வியாழன், 2 ஜூலை, 2015

கடவுள் யார் ? அவரைக் காணமுடியுமா ?

கடவுள் யார் ? அவரைக் காணமுடியுமா ?

சாதாரணமாக கடவுளை யாரும் காணமுடியாது .

அழியும் பொருளைக் கொண்டு அழியாப் பொருளைக்  காணமுடியாது.

அழியும் பொருள் அனைத்தும் பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டது.

மனித உடம்பு சுத்த பூத காரியங்களால் உருவாக்கப்பட்டது .அதனால் மனித தேகத்திற்கு மட்டுமே அறிவு விளக்கம் விரிவு அடைந்து கொண்டே இருக்கின்றது.

நம் முன்னோர்கள் நமக்கு காட்டிய உருவ வழிப்பாட்டு கடவுள்கள் எல்லாம் ,உண்மையான கடவுள்கள் அல்ல .அவை எல்லாமே தத்துவங்கள் என்பதாகும்.தத்துவங்கள் என்பது ஜடங்கள்...தத்துவங்கள் எல்லாம் அழிந்து விடும் .அழியும் தத்துவங்களைக் கொண்டு அழியாமல் இருக்கும் கடவுளைக் காணமுடியாது.

உதாராணம் ;--நம் உடம்பில் ஆன்மா என்னும் ஒளி இருக்கின்றது .இந்த உடம்பை இயக்கி இயங்கிக் கொண்டு உள்ளது.ஆனால் அந்த ஆன்ம ஒளியை நம்மால் காணமுடிகிறதா ? ஏன் காணமுடியவில்லை .?

அழியும் உயிரையும் உடம்பையும் ,அதன் கருவிகளையும் கொண்டு அந்த ஆன்ம ஒளியைக் காணமுடியாது. அழியாமல் இருக்கும் உடம்பைக் கொண்டுதான் கடவுளைக் காணமுடியும்.

இதைத்தான் வள்ளலார் ;-

தன்னை அறிந்து இன்பம் முற வெண்ணிலாவே-ஒரு
தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே .

நாதர் முடி மேல் இருந்த வெண்ணிலாவே -அங்கே
நானும் வர வேண்டுகின்றேன் வெண்ணிலாவே .

சச்சிதானந்தக் கடலில் வெண்ணிலாவே -நானும்
தாழ்ந்து விழ வேண்டுகின்றேன் வெண்ணிலாவே

என்னும் பாடல்கள் வாயிலாக தன்னை அறியும் தந்திரத்தை தெரிவிக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகின்றார்.

ஊன உடம்பில் இருந்து கொண்டு ஆன்ம ஒளியைப் பார்க்க முடியாது,ஆண்டவரையும் பார்க்க முடியாது  என்பதை அறிந்து கொண்ட வள்ளல்பெருமான்.ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றும் வழியைக் கண்டு பிடித்து தன்னுடைய உடம்பை ஒளி உடம்பாக மாற்றிக் கொள்கின்றார்.

ஒளி உடம்பாக மாற்றுவதற்கு என்ன தேவை ?

ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றும் ஆற்றல் அருளுக்கு மட்டுமே உண்டு .
என்பதைக் கண்டு பிடித்து .அருளைப் பெருகின்றார் .

வள்ளலார் பதிவு செய்துள்ள அகவல் ;-

அருள் அறிவு ஒன்றே அறிவு மற்று எல்லாம்
மருள் அறிவு என்றே வகுத்த மெய்ச்சுகமே

அருள் சுகம் ஒன்றே அரும் பெறல் பெருஞ் சுகம்
மருட் சுகம் பிற என வகுத்த மெய்ச்சுகமே .

அருட் பேறதுவே அரும் பெறற்  பெரும் பேர்
இருட் பேறருக்கும் என இயம்பிய சிவமே .

அருட் தனி வல்லபம் அதுவே எலாம் செய்
பொருட் தனிச் சித்தெனப் புகன்ற மெய்ச்சுகமே .

அருள் அறியார் தமை அறியார் எம்மையும்
பொருள் அறியார் எனப் புகன்ற மெய்ச்சிவமே .

அருள் நிலை ஒன்றே அனைத்தும் பெரும் நிலை
பொருள் நிலை காண்க எனப் புகன்ற மெய்சிவமே .

என்னும் அருள் நிலையைப் பெற்று தன்னுடைய ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றி ,அழியாத தேகம் பெற்று இறைவனைக் கண்டார் .

அழியாத தேகம் பெற்றவர்களால் மட்டுமே இறைவனைக் காணமுடியும்.என்பதை தெளிவாக விளக்கி உள்ளார் .

ஊன் உடம்பே ஒளி உடம்பாய் ஓங்கி நிற்க
ஞான அமுதம் எனக்கே நல்கியதே -வானப்
பொருட் பெருஞ்ஜோதிப் பொதுவில் விளங்கும்
அருட்பெருஞ் ஜோதி அது !

என்றும் .
துன்பம் கெடுத்துச் சுகம் கொடுத்தான் என்தனக்கே
அன்பகத்தில் வாழுஞ் சிற்றம்பலத்தான் --இன்புருவம்
தாங்கினேன் சாகாத் தனிவடிவம் பெற்று ஒளியால்
ஓங்கினேன் உண்மை உரை !

என்னும் பாடல்களின் வாயிலாக ஊன உடம்பை மாற்றிக் கொண்டு இறைவனைக் கண்டேன் .அந்த உண்மையான இறைவன்தான் .''அருட்பெருஞ்ஜோதி '' ஆண்டவர் என்பதை மக்களுக்கு காட்டி உள்ளார் .

எனவே அழியும் பொருளான உடம்பில் இருந்து கொண்டு உண்மையான இறைவனைக் காண முடியாது .அழியும் உடம்பை அழிக்காமல், அழியாமல் மாற்றும் வகையை அறிந்து, அருளைக் கொண்டு மாற்றி ஆண்டவரைக் கண்டேன்.

அசுத்த தேகத்தை ,சுத்த தேகமாக மாற்றுவதே ,அழியாத தேகமாகும்.
அதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்.அதுவே பேரின்ப வாழ்க்கையாகும்..அதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.

சுத்த வடிவுஞ் சுகவடிவாம் ஓங்கார
நித்த வடிவு நிறைந்தோங்கு --சித்தெனுமோர்
ஞான வடிவும் இங்கே நான் பெற்றேன் எங்கும் -
தான விளையாட்டு இயற்றத் தான் .

சுத்த வடிவமான ஓங்கார ஒளி வடிவம் பெற்று ,நீங்களும் என்னைப்போல் வாழ்ந்து ஆண்டவரைக் காணலாம் என்கின்றார் வள்ளல்பெருமான் .

ஆன்மநேயன்.ஈரோடு கதிர்வேல்.
0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு