சனி, 11 ஜூலை, 2015

பேரின்ப வாழ்க்கை பேரின்ப லாபம் !

பேரின்ப வாழ்க்கை பேரின்ப லாபம் !

உலகத்தில் உயர்ந்த பிறப்பாகிய மனிதப் பிறப்பைக் பெற்றுக் கொண்டவர்கள் இந்த பிறப்பினால் அடையத் தக்க தலைப்பட்ட ஆன்ம இன்ப சுகத்தைக் காலம் உள்ள பொழுதே விரைந்து அறிந்து அடைய வேண்டும்.

ஒவ்வொரு மனித ஜீவர்களும் வாழ வேண்டிய வாழ்க்கை அடைய வேண்டிய ஆன்ம இன்ப லாபம் .மூன்று வகைப்படும் .

அந்தத் தலைப்பட்ட ஆன்ம இன்ப வாழ்வு எத்தனை வகை என்று அறியவேண்டில் ;--

1,இம்மை இன்ப வாழ்வு ....2,மறுமை இன்ப வாழ்வு ,,,3,பேரின்ப வாழ்வு என மூன்று வகை என்று அறிய வேண்டும்.

1,இன்மை இன்ப வாழ்வு ;--

அவற்றுள் சிறிய தேக கரணங்களைப் பெற்றுச் சிறிய முயற்சியால் சிறிய விடயங்களைச் சிலநாள் அனுபவிக்கின்ற இன்பத்தை இம்மை இன்ப வாழ்வு என்று அறிய வேண்டும்.

இம்மை இன்ப லாபம் என்பது ;--மனிதப் பிறப்பில் ,தேகத்திலும் ,கரணங்களிலும்  -புவனத்திலும்,போகங்களிலும் குறைவு இன்றி நல்ல அறிவு உடையவர்களாய் ,பசி,பிணி,கொலை,முதலிய தடைகள் இல்லாமல் ,உறவினர் சினேகர் ,அயலார்,முதலியவர்களும் தழுவ சந்ததி விளங்கத் தக்க சற்குணம் உள்ள மனைவியோடு ,விடயங்களைச் சில நாள் அனுபவிக்கின்றதை இம்மை இன்ப லாபம் என்றி அறிய வேண்டும்.

இம்மை இன்ப லாபத்தை அடைந்தவர் பெருமை எது ? என்று அறிய
வேண்டில் ;---

அன்பு ,தயவு,ஒழுக்கம்,அடக்கம்,பொறுமை,வாய்மை,தூய்மை முதலிய சுப குணங்களைப் பெற்று அனுபவித்துப் புகழ் பட வாழ்தல் என்று அறிய வேண்டும்.

2,மறுமை இன்ப வாழ்வு

மறுமை இன்ப வாழ்வாவது யாது ? எனில்

உயர் பிறப்பில் பெரிய தேக கரணங்களைப் பெற்றுப் பெரிய முயற்சியால் பெரிய விஷயங்களைப் பலநாள் அனுபவிக்கின்ற இன்பத்தை மறுமை இன்ப வாழ்வு என்று அறிய வேண்டும்.

மறுமை இன்ப லாபம் எது ? எனில் ;

உயர் பிறப்பைப் பெற்று இம்மை இன்ப லாபத்தில் குறிக்கப்பட்ட நற் குணங்கள் எல்லாம் பொருந்த உயர் நிலையில்  சுத்த விடயங்களைப் பல நாள் அனுபவிக்கின்ற இன்ப லாபத்தை மறுமை இன்ப லாபம் என்று அறிய வேண்டும்.

மறுமை இன்ப லாபத்தை அடைந்தவர் பெருமை யாது ? என்று அறிய வேண்டில் ;--

அன்பு, தயவு,முதலிய சுப குணங்களைப் பெற்றுச் சுத்த விடய இன்பங்களை எண்ணியபடி தடை படாமல் முயன்று பல நாள் அனுபவித்துப் புகழ் பட வாழ்தல் என்று அறிய வேண்டும்.

3,,பேரின்ப வாழ்வு ;--
பேரின்ப வாழ்வாவது ?;--

எல்லாத் தேகங்களையும்,எல்லாக் கரணங்களையும்,எல்லாப் புவனங்களையும்,எல்லாப் போகங்களையும்,தமது பூரண இயற்கை விளக்கமாகிய அருட் சத்தியின் சந்நிதி விசேடத்தால் தோன்றி விளக்கஞ் செய்கின்ற பூரண இயற்கை உண்மை வடிவினராகிய ,கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று ,எக்காலத்தும் ,எவ்விதத்தும் ,எவ்வளவும் தடைபடாமல் அனுபவிக்கப் படுகின்ற ஒப்பற்ற அந்தப் பெரிய இன்பத்தைப் பேரின்ப வாழ்வு என்று  அறிய வேண்டும்.

பேரின்ப லாபம் யாது ? எனில் ;--யாவும் தாமாய் விளங்குவதே .

பேரின்ப லாபத்தை அடைந்தவர் பெருமை எது ? என்று அறிய வேண்டில்.

தோல் .நரம்பு,என்பு,தசை,இரத்தம் ,சுக்கிலம்,முதலிய அசுத்த பூத காரியங்களும் அவற்றின் காரணங்களாகிய அசுத்த பிரகிருதி அணுக்களுமாகிய தேகத்தை ,மாற்றி ,மாற்று இவ்வளவு என்று அறியப்படாத உயர்ந்த பொன்னாகிய ,

சுத்த பூத காரிய சுத்த தேகத்தையும்,பொன் வடிவாகத் தோற்றுதல் மாத்திரமே யன்றி ஆகாயம் போல் பரிசிக்கப் படாத சுத்த பூத காரண பிரணவ தேகத்தையும்,தோன்றப் படுதலும் இன்றி ஆகாயம் போல் விளங்குகின்ற ஞான தேகத்தையும் .பெற்றவர்களாய் இருப்பார்கள்.

அதற்கு சுத்த பிரணவ ஞான தேகம் என்றும் ..ஒளி தேகம் என்றும்.....மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றும் ...முத்தேக சித்தி என்றும் ....பேரின்ப சித்தி பெருவாழ்வு என்றும் பல பெயர்களாகும்.

பேரின்ப லாபத்தை அடைந்தவர் வாழ்க்கை :--

அவரது உடம்பு ,;---மண்ணினது திண்மையால் உள்ளே தரிக்கப் படார்கள் .
புறத்தே ,மண்,கல்  முதலியவற்றால் எறியினும் ,அவை அவர் வடிவில் தாக்குவன அல்ல .உள்ளே நீரினது தன்மையால் குளிரப்படார்கள் , புறத்தே நீரில் அழுத்தினும் அவர் வடிவம் அழுந்தாது . உள்ளே நெருப்பினது வெம்மையால் சுடப்பட்டார்கள்.

புறத்தே நெருப்பிற் சுடினும் அவர் தேகத்தில் சூடும் வடுவும் தோன்றுவன அல்ல.உள்ளே ஆகாயத்தினது கலப்பினால் அந்தரிக்கப் படார்கள்.புறத்தே ஆகாயம் அவர் தேகத்தை அந்தரிக்க மாட்டாது .

ஆதாரத்திலன்றி நிராதாரத்திலும் அவர் தேகம் உலாவும்.அவரது கண்கள் முதலிய ஞானேந்திரியங்களும் ,வாக்கு  முதலிய கர்மேந்திரியங்களும் ,பார்த்தல் முதலிய விஷயங்களையும்,பேசுதல் முதலிய விஷயங்களையும் பற்றுவன அல்ல .

தயையினால் விஷயங்களைப் பற்ற வேண்டில் சுவர் ,மலை முதலிய  தடைகளும் ,அவர் கண்களை மறைப்பான அல்ல ,

அண்ட பிணடங்களில் அகம் புறம் முதலிய எவ்விடத்தும் உள்ள விடயங்களை அவர் கண்கள் இருந்த இடத்து இருந்தே கண்டு அறியும்.அண்ட பிண்டங்களில் எவ்விடத்து இருந்து பேசினும் அவர் செவிகள் இருந்த இடத்து இருந்தே கேட்டு அறியும்.

எவ்விடத்தில் இருக்கின்ற ரசங்களையும் அவர் நா,இருந்த இடத்திருந்தே சுவைத்து அறியும்.எவ்விடத்தில் இருக்கின்ற பரிசங்களையும் அவர் மெய் (உடம்பு ) இருந்த இடத்தில் இருந்தே பரிசித்து  அறியும்.எவ்விடத்தில் இருக்கின்ற சுகந்தங்களையும் அவர் நாசி (மூக்கு ) இருந்த இடத்தில் இருந்தே முகந்து அறியும்.

எவ்விடத்தில் இருக்கின்றவர் களுக்கும் அவரது கைகள் இருந்த இடத்தில் இருந்தே கொடுத்தல் கூடும் ...எவ்விடத்திலும் அவரது கால்கள் இருந்த இடத்தில் இருந்தே நடத்தல் கூடும் .அவரது வாக்கு ,எவ்விடத்தில் இருக்கின்ற எவ்வெவர் களோடும் இருந்த இடத்தில் இருந்தே பேசுதல் கூடும்.

மற்ற இந்திரியங்கள் ,இருந்த இடத்தில் இருந்தே எவ்விடத்தும் ஆனந்தத்தில் கூடும்.அவரது மனம்,முதலான கரணங்கள் எப்படிப்பட்ட விஷயங்களையும் பற்றுவன அல்ல .தயவினால் பற்றத் தொடங்கில் ,எல்லா உயிர்களினது எல்லாச் சங்கற்ப விகற்பங்களையும் ஒரு நிமிடத்தில் ஒருங்கே நினைத்து விசாரித்து  நிச்சயத்துக் கொள்ளும் .

அவர் அறிவு ஒன்றையும் சுட்டி அறியாது.தயவினால் சுட்டி அறியத் தொடங்கில் ,எல்லா அண்டங்களையும் ,எல்லா உயிர்களையும்,எல்லாப் பண்புகளையும்,ஒருங்கே ஒரு நிமிடத்தில் சுட்டி அறியும்.

அவர்கள் நிர்க்குணத்தரா ஆவார்கள் .அல்லது தாமச,இராசத,சாத்துவிக முதலிய முக்குணங்களாலும்,உள்ளே விகாரப் படார்கள்.புறத்தே அவரது குணங்கள் கரணங்களைப் பற்றுவன அல்ல ...உள்ளே பிரகிருதியினால் மூடப்படார்கள்.புறத்தே அவரது பிரகிருதி குணங்களைப் பற்றுவன அல்ல .

உள்ளே கால தத்துவத்தால் வேற்றுமைப் படார்கள். புறத்தே காலத்தால் அவரது திருமேனி தடைபடாது .உள்ளே நியதி அளவால் அளக்கப் படார்கள்.புறத்தே நியதியால் அவரது திருமேனி வரைபடாது ...

அன்றி காலம்,வித்தை,ராகம்,புருடன்,முதலிய மற்றைத் தத்துவங்களும் ,தத்துவ காரியங்களும் ,அவர்களுக்கு இல்லை.மாயையால் பேதப்படார்கள்.
சுத்த மகாமாயையைக் கடந்து  அதன் மேல் அறிவு உருவாக விளங்குவார்கள்.

ஆகாரம்,நித்திரை,மைத்துனம் ,பயம்,என்பவைகளால் தடைபடார்கள்.அவர்கள் தேகத்திற்குச் சாயை ,வியர்வை,அழுக்கு,நரை,திரை,மூப்பு ,இறப்பு,முதலிய குற்றங்கள் உண்டாவான அல்ல ...பணி,மழை,இடி,வெயில் ,முதலிய வற்றாலும் ,இராக்கதர்,அசுரர்,பூதம்,பிசாசு,முதலிய வற்றாலும்,

தேவர்,முனிவர்,மனிதர்,நரகர் ,மிருகம்,பறவை,ஊரவன் ,தாவரம்,என்பவைகளாலும், எவ்விடத்தும்,எக்காலத்தும்,அவர் தேகம் வாதிக்கப்படாது...வாள்,கத்தி,முதலிய கருவிகளாலும்,கண்டிக்கபடாது,

எல்லா அண்டங்களும்,அணுக்கள் போலச் சிறியதாகத் தோற்றாலும்,எல்லா அணுக்களும் அண்டங்கள் போலப் பெரியதாகத் தோற்றாலும்,அவர் தேகத்திற்கு உரியதாகும்.

மேலும் இறந்தோரை எழுப்புதல் ,வார்த்திபரை வாலிபர் ஆக்குதல்,முதலிய கரும சித்திகளும்,-யோக சித்திகளும்,--ஞான சித்திகளும், வர் சந்நிதியில் இடைவிடாது விளங்கும்.

சிருஷ்டித்தல் ,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அனுகிரகித்தல்,என்கிற கிருத்தியங்களும் ,அவர் நினைத்த மாத்திரத்தில் நடக்கும்.பஞ்ச கர்த்தாக்களும் அவர் கடைக்கண் பார்வையால் தங்கள் தங்கள் நடத்துவார்கள்.

அவர் அறிவு கடவுள் அறிவாக இருக்கும்.அவர்கள் செய்கை கடவுள் செய்கையாக இருக்கும்.அவர்கள் அனுபவம் கடவுள் அனுபவமாக இருக்கும்.

சர்வ சத்தி உடையவர்களாய் எக்காலத்தும் அழிவில்லாதவர்களாய் ,ஆணவம்,மாயை,கன்மம்,என்னும் மும்மலங்களும் அம்மல வாதனைகளும் இல்லாதவர்களாய் பேரருள் வண்ணம் உடையவர்களாய் விளங்குவார்கள்.

சாரமாகிய ஒரு துரும்பும் ,அவரது திருநோக்கத்தால் உயிர் பெற்றுப் பஞ்ச கிருத்தியங்களும் செய்யும்.அவரது பெருமை வேதாந்த ,சிந்தாந்த ,கலாந்த,போதாந்த ,நாதாந்த ,யோகாந்தம் என்கின்ற ஆறு அந்தங்களிலும் விளங்கும் .அவற்றைக் கடந்தும் விளங்கும் என்று அறிய வேண்டும்.

இவை பேரின்ப லாபத்தை அடைந்தவர் பெருமை என்று அறிய வேண்டும்.

இவை யாவும் பெற்றவர்தான் வள்ளல்பெருமான் என்பதை மனிதர்களாகிய நாம் புரிந்து அறிந்து கொள்ள வேண்டும்.      


 ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு