சனி, 24 ஆகஸ்ட், 2013

வள்ளலார் எழுதியது தேன் மொழிகள் !

வள்ளலார் எழுதியது  தேன் மொழிகள் !

உலகில் வாழ்கின்ற மக்கள் பல வழிகளை கடைபிடிப்பவர்கள்.உயிர்கள் மீது கருணை காட்டுவோர்,உயிர்க்கொலை புரிவோர்,நீதியைப் போற்றுவோர்,நீதிக்கு மாறுபட்டு நடப்போர்,நன்மையே செய்வோர்,தீமையே புரிவோர்,நல்லனவற்றை பின்பற்றி வாழ்வோர்,தீமையைப் பின்பற்றுவோர்,

நல்ல எண்ணங் கொண்டோர்,தீய எண்ணங் கொண்டோர்,முரண் பட்ட எண்ணங் கொண்டோர்,போன்ற இருவேறு தன்மையினரைப் பார்க்கிறோம்.மனிதன் திருந்தி வாழ்வதற்கு நல்ல நூல்கள் பல இருக்கின்றன.இருந்தும் மக்கள் இருவேறு சிந்தனை உடையவர்களாகவே இருக்கிறார்கள் .மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டு ஒரே சிந்தனையுடன் வாழ வேண்டும் எண்ணங் கொண்டு எழுதிய நூல்தான் திருஅருட்பா என்னும் நூலாகும்.

அன்பு,தயவு, கருணை கொண்டு நல்லதையே மக்கள் அறிந்து உணர்ந்து வாழவேண்டும் என்பதற்காக வள்ளல் பெருமான் திருஅருட்பா என்னும் அருட்பெரும் நூலை எழுதி வைத்துள்ளார்.

உலக நன்மைக்காக நல்லனவற்றை சிந்தித்து,நல்லனவற்றை செய்து ,நல்ல கொள்கைகளை விதைத்து ,நல்லொழுக்கத்துடன் வாழ்ந்து ,மக்களுக்கு வழி காட்டியவர் வள்ளல்பெருமான் ஆவார்கள்.

வள்ளல்பெருமான் எழுதிய ''திருஅருட்பா ''பாடல்கள் திருவருளால் பாடப் பெற்றவை .அவை உலகிற்கு வழிகாட்டும் உயர்ந்த பாடல்கள்.மனிதன் மனிதனாக வாழ்ந்து தெய்வநிலைக்கு கொண்டு செல்லும் பாடல்களாகும்.

திருஅருட்பா எழுதிய வள்ளல்பெருமான் உரை நடை நூல்களையும் எழுதி உள்ளார்கள்.வள்ளலாரின் கடிதங்கள் கடித இலக்கியங்களாக அமைந்துள்ளன்.மேலும் ஜீவ காருண்ய ஒழுக்கம் மனுமுறை கண்ட வாசகம் போன்ற நூல்கள் மக்கள் மனிதிலே நீங்காத இடம் பெற்றவைகளாகும்.

மேலும் ஒழிவில் ஒடுக்கம் ,தொண்டமண்டல் சதகம் நூற் பெயரிலக்கணம்,வழுபட்டு கடவுள் வணக்கப் பாட்டுரை முதலியவற்றையும் உரைநடையில் எழுதி வைத்துள்ளார்.

''மனுமுறை கண்ட வாசகம்'' என்னும்  நூலில் உள்ள உவமைகள்,பழமொழிகள் எடுத்துக் காட்டுகள்,கவிதைச் சொற்கள்,பேச்சுநடைச் சொற்கள் என பல   உதாரணங்கள் முதலியவற்றை எதுகை மோனைச் சிறப்புடன் எழுதி உள்ளார் வள்ளல்பெருமான்.

பெரிய புராணத்தில் மனுநீதி சோழனின் வரலாற்றை சேக்கிழார் எழுதி வைத்துள்ளார் .

மனுநீதிச் சோழன் வரலாற்றை மனுமுறை கண்ட வாசகம் என்னும் தலைப்பில் வள்ளல்பெருமான் சொல்லும் முறையும் ,அவர் ஆளும் சொற்களும் வியக்க வைக்கின்றன.சில இடங்களில் வியர்க்கவும் வைக்கின்றன.

திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு விளங்கிய சோழ மண்டலத்தில் நீதி தவறாது அரசாட்சி செய்து வந்தவர் மனுநீதி சோழர் என்பவராகும். அவர் செய்த தவப்பயனால் ஒருமகன் பிறந்தான் .அவன் பெயர் வீதி விடங்கன் என்பதாகும் .பல கலைகளைக் கற்றுத் தேர்ந்து வளர்ந்த அவன் இளவரசன் என்னும் நிலையை அடைவதற்கு உரிய காலம் நெருங்கியது/.

ஒருநாள் படை வீரர்களுடன் பலரும் சூழ்ந்து வர முரசுகள் அதிரவும்,சங்குகள் ஒலிக்கவும் தேரில் சென்றான்.செல்லும் போது ஒருவீதியில் தேரிலே கட்டிய குதிரைகள், தேர்பாகன் வசத்தைக் கடந்து தெயவத்தின் வசமாகி அதிவேகமாக அத்தேரை இழுத்துக் கொண்டு சென்றன.

அத்தருணத்தில் தாய்ப்பசுவானது பின்னே வர முன்னே வந்த அழகுள்ள ஒரு பசுங் கன்றானது ''இளங்கன்று பயமறியாது ''என்ற மொழிப்படியே துள்ளி குதித்துக் கொண்டு எதிர்வந்து ,இராஜகுமாரனைச் சூழ்ந்து வருகிற சனத்திரள்களுக்கு உள்ளே ஒருவரும் அறியாத நேரத்தில் பாய்ந்து வந்து தேக்காலில் சிக்கி மாண்டது.அதைக் கண்ட தாய்ப்பசு அலறி ,சோர்ந்து உடல் நடுநடுங்கிச் சென்று அரண்மனை வாயிலில் தொங்கிய ஆராய்ச்சி மணியைத் தன கொம்புகளால் அசைவித்து ஒளி எழுப்பியது.

அரசனிடம் தன் குறைகளைத் தெரிவிக்க விரும்புவோர் அந்த மணியை ஒலித்துத் தெரிவிப்பதற்காகத் தொங்க விடப்பட்ட மணியாகும்.அந்த மணி அன்றுவரை ஒலிக்காமல் தூங்கிய மணி அன்று ஒலித்தது .அதைக் கேட்டு ஓடிவந்த அரசன் ,தேர்க்காலில் கன்று சிக்கி இறந்ததை அமைச்சர் மூலமாக அறிந்து ,செய்து அறியாது மயங்கி இரங்கி ஏங்கி செவ்விது என் செங்கோல் என்று மயங்கித் துன்புற்றான் .கன்றின் இறப்பிற்குக் காரண மாணவனுக்குக் கொலைத் தண்டனை அளிப்பதே முறை என்றான் .

அமைச்சர்கள் அஞ்சினர் .தண்டனையை நிறைவேற்ற வேண்டிய அமைச்சன் தன்னையே மாய்த்து கொண்டான்.மனுவேந்தன் தன்மகனைக் கிடத்தி தேரினை ஏற்றித் தண்டனையை நிறைவேற்றினான் .நீதி தவறாத மன்னன் செய்கையைக் கண்டு இறைவன் காட்சி அளித்து பசுங்கன்றையும்,மன்னன் மகனையும்,அமைச்சனையும் உயிர் பெற்று எழ்செய்து அருள் புரிந்தார் .

அருட்பிரகாச வள்ளல்பெருமான் மனுமுறைகண்ட வாசகத்தில் கூறும் முறை அவர்தம் அருள் உரையாகவே அமைகின்றது  .திருவாரூரின் சிறப்பை சொல்லுகின்ற பொழுது அங்கிருந்த சோலைகளின் பெயர்கள் .மண்டபங்களின் பெயர்கள் ,வீதிகளின் பெயர்கள்,ஆகியவற்றைப் பட்டியலாக அடுக்கிக் கூறியுள்ளார் .

இறைமாட்சி,அறிவுடமை ,குற்றம் கடிதல்,பெரியாரைத் துணைக் கோடல் சிற்றினஞ் சேராமை ,வலியறிதல் ,காலமறிதல் ,இடம் அறிதல் ,சுற்றம் சூழ்ல்,கண்ணோட்டம் ,ஆகிய அதிகாரங்களில் தமிழ் மொழியாம் இலக்கணம் கூறும் கருத்துக்களை எளியமுறையில் பொருத்தமுற அனைவரும் பிரிந்து கொள்ளும் அளவிற்கு ,மனுவேந்தன் அரசாட்சிப் பற்றிக் தெளிவுபடுத்தி உள்ளார்.

அரசன் இல்லாத குடிமக்களுக்கு ஆபத்து நேரிடும் போது ,கட்டிய வஸ்திரம் அவிழ்ந்தவன் கைபோல,உடனே அந்த ஆபத்தில் இருந்து நீங்கும்படி கைகொடுப்பதினால் நண்பனை ஒத்தவராய் அரசன் இருப்பதாக மக்கள் மகிழ்ந்தனர்.என்று திருவாரூர் மக்களைக் கூறுகின்றனர் .

தெய்வம்,குரு,நண்பன் ,கண்,உயிர்,போன்று அரசன் அமைந்துள்ளான் எனக் குடிமக்கள் மகிழ்ந்தனர்.தெய்வம் முதலிய உவமைகளை ஒப்பிடும் போழுதும் பொருத்தமான காரணங்களை விளக்குகிறார்.நல்ல அரசாட்சியில் பகை உணர்வு இருக்ககூடாது என்பதை ,புலியும் பசுவும் ஒன்றாக நீர் குடித்து உலாவுதலையும்,சிங்கமும் யானையும் சேர்ந்து திரிதலையும் ,பருந்தும் கிளியும் பழகி மகிழ்தலையும்,குயிலும் காக்கையும் கூடிப் பறக்குதலையும்,பூனையும் எலியும் ஒரே இடத்தில் இருத்தலையும் ,கூறி விளக்கும் முறைகள் மிகவும் பொருத்தமாக உள்ளன்.

மகன் பிறந்துள்ள செய்தியைக் கூறக்கேட்ட மன்னன் மகிழ்ச்சியை பல உவமைகள் கூறி விளக்குகின்றார் வள்ளல்பெருமான்.

தீராக் குறைக்குத் தெய்வமே துணை ,இளங்கன்று பயமறியாது ,முற்றும் நனைந்தார்க்கு ஈரமில்லை ,முதலிய பழமொழிகளைப் பொருத்தமுற தக்க இடங்களில் பொருத்தி விளக்குகின்றார் .

இளவரசன் தந்தையிடம் அனுமதி பெற்றுச் சிவதரிசனம் செய்யத் தேரில் ஏறும் போது,கால் இடறி,இடது தோள் துடித்து, இடது கண்ணும் துடித்து உற்பாதங்கள் அதாவது சகுணங்கள் தோன்றியமையைக் கூறியுள்ளார்

.தேர்க்காலில் பாய்ந்து இளங்கன்று இறப்பதன் முன் ,இளவரசனுக்குத் தீய சகுணங்கள் தோன்றுவதை ,''மாதாபிதாக்கள் செய்தது மக்களுக்கு ''என்னும் பெரியோர் வார்த்தைப்படி நான் செய்த தீவினையே என் புத்திரனுக்கு நேரிட்டது என்று பேசும் மனுச்சோழன் ,இந்தப் பிறப்பில் நான் மனமறிந்து தீங்கு ஏதும் செய்யவில்லையே !முற்பிறப்பில் தீங்கு இழைத்து இருப்பேனோ ?என்று கூறும் பகுதியில் அடுக்கிக் கூறும் பாவச்செயல்களைப் படிப்போர் பாவம் செய்ய மாட்டார்கள்.

நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ ?தானங் கொடுப்போரை தடுத்து நின்றோனோ ?மனம் ஒத்த நட்புக்கு வஞ்சகம் செய்தோனோ ?குடிவரி உயர்த்தி கொள்ளைக் கொண்டானோ ? ஏழைகள் வயிறு எரியச்செய்தொனோ ? வேலை இட்டுக் கூலி குறைத்தோனோ ?இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்றோனோ ?கணவன் வழி நிற்போரைக் கற்பழித்தோனோ ?குருவை வணங்க கூசி நின்றோனோ ?பட்சியைக் கூண்டில் பதைக்கு அடைத்தோனோ ? ஊன்சுவை சுவை உண்டு உடல் வளர்தோனோ?தந்தை தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ ?என்று பலவகையாகப்  பட்டியல் இடுகின்றார்.

இவ்வாறு முன் பிறவியில் என்ன தவறு செய்தோனோ என மனுவேந்தன் புலம்பி மனங் கலங்கியதாக வள்ளல்பெருமான் கூறும் வாசகங்கள் மக்கள் உணர்ந்து நடந்தால் நாடும் நாட்டு மக்களும் நலமாக இருப்பார்கள்.

தன்னுடைய செங்கோல் கொடுங்கோல் ஆனதாகக் கருதும் மனுவேந்தன் சேங்கன்றைத் தெருவில் சிதைக்கவும் ஒருமித்த என் செங்கோல் அளவுகோல் என்பேனோ ?எழுது கோல் என்பேனோ ?கொடுங்கோல் என்பேனோ ?ஏற்றுக் கோல் என்பேனோ ?கொடுங்கோல் என்பேனோ ?துலாக்கோல் என்பேனோ ?வைக்கோல் என்பேனோ ?பிணக்கோல் என்பேனோ ?என்பன போன்று பேசும் சொற்றொடர்கள் வள்ளல்பெருமான் உடைய அறிவின் அருள் ஆற்றலைக் வெளிப்படுத்து கின்றன.

முறையான காவலன் இல்லாத பாவியாகிய என்னை மனுவென்று பேரிட்டு அழைப்பது ,காராட்டையை வெள்ளை ஆடு என்றும் .அமங்கள வார்த்தை மங்கள வாரம் என்றும்,நாகப்பாம்பை நல்ல பாம்பென்றும்.வழங்குகின்ற வழக்கம் போன்றது அல்லது உண்மை அல்லவே ! என்று பேசிக்கலங்கும் மன்னனுக்கு ,அமைச்சர்கள் பிராயச்சித்தம் கூறினார்கள் .அதனை ஏற்காத அரசன் தராசுக்கோல் போலச் செப்பமாக நின்று தீர்ப்புக் கொடுக்க எண்ணி ,ஊழ் வினை நோக்காது செய்வினை நோக்கி ,தன்குலத்துக்கு ஒரு மகனே உள்ளான் என்பதையும் எண்ணாமல் ,தவறு செய்த தன் மகன் மேல் தேரினை ஏற்றித் தண்டனை அளித்தான் மனுவேந்தன்

அந்தோ திருவாரூரில் கோவில் கொண்டுள்ள சிவபெருமானின் திருப்பெயரைத் தாங்கிய வீதிவிடங்கன் சின்னாப்பின்னப் பட்டு இறந்தான்.

மனுவின் செயலால் நீதி நிலைத்தது ,இறைவன் காட்சியளித்தான் .இறந்து கிடந்த பசுங்கன்றும்,கலாவல்லபன் என்னும் அமைச்சனும் ,வீதி விடங்கன் என்னும் மகனும் உயிர்த்து எழுந்தனர்.இவை எல்லாம் எல்லாம் வல்ல இறைவனின் திருவிளையாடல்கள் .

உலக மக்கள் நலம் கருதியும் ,படிப்போர் சிந்தனையைக் கிளர்ந்து எழ்ச்செய்யவும் கருதியும் மனுமுறை கண்ட வாசகம் எழுதப்பெற்றது .எல்லா உயிர்களும் இறைவன் படைப்பு .எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கின்றான் .என்ற உண்மையை மக்களுக்குப் போதித்து,ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்,என்ற நோக்கம் கொண்டு எழுதப்பட்டதுதான் மனுமுறை கண்ட வாசகமாகும்.

உயிர்க்கொலை செய்வதும் ,புலால் உண்பதும் பெரிய குற்றமாகும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதியதான் மனுமுறை கண்ட வாசகம்.

உயிர்க்கொலைக்கு ஈடாக பிராய்சித்தம் செய்தால் போதும் என்று வேதங்களின் கூற்றுக்கு பதில் அடி கொடுக்கின்றார் வள்ளலார்.மனிதன் உயிர்வேறு மற்ற மிருகங்களின் உயிர்கள் வேறு என்று யாரும் நினைத்து விடக்கூடாது.எல்லா உயிர்களிலும் இறைவன் குடிகொண்டு உள்ளார் ,என்பதை சொல்லாமல் சொல்லுகிறார்.நமது வள்ளல்பெருமான் .

வள்ளல்பெருமான் கூறியுள்ள மனுமுறை கண்ட வாசகங்களே வாசகம்,வள்ளலார் எழுதிய தேனினும் இனிய மனுமுறை கண்ட வாசகத்தை அனைவரும் படிப்போம் கடைபிடிப்போம் உணர்வோம் உயர்ந்து வாழ்வோம்.

ஆன்மநேயன்;-- கதிர்வேலு.        .



  


                                                              

        

      .   

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு