திங்கள், 17 நவம்பர், 2014

திருஅருட்பா - பதிகம் 97 - நடராஜபதி மாலை,..

திருஅருட்பா - பதிகம் 97 - நடராஜபதி மாலை,..
பக்கம் 292 - பாடல் 1369 [28]
=================================================
சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம்
தான்என அறிந்தஅறிவே
தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே
தனித்தபூ ரணவல்லபம்
வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்
விளையவிளை வித்ததொழிலே
மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே
வியந்தடைந் துலகம்எல்லாம்
மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை
வானவர மேஇன்பமாம்
மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்
மரபென் றுரைத்தகுருவே
தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத்
தேற்றிஅருள் செய்தசிவமே
சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே
தெய்வநட ராஜபதியே.
=================================================
மெய்த்தொழில்கள் 4 என்று குறிக்கப்படுகிறது. அவை யாவன?

1. சாகாத கல்வி
2. ஒன்றே சிவம் என அறிவு
3. மலம் ஐந்தும் வென்ற வல்லபம்
4. வேகாத கால்
5,மெய்த்தொழில்
6,இன்பம் .

உலகியல் கல்வி சாகும் கலவி,அருளைப் பேரும் கல்வி சாகாக் கல்வி !

உலகியலில் உள்ள தெய்வங்கள் யாவும் தத்துவங்கள் ,உண்மையான கடவுள் அருட்பெருஞ்ஜோதி என்னும் சுத்த சிவம் என்பதை அறிந்து கொள்வதே அறிவு என்பதாகும். !

நம்முடைய உடம்பில் உள்ள ஆன்மா என்னும் உள் ஒளியை மறைத்துக் கொண்டு இருக்கும் ஐந்து மலங்களாகிய ஆணவம்,மாயை ,மாமாயை,பெருமாயை,கன்மம் என்னும் மலங்களை அறிந்து அவற்றை வெல்லும் அதாவது நீக்கிக் கொள்ளும் வல்லபமே வல்லபம்,!

நாம் சுவாசிக்கும் கால் என்னும் காற்று வெந்து கொண்டு உள்ளது .அதை நிறுத்தி வேகாத காலாகிய அமுதக் காற்றை சுவாசிப்பதே வேகாத காலாகும் .!

நாம் செய்யும் தொழில் கருவிகளை வைத்துக் கொண்டு செய்கிறோம் .அது அழிந்து விடும் .எந்தக் கருவியும் இல்லாமல் நினைத்த மாத்திரத்தில் அருளைக் கொண்டு எதையும் உருவாக்கும் தொழிலே மெய்த் தொழிளாகும் !

மேலே கண்ட சாகாக் கல்வி,மெய் அறிவு,,மலங்களை வென்ற வல்லபம், வேகாத காலாகிய அமுதக் காற்றை சுவாசிக்கும் கலையைக் கற்றுக் கொண்டு ,தோற்றுவித்தல்,இயக்குவித்தல்,அடக்குவித்தல்,மயக்குவித்தல்,
தெளிவித்தல் ஆகிய ஐந்தொழில் செய்வதே மெய்த் தொழிலாகும் .

ஒரு ஆன்மா என்னும் உள் ஒளி மேலே கண்ட உண்மைகளை உணர்ந்து அதைக் கற்று அதன்படி வாழ்ந்து அதனால் அடையும் இன்பமே இன்பமாகும் .அதுவே பேரின்பம் .அதுவே மரணத்தை வெல்லும் மரணம் இல்லாப் பெரு வாழ்வு என்பதாகும்.அதுவே வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க மரபு,என்பதாகும்.

இந்த சுத்த சன்மார்க்க மரபை கடைபிடிப்பவர்களே சன்மார்க்கிகள் .அதனால்தான் சாகாதவனே சன்மார்க்கி என்பார் வள்ளலார் .

இந்த உயர்ந்த பிறப்பாகிய மனிதப் பிறப்பினால் மட்டுமே முடியும் .இந்த மனிதப் பிறப்பு கொடுக்கப் பட்டதே ,மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாகி வாழ்வதே மனிதப் பிறப்பின் லட்சியமாகும் .

மனிதப் பிறப்பு எடுத்த நாம் ஒவ்வொருவரும் சுத்த சன்மார்க்க மெய் நெறியைக் கடைபிடித்து வாழ வேண்டும் என்பதே கடவுளின் கட்டளை யாகும். முயற்சி செய்வோம் முடியாதது எதுவும் இல்லை .வள்ளல்பெருமான் வாழ்ந்து காட்டி உள்ளார் .நாமும் வாழ்ந்து காட்டுவோம்

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு