புதன், 5 ஆகஸ்ட், 2015

ஆன்மாவின் விடுதலை !

ஆன்மாவின் விடுதலை !

அருட் பெரு வெளி !

அருட்பெரு வெளியில் அருட்பெரும் உலகத்
அருட்பெரும் தலத்து மேல் நிலையில்
அருட்பெரும் பீடத்து அருட்பெரு வடிவில்
அருட்பெரும் திருவிலே அமர்ந்த
அருட்பெரும் பதியே அருட்பெரும் நிதியே
அருட்பெரும் சித்தி என் அமுதே
அருட் பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமே
அருட்பெருஞ் ஜோதி என்னரசே !.....வள்ளலார் .

நாம் வாழும் இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது .இந்த பஞ்ச பூதங்களும்,வெளிக்குள் தான் அடங்கி உள்ளன்.இவைப்போல் பலகோடி உலகங்கள் ,அண்டங்கள் யாவும் வெளிக்குள் வெளியாக இயங்கிக் கொண்டு உள்ளன.

எல்லாவற்றிக்கும் வெளிதான் காரண காரியமாக இருக்கின்றன.ஒவ்வொரு அண்டங்களுக்கும்,உலகங்களுக்கும்  இடையே வெளிதான் .அதாவது வெற்று இடம்தான் உள்ளது அந்த வெற்று இடத்திற்கு, சக்தியை ஆற்றலை ,வேகத்தை,சுழற்சியை,தந்து இயக்கி இயங்கிக் கொண்டு உள்ளது எது ?

அதுதான் அருட் பெருவெளி என்பதாகும்.அதுதான் இயற்கை உண்மையாக வெளியாகும்.

மற்ற கோடானு கோடி வெளிகள் யாவும் செயற்கை வெளிகள் ஆகும் .

பெருவெளி !

அந்த செயற்கை வெளிகளுக்கு எல்லாம் தன்னுடைய சக்தியையும்,ஆற்றலையும், வேகத்தையும்,சுழற்சியையும்  இயக்கத்தையும் இடைவிடாது கொடுத்துக் கொண்டு இருக்கும் ஒரு பெரிய வெளி உள்ளது .அதற்கு பெயர்தான்  ''அருட்பெருவெளி '' என்பதாகும்.

அந்த அருட் பெரு வெளிக்குள்  பஞ்ச பூதங்கள் என்னும் மண்,நீர்,நெருப்பு,காற்று ,ஆகாயம்,என்னும் ஜடப்பொருள்கள் கிடையாது.

அந்த பெருவெளியை  இதுவரையில் எந்த சமயங்களோ ,மதங்களோ,வேதங்களோ ,ஆகமங்களோ ,புராணங்களோ இதிகாசங்களோ ,சாத்திரங்களோ அதன் அதன் தலைவர்களோ , யோகிகளோ .ஞாநிகளோ .மற்றும் வேறு எந்த அருளாளர்களும் .பார்த்ததோ ,கண்டதோ  தெரிந்து கொண்டதோ,எவரும் இல்லை..

அந்த அருட்பெருவெளியில் என்ன இருக்கின்றது என்றால் ''அருள் '' நிறைந்து இருக்கின்றது.அவ்வாறு அருள் நிறைந்து  உள்ள இடத்தின் மத்தியில் ஒரு ''பீடம்'' இருக்கின்றது .

அந்த பீடத்தில் அருட் பெரும் வடிவில் .அருட்பெரும் வடிவமாக ..அருட்பெரும் வடிவமாக ,..அருட்பெரும் கருணையாக,, எல்லா அண்டங்களுக்கும் பதியாக ,..அழிவில்லாத அருட்பெரும் நிதியாக ,எல்லா ஆன்மாக்களுக்கும் ''முத்தி சித்தி'' வழங்கும் அமுதமாக .எல்லா உயிர்களும் இன்பம் அடையும் சக்தியாக ,எல்லாப் பொருள்களும் களிப்பு அடையும் சுகமாக இயங்கிக் கொண்டு உள்ளதாகும்.

அதனால்தான் அதற்கு ''தனிப் பெருங் கருணை'' என்று பெயர் வைத்துள்ளார் நமது வள்ளல்பெருமான் .அதற்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பதை உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் படைத்தவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அருட்பெருஞ்ஜோதி  !

இயற்கை உண்மையர் என்றும்.இயற்கை அறிவினர் என்றும்.இயற்கை இன்பினர் என்றும்,நிற்குனர் என்றும்,சிற்குணர் என்றும் ,நித்தியர் என்றும் சத்தியர் என்றும் .ஏகர் என்றும்,அநேகர் என்றும்,

ஆதியர் என்றும்,அநாதியர் என்றும்,அமலர் என்றும்,,அற்புதர் என்றும் .நிரதிசயர் என்றும்,எல்லாம் ஆனவர் என்றும்,எல்லாம் உடையவர் என்றும்,எல்லாம் வல்லவர் என்றும் .அளவு கடந்த திரு குறிப்புகளால் ,திரு வார்த்தைகளால்

சுத்த சன்மார்க்க ஞானிகளால் துதித்தும்,நினைத்தும்,உணர்ந்தும் ,புணர்ந்தும்,அனுபவிக்க விளங்குகின்ற

தனித்தலைமைப் பெரும் பதியாகிய பெருங்கருணைக் கடவுள்தான் ''அருட்பெருஞ்ஜோதி '' என்பதாகும்.

மேலே சொன்ன ''அருட்பெரு வெளியின் பீடத்தில்'' அமர்ந்து ஆட்சி செய்து கொண்டு இருப்பவர் தான் ''அருட்பெருஞ்ஜோதி ''என்னும் அற்புதக் கடவுளாகும்..

அவர் எப்படி இயங்கிக் கொண்டு உள்ளார் !

அண்டம் எலாம் பிண்டம் எலாம் உயிர்கள் எலாம் பொருள்கள்
ஆனவெலாம் இடங்கள் எலாம் நீக்கமற நிறைந்தே
கொண்டவெலாங் கொண்டவெலாங் கொண்டு கொண்டு மேலுங்
கொள்வதற்கே இடம் கொடுத்துக் கொண்டு சலிப்பின்றிக்
கண்டம் எலாம் கடந்து நின்றே அகண்டமதாய் அதுவும்
கடந்த வெளியாய் அதுவும் கடந்த தனி வெளியாம்
ஒண்டகு சிற்றம்பலத்தே எல்லாம் வல்லவராய்
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே !

பலகோடி அண்டங்கள், அவற்றில் உள்ள பிண்டங்கள்,,அங்கு உள்ள உயிர்கள்,அங்குள்ள அனைத்து பொருள்கள்,,உயிர்களும்,பொருள்களும் வாழ்வதற்கும் இயங்குவதற்கும் உள்ள இடங்கள்.யாவும் நீக்கமற நிறைந்தும்,

அவைகள் சிரமம் இல்லாமல் வாழ்வதற்கும்,இயங்குவதற்கும்  மேலும் மேலும் அளவில் அடங்காத உயிர்கள்.பொருள்கள்  தோன்றினாலும், அவற்றிற்கு இடம் கொடுத்து கொண்டே சலிப்பு இன்றி இருக்குமாம்.

ஒவ்வொரு அண்டமும் தன்னைத்தானே விரிந்து சுருங்கும் தன்மை உடையதாகும்.

அந்த அந்த அண்டங்களில் ,உயிர்கள் பொருள்கள்,மற்றும் எதுவாக இருந்தாலும்,  அளவில்லாது நிறைந்து கொண்டே இருந்தாலும் அதற்கு இடம் கொடுத்துக் கொண்டே சலிப்பு இன்றி இயங்கிக் கொண்டு இருக்கும்.

நிறைகின்ற தருணம் தன்னைத்தானே விரியும்,..குறைகின்ற தருணம் போது தன்னைத்தானே குறையும்.

இவ்வாறு பல கோடி அண்டங்களையும்,அவற்றில் உள்ள உயிர்களையும்,பொருள்களையும் .பல கோடி வெளிகளையும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாமல்  தொடர்பு இல்லாமல் தன்னைத்தானே சுற்றிக் கொண்டே இருக்கும் .

பலகோடி அண்டங்களையும்,வெளிகளையும் தன்னுடைய் அருள் சக்தியால் இயக்கிக் கொண்டுள்ளதுதான் ''அருட்பெருஞ்ஜோதி'' என்னும் அருள் ஒளியாகும்.அதன் பெருமையும் ஆற்றலையும் செயல்களையும் விவரித்து சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை .

''அந்த அருட்பெருஞ்ஜோதி கடவுளுக்கு வள்ளலார் சொல்லும் வார்த்தைகள்''!

எல்லாம் வல்ல தனித்தலைமைக் கடவுளே !

எல்லாம் வல்ல தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !

எல்லாம் வல்ல இயற்கை உண்மைக் கடவுளே !
எல்லாம் வல்ல இயற்கை விளக்கக் கடவுளே !
எல்லாம் வல்ல இயற்கை இன்பக் கடவுளே !

எல்லாமாகிய இயற்கை இன்பக் கடவுளே !

அருட்பெருஞ்ஜோதி தனித் தலைமைக் கடவுளே !
அகண்ட பூரண ஆனந்தராகிய அருட்பெருஞ்க் கடவுளே !

சுத்த சன்மார்க்க லட்சிய சத்திய ஞானக் கடவுளே !

அருட்பெரு வெளியின் கண்ணே அருட்பெருஞ்ஜோதி வடிவராகிய
விகற்ப மில்லாது விளங்குகின்ற மெய்ப்பொருள் கடவுளே !

அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமுடைய பேரருட் பெருஞ்ஜோதிப் பெருந்தகைக் கடவுளே !

இவ்வாறு இங்கனம் செய்து அருளுகின்ற தேவரீரது திருவருட் பெருஞ் கருணைத் திறத்தை ,என்னவென்று கருதி ! என்னென்று துதிப்பேன்

எல்லாம் ஆனவராயும் ஒன்றும் அல்லாதவராயும் எல்லா அண்ட சராசரங்களின் அகத்தும் புறத்தும் நிறைந்து விளங்குகின்ற தனித் தலைமைக் கடவுளே !

என்று வள்ளல்பெருமான் போற்றிப் புகழுகின்றார் .


அந்த பேரொளி எங்கு உள்ளது ;--

கண்டம் எல்லாம் கடந்து நின்றே அகண்டமதாய் ,அதுவும் கடந்த வெளியாய் அதுவும் கடந்த அளவிடமுடியாத வெளியாய் ,அனைத்து வெளிகளையும் தன்னகத்தேக் கொண்டு தனி வெளியில்,அமர்ந்து கொண்டு தன்னரசு செலுத்தும் ஈடு இணையற்ற தலைவன்தான்  ''அருட்பெருஞ்ஜோதி''யாகும்/

அவர என்ன  உருவத்தில் உள்ளார் !

இயற்கையிலே பாசங்கள் ஒன்றும் இலார் குணங்கள்
ஏதும் இலார் தத்துவங்கள் ஏதும் இலார்  மற்றோர்
செயற்கை இல்லார் பிறப்பு இறப்பு இல்லார் யாதும்
திரிபில்லார் களங்கம் இல்லார் தீமை ஒன்றும் இல்லார்
வியப்புறு வேண்டுதல் இல்லார் வேண்டாமை இல்லார்
மெய்யே மெய்யாகி எங்கும் விளங்கி இன்ப மயமாய்
உயத்தருமோர் சுத்த சிவானந்த சபைதனிலே
ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் !

ஒன்றும் மலார் இரண்டும் மலார் ஒன்றும் இரண்டுமானார்
உருவும் மலார் அருவுமலார் உரு அருவுமானார்
அன்றும் உளார்  இன்றும் உளார் என்றும் உளார் தமக்கோர்
ஆதியிலார் அந்தம் இலார் அருட்பெரும் ஜோதியினார்
என்று கனல் மதி அகத்தும்  புறத்தும் விளங்கிடுவார்
யாவும்இலார்  யாவும் உளார் யாவும் அலார் யாவும்
ஒன்றுறு தாமாகி நின்றார்  திருச் சிற்றம்பலத்தே -
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.

மேலே கண்ட பாடல்;-- வள்ளல்பெருமான் திருஅருட்பாவின்  ''பதி விளக்கம்'' என்ற தலைப்பில் 12,.13..வது பாடலில் பதிவு செய்துள்ளார்.

அருட்பெருஞ்ஜோதி என்னும் கடவுள் ;--உலகில் உள்ள சமய ,சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள்,மூர்த்திகள்,கடவுள்,தேவர் ,அடியார்,யோகி ,ஞானி, முதலானவர்களில் ஒருவர் அல்ல !

அப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும் ,எல்லாத் தலைவர்களும் ,எல்லா யோகிகளும்,எல்லா ஞானிகளும்,தாங்கள் தங்கள் அனுவங்களைக் குறித்து எதிர் பார்க்கின்றபடி எழுந்து அருளுகின்ற தனித் தலைமைப் பெரும் பதிதான்,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும்.

மேலும் சமய மதங்களில் சொல்லிய தெய்வங்களும் ,மற்றைய தத்துவ விக்கிரங்களும் உண்மையான தெய்வம் அல்ல ! .அதில் சொல்லிய மந்திரங்களும் உண்மையான மந்திரங்கள் அல்ல !  

உண்மையானது !

வள்ளல்பெருமான் காட்டிய அருட்பெருஞ்ஜோதிக் கடவுளே உண்மையானக் கடவுள் .

உண்மையான மந்திரம் ''அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ! என்னும் மந்திரம் ஒன்றுதான் உண்மையான மந்திரமாகும்..

இந்த உண்மையை உணர்ந்து கொண்டு .ஒவ்வொருவரும் பின்பற்றி வாழ்ந்தாலே எல்லா நன்மைகளும் ஆன்மாவையும் ,அவர்களது வீட்டையும் தேடிவரும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு