகசியங்களை எல்லோரும் அறிய உரைத்தது “திருவருட்பா” என்னும் ஈடு இணையற்ற ஞான நூல்.
ஞானத்தை சொல்லிய நம் வள்ளலார் , பாமரரும் புரிந்து – தெளிந்து உணரும் படியாக வடலூரில் சத்திய ஞான சபையை கட்டி , உலகில் வேறுங்கும் இல்லாதபடி , இறைவனை அருள்மயமான கருணையே வடிவான பெரும்ஜோதியை எல்லோரும் கண்டு களிக்கும் படி , 7 திரை நீக்கி அமைத்தார்.
எத்தனையோ ஞானிகள் நம் உலகில் தோன்றி உள்ளனர். எல்லோரும் ஞானத்தை அருளியவர்கள் தான். இதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் இராமலிங்கர் போல் இறை இரகசியங்கள் அனைத்தையும் எல்லோரும் அறிய எல்லோருக்கும் அருளை வாரி வாரி வழங்கியவர் யாரும் இல்லை. அரிதான மானிட பிறவி பெற்ற இராமலிங்கர் மிகவும் அரிதான ஞான கல்வியை கற்றார் இறைவனிடம். ஆம். இறைவனே வள்ளலாருக்கு குருவானார்.
வள்ளல் பெருமான் பள்ளிகூடம் செல்ல வில்லை. தன் சிறு வயதிலே தினமும் தன் வீட்டருகே உள்ள கந்த கோட்டம் முருகனை வழிபடுவதையே வழக்கமாக கொண்டார். “கற்றது நின்னிடத்தே” என இராமலிங்கர் கூறுகிறார். அதுவும் “சாகா கல்வி” எனும் பிறப்பறுக்கும் கல்வி. மனதை இறைவன் திருவடியில் ஒருமைபடுத்தியதால் அறிவு பிரகாசமானது. ஓதாதே உணர்ந்தார்.
ஒருமையுடன் இறைவன் திருவடியை எண்ணி எண்ணி உணர்ந்தார். சதா காலமும் நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து தவம் செய்யலானார். ஆன்ம பசியோடு இறைவன் திருவடியில் மட்டுமே மனதை இருத்தி விழி மலர்களை மலர்த்தி விழித்திருந்து தவம் செய்தார்.
பலன் அவர் அறிவாற்றல் அண்ட அண்டங்களையும் கடந்து அப்பாலும் சென்றது. ஊன உடலே ஒளியுடல் ஆனது. 1823 அக்டோபர் 5 ம் நாளில் பிறந்த இவர் 51 வயது வரை , பூதவுடலை ஒளியுடலாக்கி இப்பூலகில் வாழ்ந்தார்.
அவர் பெற்ற பேற்றை சொல்லி முடியாது. ஆடுற சித்திகள் 647 கோடியும் கைவர பெற்றார். அவர் புரிந்த அதிசயங்கள் கணக்கில் அடங்காது. “இவைகளில் இலட்சியம் வைக்க வேண்டாம், இறைவன் அருள் பெறுவது மட்டுமே நம் ஒரே இலட்சியமாக இருக்க வேண்டும் என்று வலியுறித்தினார். “என் போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டும்” என்று ஆண்டவரிடம் வேண்டினார்.
தன்னில் உள்ள உயிரே இறைவனின் அம்சம் என்பதை உணர்ந்தார். தன்னை போலவே எல்லோர் உள்ளத்திலும் இறைவனே குடி கொண்டுள்ளார் என்பதையும் உணர்ந்தார். இதை உணர்ந்து அம்மயம் ஆனதால் கிட்டிய ஆனந்தம் அளவில்லாதது என உணர்ந்தார். அதை அறிந்ததால் உணர்ந்ததால் அதுவாக மாறியதால் அதன் இயல்பை பெற்றார் இராமலிங்க வள்ளலார்.
அவர் பட்ட பாட்டை – வேதனையாய் சொல்லில் வடிக்க இயலாது.
எவ்வுயிரும் தானாக கண்டார். பயிர் வாடிய வாட்டம் அவர் பெற்றார். பிற உயிர் படும் துன்பம் அவர் பட்டார். அது தான் ஆன்ம நேய ஒருமை. வள்ளல் தன்மை பெற்றவர் தன்மை இதுவே.
குறைந்த பட்சம் பசியை நீக்குவதே மனித இயல்பு என்றார். உணவால் மனித உயிர் வாழும் பின் தேறிவிடும் என்றார். அதன் பின் வள்ளல் யார் என்ற ஆராய்ச்சியில் இறங்கும் என்றார். சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவினார். சைவ உணவு உண்பவனே இறைவன் அருள் பெற தகுதியானவன் என்று கூறினார். “சாகாதவனே சன்மார்கி” என்றார்.
தர்ம சாலை ஏற்படுத்தி அங்கு வரும் அணைத்து அன்பர்களுக்கும் உணவு வழங்க ஏற்பாடு செய்தார். தர்ம சாலையின் நோக்கம் தவம் செய்வோர்களுக்கு உணவு ஒரு தடையாக கூடாது என்பதற்க்காக தான். வள்ளல் பெருமான் ஏற்றிய அடுப்பு 150 ஆண்டுகளுக்கு மேல் இன்றும் எரிந்து கொண்டு வருவோர்க்கெல்லாம் அன்னம் அளித்து கொண்டு வருகிறது.
இரண்டவதாக “சித்தி வளாகம்” உருவானது. நம் வள்ளல் பெருமான் “வள்ளல் யார்” என்று ஆராய்ச்சி செய்த இடம் சித்தி வளாகம். இங்கு தான் திருகாபிட்டு கொண்டு ஒளியாகி எங்கும் நிறைந்தார்.
மூன்றாவதாக “சத்திய ஞான சபை” அமைத்தார். ஞான உபதேசங்களை அருட்பாக்காளால் கூறியருளிய வள்ளலார் பாமரர்களும் புரிந்து கொள்ளும் படியாக ஞான அனுபவம் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்க கட்டியதே சத்திய ஞான சபை. தான் பட்ட துன்பத்தை இனி யாரும் பெறலாகாது என கருணையோடு , எளிதாக , நாமுய்ய நல்வழி காட்டியிருக்கிறார் வள்ளலார் இராமலிங்கர்.
அந்த வள்ளல் இராமலிங்கர் உரைத்தது இது தான் என தொகுத்து கூறுவது இத்தளத்தின் நோக்கம்.
அவ்வழி – நல்வழி – எவ்வழி – விழிவழி என உரைப்பதே இத்தளம் .
அவ் வழி உணர்த்தி எல்லோரும் மரணமிலா பெருவாழ்வு பெற வழி காட்டுவதே எங்களுக்கு வள்ளலார் இராமலிங்கர் இட்ட பணி.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு