வியாழன், 21 மே, 2015

நாம் உண்ணும் உணவினால் மரணம் வருகின்றது !.

நாம் உண்ணும் உணவினால் மரணம் வருகின்றது.!

இந்த உலகில் மனிதன் உயிர் வாழ்வதற்கு, இரண்டு வகையான உணவு முறைகளை எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால்  படைக்கப் பட்டு உள்ளது.

ஒன்று ;--பொருள் உணவு ....மற்றொன்று அருள் உணவு,!

பொருள் உணவு ;---

பொருள் உணவில் ஆயிரக்கணக்கான வகைகள் உள்ளன .அந்த உணவு வகைகளில் நமது ,அருளாளர்கள்,சித்தர்கள் ,மற்றும் முன்னோர்கள் முன்று வகைகளாக பிரித்து வைத்துள்ளார்கள்.

ஒன்று சாத்வீக உணவு,..மற்றொன்று இராஜச உணவு, ..வேறு ஒன்று தாமச உணவு என மூன்று வகைகளாக பிரித்து வைத்துள்ளார்கள் .

சாத்வீக உணவு என்பது ;--இயற்கையாகிய தாவரங்களில் கிடைக்கும்,அரும்பு பூ.... இலை,,..காய் ,..கனி,பழங்கள் போன்ற அவிக்காத பொருள்களை  உண்பதாகும்,இவை சாத்வீக உணவு என்பதாகும்,

இராஜச உணவு,;--

இராஜச உணவு என்பது ;---கேழ்வரகு,கோதுமை,அவல் ,அரிசி கேழ்வரகு,,பாசிப்பயிறு,வேர்கடலை,காய் வகைகள் கீரைவகைகள் ,கிழங்கு வகைகள்  போன்ற அவித்த அதாவது வேக வைத்த உண்ணும்  உணவு வகைகளாகும்

மற்றும் தேங்காய்,..பாதாம் பருப்பு,..பனை நுங்கு,..பப்பாளிப் பழம் ,பேரிக்காய்,..வால்பேரி,..வாழைப்பழம் ,ஆல்ப கோடா ,அண்ணாச்சி பழம் ,தக்காளிப் பழம்,..சப்போட்டா பழம்,..தர் பூசணிப்பழம்,..ஆரஞ்சி பழம்,..நாரத்தம் பழம்,.பனம்பழம்,  பச்சைக் கொடி,   முந்திரிப்பழம்,  கறுப்புத் திராட்சிப் பழம்,  கடாங்காய் பழம் ,கொடுக்காப்புளிப் பழம்,  மாம்பழம்,  மாதுளம் பழம்,பப்ளிமாஸ் ,  பலாப்பழம்,  நாவல் பழம்,  அத்திப்பழம்,  பேரிச்சம் பழம்,வாழைப்பழம் .போன்ற பழ வகைகள் ..

மற்றும் உருளைக் கிழங்கு,சர்க்கரை வள்ளிக் கிழங்கு,சேனைக் கிழங்கு,வாழைக்காய்,பரங்கிக் காய்,நெல்லிக் காய் ,முருங்கைக்காய் ,அவரைக்காய்,கொத்தவரைங்காய்,வெள்ளிரிக்காய் ,பீர்க்கங்காய் ,கொவ்வைக் காய்,காரட்டு,புடலங்காய்,வெண்டைக்காய்,போன்ற காய் வகைகளும்,

வாழைப்பூ,வாழைத்தண்டு,சுரைக்காய்,மணத்தக்காளி ,பசலைக்கீரை,கையாந்தகரை,,கறிவேப்பிலை,முட்டைகோஸ்,நூக்கோல்,
முளைக்கீரை ,அரைக்கீரை ,சிறுக்கீரை ,முருங்கைக் கீரை,அகத்திக்கீரை ,காரிசாலை,பொன்னாங்கன்னி,வல்லாரை கீரை,போன்ற கீரை வகைகளும்,அனைத்தும் சாத்வீகம் கலந்த  இராஜச உணவு வகைகளாகும்,

தாமச உணவுகள் ;--

தாமச ஆகாரங்கள்,;--மாமிச உணவு, முட்டை,( புலால் )
...மது,...சாராயம்,...கஞ்சா ,அபினி,,பீடி,சுருட்டு,சிகரெட் , போன்ற யாவும் தாமச ஆகாரங்களில் சேர்ந்ததாகும்,

மேலே கண்ட உணவு முறைகளை  ,மனிதர்கள் அவரவர்கள் வாழும் சீதோஷ்ண நிலைக்குத் தகுந்தாற் போல் ,வாழ்க்கை,முறைகளுக்குத் தகுந்தாற் போல்,பழக்கத்திற்குத் தகுந்தாற் போல்,ஆன்மீக வாழ்க்கை முறைக்குத் தகுந்தாற் போல்   பல வகைகளில் உணவு உண்ணும் பழக்கத்திற்கு ஆளாகி உள்ளார்கள் .

நோய் !

மேலே கண்ட சாத்வீக உணவு முறைகளால்;-- நோய் குறைந்து துன்பம் குறைந்து நீண்ட ஆயுளுடன் வாழலாம்,

இராஜச உணவு முறைகளால் ;--வியாதி வந்தும் ,அதைத் தீர்த்தும் குறைந்த ஆயுளுடன் வாழலாம்.

தாமச உணவு முறைகளால்  '-- தீராத வியாதிகளும் அதை தீர்க்க முடியாத துன்பங்களும் வந்து கொண்டே இருக்கும்.

மேலே கண்ட உணவு முறைகளால் துன்பமும் ,துயரமும். அச்சமும், பயமும்,பின் மரணமும் வந்து கொண்டேதான் இருக்கும். ''ஆன்மா ''பின்பு வேறு பிறப்பு எடுத்துக் கொண்டேதான் இருக்கும் .இதுதான் வாழ்க்கை என்றும் .இதுதான் இயற்கையின் நியதி என்றும் ,இதுதான் வாழ்க்கை முறை என்றும் மக்கள் நினைந்து வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.

இதற்கு மேல் ஒரு புனிதமான வாழ்க்கை உள்ளது என்பதை மக்கள் நினைத்து கூட பார்க்க நேரம் இல்லாமல், அலைந்து அழிந்து கொண்டு உள்ளார்கள் .

மக்களைப் பார்த்து வள்ளல்பெருமான் சொல்லுகின்றார்.!

வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் உமது
வாழ்க்கை எலாம் வாழ்க்கை யென மதித்து மயங்காதீர்
மையகத்தே யுறு  மரண வாதனையைத் தவிர்த்தே
வாழ்க்கையதே வாழ்க்கை  யென மதித்து அதனைப் பெறவே
மெய் அகத்தே விரும்பி இங்கே வந்திடுமின் எனது
மெய்ப் பொருளாம் தனித்தந்தை இத்தருணம் தனிலே
செய்யகத்தே வளர் ஞான சித்திபுரம் சித்தி புரம்தனிலே
சித்தாடல் புரிகின்றார் திண்ணம் இது தானே .

இந்த உலகத்தில் வாழ்பவர்களும்,கண்களுக்குத் தெரியாமல் வானத்தில் வாழ்பவர்களும்,மற்றும் உள்ள கிரகங்களில் வாழ்பவர்களும்,வாழும் வாழ்க்கை எல்லாம்,இதுதான் வாழ்க்கை என்று மதித்து ,மயங்கி,நினைந்து அதிலே மயங்கி வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.அந்த வாழ்க்கை எல்லாம் நிரந்தரமான அழிவில்லாத வாழ்க்கை அல்ல என்கின்றார் வள்ளல்பெருமான்.

உடம்பிற்கும்,உயிருக்கும் அழிவை உண்டாக்கும்,மரணம் என்னும் துன்பத்தை தவிர்த்த வாழ்க்கைதான் மனிதர்கள் வாழ்ந்து அனுபவித்து அதன் லாபத்தை அடைந்து வாழும் வாழ்க்கை முறையாகும். அதுவே பேரின்ப லாபமாகும்.அதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.

பொருள் உணவு ! அருள் உணவு !

பொருள் உணவு என்பது ;--இந்த பஞ்ச பூதங்களின் சேர்கையால் .ஏழு விதமான அணுக்களின் அதாவது தாதுக்களின் சேர்கையால் கிடைக்கும் உணவாகும். இவை எல்லா உயிர்களுக்கும் தேவைப்படும் பொருள் உணவாகும்.இந்த உணவால் மரணம் வந்து கொண்டே இருக்கும் ,மீண்டும் பிறப்பு எடுத்துக் கொண்டே இருக்கும் உணவாகும் .

மேலே கண்ட பொருள் உணவு மாயையால் உண்டாக்கி கொடுக்கும் உணவு முறைகளாகும்.அவற்றை உட் கொண்டு இருக்கும் வரை மரணம் வந்து கொண்டே இருக்கும்

அருள் உணவு !.

அருள் உணவு என்பது ;--அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் கொடுக்கப்படும் உணவாகும் அந்த அருள் உணவை உட் கொள்ளுபவர்களுக்கு மரணம் என்பது வாராது. மரணத்தை தடுக்கும் ஆற்றல் பெற்றது அருள்  உணவாகும்.

அந்த அருள் உணவு ஆன்மாவில் உள்ளது அந்த உணவை ஏழு திரைகள் மறைத்துக் கொண்டுள்ளது .அந்த திரைகளை நீக்குவதற்கு சாவித் தேவைப்படுகின்றது.அந்த சாவியைப் பெறுவதற்கு ஜீவகாருண்யம் என்னும் உயிர் இரக்கம் கொண்டு அன்பு,தயவு,கருணையின் வழியாகத்தான் சாவியைப் பெற்று திரைகளை நீக்கி அருளைப் பெற வேண்டும் .

அந்த அருளைப் பெறுவதற்கு ஆன்ம லாபம் என்று பெயராகும்.அந்த ஆன்ம லாபத்தில் மூன்று இன்ப லாபம் உள்ளது.அவை அருள் உணவால் மட்டுமே கிடைக்கும்.

அந்த அருள் உணவால். இம்மை இன்பலாபம்,..மறுமை இன்பலாபம்,..பேரின்ப லாபம்  என்னும் மூன்று லாபம் அடங்கி உள்ளது.மூன்று இன்ப லாபமும் சேர்ந்த இன்பத்திற்கு  பேரின்ப லாபம் என்றும், பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்றும் பெயராகும்.அதற்குப் பெயர் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றும்  பெயர் வைத்துள்ளார் வள்ளல்பெருமான். .

அந்த மூன்று இன்ப லாபத்தைப் பெற்றவர் உலகில் ஒரே ஒருவர், அவர்தான் வள்ளல்பெருமான் என்பராகும்.

அந்த பேரின்ப லாபத்தை பெரும் வாழ்க்கை முறையை நான் கடைபிடித்து வாழ்ந்து மரணத்தை வென்று உள்ளேன்..நீங்களும் என்னைப்போல் மரணத்தை வென்று வாழலாம்.என்பதை என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே என்கின்றார் .

நீங்களும் என்னைப் போன்று வாழ வேண்டும் என்பதற்காக .மெய்ப் பொருளான  ''அருட்பெருஞ்ஜோதி'' ஆண்டவரே  அருளை வழங்குவதற்கு என்னைத் தேடி இங்கே வந்துள்ளார் .அவரை மதித்து,அவர் சொல்லும் ஜீவ காருண்ய ஒழுக்கத்தையும் ,சத் விசாரத்தையும்  கடைபிடித்து அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழலாம் வாருங்கள் என்று, மனித சமுதாயத்தை அழைகின்றார் நமது வள்ளல்பெருமான்

அருளைப் பெறுவதற்கு உணவு முறைகள் !

தாவர உணவு முறைகளில் இரண்டு வகைகள் உண்டு .

ஒன்று புழுக்கின்ற உணவு ....ஒன்று புழுக்காத உணவு ....இந்த இரண்டு வகை உணவில் நாம் தினந்தோறும் உண்ணும் தாவர உணவு வகைகள் எல்லாமே ,அவித்தஉணவு,ஆவிக்காத உணவு,மாமிச உணவு ,என்னும் வகைகள் யாவும் பழுக்கின்ற உணவு வகைகளே!

அதாவது .அந்த உணவு வகைகளால் ..மலம்,சிறுநீர் ,அழுக்கு, வியர்வை, சளி,
பீளை,குரும்பி  ,போன்றவை தினந்தோறும்  வருகின்றது . புழுக்கின்ற உணவின் அழுக்குகள்,அவை அனைத்தும் ஊர் அமுத உணவுகளே ஆகும்.

இந்த மாயை உலகில் உணவு வகைகளை ஆறு சுவைகளாக  இறைவன் பிரித்து வைத்துள்ளார் அதாவது ;--..காரம்,..புளிப்பு..,துவர்ப்பு, உப்பு,.. கசப்பு,..இனிப்பு ,..போன்ற சுவைகளாகும்.

நாம் தினந்தோறும் அதிகமாக காரம்,புளிப்பு,உப்பு இனிப்பு வகைகள் உண்கின்றோம்,துவர்ப்பு கசப்பு வகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்வதில்லை.ஆறுசுவைகளும்  சமமாக உண்டால் வியாதி வராது .அப்படியே சமமாக உண்டாலும்,நோய் இல்லாமல் நீண்ட நாள் வாழலாம் ,ஆனால் இறுதியில் மரணம் வந்தே தீரும் ,

வள்ளல்பெருமான் ஆனந்த மேலிடு என்ற தலைப்பில் பதிவு செய்துள்ள பாடல்.;--

ஈரமும் அன்பும் கொண்டு இன்னருள் பெற்றேன்
என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி
காரமும் மிகு புளிச்சாரமும் துவர்ப்புங்
கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி
ஊரமுது உண்டு நீ ஒழியாதே அந்தோ
ஊழி தோறு ஊழியும் உலாவமை நல்கும்
ஆரமுது உண்டு என்னோடே ஆடடேடி பந்து
அருட்பெருஞ்ஜோதி கண்டு ஆடேடி பந்து.

என்று தெளிவாக விளக்கம் தந்துள்ளார்கள் .

நாம் உண்ணும் உணவு வகைகள் எல்லாமே,''ஊர் அமுது'' ,அதாவது புழுக்கின்ற உணவு...அதாவது மலமாகவும்,சிறுநீராகவும்,வியர்வையாகவும் ,வந்து கொண்டே இருக்கும்  உணவாகும் ,ஊர் அமுது உண்ணுகின்ற வரையில் மரணம் வந்தே தீரும் .இந்த உணவு வகைகள் யாவும் ''அருள்'' கிடைப்பதற்கு தடையாக இருக்கின்றது.

இந்த உணவு முறைகளை உண்ணாமல் இருந்தாலும்,உட்கொண்டு இருந்தாலும் மரணம் வந்து கொண்டே இருக்கும்.   ஆதலால் உணவு முறைகளையும் , எனவே பழக்க வழக்க முறைகளை ,வகைகளை மாற்ற வேண்டும் என்கின்றார்

ஆறுசுவை உணவுகள் உடம்பையும் உயிரையும் வளர்த்து, இளமைப்பருவம்  குமாரப்பருவம் வாலிபப்பருவம் ,பின்முதிர்ச்சிப் பருவம்  அடைவித்து பின் உறுப்புகள் சக்தி இழந்து உறுப்புகள் இயங்க முடியாமல்,முடிவில் மரணம் வந்து விடுகின்றது.பின் உடம்பை விட்டு உயிர் பிரிந்து ஆன்மாவில் அடங்கி விடுகின்றது..பின் உயிர் வேறு உடம்பு எடுத்து அதன் பக்குவத்திற்கு தகுந்தாற் போல் வாழத் தொடங்கி விடும்.

உடம்பும்,உயிரும்,ஆன்மாவும்  பிரியாமல் இருக்க சுத்த சன்மார்க்க ஆகாரம் மிக மிக அவசியம் .

சுத்த சன்மார்க்க ஆகாரம்;--

வள்ளல்பெருமான்,சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள் .. சுத்த சன்மார்க்கத்தை கடைபிடிப்பவர்களுக்கு சுத்த சன்மார்க்க ஆகாரம் என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளதாவது !

சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள் ;--

சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய தடையாகிய சமயம்,மதம்,முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கை விட்டவர்களும்,காமக் குரோதம் முதலியவைகளை நேரிட்ட காலத்தில் ' ஞான அறிவினால்' தடுத்துக் கொள்பவரும்; கொலை புலை தவிர்த்தவர்களும் ; ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள் ஆவார்கள் .

,மரணம் ,பிணி,மூப்பு ,பயம் ,துன்பம் --இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள் .அதாவது --செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் ''கேவலாதிகார மரணம் நீங்கும்''

அப்படி இல்லாது இவ்விடம் காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக் கொள்ள மாட்டார்கள்.''அருள் விளங்குங்'' காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக் கூடும்...பரலோக ஞான சித்திகளைப் பெற மாட்டார்கள்.

''சாகாதாவனே சன்மார்க்கி '' சுத்த சன்மார்க்கத்தின் முடிபு சாகாத கல்வியைத் தெரிவிப்பதே அன்றி வேறில்லை ,சாகின்றவன் சன்மார்க்க நிலையைப் பெற்றவன் அல்லன், என்பதை வள்ளல்பெருமான் மிகவும் அழுத்தமாக பதிவு செய்கின்றார்.

சாதி,சமயம்,மதம்,!

சாதி,சமயம்,மதத்தை, வள்ளல்பெருமான் ஏன் கைவிடச் சொல்கின்றார் என்றால்? .அவர்கள் தான் மக்களுக்கு தவறான வழிமுறைகளையும்,,தவறான உணவு முறைகளையும்,தவறான கடவுள்களையும்,தவறான கடவுள்  கொள்கைகளையும்,தவறான வழிப்பாட்டு முறைகளையும்,தவறான வழி காட்டுதலையும் மக்களுக்கு கற்பனைகளாகக் காட்டி வைத்துள்ளார்கள் ஆதலால் அவைகளை பின்பற்றாமல் இருக்க வேண்டும் என்கின்றார்..

சுத்த சன்மார்க்க ஆகாரம் ;--

சுத்த சன்மார்க்க அன்பர்கள் தன்னுடைய உடம்பை பாதுகாக்க தெரியாமல் புழுக்கின்ற உணவையே உட்கொண்டு ,ஜீவகாருணயம் என்னும் பசிப்பிணியை மட்டுமே போக்கிக் கொண்டு உள்ளார்கள் .ஆனால் ''சுத்த சன்மார்க்க சாதகத்தை'' வள்ளல்பெருமான் சொல்லிய சுத்த சன்மார்க்க கட்டளையை கடைபிடிக்காமல் விட்டுவிடுகின்றார்கள்.அதனால் இன்று வரை யாரும் மரணத்தை வெல்ல முடியாமல் மரணம் அடைந்து கொண்டே உள்ளார்கள்.

சுத்த சன்மார்க்க சாதகர்கள் எக்காலத்தும் புழுக்காது இருக்கின்ற வஸ்துவைக் ( உணவை ) கொள்ளல் வேண்டும் .புழுக்காத வஸ்துக்கள் யாவெனில் ;--

சர்க்கரை ..தேன் ...கற்கண்டு ,,,வெள்ளம் ,,அயம் முதலிய செந்தூரம் ...தாமிர முதலிய பஸ்பம் .ஆதலால் அவசியம் ஆகாரத்திற்கு முக்கிய வஸ்து மேற்குறித்தவை என்று அழுத்தம் திருத்தமாக தெரியப் படுத்துகின்றார்

மேலும் பரியாயத்தில் சர்க்கரை என்று லவணத்தை சொல்லுவதும் உண்டு.மேற்படி லவணத்தைத் துரிசு போக்கி ஜய லவணமாய்க் கட்டி ,ஆகாரத்தில் உட் கொண்டால் தேகம் நீடிக்கும்.இதன்றி சத்துவ பதார்த்தத்தில் லவணம் சிறுகச் சேர்த்துக்  கொள்ளவுங் கூடும் என்கின்றார்.

மேலே கண்ட உணவு வகைகள் புழுக்காத உணவாகும் ஆதாவது மலம்,வியர்வை,,சளி,கண்பீளை,காதுகுரும்பி,தலைப்பேன்,உடம்பில்  அழுக்கு,போன்றவைகள் உருவாகாது ...மேலும் நரை திரை,பிணி ,மூப்பு,பயம் துன்பம் மரணம் போன்றவைகள் வராது பாதுகாக்கும் உணவாகும்,.உடம்பை நீட்டிக்கவும் மரணம் வராமல் தடுக்கவும் அருள் கிடைக்கும் வரை உடம்பை பாது காக்கவும், புழுக்காத இந்த உணவு முறைகளை சன்மார்க்கிகள் அவசியம் பயன் படுத்திக் கொள்ளவேண்டும். .

நம்முடைய ஆன்மாவில் இருந்து அருள் சுரப்பதற்கும்.,அருளைப் பெற்று உடம்பையும் உயிரையும் ஒளிமயமாக மாற்றுவதற்கும் ''அறுசுவை உணவே'' முக்கிய தடையாக உள்ளது என்பதை விளக்கமாக தெரியப்படுத்துகின்றார்.

கரிசாலையும்,தூதுளையும்;--

புழுக்காத உணவு உட் கொள்ளும் வரை ,கரிசாலையை தினம்,தினம் பச்சையாவது சமையல் செய்தல் முதலிய வகையாலாவது சாப்பிட்டு வரவேண்டும் .பிரதம உள்ளுடம்பை நீட்டிக்க பண்ணும் .மேல் குறித்த மூலிகையை அலஷியம் செய்யாது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவடியின் கண்ணே இலஷியம் வைத்து எவ்வித தந்திரத்தினாலாவது தினம் தினம் உட்கொண்டால், தேகம் வளுவுள்ளதாய் நெடுநாளைக்கு நீடிக்கும் என்கின்றார்

முக்தி அடைவதற்கு சகாயமாயும் இருக்கும் .மகான்களிடத்தில் அனந்த காலம் காத்தாலும் ,மேல் குறித்த மூலிகையின் பிரயோஜனத்தையும் ,உண்மையையும் அனுபவத்தையும் வெளியிடார்கள்.பரம கருணாநிதியாகிய நம் தலைவனால் கிடைத்தது .அசட்டையின்றி  உட்கொள்ளல் வேண்டும் .

மேற்குறித்த மூலிகை ஜலமில்லாத இடத்தில் இருக்கிறது விசேஷ நன்று .ஜலமுள்ள இடத்தில் உள்ளது காரமிராது என்பதையும் தெளிவுப் படுத்தி உள்ளார் .

மேலும் ;--சுத்த சன்மார்க்க ஆகார விளக்கு !

சுத்த சன்மார்க்க சாத்தியர்கள் நெய் முதலிய வஸ்துக்கள் கொள்ளப்படாது .நேரிட்டால் ஒருவாறு கொள்ளலாம் .ஏனெனில் .ஓர் தேகத்தில்  உள்ள தாதுக்களில் முதல் தாது கொழுப்பு,அதன் அம்சமே பால் .அதன் அம்சம் நெய் ,மேற்படி ஆபாசம்,தயிர்,மோர் ஆதலால் மேற்படி கொழுப்பு வெளிப்பட்டால் ,மேற்படி பசுவின் கண் கெடுதியும் நேரும் .

ஆதலால் அதுவும் கொலைக்கு சமானம் ,கன்றுக்கு ஒருவாறு விட்டு மேற்படி பாலை கிரகிக்கலாம் .ஆதலால் இதனால்  ஜீவ இம்சை நேருதலால் மேற்படி வஸ்துக்கள் கொள்ளலாகாது .நேராத பட்ஷத்தில் கொள்ளலாம் என்கின்றார் .

பசுவின் பால் அதன் கன்று குட்டிக்காகவே சுரக்கின்றது அதை நாம் குடிப்பதும் தவறாகும்.குந்தைகளுக்கு தாயின் பால் கிடைக்காதபோது அதை குழந்தைகளுக்கு கொடுத்து அதன் உயிரைக் காப்பாற்ற வேண்டுமே தவிர மற்றபடி பசுவின் பாலை உபயோகப் படுத்தக் கூடாது.

மேலும் தேக நஷ்டத்தின் முக்கிய காரணங்கள் !

இந்த உலகத்தில் மனிதர்களுக்குத் தேகம் சீக்கிரத்தில் நஷ்டம் அடைவதற்க்குக் காரணம் இரண்டு வகை, அவை யாவன ;---

ஆகாரம்,மைத்துனம் ( விந்து,சுக்கிலம்  ) ...ஆகாரத்தால் ஒன்பது பங்கு நஷ்டமும் ...மைத்துனத்தால் ( விந்து,சுக்கிலம் ) ஒரு பங்கு நஷ்டமும் உண்டாகிறது...எப்படியெனில் ;--

பிண்ட உற்பத்தியின் காலம் தொடங்கி இறந்து போகிற பரியந்தம் தினம் ஆகாரம் உண்டு.இது இயற்கை .சிசு ,வாலிபம்,விருத்தாப்பியம்,--இந்தப் பருவங்களில் மைதுனம் கிடையாது.

கவுமாரம் ,இருபது வருடம் முதல் ,யவ்வனம் அறுபது வயது வரை ..இந்த இரண்டு பருவங்களில் மாத்திரம் மைதுனம் உண்டு .இந்தப் பருவங்களிலும் ,நோயாலும்,துக்கத்தாலும்,தரித்தரத்தாலும் ,பசியாலும்,பயத்தாலும்,வேறு அனந்த வகையால் உண்டாகும் துன்பங்களாலும் மைதுனம் தடைபடும் .இந்தக் காலத்திலும் ஆகாரம் உண்டு.

பொருந்தல் ஏகதேசம் ,நஷ்டமும் அப்படியே இருக்கிறது.ஆகார விஷயத்தில் அதிக்கிரமம்,அக்கிரமம்,அஜாக்கிரதை ,அசாதாரணம் இப்படிப்பட்ட
 ( மாமிசம்,முட்டை,) ( கண்டதை உண்பது,..நேரம் தெரியாமல் உண்பது,..உடம்பிற்கு ஒவ்வாத உணவுகளை உண்பது ) உணவுகளை நீக்கி சுத்த தத்துவ ஆகாரங்களைப் புசித்து ஆயுள் விர்த்தி செய்து கொள்வது சுத்த சன்மார்க்க ஏற்பாடாகும்,என்பதை விளக்கி உள்ளார் .நாம் உண்ணும் உணவால் உடம்பு எப்படி  சீக்கிரம் அழிந்து போகின்றது என்பதை தெரியப் படுத்தி உள்ளார் .

நமது உடம்பை நஷ்டம் செய்வன நான்கு ; அவை யாவன ;---

ஆகாரம் ..மைதுனம் ...நித்திரை ,,,பயம் ,...ஆகிய இந்நான்கிலும் அதி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.இந்த நான்கிலும் முக்கியமானது ;--ஆகாரம்..,மைதுனம் .ஆதலால் இவ் இரண்டிலும் அதனினும் அதிக ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும்.

இந்த இரண்டிலும் முக்கியமானது --மைதுனம் .ஆதலால் இந்த விஷயத்தில் எல்லா வற்றைப் பார்க்கிலும் --அதிக ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்.அவ்வாறு இல்லாவிடில் தேகம் அதி சீக்கிரத்தில் போய்விடும் .பின்பு முக்தி ,சித்தி அடைவது முடியாமல் போய்விடும்.

முக்தி,சித்தி அடைவதற்கு இன்மானிட தேகமே தக்கதாயும் ,வேறு தேகத்தால் அதை அடைவது அரிதாயும் இருக்கின்றது.ஆதலால் எவ்விதத்தா லாயினும் தேகம் நீடித்து இருக்கும்படி பாது காத்தல் அவசியம் வேண்டும் என்கின்றார் .

அறியாமல் செய்வது !

இவ்வளவு உண்மைகளை வள்ளல்பெருமான் சொல்லி இருந்தும் சன்மார்க்க அன்பர்கள் தங்களுடைய உடம்பையும் உயிரையும் பாது காக்காமல் சமய, மதவாதிகள் போல், உணவு கட்டுப்பாடு இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருந்தால் மரணத்தை எப்படி வெல்லமுடியும்.? சித்திக்க வேண்டும்.

சோற்றாசையோடு காமச் சேற்றாசைப் படுவாரை
துணிந்து கொள்ள கூற்றாசைப் படும் என்பார் .வள்ளல்பெருமான்

சோறு போன்ற உணவுகளை உண்டால் காமம் உண்டாகும்,காமம் உண்டானால் எமன் என்னும் கூற்றுவன் வந்து கொண்டுபோய் விடுவான் .

வள்ளல்பெருமான் நமக்கு இரண்டு வழிகளைச் சொல்லி உள்ளார்கள்...சத்விசாரம்,..பரோபகாரம் என்பதாகும்.

சன்மார்க்கிகள் ஜீவகாருண்யம் என்னும் பசிப்பிணியை மக்களுக்கு போக்கிக் கொண்டு வருகின்றார்கள் .அதில் எந்த தவறும் இல்லை.ஆனால் சத்விசாரம் என்னும் செயலில் ஈடுபாடு கொள்வதே இல்லை.

உண்மை அன்பால் .உண்மை இரக்கத்தால்,உண்மை தயவால்  உண்மை கருணையால் நாம் ஏழை,எளிய,பாமர மக்களின் பசியை அறிந்து நம்மால் முடிந்த அளவு பசிப்பிணியை போக்கினால் ''இறைவன் நம்முடைய பசிப்பிணியைப் போக்குவார் '' என்னும் உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும் .

வள்ளல்பெருமான் உணவு !

வள்ளல்பெருமான் தாம் உண்ணும் உணவால் மரணம் வந்துவிடும் என்று பயந்து,ஒருசில நாள்  ஒரு கவளம் உணவை ( ஒருபிடி )எடுத்துக் கொண்டு, உணவே உண்ணாமல் இருந்துள்ளார்.

மேலும் உணவு உண்ணாமல் இருந்தால் தன்னுடைய தாய் வருத்தபடுவார் என்று பயந்து வயுறு நிறைய உணவு உட்கொண்டு உள்ளேன்.என்கின்றார் மற்றும்  நண்பர்கள், உற்றவர், நேயர் ,நெருங்கிய அன்புள்ளவர்கள்  வருத்தபடுவார்கள் என்று அஞ்சி உணவு உட்கொண்டு உள்ளேன் மற்றபடி நான் விரும்பி எக்காலத்திலும் உணவு உட்கொள்ளவில்லை.அந்த பூத .உணவை நினைத்தாலே என்னுடைய மனம் நடுங்கும் என்கின்றார்.

அவரே பதிவு செய்துள்ள பாடல் ;--

உற்ற தாரணியில் எனக்கு உலக உணர்ச்சி
உற்ற நாள் முதல் ஒரு சிலநாள்
பெற்ற தாய் வாட்டம் பார்ப்பதற்கு அஞ்சிப்
பேருணவு உண்டனன் சிலநாள்
உற்றவர் நேயர் அன்புளார் வாட்டம்
உருவதற்கு அஞ்சினேன் உண்டேன்
மற்றிவை அல்லால் சுக உணவு கொள்ள
மனம் நடுங்கியது நீ அறிவாய் .

என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில் சொல்லுகின்றார்

உலகில் உள்ள பஞ்ச பூதங்களின்  பொருள் உணவால் .மரணம் வந்துவிடும், ,அருள் உணவு கிடைக்காமல் போய் விடும் என்று பயந்தே உணவு உண்ணாமல் இருந்தேன் என்பதை வெளிப்படுத்தி உள்ளார்.

மேலும் வள்ளல்பெருமான் பதிவு செய்துள்ள பாடல்.!

சோற்றிலே விருப்பம் சூழ்ந்திடில் ஒருவன்
துன்னு நல் தவம் எல்லாஞ் சுருங்கி
ஆற்றிலே கரைத்த புளி எனப்போம் என்று
அறிஞர்கள் உரைத்திடல் சிறுதும்
போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில்
பொருந்திய கார சாறஞ் சேர்
சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை
தங்கினேன் என்செய்வேன் எந்தாய் !

சோற்றிலே விருப்பம் கொண்டு உணவு உட்கொண்டால் ,நாம் செய்யும் தவம் எல்லாம் சுருங்கி ஆற்றிலே கரைத்த புளிபோல் ஒன்றும் இல்லாமல் வீணாகிப்  போய்விடும் நாம் இதுவரை வாழ்ந்து எந்த பயனும் இல்லாமல் மரணம் வந்துவிடும்  என்று பயந்து ,உணவுமேல் ஆசை இல்லாமல் அருள்மேல் ஆசைக் கொண்டேன் என்று தெளிவாக வள்ளல்பெருமான் சொல்லி உள்ளார் .

மேலும் அறிவில்லாத சிறிய பருவம் கொண்டே உணவின் மேல் எனக்கு வெறுப்பாகவே இருந்தது.என்பது,என்னுட் கலந்த நீ அறியாததா ? நான் சொல்லித்தான் தெரிந்து கொள்வாயா ? நான் அறிவில்லாத கடையேனாக இருந்தபோதும் ,''திருவருள் அமுதம் மேல்'' ஆசைப்பட்டேனே தவிர வேறு எவைமேலும் ஆசைப்பட்டது கிடையாது என்பதை கீழே வரும் பாடல் வாயிலாக பதிவு செய்துள்ளார் .

அறிவிலாச் சிறிய பருவத்திற் தானே
அருந்தலில் எனக்குள்ள வெறுப்பைப்
பிரிவிலா என்னுட் கலந்த நீ அறிந்திலையோ
இன்று நான் பேசுவது என்னே
செரிவிலாக் கடையேன் என்னினும் அடியேன்
திருவருள் அமுதமே விழைந்தேன்
எரிவிலாச் சுவை வேறு எவற்றினும் விழைவோர்
எட்டுணை யேனும் இன்று எந்தாய் !

என்று பதிவு செய்துள்ளார் !

மேலும் .எனக்கு உணவு மேல் பற்று எக்காலத்திலும் இல்லை,அப்படியே ஏதாவது ஒரு வகையில் எனக்கு உணவு கொடுத்தால் அது என்னுடைய சம்மதம் இல்லை.அதுவும் நின் சுவை என்றே உண்பேன்,என்னுடைய சுதந்திரம் அனைத்தும் உன்னிடம் கொடுத்து விட்டேன் ஆதலால் எனக்கு எந்த சுதந்தரமும் இல்லை .என் சுதந்தரத்தால் எதையும் நான் தேடியதும் இல்லை  விரும்பியதும் இல்லை. அனுபவித்ததும் இல்லை,என்பது நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா ?  என்று எல்லாம் வல்ல ''அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம்'' சரணாகதி அடைகின்றார் .இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது  என்ன ?

உணவினால் மரணம் வந்துவிடும் .அருளினால் மரணம் வராது தடுத்துக் கொள்ளலாம் என்பதை நாம் அறிந்து,தெரிந்து  உணர்ந்து கொள்ளவேண்டும்.

உடம்பின் உண்மை ரகசியம் !

நம்முடைய ஆன்மா என்பது இறைவன் குழந்தையாகும் .அதற்குத் துணையாக இயற்கை என்னும் ஆணவத்தோடு இந்த பஞ்ச பூத உலகத்திற்கு ஆன்மாவை அனுப்பி வைக்கின்றார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் .

இங்கு வந்ததும் ஆன்மா வாழ்வதற்கு செயற்கை யாகிய ''சுத்த பூதகாரிய'' அணுக்களால் உடம்பு கொடுக்கப் படுகின்றது.செயற்கையாகிய ''அசுத்த பூத காரிய'' உணவு முறைகளால் உடம்பு வளர்ச்சி அடைகின்றது.அதற்குப் பெயர்தான் ''கன்மம் '' ( கர்மம்,காமியம் ).என்பதாகும் .அசுத்த பூத காரிய உணவு முறைகளால்தான் துன்பம்,துயரம்,அச்சம்,பயம்,நோய் ,மரணம் யாவும் வருகின்றது.

அதனால் ஆன்மாக்கள் தன்னுடைய உண்மை நிலையை புரிந்து ,அறிந்து கொள்ளாமல் பிறந்து பிறந்து ,இறந்து,இறந்து உருவம் மாறிக் கொண்டே உள்ளது.பிறக்காமலும் இறக்காமலும்,ஆன்மா தன்னுடைய உண்மை நிலையை அறிந்துகொள்ள ,நாம் உண்ணும் உணவு முறைகள்,நாம் செய்யும் செயல் முறைகள்  தடைகளாக, திரைகளாக, ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ளது.

உஷ்ணம் .!

ஆன்மாவின் உஷ்ணம் அதாவது பிரகாசம் ஒருகோடி சூரிய பிரகாசம் அளவைக் கொண்டது.அந்த உஷ்ணத்திற்கு காரண உஷ்ணம் என்று பெயர்.அதற்கு சுத்த உஷ்ணம் என்றும்  பெயர்.அந்த உஷ்ணம் எதையும் அழிக்காது ,அந்த உஷ்ணத்தை யாராலும் அழிக்கவும் முடியாது.அதுதான் ஆன்மாவின் உண்மையானத் தன்மையாகும்.

ஆன்மாவின் வண்ணம் மஞ்சள் வெள்ளை யாக உள்ளது.என்பார் வள்ளல்பெருமான்.

நாம் உண்ணும் உணவினாலும்,வாழ்க்கை முறையாலும்,காரண உஷ்ணம் மறைக்கப்பட்டு பூத காரிய ..காரிய உஷ்ணம் மாயையால் வழங்கப்பட்டு ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ளது .அதனால் நினைப்பு மறைப்பு உண்டாகி மரணம் வந்து கொண்டே உள்ளது.

காரிய உஷ்ணத்தை நீக்கி காரண உஷ்ணத்தை உடம்பிற்கு கொடுக்க வேண்டும்.அதற்கு உணவு முறைகளை மாற்றினால் மட்டுமே முடியும்.

அதற்கு வள்ளல்பெருமான் சொல்லுவது,அசுத்த தேகத்தை,, சுத்த தேகமாக மாற்ற வேண்டும் என்கின்றார்..சுத்த தேகமாக மாற்ற வேண்டுமானால் ,''உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே முடியும்'',

ஏன் ? என்றால் ஆன்மா ஆண்டவருடைய குழந்தையாகும் ! ,,,பாடல்

அருட்ஜோதி தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம்
அம்பலத்தே யாடுகின்ற ஆனந்த தெய்வம்
பொருட்சாறு மறைகள் எலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்த தெய்வம் உயர் நாதாந்த தெய்வம்
இருட்பாடு நீக்கி ''ஒளி யீந்தருளும்'' தெய்வம்
எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கு அருளும் தெய்வம்
தெருட் பாடல் உவந்து என்னையும் சிவமாக்குஞ் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் !

மேலே கண்ட பாடல் வாயிலாக வள்ளல்பெருமான் தெளிவாகத் தெரியப்படுத்து கின்றார்.என்னுடைய ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும்  இருளைப் போக்கி ஒளி வழங்கும் தெய்வம். ''அருட்ஜோதி தெய்வம் "' ஒன்றால் மட்டுமே முடியும்.அந்த உண்மையான தெய்வம் தான் ...,நான் எண்ணியபடி எண்ணியவாறு எனக்கு அருளை வழங்கும் தெய்வமாகும்.

அந்த தெய்வம் வேறு எங்கும் இல்லை என்னுடைய ஆன்மாவின் சிற்சபையில் அமர்ந்து அருளும் ஒளியும்  வழங்கிக் கொண்டு உள்ளது. என்பதை சுத்த சன்மார்க்க அன்பர்களுக்கும் மக்களுக்கும் தெளிவுப் படுத்துகின்றார்.

மேலும் எல்லா சமயங்களும் ,மதங்களும்,பொருளைச் சார்ந்ததாகும் அந்த சமயங்களும்,மதங்களும் அருளைத்தேடி அலைந்து கொண்டு உள்ளன அவைகளும் அருட்பெருஞ் ஜோதியையே போற்றி புகழ்ந்து அருளைப் பெறுவதற்காக காத்துக் கொண்டு உள்ளன என்கின்றார் .

எனவே காரண உஷ்ணம் ஒன்றினால் மட்டுமே உடம்பை அருள் ஒளியாக மாற்ற முடியும் .அந்த அருளைப் பெறுவதற்கு உணவு முறைகளை அவசியம் மாற்ற வேண்டும். சுத்த உஷ்ணம் உண்டாவதற்கு ,அதை பாதுகாத்துக் கொள்வதற்கு ஜீவகாருண்யம் என்னும் அன்பு,தயவு,கருணை,வேண்டும், உண்மையான கடவுள் யார் என்பதை உண்மை அறிவால் அறிந்து அவரை இடைவிடாது விசாரம் (சத் விசாரம்) செய்து கொண்டே இருக்க வேண்டும்.மேலும்

எவ்வகைதாம் தவஞ் செய்யினும் மெய் தரிதாம் தெய்வம்
எனக்கு எளிதில் கிடைத்து என்மனம் இடங் கொண்ட தெய்வம்
அவ்வகைதான் தெய்வம் அதற்கு அப்பாலாம் தெய்வம்
அப்பாலும் பெருவெளிக்கே அப்பாலாம் தெய்வம்
ஒவ்வகத்தே ஒளியாகி ஓங்குகின்ற தெய்வம்
ஒன்றான தெய்வம் மிக நன்றான தெய்வம்
செவ்வகைத் தென அறிஞர் எல்லாஞ் சேர் பெரிய தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம் .

உணவு முறைகளை மாற்றாமலும்,ஜீவகாருண்யம் செய்யாமலும் ,எந்த வகையான  தவம்,தியானம்,யோகம்,பக்தி,சந்நியாசம்,துறவு போன்ற புறச் செயல்களால் எக்காலத்திலும், எந்த நன்மையும் கிடைக்காது ,மரணத்தை வெல்லவும் முடியாது என்பதை சுத்த சன்மார்க்க அன்பர்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும்.

எல்லா உலகுக்கு எல்லாம ஒளி வழங்கும் தெய்வம் ,உண்மையான தெய்வம் ,எல்லா உயிர்களிலும் உள்ள ஆன்மாக்களில் உள் ஒளியாக இயங்கிக் கொண்டு உள்ள தெய்வம் ,எல்லா அறிஞர்களாலும், அருளாளர் களாலும் போற்றப்படும் எளிதில் தொடர்பு கொள்ளும் தெய்வம் ,மனிதர்களுக்கு எளிதில் அருள் வழங்கும் தெய்வம் .அந்த ஒரே தெய்வம்தான்  அருட்ஜோதி தெய்வம் என்பதாகும்.

அந்த ஒளி வழங்கும் அருட்ஜோதி தெய்வத்தைத் தவிர வேறு தெய்வங்களை வழிபடவோ,மனதில் நினைக்கவோ  கூடாது என்பதை அவசியம் கடைபிடிக்க வேண்டும்.

தமிழ் நாட்டில்,கடலூர் மாவட்டத்தில்,

உத்தரஞான சித்திபுரம் என்றும்,உத்தரஞான சிதம்பரம் என்றும்,திருவருளால் ஆக்கப்பட்ட, ஆக்கச் சிறப்புப் பெயர்களும்,பார்வதிபுரம் என்றும் வடலூர் என்றும்,உலகியலால் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும், பெற்று விளங்குகின்ற தெய்வப் பதியின் இடத்தே

இயற்கை விளக்க நிறைவாகி உள்ள ,ஓர் சுத்த சிவா அனுபவ ஞான சபையில் இயற்கை உண்மை நிறைவாகிய ,திரு உருவைத் தரித்து, இயற்கை இன்ப நிறைவாகிய சிவா ஆனந்த ஒருமைத் திரு நடனச் செய்கையை,,எவ்வுயிரும் இன்பம் அடைய வேண்டும் என்ற பெருங் கருணையால் .
எல்லாம் வல்ல தனித் தலைமைக் கடவுளாகிய ''அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் '' அருள் திருநடனம் புரிகின்றார் .

அந்தப் பதியின் அருளை நான் பெற்றேன் ! பெறுகின்றேன்!  பெற்றுக் கொண்டே இருக்கின்றேன் ! .என்னை அடுத்தவர்களும் பெறுதற்கு யாதொரும் தடையும் இல்லை .பெறுவீர்கள் ! பெறுகின்றீர்கள்  !! பெற்றீர்கள் !!! என உலக மக்களை வடலூர் பெருவெளிக்கு அருளைப் பெறுவதற்கு அழைக்கின்றார் நமது வள்ளல்பெருமான் .

அருளைப் பெறுவதற்கு என்ன செய்யவேண்டும் !

நாம் உண்ணும் உணவினால் மரணம் வந்து கொண்டே இருக்கின்றது..அந்த உணவை மாற்றி அருள் உணவைப்  பெரும் வழியை தெரிந்து கொண்டோமானால்,மரணத்தை வெல்லலாம் என்கின்றார்.

இந்த பஞ்ச பூத உலகத்தில் பொருள் உணவு மட்டுமே கிடைக்கும்.,அருள் உணவு பெற வேண்டுமானால் உண்மைக் கடவுளைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

நம்மைப் படைத்த உண்மைக் கடவுள் ஒருவர் உள்ளார் என்றும்,அவர் அருட்பெருஞ் ஜோதியாக,உள்ளார் என்பதையும் நம்முடைய ஆன்ம அறிவால் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார் .
மெய்மொழியும் ஒழுக்கமும் என்ற தலைப்பில்,உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் பொருட்டு, வள்ளல்பெருமான் மிகத் தெளிவாக பதிவு செய்துள்ளார்.

மெய்மொழியும் ஒழுக்கமும் !

உலகத்தின் இடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்கள் அனைவரும் நாமும் அறிய வேண்டுவதும் ஒழுக வேண்டுவதும் யாதெனில் ;--

இயற்கையில் தானே விளங்குகின்றவராய் உள்ளவர் என்றும்.இயற்கையில் தானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்றும்,இரண்டுபடாத பூரண இன்பமானவர் என்றும் ,

எல்லா அண்டங்களையும்,எல்லா உலகங்களையும் ,எல்லாப் பதங்களையும் ,எல்லாச் சத்திகளையும்,எல்லாச் சத்தர்களையும்,எல்லாக் கலைகளையும்,எல்லாப் பொருள்களையும்,எல்லாத் தத்துவங்களையும், எல்லாத் தத்துவிகளையும்,

எல்லா உயிர்களையும்,எல்லாச் செயல்களையும் எல்லா இச்சைகளையும்,எல்லா ஞானங்களையும்,எல்லாப் பயன்களையும்,எல்லா அனுபவங்களையும் ,மற்றை எல்லா வற்றையும் தமது திருவருள் சத்தியால் ;-

தோற்றுவித்தல்,..வாழ்வித்தல்,..குற்றம் நீக்குவித்தல்,..பக்குவம் வருவித்தல்,..விளக்கஞ் செய்வித்தல் என்னும் ஐந்தொழில்கள் முதலிய பெருங் கருணைத் தொழில்களை ,

இயற்று விக்கின்றவர் என்றும்,..எல்லாம் ஆனவர் என்றும்,...ஒன்றும் அல்லாதவர் என்றும், சர்வ காருண்யர் என்றும்,சர்வ வல்லபர் என்றும், எல்லாம் உடையராய்த் தமக்கு ஒருவாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத

''தனிப் பெரும் தலைமை ''அருட்பெருஞ்ஜோதியர்' என்றும், ---சத்திய அறிவால் அறியப் படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே '' .அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவு என்னும் பூரணப் பொது வெளியில்,அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் .

நாம் அறிந்து கொள்வது எப்படி ?

அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே ஆகிய கடவுளை இவ்வுலகின் இடத்தே ஜீவர்களாகிய { மனிதர்கள் } நாம் அறிந்து, அன்பு செய்து , ''அருளை அடைந்து "'
அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல் ,

பல்வேறு கற்பனைகளால் மல்வேறு சமயங்களிலும்,பல்வேறு மதங்களிலும்,பல்வேறு மார்க்கங்களிலும்,பல்வேறு லஷியங்களைக் கொண்டு,நெடுங் காலம் பிறந்து பிறந்து ,அவத்தை வசத்தர்களாகிச் ''சிற்றறிவும்  இன்றி'' விரைந்து,விரைந்து பல்வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்து,இறந்து வீண் போயினோம் ;வீண் போகின்றோம்.

ஆதலால் ,இனிமேலும் ஜீவர்களாகிய நாம் விரைந்து விரைந்து ,இறந்து, இறந்து வீண் போகாமல் ,உண்மை அறிவு,..உண்மை அன்பு ..உண்மை இரக்கம் முதலிய சுப குணங்களைப் பெற்று நற்செய்கை உடையவர்களாய் ,எல்லாச் சமயங்களுக்கும் ,எல்லா மதங்களுக்கும்,எல்லா மார்க்கங்களுக்கும், உண்மைப் பொது நெறியாகி விளங்கும்,

''சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் '' பெருஞ் சுகத்தையும் பெருங் களிப்பையும் ,அடைந்து வாழும் பொருட்டு ---மேற்குறித்த உண்மைக் கடவுள் ,தாமே திருவுளங் கொண்டு ,சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ,உண்மை விளக்கம் செய்கின்ற ஓர் ''ஞானசபையை ' சித்திவளாகம் என்னும் இச்சன்னி தானத்திற்கு அடுத்த ''உத்தர ஞான சிதம்பரம் அல்லது ஞான சித்திபுரம்'' என்று குறிக்கப் படுகின்ற ,

வடலூர் பார்வதி புரத்தில் தமது திருவருட் சம்மதத்தால் இயற்று வித்து ''இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து அருளித் திருவிளையாடல் செய்து அருள் கின்றோம் என்னும் திருக்குறிப்பை இவ்விடத்தே ,

தாயினும் சிறந்த பெரும் தயவுடைய நமது கருணையாங் கடலராகிய அருமைத் தந்தையார் ''அருட்பிரகாச வள்ளலார் முன்னிலையாகப் பல வாற்றாலும் பிரசித்தப்பட வெளிப்படுத்தி அருட்பெருஞ்ஜோதி சொரூபராய் அப்பெருங்கருணை வள்ளலாரது உடல்,பொருள்,ஆவிகளைக் கொண்டு '' பொற்சபை,சிற்சபைப் பிரவேசஞ் செய்வித்து அருளி ,அரிய அவரது திருமேனியில் தாம் கனிவுறக் கலந்து அருளிய எல்லாம் வல்ல சித்தத் திருக் கோலங் கொண்டு ''அருள் ஆட்சித் திருமுடி பொறுத்து அருள் விளையாடல் செய்து அருளும் நிமித்தம்

எல்லா உலகங்களில் உள்ளவர்கள் யாவரும் இஃது என்னே ? இஃது என்னே ? என்று அதிசயிக்கும் படி வெளிப்பட எழுந்து அருளும் தருணம் அடுத்த அதிசயிக்கும் படி வெளிப்பட எழுந்தருளும் தருணம் அடுத்த அதி சமீபித்த தருணமா இருத்திலினால் ,அங்கனம் வெளிப்படும் திருவரவு பற்றி எதிர் பார்த்தலாகிய விரதங் காத்தலில் நிற்கும் அல்லது நிற்கவேண்டிய ,நாம் எல்லாவரும்

மேற்குறித்த அதிசய அற்புதத் திருவரவு நேரிட்ட கணத்திற் தானே ,சுத்த சன்மார்க்க அரும் புருஷார்த்தங்களின் பெரும் பயன்களாகிய எக்காலத்தும் நாசம் அடையாத சுத்தம் அல்லது சுவர்ண தேகம்,,,பிரணவ தேகம்,,, ஞானதேகம் என்னும் சாகா கலானுபவ சொரூப சித்தித் தேகங்களும்,தன சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லா வற்றையும் நடத்துகின்ற தனிப்பெரும் வல்லபமும்,

கடவுள் ஒருவரே என்று அறிகின்ற உண்மை ஞானமும்,..கருமசித்தி... யோகசித்தி ...ஞானசித்தி முதலிய எல்லா சித்திகளும் பெறுகின்ற அருட்பேரும் பெற்று,வாழ்கின்ற பேரின்ப சித்திப் பெருவாழ்வை அடைவதற்கான சுத்த சன்மார்க்கத் தனிப்பெரு நெறியைப் பற்றுவதற்குரிய உண்மை ஒழுக்கங்களில் நாம் எல்லாம் தனித்தனி ஒழுக வேண்டியது அவசியம் ஆகலில் அவ்வொழுக்கங்கள் இவை என உணர வேண்டுவது இன்றி அமையாததாகும்.

மேலே கண்ட உண்மைக் கடவுளை அறிந்து கொள்வதற்கு,தடையாக இருக்கும் சாதி,சமயம்,மதங்களை முற்றும் பற்று அற விட்டு,அருளைப்பெற வேண்டும்.அந்த அருளைப் பெறுவதற்கு.ஒழுக்கம் மிகவும் முக்கிய மானதாகும் என்று வள்ளல்பெருமான் கீழேக் கண்டபடி ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்கின்றார் .

சன்மார்க்கப் பெருநெறியின் ஒழுக்கங்கள் ;---

1,இந்திரிய ஒழுக்கம்,,,2,கரண ஒழுக்கம் ...3,ஜீவ ஒழுக்கம் ...4,ஆன்ம ஒழுக்கம் என நான்கு வகைப்படும் அவற்றுள் ;--

இந்திரிய ஒழுக்கம்

இந்திரியம் என்னும் கண் ,காது,மூக்கு ,வாய்,மெய் என்னும் உடம்பு போன்ற உறுப்புகளை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை இந்திரிய ஒழுக்கம் என்பதாகும்.

காது;-- நாத முதலிய தோத்திரங்களை உற்றுக் கேட்டல் .மற்றவை கேளாது இருத்தல்.கொடுஞ் சொல் முதலியவை செவிபுகாமல் நிற்றல்.

கண் --கொடுரமாகப்  பாராது இருத்தல்

வாய் ;--ருசியின் மீது விருப்பம் இன்றி இருத்தல் .

மூக்கு ;--சுகந்தம் விரும்பாது இருத்தல்.

உடம்பு ;--அசுத்தங்களைத் தீண்டாது இருத்தல் .

என்னும் ஞானேந்திர ஒழுக்கமும் .

இனிய வார்த்தையாடுதல்,பொய் சொல்லாது இருத்தல்,ஜீவ இம்சைநேரிடும் காலத்தில் எவ்விதத் தந்திரத்திலாவது தடை செய்தல் ,பெரியோர் இடத்திற்கு செல்லுதல்,--என்றால் சாதுக்களிடம் பரிச்சயம் பண்ணுதல்.

உயிர்க்கு உபகரிக்கும் நிமித்தம் கையால் உபகரித்தல்,மலசல உபாதைகள் அளவு மீறாமலும் கிரமம் குறையாமலும் ,அளவைப் போல் தந்திர ஓஷ்திகளாலும் ,ஆகாரப் பக்குவத்தாலும் பவுதிகப் பக்குவத்தாலும், செய்வித்தல்,என்னும் கருமேந்திரிய ஒழுக்கம் ஆகும்.

கரண ஒழுக்கம் ;--

சிற்சபையின் கண் மனதைச் செலுத்துவது தவிர மற்று எந்த வகை ஆபாசத்திலும் செலுத்தாமல் ,இழுத்து மேற்குறித்த இடத்தில் நிறுத்தல்.

பிறர் குற்றம் விசாரியாது இருத்தல், தன்னை மதியாதிருத்தல் ,செயற்கைக் குணங்களால் உண்டாகிய கெடுதிகளை நீக்கி இயற்கையாகிய சத்துவமயமாய் இருத்தல்,பிறர் மேல் கோபிக்காது இருத்தல்,தனது சத்துருக்களாகிய தத்துவங்களைக் கோபித்தல்,அக்கிரம் அதிக்கிரமப் புணர்ச்சி செய்யாதிருத்தல்,முதலியன காரண ஒழுக்கமாகும்.

ஜீவ ஒழுக்கம் !;--

எல்லா மனிதரிடத்தும் ஜாதி,..சமயம்,..குலம்,...கோத்திரம்,
சூத்திரம்,..சாத்திரம்,..மார்க்கம்,...உயர்வு,..தாழ்வு,...முதலிய பேதமற்றுத் தானாக் நிற்றல் முதலியன ஜீவ ஒழுக்கமாகும்.

ஆன்ம ஒழுக்கம் ! ;--

எண்பத்து நான்கு நூறு ஆயிரம் யோனி பேதங்கள் இடத்தும் இறங்கி ,ஆன்மாவே சபையாகவும் ,அதன் உள் ஒளியே பதியாகவும்,கண்டு கலந்து பூரணமாய் நிற்றல் முதலியன ஆன்ம ஒழுக்கமாகும்.

இங்கனம் கூறிய ஒழுக்கங்களுள்ளே இந்திரிய ஒழுக்கம்,காரண ஒழுக்கம் என்னும் இவற்றை நாம் ஒவ்வொருவரும் உண்மை உணர்ச்சியுடன் மேற்கொண்டு ஒழுக வேண்டும்.

ஜீவ ஒழுக்கம் ,ஆன்ம ஒழுக்கம் என்னும் இரு வகையான அரிய ஒழுக்கங்கள் திருவருள் துணை பெற்ற பின்னர் அன்றிக் கைகூடாது ;-- ஆதலால் அவ் ஒழுக்கங்களைப் பெற்று ஒழுக வேண்டுவதற்கும் ஆன நன் முயற்ச்சிகளில் பழக வேண்டும் .

அன்றியும் ;- இவ்வண்ணமாக ஒழுக்கங்களில் இயன்றமட்டில் ஒழுகப் பெற்று ,இடம் தனித்து இருத்தல்,இச்சையின்றி நுகர்தல்,தெய்வம் பராவல்,பிற உயிர்களுக்கு இரங்கல் ,பெருங்குணம் பற்றல்,பாடிப்பணிதல்,பத்தி செய்து இருத்தல்,முதலிய நற் செய்கைகளில் பலகால் முயன்று பழகிப் பழகி இருத்தல்வேண்டும் .

அன்றியும் ;--சைவம் ,வைணவம்..சமணம்,பவுத்தம் முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும்.,அச்சமயங்களில் குறித்த சாதனங்களும்,தெய்வங்களும்,கதிகளும்,தத்துவ சித்தி விகற்ப பேதங்கள் என்றும்,

அவ் வச்சமயங்களில் பலபட விரிந்த வேதங்கள், ஆகமங்கள் சாத்திரங்கள்,புராணங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்றும்,வேதாந்தம்,சித்தாந்தம் ,முதலாகப் பலபெயர் கொண்டு பலபட விரிந்த மதங்களும்,மார்க்கங்களும்,''சுத்த சன்மார்க்க அனுபவ'' லேச சித்தி பேதங்கள் என்றும்,கேள்விப் பட்டு இருக்கின்றோம்,

ஆகலில் அத்திரு வார்த்தைகளில் உண்மையான நம்பிக்கைக் கொண்டு,அவ் அவற்றின் உண்மைகளை உள்ளபடியே உணர்த்தப் பெற்று அவைகளின் அனுபவங்களை அடைதல் வேண்டுவது பற்றி ,அந்த அந்த மத ஆசாரங்களைச் சிறிதும் அனுட்டியாது ( கடைப்பிடிக்காது ) நிற்றலும் அவற்றில் ,சத்திய உணர்ச்சிக் கொள்ளாமல் விடுதலும் வேண்டும் என்கின்றார் வள்ளல்பெருமான் .

சமய மதங்களின் பொய்யான கற்பனை கதைகளை உண்மை என்று நம்பி மக்கள் ,பொய்யான சாமிகளுக்கு  அபிஷேகம் ,ஆராதனை செய்து ,அலங்கரிப்பதும் ஊர்வலம் வருதலும்,உணவுகளைப் படைப்பதும்,அவை கடவுளின் பிரசாதம் என்று, அதை உண்பதும் ,அதனால் பிரச்சனைகள் தீரும் என்றும் போதித்து வைத்து விட்டார்கள் .

கடவுளின் பெயரால் உணவு முறைகளை மக்களுக்கு கற்பித்து விட்டார்கள் அதனால் அனைவருக்கும் மரணம் வந்து கொண்டே உள்ளன.

மனித ஆன்மாக்கள் உணவு முறைகளை மாற்றி ,அருள் உணவை உட் கொள்ளுகின்ற வரையில் மரணம் வந்து கொண்டே இருக்கும்.

வள்ளல்பெருமான் உணவு முறைகளை மாற்றி அருள் உணவு உட்கொண்ட விதத்தைப் பற்றியும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் தந்த விதத்தைப் பற்றியும்  பதிவு செய்துள்ளப்பாடல் .

அன்னம் உண அழைக்கின்றாய் தோழி இங்கே நான்தான்
அமபலத்தே ஆடுகின்ற அண்ணல் அடிமலர்த்தேன்
உன்னை நினைத்து உண்டேன் என் உளத்தே வாழும்
ஒரு தலைமைப் பெருந் தலைவருடைய அருட் புகழாம்
இன்னமுதில் என்னுடைய அன்பு என்னும் நறுங்கனியின்
இரதமும் என் தனிக்கணவர் உருக்காட்சி எனும் ஓர்
கன்னல் உளே தனித்தெடுத்த தேம்பாகும் கலந்தே
களித்துண்டேன் பசி சிறிதும் கண்டிலேன் உள்ளகத்தே !

மாடமிசை ஓங்கும் நிலா மண்டபத்தே எனது
மணவாளர் கொடுத்த திரு அருளமுதம் மகிழ்ந்தே
ஏடவிழ் பூங்குழலாய் நான் உண்ட தொரு தருணம்
என்னை அறிந்திலேன் உலகம் தன்னையும் நான் அறியேன்
தேடறிய நறும்பாலும் தேம்பாகும் நெய்யும்
தேனும் ஒக்கக் கலந்தது எனச் செப்பினும் சாலாதே
ஈடறியாச் சுவைபுகல என்னாலே முடியா
தென்னடியோ அவ்வமுதம் பொன்னடிதான் நிகரே !

ஈங்கு சிலர் உண்ணுக என்று என்னை அழைக்கின்றார்
என் தோழி இவர்கட்கு என் புகல்வேன் அம்மா
ஓங்கு நிலா மண்டபத்தே என் கணவர் உடனே
உவட்டாத தெள்ளமுதம் உண்டு பசி தீர்த்தேன்
தேங்குழல் இங்கினி எனக்குப் பசிவரில் அப்போது
செப்புகின்றேன் இப்போது சிலுகிழைத்தல் வேண்டா
ஏங்கலற நீ அவர்க்குத் தெளிவிப்பாய் மற்றை
இருந்தவரும் விருந்தவரும் இனிது புசித்திடவே !  

வள்ளல்பெருமானுக்கு  பொருள் உணவை நிறுத்தி,அருள் உணவு கொடுத்த அருட்பெருஞ் ஜோதியின் பெருமையும்,புகழையும் அளவில்லாமல் புகழ்ந்து தள்ளுகின்றார்.அவர் பெற்ற அந்த பேரின்பத்தை, மனித தேகம் படைத்த அனைவரும் பெறவேண்டும் என்பது வள்ளல்பெருமானின் பேராசையாகும்.

அதற்காகத்தான் வள்ளல் பெருமான் வடலூரில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை'' ஆரம்பித்துள்ளார்,''சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை'' ஆரம்பித்துள்ளார் ,''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை'' தோற்றுவித்து உள்ளார் .அவைகளின் வழியாக,..அதில் உள்ள கொள்கையான  ஜீவ காருண்யமும் ,சத்விசாரமும்,செய்து இறைவனுடைய அருளைப் பெறவேண்டும்.என்பது வள்ளல் பெருமானின் அழுத்தமான கட்டளையாகும்.

வள்ளல்பெருமான் கட்டளையை  சிரமேற்க் கொண்டு உயிர்களின் மேல் உண்மை அன்பு,உண்மை இரக்கம்,உண்மை தயவை கடைபிடித்து ,இறைவன்மேல் உண்மை அன்பு,உண்மைதயவு உண்மைக் கருணைக் கொண்டு வாழ்ந்தால் நிச்சயம் இறைவனிடம் இருந்து அருளைப் பெறலாம்,நிச்சயம் மரணத்தை வெல்லலாம் நிச்சயம் பேரின்ப சித்தி பெருவாழ்வு பெறலாம்.

மனிதர்களாகப் பிறந்த அனைவரும் அசுத்த உணவு முறைகளை மாற்றி,சுத்த உணவைக் கடைபிடித்து ,புழுக்காத உணவை உட்கொண்டு,மனித உயிரை தக்கவைத்துக் கொண்டு வாழ்ந்தால் கருணை உள்ள இறைவனிடம் அருள் உணவைப் பெற்று மரணத்தை வென்று மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் வாருங்கள் வாருங்கள் வடலூர் வடதிசைக்கே .வந்தால் பெறலாம் நல்ல வரமே !

ஞானசரியை முதற்பாடல் !

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருள் அமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துது நாம் வம்மின் உலகியலீர்
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.


.

  .0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு