வெள்ளி, 29 மே, 2015

சன்மார்க்க அன்பர்களுக்கு ஓர் வேண்டுகோள் !

ஆன்மநேய அன்புடைய சன்மார்க்க அன்பர்களுக்கு ஓர் வேண்டுகோள் !

ஒரு அன்பர் வள்ளலார் படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு இருந்தார் .

வள்ளலார் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து இருப்பதுபோல் வெளி இட்டு இருந்தார் .அந்த படத்தை பார்த்தவுடன் என்மனம் மிகவும் வேதனை அடைந்தது.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன்
காலின் மேல் கால் வைக்கப் பயந்தேன்
பாட்டு அயல் கேட்கப் பாடவும் பயந்தேன்
பஞ்சணை படுக்கவும் பயந்தேன்
நாட்டிய உயர்ந்த திண்ணைமேல் இருந்து
நன்குறக் களித்துக் கால் கீழே
நீட்டவும் பயந்தேன் நீட்டிப் பேசுதலை
நினைக்கவும் பயந்தேன் எந்தாய் !

அடுத்த பாடலில் !

கையுற வீசி நடப்பதை நாணிக்
கைகளைக் கட்டியே நடந்தேன்
மெய்யுறக் காட்ட வெருவி வெண் துகிலால்
மெய் எலாம் ஐயகோ மறைத்தேன்
வையமேல் பிறர் தங் கோலமும் நடையும்
வண்ணமும் அண்ணலே சிறிதும்
பைய நான் ஊன்றிப் பார்த்ததே இல்லைப்
பார்ப்பனேல் பயமிகப் படைப்பேன் !

என்பதை மிகவும் அழகாக அற்புதமாக பதிவு செய்துள்ளார் ;--
வள்ளல்பெருமானின்,அடக்கம் ஒழுக்கம்,அவர் வாழ்ந்த வாழ்க்கை முறைகள் அவ்வளவையும் வெட்ட வெளிச்சமாக சொல்லியும் எழுதியும் வைத்துள்ளார்கள் .

வள்ளல்பெருமானின் உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல் இப்படியும் சன்மார்க்கிகள் வள்ளலார் மீது உள்ள அன்பின் காரணமாக இப்படி வெளியிடுகிறார்கள்.

இனிமேல் அப்படி உண்மைக்கு புறம்பான எந்தப்படமும் புதியதாக வெளியிடவேண்டாம்.

வள்ளல்பெருமான் .தன்னுடைய உருவமே வேண்டாம் என்றும், தன்னை வணங்க வேண்டாம் என்றும் அன்பர்களுக்கு சொல்லிக் கொண்டே வந்தார்

அவர் சொல்லியதை யாரும் கேட்பதாகவே இல்லை என்று மனம் நொந்து வேதனைப்பட்டார் .

இப்போது உள்ள வள்ளல்பெருமானின் படங்கள் எதுவுமே உண்மையான படங்கள் இல்லை என்பதை சன்மார்க்க அன்பர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

அவருடைய உண்மையான உருவம் கேமிரோவிலே விழ வில்லை.!.

வள்ளல்பெருமானின் உருவத்தை போட்டோ எடுக்க, சிறந்த போட்டோ கிராப்பரான சென்னை மாசிலாமணி என்பவர் பலமுறை போட்டோ எடுத்தும்,  தன்னுடைய உருவத்தை போட்டாவில் விழாவண்ணம் செய்தார்.

வள்ளல்பெருமான் உடம்பு ஒளி உடம்பாயிற்றே எப்படி போட்டோவில் விழும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

மேலும் வள்ளலார் மீது உள்ள அன்பின் காரணமாக ,அவருடைய உருவம் போல் ஒரு பொம்மையை செய்து அவரிடமே கொண்டுவந்து கொடுத்தார்கள். பொன்னான உடம்பை மண்ணாக்கி விட்டீர்களே என்று கீழே போட்டு உடைத்து விட்டார் .

தன்னுடைய உருவம் இருந்தால்,உண்மையான கடவுளை விட்டுவிட்டு நம்மை கடவுளாக வழிபாடு செய்ய ஆரம்பித்து விடுவார்கள் என்று எண்ணி தன்னுடைய உருவமே வேண்டாம் என்றும்.... தன்னை வணங்க வேண்டாம் என்றும் மக்களுக்கு சொல்லிக் கொண்டே வந்துள்ளார் .

சன்மார்க்கிகளுக்காக ஒருபாடலையே பதிவு செய்துள்ளார் !

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாள் வணங்க்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்
என்மார்க்கத்து எனை உமக்குள் ஒருவன் எனக் கொள்வீர்
எல்லாம் செய் வல்ல நமது இறைவனையே தொழுவீர்
புன்மார்க்கத்தவர் போலே வேறு சில புகன்றே
புந்தி மயக்கம் அடையாதீர் பூரண மெய்ச் சுகமாய்த்
தன்மார்க்கமாய் விளங்கும் சுத்த சிவம் ஒன்றே
தன் ஆணை என் ஆணை சார்ந்து அறிமின் ஈண்டே !

என்று தெரியப்படுத்தி உள்ளார்

சன்மார்க்கிகள் அன்பின் காரணமாக வள்ளல்பெருமான் சித்திப் பெற்ற பின்னாடி அவருடைய உருவம்போல் பல படங்களை வரைந்து ,அவைகளை புத்தகங்களிலே வெளியிட்டு உள்ளார்கள் .

அதுவும் நிற்பதுபோல்,உட்கார்ந்து இருப்பதுபோல்,கைகளைக் கட்டி இருப்பதுபோல் எல்லாப் படங்களும் உள்ளன.அதுவே போதுமானதாகும்.வேறு புதியதாக எந்தப்படமும் வேண்டாம்.

திருநீறு பூசிய படங்கள் எதுவும் வெளியிடாதீர்கள் .

தமிழ் நாட்டில் முதன் முதலில் வீபுதி இல்லாத படத்தை தயார்செய்து விட்டவன் ஈரோடு கதிர்வேல் ஆகிய நான்தான்.

நான் சன்மார்க்கத்திற்கு வருவதற்கு முன் எல்லாச் சங்கங்களிலும் எல்லாப் படங்களிலும் சைவ சமயச் சின்னமான வீபுதியை பூசிய படங்களாகவே இருந்தது.

பல போராட்டங்கள்,எதிர்ப்புகளுக்கு இடையே வள்ளல்பெருமானின் படங்களில் விபூதி இல்லாத படங்கள்,கட்டவுட்டர்கள் தயார் செய்து வெளியிட்டேன் .

அதற்குப் பிறகுதான் இப்போது வள்ளலார் படங்களில் விபூதி இல்லாமல் தயார் செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.

வள்ளலார் தெய்வநிலைய புத்தக வெளியீடுகளிலும் .விழா பத்திரிகைகளிலும் வள்ளலாருக்கு விபூதி இல்லாத படங்கள் போடவேண்டும் என்று போராடி வெற்றிக் கண்டவன்தான் இந்த ஈரோடு கதிர்வேல்.

வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கைகளின் படிதான் அனைத்து அமைப்புகளும் செயல்படவேண்டும்.

வடலூரில் உள்ள ,சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்,...சத்திய தருமச்சாலை , ..சத்திய ஞானசபை ..சித்திவளாகம்,..கருங்குழி,,,மருதூர் போன்ற இடங்களில் சுத்த சன்மார்க்க முறைப்படிதான் நடைபெற வேண்டும் என்று இன்னும் நிறைய போராட வேண்டி உள்ளது.

ஆதலால் வள்ளலார் படங்களை வைப்பதே வள்ளல்பெருமானுக்கு பிடிக்காது .அப்படி இருக்க அவரவர்கள் விருப்பம் போல் படங்களை வரைந்து வெளியிடவேண்டாம் என்று தயவுடனும் அன்புடனும் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.  






























0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு