ஞாயிறு, 30 நவம்பர், 2014

உண்மை அறிவு !

உண்மை அறிவு !
நம்பிக்கைக்கும் ,மூடநம்பிக்கைக்கும்,பகுத்தறிவுக்கும் மயிரிழை அளவே வித்தியாசம் உள்ளது. அதைத் துல்லியமாக இனம்பிரித்து புரிந்துக்கொள்வதே உண்மையான பகுத்தறிவு.
மனோசக்தியே மந்திர சக்தி.என்பார்கள் அந்த மனோசக்தியை எப்படி பயன் படுத்திக் கொள்வது என்பதை உண்மையான அறிவைக் கொண்டு சிந்திப்போம்.
எப்படி மின்சாரத்தைப் பற்றிப் படித்து,தெரிந்து அதை அனுபவிக்க மின்சார விசிறியும், மின் சாதன கருவிகளையும்,மின்சாரத்தால் இயங்கும் மின்சார ரெயிலும் ஓட்டுகிறோமோ, அதைப்போல மனதைக் கட்டுப்படுத்தும்,மனதைத் திருப்பும் வழியைக் கற்றுக்கொண்டோ மானால், நம் மனோசக்தியின் மூலம் நாம் விரும்பும் பல்வேறு காரியங்களை சாதிக்கலாம்.
நமது நாட்டில் பலர் ஏழைகளாக இருப்பதற்கும், சிலர் சுகமாக எல்லா வசதிகளுடன் வாழ்வதற்கும் காரணம், அவர்கள் படிப்பில்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான்.அனைவரும் சொல்லிக் கொண்டு உள்ளார்கள் .
அந்தப் படிப்பைப் பெற்றவர்கள் கூட படிப்பிலே எது முக்கியம் என்று தெரிந்து கொள்வதில்லை. அந்த முக்கியமான விஷயம் ஏட்டுப் படிப்பால் தெரிந்து கொள்ள முடியாது.
மனதை திருப்பி மாற்றி எங்கு செல்ல வேண்டுமோ அங்கு திரும்பச் செல்ல  வைக்கும் முறைக்கு தியானம் என்று சொல்லப்படும் ..
இன்று அமெரிக்காவில் பல பல்கலைக் கழகங்களிலும் மற்ற நாடுகளிலும்  தியானத்தைப் பற்றி சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அதேபோல் ஊருக்கு ஊர் தியானம் சொல்லிக் கொடுக்கும் சங்கங்கள் இருக்கின்றன.
ஒரு மனிதன் செல்வந்தனாக இருப்பதற்கும் மற்றொருவன் ஏழையாகவும் வாழ்வதற்கும் காரணம், அவர்கள் மனதில் கொண்டிருக்கும் எண்ணங்கள், ஆசைகள் தான் என்று மனவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். அதேபோல அந்த ஆசைகளை எப்படி சீர்படுத்தி, வாய்க்கால் வெட்டி, பாத்தி கட்டி,தண்ணீர் விட்டு செல்ல வேண்டிய இடத்திற்கு செலுத்தி பயிர் இடுவது போல்

மனதை எங்கு செலுத்த வேண்டுமோ அங்கு செலுத்துவது தான் தியானம் என்பதும்,மனதை ஒருமுகப் படுத்துதல் என்பதாகும்..
பூதக் கண்ணாடியைப் பார்த்திருப்பீர்கள். கீழே ஒரு தாளை வைத்து பூதக் கண்ணாடியை சூரியனுக்கு எதிராகப் பிடித்தால், சூரியக் கதிர்கள் ஒருமுகப்பட்டு தாள் எரியத் தொடங்குகிறது. பூதக் கண்ணாடி சூரிய சக்தியை ஒரு முகப்படுத்துகிறது. ஒருமுகப்படுத்தும் போது சக்தி அதிகமாகிறது. அதன் வலிமை, எரிக்கும் சக்தி அதிகமாகிறது.அதேபோல் 
 நம் மனதை, மனச்சக்தியை கொண்டு, அந்த சக்தியை ஒருமுகப்படுத்தும் மார்க்கங்களைத்தான் 'ஜெபம்' என்றும் 'தியானம்' தவம் என்றும் சொல்லுகிறோம். உதடுகள் அசைந்து ஒலியுடன் சொல்வதை 'பிரார்த்தனை ,ஜெபம்' என்றும், மனதிற்குள் எண்ணங்களை அடக்குவதை 'தியானம்' என்றும் சொல்கிறோம். யோகிகள் மனதை ஒருமுகப்படுத்த சில மந்திரங்களை இரகசியமாகச் சொல்லிக் கொடுப்பார்கள். எந்த எண்ணமும் மனதிற்குள் இரகசியமாக வைக்க வைக்க, அதற்கு வலிமை அதிகமாகிறது. இதுதான் இரகசியமாகச் சொல்வதின் காரணம்.
மந்திரம் என்று எதைச் சொல்கிறார்கள்? ஒரு சொல்லை அதாவது மந்திரத்தை ஆழ்மனம் திரும்பத் திரும்பச் சொல்வது தான் மந்திர சக்தியை  ஏற்படுத்துகிறது. எதைத் திரும்ப திரும்பச் சொல்கிறோமோ அதன் பொருள் நம் ஆழ் மனதில் பதிந்து நமக்கு எப்போதும் மந்திர சக்தி உதவத் தயாராயிருக்கிறது.

அந்த மந்திரத்தைக் கொண்டு "வழிகாட்டு" என்று முறையிட்டோமானால் அந்த மந்திர சக்திக்கு தகுந்த சக்தி நமக்கு வழிகாட்டும்.
திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் விஷயங்கள் ஆழ்மனதிற்குப் போகின்றன. ஆழ்மனதில் போடப்பட்ட விஷயங்களை ஆழ்மனம் நிறைவேற்றி வைக்கிறது. இதுதான் உண்மை.அது முழுமையானதா என்றால் முழுமையானது அல்ல .அதனால் ஒரு சிறிய சக்தி என்னும் ஒளி கிடைக்கின்றது.

முன்னூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பிரான்சு நாட்டு மருத்துவர், "நான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகையிலும் முன்னைவிட ஆரோக்கிய மானவனாக இருக்கிறேன்" என்று நோயாளிகள் திரும்பத் திரும்பச் சொல்லச் செய்ததன் மூலம் அவர்களது நோயைக் குணப்படுத்தினார். இது இன்னும் "நமக்கு நாம் சொல்லிக் கொள்ளுதல்" என்ற தத்துவத்தின் கீழ் மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது.

இப்படியாக மனதை ஒருமுகப்படுத்தும் பழக்கந்தான், நாளைக்கு நாம் ஒரு வேலையைச் செய்யும்போது மனதை அந்த விஷயத்தில் ஒருமுகப்படுத்துவது எளிதாகிறது. இதனால் அந்த முயற்சிகள் வெற்றியடைகின்றன.

ஜெபம், தியானம் தவம் மூலம் மனதை ஒருமுகப்படுத்தும் திறனையும், நம் ஆசைகளை, இலட்சியங்களை, ஆழ்மனதிற்கு அனுப்பி வைக்கும் முறையையும் கற்றுக் கொள்கிறோம்.

சுயகட்டுப் பாட்டின் முக்கியமான பாடம் இதுதான். இதை விடாது நீங்கள் பயிற்சி செய்து பார்த்தீர்களானால், அதி ஆச்சரியமான நிகழ்ச்சிகள் உங்கள் வாழ்வில் நேர்வதைப் பார்ப்பீர்கள்; வெற்றி உங்கள் கைக்குள் வந்து சேரும். இதுவே இத்தனை நாள் அதிகம் பேருக்கு சொல்லிக் கொடுக்கப்படாத இரகசியமாக இருந்தது

அருட்பெருஞ்ஜோதி தியானம் !

உலக மக்களுக்கு தெரியப்படுத்த வள்ளல்பெருமான் ஒரு பெரிய மகா மந்திரத்தை நினைத்து தியானம் செய்ய சொல்லி உள்ளார்கள் .அந்த மந்திரத்தை சொல்லும் போது கண், மனம்,ஜீவன் ,உள்ளம் அனைத்தும் வெளியே செல்லாமல் உள் ஒளியான ஆன்மாவைத் தொடர்பு கொண்டு அதையே இடைவிடாது,நினைந்து தியானம் செய்ய வேண்டும்.அதுவே சத் விசாரம் என்கின்றார் வள்ளலார் .

மற்ற மந்திரங்கள் அனைத்தும் அந்த அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ..தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்னும் மந்திரத்தின் உள்ளே அடங்கி விடுகின்றது .அதனால் அதற்கு மகா மந்திரம் என்று பெயர் வைத்துள்ளார்.

நாம் அந்த மகா மந்திரத்தை இடைவிடாது சொல்லிக் கொண்டே புருவ மத்தியில் மனத்தை செலுத்த வேண்டும்..அப்போது மனம் வெளியில் செல்லாமல் ஆன்மாவை தொடர்பு கொள்வதால் நம் உடம்பின் தலைப் பாகத்தில் உள்ள ஆன்மாவில் இருந்து பேராற்றல் என்னும் மாபெரும் சக்தி உடல் முழுவதும் பரவி ஒரு பேரானந்தம் உண்டாகும் .

அந்த ஆனந்தம் தான் மனிதன் அடைய வேண்டிய ஆனந்தமாகும்.அதை அனுபவிப்பவன் மனித நிலையில் இருந்து கடவுள் நிலைக்கு மாறுகின்றான் .

இதையே தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தியானம் செய்கின்றவர்களுக்கு மனத்திற்கும் ஆன்மாவிற்கும் தொடர்பு உண்டாகி, அதிகமான சுத்த உஷ்ணம் உண்டாகும் .அந்த சுத்த உஷ்ணத்தினால் ஆன்மாவில் இருந்து அருள் என்னும் திரவம் சுரக்கும்.அந்த அருளைப் பெற்றவர்களுக்கு உலகின் அனைத்து உண்மைகளும்.வெட்ட வெளிச்சமாக தெரியும்.

வள்ளலார் சொல்லிய சன்மார்க்க தியானத்தை செய்பவர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியும் இன்பமும்,மேலும் என்றும் அழியாத உடம்பும் உயிரும் பாதுகாக்கப் படும். அதற்கு ஞான மருந்து என்று பெயர் வைத்து உள்ளார் வள்ளல்பெருமான்.

என்றே எனினும் இளமையோடு இருக்க நன்றே தரும் ஒரு ஞான மாமருந்து என்கின்றார்.அந்த ஞானமருந்தை தியானத்தின் வழியாக பெற்று பெருங் களிப்பை அடைவோம்,பெறுவோம்.இதுவே உண்மை அறிவாகும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு