செவ்வாய், 20 ஜனவரி, 2015

உலகத்திற்கான பொது நெறியை வழங்கிய ஒப்பற்ற ஆசான்


உலகத்திற்கான பொது நெறியை வழங்கிய ஒப்பற்ற ஆசான் வள்ளலார் பிறந்த நாள் அக்டோபர் 5, 1823. அடிகளாரின் வான்புகழை கொண்டாடுவோம்!

இந்து மதமும் சைவ மதமும் தழைத்தோங்கி இருந்த காலக் கட்டத்தில், வள்ளலார் இந்த சமயங்களில் உள்ள புராணங்கள், கட்டுக் கதைகள் முதலானவற்றில் லட்சியம் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். ஆரியப் புராணங்களான இராமாயணம் மகாபாரதம் போன்றவற்றில் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தினார். 

கடவுள் என்பவர் ஒருவரே, பலர் அல்ல, அவர் ஒளியின் ஊடாக அண்ட சாரசரங்கள் அனைத்திலும் உள்ளார். ஒளியை கடவுளாக பாவித்து, உயிர் இரக்கமே கடவுள் வழிபாடாக கொண்டு , அன்பும், தயவு சார்ந்த வாழ்கையை வாழப் பழகுதலே உலகில் நிரந்தர அமைதியை நிலை நாட்டும். அதுவே சமரச சன்மார்க்க உலகத்தை உருவாக்கும் என்று வள்ளலார் போதித்தார்.

சாதிகள், மதங்கள், சமயங்கள், அனைத்தும் பொய் பொய்யே என்று அறுதியிட்டு கூறினார். சிறுதெய்வ வழிபாடு, சிலைகள் வழிபாடு வேண்டாம் என்றும் கூறி உலக மக்களுக்கு புதிய மார்க்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆரிய இந்து மதம் மக்களிடம் புகுத்தி வந்த நடைமுறைகளை முற்றிலும் மறுக்கச் சொன்னார் வள்ளலார். இறந்தவர்களை எரிக்க வேண்டாம் என்றும், இறந்தவர்களுக்கு திதி தவசம் முதலிய ஈமக் கிரியையை செய்தல் வேண்டாம் என்று அறிவுறுத்தினார். சிறு தெய்வ வழிபாடு செய்தல் வேண்டாம் என்று சொன்னதோடு அந்த தெய்வங்களின் பேரில் உயிர் பலியிட வேண்டாம் என்றும் கூறினார். 

கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஒரு பூசகர் தேவை இல்லை எனவும் , கடவுளை உண்மை அன்பால் நேரடியாக வழிபாடு செய்தல் வேண்டும் என்றும் , இயற்கை ஒளி வழிபாடே உண்மை வழிபாடு என்றும் போதித்தார். இயற்கையின் சகல சக்திகளையும் நேரே வள்ளலார் உள்வாங்கியதால், நாத்திகம் பேசுபவர்களை கடுமையாக கண்டித்தார் 

வள்ளலார். உண்மைக் கடவுளை, உண்மை அன்பால் வழிபாடு செய்தால் அக்கடவுளின் பூரண அருளை மனிதர்கள் பெறலாம் என்றும் , இயற்கை அருளின் துணைக் கொண்டு என்றும் அழியாத பேரின்ப வாழ்வில் மனிதர்கள் என்றும் வாழலாம் என்று உலகிற்கு வழிகாட்டினர் வள்ளலார்.

மதம் என்னும் பேய் பிடித்து மக்களிடம் பல்வேறு நம்பிக்கையை, பண்பாட்டை , மொழியை திணிக்க முயலும் மதவாதிகளை கடுமையாக சாடுகிறார் வள்ளலார். சாதியும் மதமும் சமயமும் மனிதற்கு உண்மையை உணர்த்தாது துன்பத்தையே தரும் என்பதை தெளிவாக உணர்த்துகிறார வள்ளலார். இப்படி ஒரு தெளிவான அன்பும் அற நெறியும் இயற்கை சார்ந்த ஒரு மார்க்கத்தை வள்ளலார் தவிர உலகில் வேறு யாருமே இது வரை வழங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டையும் இந்திய நாட்டையும் ஒரு மதத்தின் கீழ் கொண்டு வந்து மதவாதத்தை மக்களிடம் கட்டவிழ்த்து நாட்டை கலவர பூமியாக்கத் துடிக்கும் அத்தனை சக்திகளுக்கும் வள்ளலாரின் அறிவுரை தற்போது மிகவும் அவசியமாகிறது.

இவ்வாறு அரும்பெரும் கருத்துக்களை உலகிற்கு வழங்கிய வள்ளலாரை போற்றுவது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். போற்றுவது மட்டுமல்லாது அவர் கூறிய வழியில் நாம் அனைவரும் நடக்க முயற்சிக்க வேண்டும். தமிழகத்திற்கு தமிழ் மொழியில் அவர் வழங்கிய அருட்பாக்களை நாம் உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் மொழிபெயர்த்து கொண்டு செல்லவேண்டும். 

குறிப்பாக இன வெறியை உமிழ்ந்து இந்தி, சமஸ்கிருத மொழியை அனைவரின் மீதும் திணிக்கும் ஆதிக்க வட இந்திய மக்களுக்கு வள்ளலார் காட்டிய நன்னெறியை நாம் கொண்டு செல்வோம். இந்திய ஒன்றியத்தில் நல்லாட்சி மலர இந்திய அரசு வள்ளலார் காட்டிய அன்பு வழியில் பயணிக்க வேண்டும். அப்போது தான் கருணையில்லா இந்த ஆட்சி முடிவுக்கு வரும். நல்லாட்சி மலரும். அனைத்து மாநில மக்களும் நிம்மதியாக வாழ்வாங்கு வாழ்வார்கள். பேதங்கள் நீங்கி மனிதம் தழைத்து ஓங்கட்டும் ! வாழ்க வள்ளலாரின் வான்புகழ் !

பிணக்கும் பேதமும் பேயுல கோர்புகல்
கணக்குந் தீர்த்தெனைக் கலந்தநல் நட்பே

- அருட்பெருஞ்சோதி அகவல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு