வியாழன், 21 மே, 2015

கடைவிரித்தேன் கொள்வாரில்லை கட்டிக் கொண்டேன் !

கடைவிரித்தேன் கொள்வாரில்லை கட்டிக் கொண்டேன் !

கடைவிரித்தேன் கொள்வாரில்லை கட்டிக் கொண்டேன்  என்று திரு அருட்பாவில் எந்த இடத்திலும், வள்ளல்பெருமான் எழுதவும் இல்லை, சொல்லவும் இல்லை.

இவை சமயவாதிகளால் பரப்பி விடப்பட்ட பொய்யான தகவல்களாகும்.

உலகில் விரித்துள்ள  உள்ள சமய மதக் கடைகளை இருக்கும் இடம் தெரியாமல் அப்புறப் படுத்த வந்தவர்தான் வள்ளல்பெருமானாகும்.

இனி கொஞ்சம் காலத்தில் சாதி,சமய மதங்களும்,இருக்கும் இடம் இல்லாமல் ஒழிந்துவிடும் .சன்மார்க்கம் ஒன்றே எல்லா உலகும் தழைக்கும் இது இறைவன் கட்டளையாகும்.

அவர் எழுதி உள்ள பாடல்களைப் பாருங்கள்.

ஆனந்த களிப்பு என்றதலைப்பில் ;--

ஆரண வீதிக் கடையும் --சுத்த
ஆகம வீதிகள் அந்தக் கடையும்
சேர நடுக்கடை பாரீர் --திருச்
சிற்றம்பலத்தே திருநட ஜோதி

வித்தெல்லாம் ஒன்று என்று நாட்டி --ஒரு
சொல்லாலே ஆமென்றச் சொல்லாலே காட்டி
சித்தெல்லாம் தந்தது பாரீர் --திருச்
சிற்றம்பலத்தே திருநட ஜோதி  

மெய் ஒன்றே சன்மார்க்கமே தான் --என்றும்
விளங்கப் படைப்பாதி மெய்த்தொழில் நீதான்
செய்யென்று தந்தது பாரீர் --திருச்
சிற்றம்பலத்தே திருநட ஜோதி.

என்று பலபாடல்களில் விளக்கம் தந்து உள்ளார்.

கடையை விரிக்க வந்தவர்தான் வள்ளல்பெருமான் கடையைக் கட்ட வந்தவர் அல்ல ! என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

மா,பொ,சிவஞானம் அவர்கள் எழுதிய வள்ளலார் கண்ட ஆன்மநேய ஒருமைப்பாடு என்ற நூலில், அவர் சன்மார்க்கம் வளரவில்லையே என்ற வருத்தத்தில் அப்படி எழுதி விட்டார் .

அது மக்கள் மத்தியில் பரவிவிட்டது .அவை அவர் சொந்த கருத்து .வள்ளல்பெருமான் கருத்து அல்ல என்பதை இதன் மூலம் மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் .

என்றும் அழியாது வளர்ந்து கொண்டே இருக்கும் மார்க்கம் வள்ளலார் தோற்றுவித்த சுத்த சன்மார்க்கமாகும்..அவற்றை யாராலும் அழிக்கவோ ஒழிக்கவோ மறைக்கவோ முடியாது.

திருநெறி ஒன்றே அதுதான் சமரச சுத்த சன்மார்க்க
சிவநெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடுமின் நீண்டு
வருநெறியில் எனை யாட் கொண்டு அருள் அமுதம் அளித்து
வல்லப சத்திகள் எல்லாம் வழங்கிய வோர் வள்ளல்
பெருநெறியில் சித்தாடத் திருவுளம் கொண்டு அருளிய
பெருங்கருணை வடிவினோடு வருதருணம் இதுவே
கரு நெறியில் வீழ்ந்து உழலாதீர் கலக்கம் அடையாதீர்
கண்மையினால் கருத்து ஒருமித்து உண்மை உரைத்தேனே !

என்று ஞான சரியை என்னும் தலைப்பில் 12,வது பாடலில் தெளிவு படுத்தி உள்ளார் .

திருஅருட்பாவை நன்றாக படியுங்கள் உண்மைகள் தானே விளங்கும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு