வெள்ளி, 7 நவம்பர், 2014

வள்ளலார் போல் நாம் மரணத்தை வெல்ல முடியாதது ஏன் ?


வள்ளலார் போல் நாம் மரணத்தை வெல்ல முடியாதது ஏன் ?

வள்ளல்பெருமான் தமது உடல்,பொறு,ஆவி மூன்றையும் இறைவனுக்கே உரிமை ஆக்கினார் .அவர் எப்படி கொடுத்தார் என்பதை பாட்டாலும் உரையாலும் பல இடங்களில் தெரிவித்து உள்ளார் .

சத்தியம் சத்தியம் அருட்பெருஞ் ஜோதித்
தந்தையேரே எனைத் தாங்கு கின்றீரே
உத்தமம் ஆகும் உம திரு சமுகத்தில் என்
உடல் பொருள் ஆவியை உவப்புடன் அளித்தேன்
இத்தகை உலகிடை அவைக்கும் என் தனக்கும்
ஏதுஞ் சுதந்திரம் இல்லை இங்கு இனி நீர்
எத்தகை ஆயினும் செய்து கொள்கிற்பீர்
எனைப் பள்ளி எழுப்பி மெய் இன்பம் தந்தீரே !

மெய் இன்பப் பேறு என்னும் பதிகத்தின் பத்துப் பாடல்களிலும் உடல் பொருள் ஆவியை இறைவனுக்கே உரிமை யாக்கியதாக கூறப்பட்டு உள்ளது மேலும்

எனது சுதந்தரமாகக் கொண்டு இருந்த தேக சுதந்தரத்தையும் ,ஜீவ சுதந்தரத்தையும் ,போக சுதந்தரத்தையும் தேவரீர் திருவருட்கே சர்வ சுதந்தரமாகக் கொடுத்து விட்டேன்.கொடுத்த தருணத்தே ,இத் தேகமும் ஜீவனும் போகப் பொருள்களும் சர்வ சுதந்தரராகிய கடவுள் பெரும் கருணையால் கொடுக்கப் பெற்றனம் அன்றி ,நமது சுதந்தரத்தால் பெற்றன அல்ல என்னும் உண்மையை அருளால் அறிவிக்கவும் அறிந்து கொண்டேன் .

இனி இத் தேகத்தின் இடத்தும்,ஜீவன் இடத்தும்,போகப் பொருள்கள் இடத்தும் தேவரீர் திருவருள் சாட்சியாக எனக்கு எவ்விதத்தும் யாதோர் சுதந்தரத் தோற்றமும் தோற்ற மாட்டாது ,தேவரீர் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே வைத்து அருளி ,மரணம்,பிணி,மூப்பு,பயம்,துன்பம் முதலிய அவத்தைகள் எல்லா வற்றையும் தவிர்த்து ,இத் தேகத்தையே நித்தியா தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல் வேண்டும்.இவை உரை நடைப்பகுதியில் கூறியதாகும்.

இங்கனம் பாட்டாலும் உரையாலும் தமது உடல் பொருள் ஆவியை இறைவனுக்கே அர்ப்பணித்து,என் உடல் பொருள் ஆவியை நீ எடுத்துக் கொண்டு உன் உடல் பொருள் ஆவியை எனக்கு அளிப்பாய் என வேண்டுகிறார் .கொடுத்தார் .மேலும்

படமுடியாது இனித் துயரம் படமுடியாது
பட்டது எல்லாம் போதும் இந்தப் பயம் தீர்த்து இப்பொழுது என்
உடல் உயிர் ஆதியை எலாம் நீ எடுத்துக் கொண்டு உன்
உடல் உயிர் ஆதியை எல்லாம் உவந்து எனக்கே அளிப்பாய்
வடலுறு சிற்றம் பலத்தே வாழ்வாய் என் கண்ணுன்
மணியே என் குரு மணியே மாணிக்க மணியே
நடன சிகாமணியே என் நவமணியே ஞான
நன்மணியே பொன் மணியே நடராஜ மணியே ...

என்னும் பாடலின் வாயிலாக வள்ளல்பெருமான் வேண்டிய வண்ணமே பெருமானாரது உடல் பொருள் ஆவியை இறைவன் எடுத்துக் கொண்டு தனது உடல் பொருள் ஆவியை பெருமானாருக்குத் தந்தான் .இங்கனும் இருவரும் ( (பெருமானாரும் இறைவனும் ) உடல் பொருள் ஆவியை மாற்றிக் கொண்டார் என்பதை .

என் உயிரும் என் உடலும் என் பொருளும் யானே இசைந்து கொடுத்திட வாங்கி இட்டு அதன் பின் மகிழ்ந்தே தன உயிரும் தன உடலும் தன பொருளும் எனக்கே தந்தார் எனவும் தெளிவுப் படுத்துகின்றார்.

என்னையும் என் பொருளையும் என் ஆவியும் தான் கொண்டு என்பால் தன்னையும் தன பொருளையும் தன ஆவியையும் களித்து அளித்த தலைவன் எனவும்,....என் உடலும் என் பொருளும் என் உயிரும் தான் கொண்டான் .தன உடலும் தன பொருளும் தன உயிரும் என்னிடத்தே தந்தான் எனவும்,....  தம் தேகம் எனக்கு அளித்தார் தம் அருளும் பொருளும் தம்மையும் இங்கு ஈனக்கு அளித்தார் எனவும் வள்ளல்பெருமான் புகல்வதால் தெரிந்து கொள்ளப் படுகின்றது.

என் உயிரும் என் உடலும் என் பொருளும் யானே
இசைந்து கொடுத்திட வாங்கி இட்டதன் பின் மகிழ்ந்தே
தன உயிரும் தன உடலும் தன பொருளும் எனக்கே
தந்து கலந்து எனைப் புணர்ந்த தனித்த பெருஞ் சுடரே
மன் உயிருக்கு உயிராகி இன்பமுமாய் நிறைந்த
மணியே என் கண்ணே என் வாழ் முதலே மருந்தே
மின்னிய பொன் மணி மன்றில் விளங்கு நடத்தரசே
மெய்யும் அணிந்து அருள்வோய் என் பொய்யும் அணிந்து அருளே.

என்னையும் என் பொருளையும் என் ஆவியையும்
தான் கொண்டு இங்கு என்பால் அன்பால்
தன்னையும் தன பொருளையும் தன ஆவியையும்
களித்து அளித்த தலைவன் தன்னை
முன்னையும் பின்னையும் எனக்கே முழுத்துணையாய்
இருந்த முழு முதல்வன் தன்னை
அன்னையைச் சிற்றம் பலத்து என் அருட்பெருஞ் ஜோதியைப்
பெற்றேன் அச்சோ அச்சோ ...

என்னும் பாடலின் விளக்கத்தால் தெரிந்து கொள்ள வேண்டும் .
மேலே கண்ட உண்மைகளை உணர்ந்து அதன்படி வாழ்ந்தால் மட்டுமே  நாமும் மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழலாம் .

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

1 கருத்துகள்:

29 பிப்ரவரி, 2016 அன்று PM 7:22 க்கு, Blogger Unknown கூறியது…

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு