திங்கள், 1 டிசம்பர், 2014

இன்பமும் துன்பமும் இல்லா வாழ்க்கை !

இன்பமும் துன்பமும் இல்லா வாழ்க்கை !

உலகில் வாழும் மக்களுக்கு இன்பமும் துன்பமும் கலந்த வாழ்க்கை இயற்கை என்பார்கள் .அது இயற்கை என்பது அறியாமையாகும்..எப்படி வாழ வேண்டும் என்ற உண்மை தெரியாமல் வாழ்வதால் இன்பமும் துன்பமும் வந்து கொண்டே இருக்கின்றன.

உலக மக்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்பது வள்ளலார் வகுத்து தந்த பொது நெறிதான் சுத்த சன்மார்க்க நெறியாகும்.அவரால் தோற்றுவிக்கப் பட்ட சுத்த சன்மார்க்க நெறியை அறிந்து தெரிந்து அதை சார்ந்து வாழ்ந்தால் இன்பமுடன் வாழலாம் .

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க பொது நெறியை மனித சமுதாயத்திற்கு வழி காட்ட வேண்டுவது இன்றைய சன்மார்க்கிகளின் கடமையாகும்.

நாம் யார் ? கடவுள் யார் ? அவர் எங்கே இருக்கின்றார் ? அவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பை எப்படி அறிந்து கொள்வது என்பதை மக்கள் தெரிந்து கொண்டால் வாழ்க்கை இன்பமயமாய் இருக்கும்.உண்மையை அறிந்த சன்மார்க்க அன்பர்கள் அன்புடனும் பணிவுடனும் ,அனைவரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு தெளிவுப் படுத்த வேண்டும்.

ஒன்றான தனிப்பெரும் தலைமை தெய்வமாகிய அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர்,  தயவு கருணை வண்ணமாக இருப்பதால்,எல்லா ஜீவர்களின் தலைமை பீடமாகிய புருவ மத்தியில் உருவம் இல்லா அருவ நிலையில் ஆன்மா என்னும் உள் ஒளியாக இருந்து கருணையுடன் இயங்கிக் கொண்டு உள்ளார் என்னும் உண்மையை மக்களுக்கு காட்டுவதற்கு புற வழிபாடாகிய தெய்வ ஆலயங்களை கட்டி தெய்வ அடையாளச் சின்னங்களைப் பயன் படுத்தி புற வழிப்பாட்டு முறையைக் கொண்டு வந்து உள்ளார்கள் .

ஆதலால் புறத்தில் கடவுள் இருப்பதாக எண்ணி எண்ணி,மக்கள் புற வழிபாடு செய்து,அதனால் எந்த பயனும் இல்லாமல் அழிந்து கொண்டே உள்ளார்கள்.

ஆதலால் அந்த அடையாள சின்னங்கள் எதையும் அழிக்காமல் அங்கே வள்ளலார் காட்டிய ஒளியே கடவுள் என்னும் உண்மையை வைத்து வழிபாடு செய்தல் வேண்டும்.அந்த ஒளியை வழிபாடு செய்ய செய்ய ஆன்ம ஒளியை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகள் நீங்கி அக வழிபாட்டிற்கு வந்து விடுவார்கள்.

வள்ளல்பெருமான் சுத்த சன்மார்க்கத்திற்கு வித்திட்டு வழிகாட்ட வந்தவர் அவர் வடலூரில் சத்திய ஞான சபையைத் தோற்றுவித்து அதன் உள் வளர் பதியாகிய அருட்பெருஞ் ஜோதியாகக் கண்டு கொள்ளச் செய்து உள்ளார் .

இந்த தெளிவோடு உலகில் உள்ள எல்லா ஆலயங்களிலும் தெய்வ உண்மையையும் தத்துவ கற்பனைகள் அற்ற கற்பனாதீத அருள் ஒளி வண்ணமாக யாவரும் கண்டு அன்பு,தயவு,கருணை,வழி பாட்டிற்கு இடமாக விளங்கச் செய்தால் மக்கள் வேற்றுமை இல்லா ஒற்றுமை காணும் கடவுளைக் காணமுடியும்.

அப்படி வழிபாடு செய்து வந்தால் மக்கள் இன்பம் துன்பம் இல்லாமலும் ஏற்றத் தாழ்வு இல்லாமலும்,உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற வேறுபாடுகள் இல்லாமல்  அனைவரும் சமமான வாழ்க்கை வாழ முடியும்.

வள்ளல்பெருமான் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை கடைபிடித்து வாழ்ந்து கொண்டு இருக்கும் சன்மார்க்க அன்பர்கள் மக்களுக்கு போதிக்க வேண்டும்.எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே என் தந்தை அருட்பெருஞ்ஜோதியின் நின் அருட் புகழை இயம்பி இடல் வேண்டும்.என்ற வள்ளல்பெருமான் வாக்கை நிறைவேற்ற வேண்டும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

      


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு