செவ்வாய், 30 ஜூன், 2015

ஆன்மாவின் விடுதலை !

ஆன்மாவின் வாழ்க்கை !

நாம் யார் ?  என்பது ;;--உடம்பா ? உயிரா ? ஆணா ? பெண்ணா ? அலியா ? என்றால் .எதுவும் நான் என்பது இல்லை .

நான் யார் ? என்பது ஆன்மா என்னும் ஒளியைக் குறிப்பதாகும்.

நான் யார் ? நாம் யார் ? என்று தெரியாமலே நாம் வாழ்ந்து கொண்டு வருகின்றோம்.

நாம் யார் ? நம்மை படைத்தது யார் ? ,நம்மை அனுப்பியவர் யார் ? நமக்கு உண்மையான தந்தை யார் ? தாயார் யார் ? என்பது தெரியாமலே வாழ்ந்து கொண்டு வருகின்றோம்.

உண்மையான தந்தை , தாயை அறியாத ஆதரவு அற்ற அனாதி களாய் அலைந்து கொண்டுள்ளோம் .

உலகியல் தாய் .தந்தை என்பது !

உலகியல் தாய் தந்தையர் என்பது ! ஆன்மா இந்த உலகில் வந்து வாழ்வதற்கு உயிரையும் உடம்பையும் சுமந்த,ஆண் பெண் என்னும் உபகாரக் கருவிகளாகும் . ஆதலால் அவர்கள் உண்மையான தாய் .தந்தையர்கள் அல்ல என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் .

நாம் மரணம் அடைகின்ற போது நம்மைவிட்டு பிரியாமல் இருக்கின்றது எதுவோ ? அதுவே உண்மையான தாய் ,தந்தையர் என்பதாகும்.

உண்மையான தாய் ,தந்தை !

தாயாகி தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னை நிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்.
வாயார வாழ்த்துகின்றோர் மனத்து அமர்ந்த தெய்வம்
மலர் அடி என் சென்னி மிசை வைத்த பெருந் தெய்வம்
காயாது கனியாகிக் கலந்து இனிக்கும் தெய்வம்
கருணை நிதித் தெய்வம் முற்றுங்  காட்டுவிக்கும் தெய்வம்
சேயாக எனை வளர்க்கும் தெய்வம் மகா தெய்வம்
சிற்சபையில் ஆடுகின்ற தெய்வம் அதே தெய்வம் .

என ,தாய் தந்தை யார் ? என்பதையும். அவர் தான் உண்மையான தாய் தந்தை என்றும்.அவர்தான் கருணை உள்ள தெய்வம் என்பதையும் .அவர் என்றும் அழியாமல் நிலைத்து  ஆன்மாவைப் பாதுகாத்து இயக்கிக் கொண்டு  உள்ளார் என்பதையும்.அவர் எல்லா ஆன்மாக்களிலும் சிற்சபை என்னும் இடத்தில்,(அதாவது சிரசின் நடுவில்)  அமர்ந்து உள் ஒளியாய் இடைவிடாது,இயங்கிக் கொண்டு உள்ளார் என்பதையும் வள்ளல்பெருமான் தெளிவாக விளக்கி உள்ளார்.

அந்த உண்மையான தெய்வத்தை எப்படி அறிந்து கொள்வது.

நம்முள் இருக்கும் அந்த ஆன்ம ஒளியை நம்மால் பார்க்க முடியாமல் இருக்கின்றோம்.இதுதான் கொடுமையிலும் கொடுமையாகும்.அந்த ஆன்ம ஒளியை யார் பார்க்கின்றார்களோ ! அவர்களே கடவுளைக் காண முடியும்..அவர்களே கடவுளைக் கண்டவர்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நம்முள் இருக்கும் கடவுளைக் காண முடியாமல் அறியாமை என்னும் .மாயாத் திரைகள் ஏழு வண்ணங்களாக மறைத்துக் கொண்டு உள்ளது.அந்த திரைகள் நீங்கினால் தான் , நாம் உண்மையான தாய் தந்தையர் யார் ? என்பதை அறிந்து கொள்ள முடியும்.

அந்த திரைகளை நீக்குவது எப்படி ?

ஆன்மா என்பது எது ? அது இந்த உலகத்தில் எதற்காக வந்தது ? ஆன்மாவிற்கு உடம்பும், உயிரும் கொடுத்தது யார் ?  இந்த உலகத்திற்கு வாழ  வந்த ஆன்மாவை, ஏன் ? திரைகள் மறைக்க வேண்டும்..
திரைகள் என்றால் என்ன ? என்பதை அறிந்து கொண்டால் .அந்த திரைகளை ஏன் நீக்க வேண்டும் ,என்பதையும் தெரிந்து கொள்ளலாம் .

சமய மத வாதிகள் !

இதுவரையில் நாம் நாமும் பார்த்தும் ,கேட்டும் லஷியம் வைத்துக் கொண்டு இருந்த வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம் முதலிய கலைகள் யாவும் பொய்யான தத்துவக் கருத்துகளையே விதைத்து உள்ளன .

அதில் தெய்வத்தின் உண்மை இன்னபடி என்றும்,தெய்வத்தின் உடைய உண்மை இன்னதென்றும் கொஞ்ச மேனும் புறங்கவியைச் சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள் .

ஆன்மாவைப் பற்றியும் ,உண்மையான ஆண்டவரைப் பற்றியும், அதன் உண்மையை அறிந்து கொள்ள வழி தெரியாமல் ,சமய  மத  வாதிகள் பல குறுக்கு வழிகளை எல்லாம் மக்களுக்கு  காட்டி உள்ளார்கள் .கற்பனையான கதைகளையும்,கற்பனையான  தெய்வங்களையும்,  இடம் ,வாகனம், ஆயுதம்,வடிவம்  ரூபம் முதலியவையும் ஒரு மனுஷனுக்கு அமைப்பது போல் அமைத்து உண்மையாக இருப்பதாகவேச் சொல்லி இருக்கின்றார்கள் .


தெய்வத்துக்குக் கை ,கால்,முதலியன இருக்குமா ? என்று கேட்கும்,அறிவியல்,வேதியல் போன்ற அணு  ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்கும் , பகுத்தறிவாளிகளுக்கும் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள் .இது உண்மையாக இருப்பது போலவே ,முன்னும் ,பின்னும் உள்ள  பெரியவர்கள் என்று பெயர் இட்டுக் கொண்டு இருந்தவர்களும் .கடவுளின் உண்மையையும்,ஆன்மாவின் உண்மைத் தன்மையும்  ,உயிரின் தோற்றத் தன்மையும்,உடம்பை உருவாக்கும் அணுக்களின் சேர்க்கைத் தன்மையும்,உடம்பின் உள்ளே செயல்படும் செயற்கைக் கருவிகளின் தன்மையும், அறியாது ,அப்படியே கண்ணை மூடிக் கொண்டு கண்டதை உளறி இருக்கின்றார்கள்.

ஆனால் ஆதியிலே இதை மறைத்தவன் ''ஓர் வல்லவன்'' .அவன்தான் .''வேத வியாசர்'' .என்னும் அருளாளன்.அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் உண்மையை கண்ட பாடில்லை.

அவன் மறைத்து பூட்டிய அந்த பூட்டை ஒருவரும் திறக்க வரவில்லை.இது வரைக்கும் அப்படிப் பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை .

அந்த பூட்டை உடைத்து எரிந்தவர்தான் நமது வள்ளல்பெருமான்.

ஆன்மாவும் உடம்பும் உயிரும் !

ஆன்மா ,உயிர்,உடம்பு வந்த வழியைத் தெரிந்து கொண்டால் மட்டுமே நாம் யார் ? என்ற உயரிய உண்மையை அறிந்து கொள்ள முடியும்..

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;--

உடம்பு வரு வகை அறியீர் உயிர் வகையை அறியீர்
உடல் பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறிவீர்
மடம் புகு பேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை
வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழி துறை கற்று அறியீர்
இடம் பெரும் பொய் வாழ்க்கையிலே இன்பம் துன்பம் அடுத்தே
எண்ணி எண்ணி இளைக்கின்றீர் ஏழை உலகீரே
நடம் புரி என் தனித்தந்தை வருகின்ற தருணம்
நண்ணியது நன்னுமினோ புண்ணியம் சார்வீரே !

என்னும் பாடல் வாயிலாக தெளிவுப் படுத்தி உள்ளார் /

உடம்பு வந்த வழியும்,உயிர் வந்த வழியும் தெரியாமல் ,தினமும் உண்டு உறங்கி வாழ்ந்து அழிந்து கொண்டு உள்ளீர்கள்.என்கின்றார்.

அறிவில்லாத குரங்கு மனம் போல மயங்கிக் ,கண்டதை எல்லாம் பிடித்துக் கொண்டு தாவி தாவி  அலைந்து கொண்டு உள்ளீர்கள் .குரங்குபோன்ற மனத்தை அடக்கத் தெரியாமல்,,பொய்யான வாழ்க்கையில் இன்பமும்,துன்பமும்,மாறி ,மாறி அடுத்தே எண்ணி எண்ணி இளைத்து இறுதியில் மரணம் வந்து விடுகின்றது .

மரணம் வருகின்றவர்கள் அனைவரும் இறைவன் அருளைப் பெற முடியாத ஏழைகளாகவே இருக்கின்றீர்கள் .

ஆண்டவர் அருளை தருவதற்கு வருகின்றார்.நீங்களும் என்னைப் போன்று அருளைப் பெற்றுக் கொண்டு மரணத்தை வெல்லலாம்..நான் சொல்லியபடி ,கேட்டு வாழ்ந்து புண்ணியத்தை அடையலாம் வாருங்கள் என ,ஆன்மநேய  ஒருமை என்னும் உரிமையுடன் அழைக்கின்றார்.

வள்ளல்பெருமானிடம் நெருங்கி பழகி உள்ளவர்கள் எவரும் அப்போது வள்ளல்பெருமான் சொல்லிய சுத்த சன்மார்க்கக்  கொளகைகளைப் புரிந்து அறிந்து தெரிந்து பின்  பற்றவில்லை.

இப்போது உள்ள மக்கள் வள்ளல்பெருமான் காட்டிய  சுத்த சன்மார்க்க கொளகைகளை  ஊன்றிக் கேட்டுத் தெளிவு பெறுகின்றார்கள்.அதை நினைக்கின்ற பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது .

இன்னும் நம் உள் இருந்து இயங்கிக் கொண்டுள்ள,ஆன்மாவையும் அதனுடைய  உண்மையான தந்தையையும் ,தாயையும் நாம் கண்டு கொள்வதே இல்லை.அதைப் பற்றி தெரிந்து கொள்வதும் இல்லை

ஆன்மா அதன் வாழ்க்கை !

பல கோடி அண்டங்களை தன்னுடைய  அருள் ஆற்றலால் ,அருள் வல்லபத்தால் இயக்கிக் கொண்டு உள்ளவர் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் என்னும் உண்மையை முன்பே பார்த்தோம் .அதுவே அருள் நிறைந்த பேரோளியாகும்.

அந்த அருட் பேரொளி இருக்கும் இடம், அருட் பெருவெளியின் மத்தியில் ''ஞான சிங்காதன பீடம்'' என்னும் இடத்தில் அருள் ஆட்சி புரிந்து கொண்டு உள்ளது.அந்த பெருவெளியின் தோற்றம் அருள் அணுக்கள் நிறைந்த அருள் சமூகம் என்பதாகும்.

அந்த சமூகத்தின்  உள்ளே ஒரு தனி சமூகம் உள்ளது   அங்கு ஆன்மாக்கள் நீக்கமற நிறைந்து இருக்கின்றது .அதுவும் அனாதியாய் இருக்கின்றது,அதற்கும் கடவுள் சமூகம் என்று பெயர் .

அங்குள்ள அருட்பேரொளி என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இருக்கும் சமூகத்தில் அணுக்கள் சந்தானமயமாய் நிரம்பி இருக்கின்றன அந்த அணுக்களுக்கு ஆன்மா என்றே பெயர்.

அந்த ஆன்ம ஆகாயமான கடவுள் சமூகததில் ஆன்மாக்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளன்.அவற்றிற்கு பக்குவ ஆன்மா ..அபக்குவ ஆன்மா ..பக்குவா பக்குவ ஆன்மா என மூவகைப்படும்.

அறிவு தெளிவாக உள்ளது ...அறிவும் அறிவு குறைந்தும் உள்ளது ...அறிவே இல்லாதது .என மூன்று வகையான ஆன்மாக்கள் உள்ளன.

அப்படி முன்று வகையான ஆன்மாக்களுக்கு அருட் சக்தியின் சமூகத்தில் தோன்றிய இச்சை,ஞானம்,கிரியை .என்னும் பேதத்தால் ஆன்மாக்களுக்குத் தேகம் முன்று உள்ளன.

அவை யாதெனில் ;--கர்ம தேகம் .பிரணவ தேகம்,ஞான தேகம்.என மூன்று வகைப்படும்

அங்கு உள்ள மூன்று தேகம் கொண்ட ஆன்மாக்களுக்கும்  அங்குள்ள கடவுள் யார் என்பது தெரியாது...இதுதான் ரகசியம் .

ஆன்மாக்கள் இவ்வுலகிற்கு வரும் விதம் ;--

ஒரு காலத்தில் கடவுள் சமூகததில் அதாவது அருட் பெருவெளியில் அருட் சக்தி ( ஆற்றல் ) ஆன்மா ஆகாயத்தில் விசிரிம்பிக்க ( அசைவு உண்டாக  ) ,ஆன்மாக்கள் அங்கு இருந்து பஞ்ச பூத உலகத்திற்கு அனுப்பி வைக்கப் படுகின்றது.

அதே நேரத்தில் அருட்பெரு வெளி சந்தானமானதால் ஆன்மாக்கள் குறைவதின்றி எப்போதும் நிரம்பி கொண்டே இருக்கும்.ஆன்மாக்கள் எப்போதும் குறைவின்றி நிறைந்துகொண்டே இருக்கும்.என்பது ஆண்டவரின் நியதியாகும்.

ஆணவம் !

ஆன்மாக்கள் இங்கு வரும்போது,அங்கேயே  இயற்கை என்னும் ''ஆணவம்'' ஆன்மாவின் பாது காப்பிற்காக ஆன்மாவின் உடன் இணைத்து அனுப்பப் படுகின்றது.

ஆதலால் தான் ஆணவம் இயற்கை என்று சொல்லப்படுகின்றது. ஆன்மாக்களின் உடன் பிரியாமல் இருப்பதால் ஆன்மாவிற்கு முதல் மனைவி ஆணவம் என்பதாகும்..

இந்த உலகத்திற்கு வந்த பிறகு அதற்கு என்ன என்ன வசதிகள்,செய்து கொடுப்பப் படுகின்றது என்பதைப் பார்ப்போம்/

ஆன்மாவின் குடும்பம்.!

ஆன்மாவிற்கு 3,முன்று மனைவிகள் . 8,எட்டு பிள்ளைகள்

ஆன்மாவின் முதல் மனைவி ;-- ஆணவம்

முதல் மனைவி ஆணவத்திற்கு பிறந்த  பிள்ளை ;--அஞ்ஞானம்.என்னும் உயிர் .

ஆன்மாவின் இரண்டாவது மனைவி ;-- மாயை .

இரண்டாவது மனைவி மாயையின் பிள்ளைகள் .;--மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் எனும் நான்கு பிள்ளைகள் .

ஆன்மாவின் மூன்றாவது மனைவி ;- காமியம் ( கன்மம்,)

மூன்றாவது மனைவியின் குழந்தைகள் ;--முக்குணங்கள் ஆகிய சத்துவ குணம்,..இராஜசகுணம்,..தாமசகுணம்..எனும் முன்று பிள்ளைகள் .

ஆன்மாவின் வாடகை வீடு ;--

மேலே கண்ட ஆன்மா இங்கு வந்து வாழ்வதற்கு அதாவது குடியிருப்பதற்கு  .இவ்வுலகில் மாயை,மாமாயை ,பெருமாயை என்னும் மூன்று சக்திகளால்  கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுதான் உடம்பு என்பதாகும்.அவை
ஒரு வாடகை வீடாகும்.( தேகம் )

அந்த வாடகை வீட்டிற்கு தினமும் வாடகை கொடுக்க வேண்டும்.

அந்த வாடகை வீட்டில் பசி என்னும் ஓர் உபகாரக் கருவியைப் பொருத்தி வைக்கப் பட்டு இருக்கின்றன.பசிக்கு உணவு கொடுப்பதுதான் வாடகை என்பதாகும்.

வாதம் பித்தம் சிலோத்துமம்

வாடகை வீட்டின் வாடகையை வசூலிக்கும் தலைவர்கள் முன்று பேர் உள்ளனர் ;--அவர்கள் வாதம்  ,பித்தம் ,சிலோத்துமம்  என்னும் தலைவர்கள் .

இவ்வுலகில் வாழ்வதற்கு பிண்டம் (உணவு ) என்னும் பெருங் குடிக்கூலி என்னும் வாடகை தினமும் கொடுக்க வேண்டும் கொடுக்கவில்லை என்றாலும் நின்று வாங்கிக் கொண்டுதான் செல்வார்கள்.

தெரியாமல் ஒருநாள் கொடுக்கா விட்டாலும்.அவர்கள் கொடுக்கும் தொல்லைகள் .என்ன ? என்பதை வள்ளல்பெருமான் ''குடும்ப கோரம் ''என்னும் நித்திய கருமம் என்னும் தலைப்பில் பதிவு செய்துள்ளார் .

பிண்டம் என்னும் பெருங் குடிக் கூலி
அன்றைக் அன்றே நின்று வாங்குவர்
தெரியாது ஒருநாள் செலுத்தா விட்டால்

உதரத்துள்ளே உறுங் கனல் எழுப்பி
உள்ளும் புறத்தும்.எண்னெரி ஊட்டி
அருநோய் பற்பல அடிக்கடி செய்வர்

இவர் கொடுஞ் செய்கை எண்ணும் தோறும்
பகீர் என உள்ளம் பதைத்துக் கொதித்து
வெதும்பும் என்னில் விளம்புவது என்னே

சினமிகும் இவர் தம் செய்கைகள் கனவினும்
நினைந்து விழித்து நேர்வதன் முன்னர் .

பசியைப் போக்கவே நேரம் இல்லாத போது ,இவ்வுலகில் உள்ள
உண்மை தெரியாத உலக சமய மதவாதிகள் வருகை !;-----

மற்போர் கருதி வந்தவர் போல
ஓதும் வேதாந்தம் உரைப்பர் சிலபேர்

வாட்போருக்கு வந்தவர் போல
வயங்கு சித்தாந்தம் வழங்குவர் சிலபேர்
தண்டாயுதப் போர் தாங்குவர் போல
இதிகாசத்தை இசைப்பவர் சிலபேர்
உலக்கைப் போரை உற்றார் போல

இலக்கண நூலை இயம்புவர் சிலபேர்
கற்போர் விளக்கக் காட்டுவார் போலச்
சமய நூல்களைச் சாற்றுவர் சிலபேர்
வாய்ப்போருக்கு வந்தவர் போல
விவகாரங்கள் விளம்புவர் சிலபேர்

மடிபிடி போருக்கு வாய்ந்தவர் போல
மத தூஷனைகள் வழங்குவர் சிலபேர்
கட்குடியர் வந்து கலக்குதல் போலக்
காம நூலைக் கழறுவர் சிலபேர்
விழற்கு நீரை விடுவார் போல

வீண் கதை பேச விழைவார் சிலபேர்

இவர்கள் முன்னே இவர்களுக்கு ஏற்ப
குரல் கம்மிடவும் குறு நா உலரவும்
அழலை யெழவும்  அவரவர் தம்பால்
சமயோ சிதமாய்ச் சந்ததம் பேசி
இயன்ற மட்டில் ஈடு தந்து அயர்வேன்.

சமய மத வாதிகள் வந்து அவரவர்களுக்குத் தெரிந்த கற்பனைக் கதைகளையும்,கற்பனைத் தெய்வங்களையும் பற்றி சொல்ல வொண்ணா சொற்களால் சொல்லித் துன்பம் விளைவிக்கின்றார்கள் ,அவரவர்களுக்கு தகுந்த மாதிரி ,விருப்பு ,வெறுப்பு இல்லாமல் சொல்லி அவர்கள் இடம் இருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ள இயன்ற மட்டில் ஈடு தந்து காப்பாற்றிக் கொள்வேன் என்கின்றார்.

அடுத்து எனது நித்திய கருமம் என்ன என்பதை பதிவு செய்துள்ளார் ;--

பின்னர் மனையின் பின் புறத்தேகிக்
கலக்கும் மலத்தைக் கடிதே கழித்துக்
கல்லில் அழுக்கைக் கழற்றுதல் போன்று
பல்லின் அழுக்கைப் பண்பின் மாற்றிச்

சோமனைப் போல வெண் சோமனைத் துவைத்து
நன்னீர் ஆடி நறுமலர் கொய்து
தேவருக்கு ஏற்ற திரவியம் கூட்டிப்
பாவையை வைத்துப் பாடி யாடும்
சிறாரைப் போலச் செய்பணி யாற்றி

மண்ணின் சுவருக்கு வண்ணம் தீட்டல்போல்
வெண்ணீர் (விபூதி) அதனை விளங்கப் பூசி
புகழ் ருத்தராஷைப் பூனை என்ன
உற்ற செபவடம் உருட்டி உருட்டிக்
குரண்டகம் போன்று குறித்த யோகம்

செய்த பின்னர் சிறிது நேரம்
அருத்தியிற் பூசனை அமர்ந்து அங்கு ஆற்றி
ஊன் பிண்டத்திற் உறு பிண்டம் மீந்து
குடிக் கூலிக் கடன் குறையறத் தீர்த்துப்
பகல் வேடத்தால் பலரை விரட்டி

நித்திரைப் பரத்தையை நேர்ந்து கூடவும்
பொழுதும் சரியாய்ப் போகின்றது அதுவே !

என்று நிறைவு செய்கின்றார் .

ஆன்மாவின் சொந்த வீடு !

உயர்ந்த அறிவுள்ள ஒவ்வொரு மனிதர்களும் மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்ட தன்னுடைய வாடகை வீட்டை ,ஆதாவது ஊன் உடம்பையும்,உயிரையும் அழிக்காமல், அதாவது மரணம் வராமல் அருள் ஒளியாக உயிரையும்,உடம்பையும்,மாற்ற வேண்டும்

அதற்கு ''ஆன்ம தேகம்'' என்று பெயர் .ஆன்ம தேகம் என்னும் ஒளி உடம்பைப் பெற்றால் மட்டுமே பிறப்பு இறப்பு இல்லாமல் ஆன்மா விடுதலைப் பெரும்.

ஆன்மா சொந்த வீடு கட்டிக் கொண்டு வாழத் தெரியாமல், இப்படியே வாடகை வீட்டில் குடியிருந்து மாண்டு போக வேண்டியதுதான் ..

ஆன்மா எப்போது சொந்த வீடான ஆன்ம தேகம் என்னும் ஒளி உடம்பை பெற்றுக் கொள்கின்றதோ அப்போது .மரணமும் இல்லை ,மறு பிறப்பும் இல்லை.அதன்பின் ஆன்மா விடுதலைப் பெற்று, எங்கு இருந்து வந்ததோ அங்கு சென்று பேரின்பம் அனுபவிக்கும்.

சொந்த வீடு கட்டிக் கொண்டு வாழ்வது எப்படி என்பதைத்தான் ,வள்ளல்பெருமான் ''சுத்த சன்மார்க்கம்'' என்ற மார்க்கத்தின் வாயிலாக மக்களுக்கு போதித்து ,தானும் வாழ்ந்து காட்டியுள்ளார் .

சுத்த சன்மார்க்கத்தை பின் பற்றும் அன்பர்கள் சொந்த வீடும் என்னும் ஒளி உடம்பை பெற்று மரணத்தை வெல்லுவோம்.

எட்டும் இரண்டும் !

கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர்
கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர்
பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில்
பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரீர்
கொட்டோடே முழக்கோடே கோலங் காண் கின்றீர்
குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர்
எட்டோடே இரண்டு சேர்த்து எண்ணவும் அறியீர்
எத்துணைக் கொள்கின்றீர் பித்துல கீரே !

எட்டு என்பது மேலே சொன்ன மூன்று மனைவிகளுக்கு பிறந்த எட்டுக் பிள்ளைளாகும் .

அதாவது.;--அஞ்ஞானம் என்னும் உயிர்,..மனம் புத்தி ,சித்தம்,அகங்காரம்,..சத்துவகுணம்,இராஜசகுணம்..தாமச குணம் ..என்னும் எட்டு செயல்பாட்டுக் கருவிகளையும்..

ஆன்மா .பரமான்மா என்னும் இரண்டோடு சேர்த்தால் .எட்டும் இரண்டும்.ஒன்றாக மாற்றிவிட முடியும் .

பத்தும் ஒன்றாக பற்றுகின்ற பொது .இறுதியில் ஒன்றாக மாறிவிடும்..

நாம் முதலில் அறிந்து கொள்வது !

எட்டும் இரண்டும் என்ன ?  என்பதை அறிந்து கொள்வதுதான். உடம்பு வந்த வழியும் .உயிர் வந்த வழியும் தெரிந்து கொள்வதாகும்.அந்த உண்மையைத் தெரிந்து கொண்டால்  மரணத்தை வெல்லும்,இலகுவான வழியை தெரிந்து கொள்ளலாம்.

இதைத்தான் வள்ளல்பெருமான் ,அருட்பெருஞ்ஜோதி அகவலிலும்.தெரியப்படுத்தி உள்ளார்.

எட்டு இரண்டு என்பன இயலும் முற்படி என
அட்ட நின்று அருளிய அருட்பெருஞ்ஜோதி.!
இப்படி கண்டனை இனியுறு படி யெலாம்
அப்படியே  எனும் அருட்பெருஞ்ஜோதி !
படிமுடி கடந்தனை பாரிது பாரென
அடிமுடி காட்டிய அருட்பெருஞ்ஜோதி

எட்டு என்பது, எது என்பதையும் இரண்டு என்பது , எது என்பதையும் தெரிந்து கொள்வதே சுத்த சன்மார்க்கத்தின் முதற்படியாகும்

எட்டு என்ற உடம்பை தெரிந்து கொண்டால்.அதை மாற்றும் வழியும் தெரிந்து கொள்ளலாம் .

வாடகை வீடு என்பது பொருள் உடம்பாகும் .
சொந்த வீடு என்பது அருள் உடம்பாகும்.

ஆன்மா சொந்த வீடு கட்டிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்.!


ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்  

2 கருத்துகள்:

25 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 2:46 க்கு, Blogger Badhey Venkatesh கூறியது…

Sir
no practical approach or process to third eye opening , entering into thiruchirrambalam , attain triple deathless bodies and life etc

pl visit 1008petallotus.wordpress.com which has process mapping for the above

BG Venkatesh

CBE

 
31 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 4:01 க்கு, Blogger Badhey Venkatesh கூறியது…

எட்டு என்பது மேலே சொன்ன மூன்று மனைவிகளுக்கு பிறந்த எட்டுக் பிள்ளைளாகும் .

ஆன்மா .பரமான்மா என்னும் இரண்டோடு சேர்த்தால் .எட்டும் இரண்டும்.ஒன்றாக மாற்றிவிட முடியும் .

what a misleading explanation , misleading explanation
Pl go thru my article - Jeevakaarunyam and triple deathless bodies - u will know what is 8 * 2 and how to conjunct them to form great TEN 10 and attain deathless bodies

It seems you dont read beyonf thiruvarutpaa - thats why these kind of misleading articles in yr blog - very sorry state of affairs

BG Venkatesh
1008petallotus.wordpress.com

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு