செவ்வாய், 20 ஜனவரி, 2015

உலகில் உள்ள அணைத்து இடங்களிலும் ஜோதி விளங்க வேண்டும் !


உலகில் உள்ள அணைத்து இடங்களிலும் ஜோதி விளங்க வேண்டும் !

உலகில் உள்ள ஆலயங்கள்,மற்றும் சர்ச்சு,மசூதி போன்ற அனைத்து இடங்களிலும் வள்ளலார் சொல்லிய, காட்டிய அருட்பெருஞ்ஜோதி ஒளி விளங்க வேண்டும் அதுவே இறைவன் கட்டளையாகும் .

உலகில் தோன்றிய அருளாளர்கள் மெய்ப்பொருள் என்னும் கடவுளைக் காண்பதற்கு பல தவம், யோகம்,தியானம் வழிபாடு போன்ற வழிமுறைகளை கடைபிடித்து அலைந்து ,உண்மையான இறைவனைக் காணமுடியாமல் மறைந்து விட்டார்கள் .

அவர்கள் பல முயற்சிகளை செய்து தேடி அலைந்து, முடிவில் கடவுள் ஒளியாகத்தான் இருப்பார் என்று யூகமாக சொல்லி உள்ளார்கள் .

இந்து மதமும் முடிந்த முடிவாக.கடவுள் உருவமாக இல்லை என்பதை உணர்ந்து லிங்கம் போன்ற உருவம் அற்ற உருவத்தை வைத்து வழிபாடு செய்து வந்தார்கள்

இஸ்லாம் மதமும் கடவுள் ஒளியாகத்தான் இருக்கின்றார் என்பதை அறிந்து ஒளியே கடவுள் என்பதை அல்லா என்ற பெயர் வைத்து வழிபாடு செய்து வந்தார்கள் .

கிருத்தவ மதமும் கடவுள் ஒளியாகத்தான் உள்ளார் அவர் பர லோகத்தில் உள்ளார் என்பதை உணர்ந்து ஒளியே கடவுளாக வழிபட்டுக் கொண்டு வருகின்றனர் .

முக்கிய மதங்களான மூன்று மதங்களும் கடவுள் ஒளியாக இருப்பார் என்பதை வெளிப் படுத்தி உள்ளார்கள் .ஆனால் அவர்கள் பார்த்த, கண்ட ,உணர்ந்த ஒளி என்பது வேறு .

வள்ளல்பெருமான் கண்ட அருட்பெருஞ்ஜோதி என்பது வேறாகும்.அவர்கள் அண்டங்களின் இடைவெளியில் உள்ள ஒளியைக் கடவுள் எனக் கண்டார்கள் உண்மையான அருட்பெருஞ்ஜோதி என்னும் அருள் பேரொளியைக் காணவில்லை.வள்ளல்பெருமான் கண்டார் .

அண்டம் எல்லாம் பிண்டம் எல்லாம் உயிர்கள் எல்லாம் பொருள்கள்
ஆன வெலாம் இடங்கள் எலாம் நீக்கமற நிறைந்தே
கொண்ட வெலாம் கொண்ட வெலாம் கொண்டு கொண்டு மேலும்
கொள்வதற்கே இடம் கொடுத்துக் கொண்டு சலிப்பின்றிக்
கண்டம் எலாம் கடந்து நின்றே அகண்டமதாய் அதுவும்
கடந்த வெளியாய் அதுவும் கடந்த தனி வெளியாம்
ஒண்டகு சிற்றம் பலத்தே எல்லாம் வல்லவராய்
ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் !

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எப்படி இயங்கிக் கொண்டு உள்ளார் என்பதை மேலே கண்ட பாடலில் தெளிவுப் படுத்தி உள்ளார் .

வள்ளல்பெருமான் ஒருவரே உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி யைக் கண்டு கலந்து அதன்மயமாகி உலக மக்களுக்கு தெரியப் படுத்தி உள்ளார் .

கடவுள் எப்படி உள்ளார் எங்கு உள்ளார் எப்படி இயங்கிக் கொண்டு உள்ளார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வடலூரில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை '' தோற்று வித்து கடவுள் ஒளியாக உள்ளார் என்பதை வெளிப் படுத்தி உள்ளார் .அங்கு சாதி,சமய,மத என்ற வேறுபாடு இல்லாமல் உலகில் உள்ள மக்கள் அனைவரும் வந்து வழிபாடு செய்ய பொதுவான வழிப் பாட்டு முறையை அமைத்த உள்ளார்.

இனி உலகில் உள்ள ஆலயங்கள் மசூதிகள்,சர்ச்சுகள் .அனைத்திலும் உருவ வழிப் பாட்டை எடுத்துவிட்டு அருட்பெருஞ்ஜோதி என்னும் ஒளி வழிப்பாட்டை கொண்டு வந்தாலே போதுமானதாகும்.

இதை உலகில் உள்ள ஆட்சியாளர்களும் .ஆன்மீக சிந்தனை யாளர்களும் சட்டப்படி கொண்டு வந்து அமல் படுத்தினால் நாடும் நாட்டு மக்களும் நலம் பெறுவார்கள் .

அப்படிக் கொண்டு வந்தால் நாட்டில் சாதி,சமயம்,மதம் போன்ற பேய் ஆட்டம் ஒழிந்து விடும்.தீவிர வாதம்,பயங்கர வாதம்,நக்சலைட் போன்ற கொடுர செயல்கள் ஒடுங்கி விடும்,எல்லைதகராறு ,ராணுவ போராட்டம்,நாட்டுக்கு நாடு போர் போன்ற துன்மார்க்க செயல்கள் எல்லாம் இல்லாமல் மக்கள் மன அமைதியுடன் சுத்த சன்மார்க்க அறவழியில் வாழ்வார்கள் .

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள நீதித் துறை ,காவல் துறை,சிறைச்சாலை போன்ற செயல்கள் இல்லாமல் உலகம் அமைதி பூங்காவாக அமையும்.

வள்ளல்பெருமான் சொன்ன சுத்த சன்மார்க்கம் எங்கும் பரவி மக்கள் நல்லொழுக்கம் உள்ளவர்களாக மாறி விடுவார்கள் .

மனித நேயம் வளர்ந்து ஆன்ம நேயம் பரவி ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமையைக் கடைபிடித்து உலகம் எங்கும் அமைதி நிலவும்... வள்ளல்பெருமான் சொன்ன அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அருளைப் பெற்று,மக்கள் மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்வதற்கு வழி கிடைக்கும்

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல்பெருமானிடம் சொல்லிய சுத்த சன்மார்க்கம் உலகம் தோன்றும் .

உலகம் எலாம் போற்ற ஒளி வடிவனாகி
இலக அருள் செய்தான் இசைந்தே ...திலகம் என
நானே சன்மார்க்கம் நடத்து கின்றேன் நம் பெருமான்
தானே எனக்குத் தனித்தே .

முன்னுள்ள மார்க்கங்கள் யாவும் முடிந்தன
மன்னுள சுத்த சன்மார்க்கம் சிறந்தது
பன்னுளம் தெளிந்தன பதி நடம் ஓங்கின
என்னுளத் அருட்பெருஞ்ஜோதி எய்தவே !

வள்ளல்பெருமான் சொல்லியது அனைத்தும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லியது .ஆதலால் நிச்சயம் உலகம் எல்லாம் ஒளி நெறி என்னும் சுத்த சன்மார்க்க தனிநெறி,பெரு நெறி ,அருள் நெறி பரவியே தீரும்

ஆதலால் உலகில் உள்ள எல்லா ஆலயங்களிலும் அருட்பெருஞ்ஜோதி என்னும் அருள் ஒளி சுடர் விட எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுவோம்.சாதி ,சமய,மதம் அற்ற பொது சமுதாயம் உலகம் எல்லாம் ஒங்க வேண்டும் .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ,கொல்லா நெறி குவலயம் எல்லாம் ஒங்க வேண்டும்.

வாழ்க உலக உயிர்கள் ! வளர்க சுத்த சன்மார்க்கம் !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு