புதன், 5 நவம்பர், 2014

சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ?


சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ?

மார்க்கம் என்பது வழி ! வழி என்பது சத் என்னும் பொருளின் உண்மையைத் தெரிவிக்கின்ற மார்க்கம் ஆகையால் எவ்வகையிலும் உயர்வு உடையது சுத்த சன்மார்க்கம் என்பதாகும்.

சமய மதங்களின் சன்மார்க்கம் !

சமய சன்மார்க்கம் ,மத சன்மார்க்கம் ஆகிய இவற்றிக்கு உள் அடங்கிய சன்மார்க்கம் ஆனந்தம்.அதில் சமய சன்மார்க்கம் 36.அதை விரிக்கில் ஆறு கோடியாம்.இது போலவே மதத்திலும் 36, மேற்குறித்த சமயம் மதங்களிலும் ஏம சித்தி, தேக சித்தி முதலியவைகள் உண்டு .

அவை சமய மதங்களில் சொல்லுகின்ற கர்த்தர் ,மூர்த்திகள் ,ஈஸ்வரன் ,பிரமம்,சிவம்,முதலிய தத்துவங்களின் காலப் பிரமாண பரியந்தம் இருப்பதே ஒழிய அதற்கு மேல் இராது.

சமய மதங்களிலும் சமரசம் உண்டு.வேதாந்த சிந்தாந்த சமரசம்.யோகாந்த கலாந்த சமரசம்,இதற்கு அதீதம் ஷடாந்த சமரசம், இதற்கு அதீதம் சன்மார்க்க சமரசம்.இதற்கு அதீதம் சுத்த சமரசம்.ஆதலால் சுத்த சமரசத்தில் சன்மார்க்கத்தைச் சேர்க்கத் சுத்த சமரச சன்மார்க்கமாம் .இவை பூர்வோத்திர நியாப்படி கடைதலைப் பூட்டாக ,சமரச சுத்த சன்மார்க்கம் என மறுவின என்று வள்ளல்பெருமான் தெளிவு படுத்தி உள்ளார் .

சுத்த சன்மார்க்கம் !

ஆன்மாவுக்கு ஆனன்னியமான அருள் எப்படியோ அதைப் போல் சுத்த சன்மார்க்கத்திற்கு ஆனன்னிய மாக இருப்பது சர்வ சித்தியாம்.சுத்த சன்மார்க்கத்திற்கு படி மூன்று....ஷடாந்தங்களின் பொதுவாகிய ஷடாந்த சன்மார்க்கம் ஒன்று...சமரச சன்மார்க்கம் ஒன்று,..சுத்த சன்மார்க்கம் ஒன்று,..ஆக மூன்று,...ஆதலால் சுத்த சன்மார்க்கத்திற்குப் படிகள் மூன்று,

சிற்சபை
பொற்சபை
சுத்த ஞானசபை

ஆக மூன்று இவைகள் மூன்றும் தான் படிகளாக இருக்கும் .
சுத்த தேகத்தின் உடைய அனுபவத்தை விரித்தால் விசேஷமாகும் .சுத்த சன்மார்க்கம் விளங்கும் காலத்தில் எல்லாம் ஆண்டவர் வெளிப்படையாகத் தெரிவிப்பார்.

சுத்த சன்மார்க்க சாத்திய நிலை !

சுத்த சன்மார்க்கம் ஒன்றுக்கே சாத்தியம் கை கூடும் .
என்றும் சாகாத நிலையைப் பெற்றுச் சர்வ சித்தி வல்லபமும் பெறக்கூடும் .மற்ற சமய மத மார்க்கங்கள் எல்லாம் சுத்த சன்மார்க்கத்திற்குச் செல்ல கீழ்ப் படிகள் ஆதலால் ,அவற்றில் ஐக்கியம் என்பதே இல்லை .

தாயுமானவர் முலானவர்கள் சுத்த சன்மார்க்கிகள் அல்லர் .மத சன்மார்க்கிகள் என்று ஒருவாறு சொல்லலாம் இதில் நித்திய தேகம் கிடையாது.இது சாதக மார்க்கமே அன்றிச் சாத்தியம் இல்லை இதில் நித்திய தேகம் கிடையாது .

சுத்த சன்மார்க்கம் விளங்கும் போது இவர்கள் யாவரும் உயிர் பெற்று மீளவும் வருவார்கள் .முன் இருந்த அளவைக் காட்டிலும் விஷேச ஞானத்தோடு சுத்த சன்மார்க்கத்திற்குக் உரியவர்வகள் ஆகி வருவார்கள் ,சாத்தியர்களாய் இரண்டறக் கலப்பார்கள் .

சுத்த சன்மார்க்கக் கொள்கை !

சர்வ சித்தியை உடைய தனித் தலைமைப் பதியாகிய அருட்பெருஞ் ஆண்டவரை நோக்கி ஆன்ம அணுக்கள் தபசு செய்து சிருஷ்டி யாதி பஞ்ச கிருத்தியங்களையும் பெற்றுக் கொண்ட மூர்த்திகள் ஆகியவர் ஒரு தொழிலை உடைய பிரம்மாவும்,இரண்டு தொழிலை உடைய விஷ்ணுவும் ,மூன்று சித்தி உடைய ருத்திரனும்,இது போன்ற மற்றவர்களும் .

மேற்குறித்த மூவரால் ஏற்படுத்திய தத்துவசித்திக் கற்பனைகலாகிய சமய மத மார்க்கங்களை அனுஷ்டித்து ,அவர்களையே கர்த்தாக்களாக வணங்கி வழிபாடு செய்து வருகின்ற ,இது வரையிலும் உள்ள ஆன்மாக்கள் மேற்க் குறித்தவர்களது பதப் பிராப்தியை மேல்படி அணுக்கள் லேசங்கள் அதாவது சிறிய அற்ப சித்திகள் இவர்களுக்கு உள.

ஆதலால் இவர்கள் அந்தச் சர்வ சித்தியை உடைய அருட்பெருஞ்ஜோதி கடவுளுக்குக் கோடி கோடி பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கின்றார்கள் .

ஆகவே சமய மதத் தேவர்களை வழிபாடு செய்வது அவசியம் அல்ல என்பதை வள்ளல்பெருமான் உறுதியாக அறுதி இட்டு சொல்லுகின்றார் .

மேற் குறித்தவர்கள் அற்ப சித்தியைப் பெற்று ,அதில் மகிழ்ந்து அகங்கரித்து ,மேபடி ஏற வேண்டியவைகளை ஏறிப் பூரண சித்தியை அடையாமல் தடைப்பட்டு நிற்றல் போல், இங்கு சன்மார்க்கிகள் மற்றவைகளை உன்னி அவலம் அடைந்து நில்லாமல்,

சர்வ சித்தி உடைய கடவுள் ஒருவர் உண்டு என்று ,அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து,பூரண சித்தியைப் பெற வேண்டுவது சுத்த சன்மார்க்கக் கொள்கையாகும்.,,,தனித்தலைவன் லஷியம் தவிர அநித்திய சட துக்காதிகளைப் பொருட் படுத்தி உபாசனாதி மார்க்கமாய் வழிபடுவது கொள்கை அல்ல

உபாசனை முதலியவற்றால் வழிபடுதலும் மேற் குறித்த தலைவனைக் குறித்ததே தவிர வேறில்லை என்பதை சுத்த சன்மார்க்கிகள் தெரிந்து கொள்ள வேண்டும் .

சுத்த சன்மார்க்க முடிபு !

சுத்த சன்மார்க்கத்தின் முடிபு சாகாத கல்வியைத் தெரிவிப்பதே அன்றி வேறு இல்லை ..சாகின்றவன் சன்மார்க்க நிலையைப் பெற்றவன் அல்லன்...சாகாதவனே சன்மார்க்கி .

சாகாத கல்வி !

தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் சாகாத கல்வியைக் குறித்து சொல்லி இருக்கின்றது என்கின்றார் வள்ளல்பெருமான் .அதைத் தக்க ஆசிரியர் மூலமாய்த் தெரிந்து கொள்ளலாம் என்று வள்ளல்பெருமான் சொல்லி இருக்கின்றார் .தக்க ஆசிரியர் என்பது வள்ளல்பெருமான் தக்க ஆசிரியர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

திருக்குறளுக்கு விளக்கம் திரு அருட்பாவில் மட்டுமே உள்ளது .வேறு எந்த நூல்களிலும் இல்லை என்பதை அறிவு விளக்கம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் .

சன்மார்க்கம் என்பது எல்லா சமய மதங்களிலும் உள்ளன.மக்கள் அதுதான் இது என்பது இல்லை என்பதை உணர்த்தவே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்று பெயர் வைத்து உள்ளார் வள்ளல்பெருமான் .

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்பது இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் தோற்றுவிக்கப் பட்டதாகும் .

சன்மார்க்கப் பெரு நெறி ஒழுக்கம் !

நாம் பெரும் புருஷார்த்தம் நான்கு !

சாகாக்கல்வி கற்றல்
தத்துவ நிக்கிரகம் செய்தல்
ஏம சித்திப் பெறுதல்
கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் ...என்பவைகளாகும்.

அவற்றைப் பெறுவதற்கு ஒழுக்கங்கள் நான்கு !

இந்திரிய ஒழுக்கம்
கரண ஒழுக்கம்
ஜீவ ஒழுக்கம்
ஆன்ம ஒழுக்கம் ..

என்னும் நான்கு ஒழுக்கங்களும் சுத்த சன்மார்க்க வழிபாடாகும் இந்த ஒழுக்கங்களை இடைவிடாமல் கடைபிடிப்பவனே சுத்த சான்மார்க்கி என்னும் தகுதியைப் பெற்றவர் ஆகும் .

ஒழுக்கம் என்ன என்பதை ஜீவ காருண்ய ஒழுக்கம் என்னும் தலைப்பில் வள்ளல்பெருமான் மிகத் தெளிவாக வள்ளல்பெருமான் எழுதி வைத்துள்ளார்.படித்து ,கேட்டு ,சிந்தித்து ,தெளிதல் வேண்டும்.

முன் உள்ள மார்க்கங்கள் யாவும் முடிந்தன
மன்னுள சுத்த சன்மார்க்கம் சிறந்தது
பன்னுளம் தெளிந்தன பதிநடம் ஓங்கின
என்னுளத்து அருட்பெருஞ்சோதியார் எய்தவே !

பன்மார்க்கம் எல்லாம் பசை அற்று ஒழிந்தனவே
சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே --சொன்மார்க்கத்
எல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான்
கொல்லா நெறி அருளைக் கொண்டு.

சுத்த சன்மார்க்கம் இன்னது என்று அறிந்து அதன் கொள்கைகளைக் கடைபிடித்து அருளைப் பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வோம்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
       

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு