வியாழன், 1 ஆகஸ்ட், 2013

வள்ளலார் வாழ்கிறார் !

வள்ளலார் வாழ்கிறார் !

உலகில் உயர்ந்த ஞானம்  விளைந்த நாடாக உள்ளது இந்தியத் திருநாடாகும்.அந்த திருநாட்டில் உயர்ந்த ஞானம் விளைந்த மாநிலம் தமிழ் மாநிலமாகும்.அந்த மாநிலத்தில் இறைவன் அருள் பெற்ற தவசிகளும்,யோகிகளும்,சித்தர்களும்,முத்தர்களும் ஞானிகளும்.ஆழ்வார்களும்,நாயன்மார்களும்,தொன்று தொட்டு வாழ்ந்து வந்துள்ளார்கள்.அவர்கள் மக்களுக்கு அவரவர்களுக்கு தெரிந்த,அறிந்த முடிந்த அளவிற்கு அருள் நெறிகளை போதித்து உள்ளார்கள்.ஆனால் அனைவரும் முத்தி என்ற பெயராலும்,சித்தி என்ற பெயராலும்,சமாதி என்ற பெயராலும்,மோட்சம் என்ற பெயராலும் மறைந்து மாண்டு போனார்கள்.

இந்தியாவில் தோன்றிய ஞானிகள் மட்டும் அல்ல,உலகில் தோன்றிய அனைத்து சாதி,சமய,மதங்களை தோற்றுவித்த அருளாளர்கள் அனைவரும் அவரவர்களுக்குத் தெரிந்த கொள்கைகளை,கருத்துக்களை,மக்களுக்கு தெரிவித்து விட்டு மண்ணோடு மண்ணாக மாண்டு போனார்கள்.  

தமிழ் நாட்டு அருளாளர் !

தமிழ் திருநாட்டின் கடலூர் மாவட்டமான பொன்னி நதிபாயும் சோழ நாட்டில் முத்தி இன்பம் தித்திகின்ற தலமான தில்லை சிதம்பரத்தின் வடமேற்கே இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மருதூர் என்னும் கிராமம்.அந்த கிராமத்தின் கிராமக் கணக்குகளை கவனிக்கும் கணக்கராகவும்,பிள்ளைகளைக் சேர்த்து பாடஞ் சொல்லும் ஆசிரியராகவும்    இராமய்யா இருந்து வந்தார்,அவர்க்கு ஐந்து மனைவிகள் மகப்பேறு இன்றி ஒருவர்பின் ஒருவராக இறந்து போய் விட்டார்கள்.ஆறாவது மனைவியாக சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரிக்கு அருகில் உள்ள,சின்னக்கா வணத்தில்,சின்னம்மை என்னும் பெண்ணை ஆறாவதாக மனம் முடித்துக் கொண்டார்.

சின்னம்மை கற்பு நெறி தவறாத பெண்ணாகவும்,உயிர்கள் மேல் அன்பு ,தயவு,கருணைக் கொண்டவராகவும்,அகம் ஒன்று ,புறம் ஒன்று பேசாத உயர்ந்த குணமுள்ள வராகவும்,கணவன் சொல் தட்டாது நடக்கும் கண்ணியம் மிக்கவராயும்,இந்திரிய ஒழுக்கம்,கரண ஒழுக்கம்,ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் உள்ளவராகவும்,இறைவன் மீது அளவில்லா பக்தி உள்ளவராகவும்,இல்லை என்று வருபவர்களுக்கு இல்லை எனாமல் கொடுக்கும் தயவு உள்ளவராகவும்,கடவுள் விரும்பும் கருணை உள்ளவராகவும்,பெண் குலத்திற்கே பெருமை சேர்க்கும் பெண்ணாக வாழ்ந்து கொண்டு வந்தார்.  

இராமய்யாவுக்கும் சின்னம்மைக்கும் சாபாபதி,பரசுராமன்,உண்ணாமுலை,சுந்தராம்பாள் என்னும், இரு ஆண் மக்களும்,இரண்டு பெண் மக்களும் பிறந்தனர்.அதன் பின்பு நீண்ட வருடங்கள் கழித்து,ஐந்தாவதாக ஒரு ஆண் குழைந்தை பிறந்தது.அந்த குழைந்தை எப்படி பிறந்தது.

சிவனடியாராக அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் வந்தார்.

1822,ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நான்காம் தேதி அன்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சிவனடியாராக தோற்றம் கொண்டு,இராமய்யாவின் இல்லம் தேடி உச்சிப்போதில் வருகின்றார். வந்தவர் பசியினால் இளைப்பாய் இருக்கிறது புசிப்பதற்கு உணவு கிடைக்குமா?தருவீர்களா !என்று உரத்த குரலில் வினவுகின்றார்.அக்குரலினால் ஈர்க்கப்பட்டு வெளியே வந்த,சின்னம்மையார் அவ்வடியாரைக் தரிசித்துத் தம் மெய் சிலிர்த்தார்.அவ்வயோதிக சிவயோகியாரின் திருவருட் பார்வையும் தேகப் பொலிவும் பார்த்து எல்லாம் வல்ல சிவமே வந்து இருப்பது போன்ற உணர்வுடன் அம்மையார்,நாம் இச்சிவத்தைக் காண்பதற்கு பெரிய புண்ணியம் செத்துள்ளோம்,என நினைந்து அவரைப் பார்த்து இருகரம் கூப்பி வணங்கி,வாருங்கள்,வாருங்கள் என வீட்டின் உள்ளே அழைத்து சென்று அமரும்படி வேண்டினார்.

பெர்யதோர் தலைவாழை இலைவிரித்து அறுசுவை உணவு பரிமாறினார்.உணவு உன்ன உன்ன, மேலும் மேலும் பரிமாறினார் சின்னம்மையார்.போதும் போதும் என்று பசி ஆற உணவை உண்ட சிவனடியார்,அம்மையே ! என்னுடைய பசி தணிந்தது,  என்னுடைய பசியைப் போக்கிய உனக்கு உலகில் உள்ள ஜீவர்கள் அனைவருடைய பசியைப் போக்கும் ஒர் அருள் ஞான ஆண் குழைந்தை பிறக்கும் என்று ஆசீர்வாதம் செய்தார் .எனக்கா இனிமேலா குழைந்தையா ? என்னே இறைவன் சோதனை,என்னே இறைவன் கருணை என்று சிவனடியார் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்.சில நொடிகளில் தன்னை மறந்தார் .

சிவனடியார் வீட்டை விட்டு வெளியே வந்தார் .,அவரைத் தொடர்ந்து சின்னம்மை வெளியே வந்து பார்த்தார் சிவனடியாரைக் காணவில்லை ,எப்படி மறைந்தார் என்பதே தெரியவில்லை.உள்ளே சென்று பூசை அறையில் உள்ள நடராசர் சிலைமுன் அமர்ந்து ஆனந்த கண்ணீர் மல்க,இறைவா என்ன சோதனை? கண்ணால் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே மறைந்து விட்டாயே, என்று அழுது வேண்டிக் கொண்டார் .அந்நாள் தொட்டு சின்னம்மை வயிற்றில் கருவும் உருவும் வளர்ந்து பத்துத் திங்கள் பூர்த்தியானது.

வெளியில் சென்ற ராமய்யா மாலையில் வீடு வந்து சேர்ந்தார்,காலையில் நடந்ததை எல்லாம் ஒன்றுவிடாமல் தன கணவர் ராமையாவிடம் சொல்லி ஆனந்த கண்ணீர் விட்டு அழுதார். தன மனைவி சொல்லியதை கேள்வியுற்று நீ புண்ணியம் செய்தவள் ,ஆண்டவரைக் காணும் பாக்கியம் பெற்றவள்,உன்னை என்னுடைய மனைவியாக அடைந்ததற்கு நான் கொடுத்து வைத்தவன் என்று மனைவியை போற்றி புகழ்ந்தார் .  

1823 ,ஆம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் நாள் ,தமிழ் வருடம் சுபானு ஆண்டு புரட்டாசித் திங்கள் இருபத்தோராம் நாள் ஞாயிற்றுக் கிழமை மாலை 5,30,மணியளவில் சிவனடியார் சொல்லியது போலவே சின்னம்மைக்கு அருள் ஞானக் குழைந்தை அவதரித்தது..ஊரே வந்து பார்த்து மகிழ்ந்தனர், அந்த அருள் ஞான குழைந்தைக்கு பெற்றோர்களால் இராமலிங்கம் எனப் பெயரிடப்படனர்.

இராமலிங்கம் சின்னம்மைக்கும் இராமய்யாவுக்கும் பிறக்கவில்லை,சின்னம்மைக்கும்,அருட்பெருஞ் ஜோதி ஆண்டவருக்கும்.பிறந்த குழைந்தையாகும்.இதற்கு சம்பு பஷ்ம் என்பதாகும்..

சிருஷ்டி வகைப்ப்ற்றி பின்னாளில் வள்ளலார் சொல்லியது.பின் பார்ப்போம் ,

சிதம்பர தரிசனம் !

இராமய்யாவும் சின்னம்மையும் குழைந்தைகள் பிறந்தால் முதலில் கோயிலுக்கு எடுத்துச் சென்று வழிபடுவது வழக்கம்.அவ்வாறே இராமலிங்கம் அவதரித்த ஐந்தாம் திங்களில் இராமய்யா தன் மனைவி மக்களுடன் சிதம்பரம் சென்று வழிபட சென்றார்கள்.சிதம்பரம் கோயிலை சுற்றி வந்து சிற்சபையில் நடராஜப் பெருமானை வழிபட்டபின் சிதரமபர இரகசிய தரிசனத்திற்காக அனைவரும் அதன்முன் வந்து நின்றனர்.இராமலிங்கம் தாயின் கையில் இருந்தார்.அப்பையா தீஷிதர் என்பவர் சிதம்பர ரகசியத்தின் திரையை விளக்க
இரகசியம் தரிசனமாயிற்று.

அனைவரும் தரிசித்தனர் கைக் குழைந்தையாகிய இராமலிங்கம் அந்த தரிசனத்தை கண் கொட்டாமல் பார்த்து கலகல வென சிரித்தது.அனைவருக்கும் ரகசியமாக இருந்த சிதம்பர ரகசியம் ஐந்து திங்கள் குழைந்தையாக இருந்த இராமலிங்கத்திற்கு வெட்டவெளியாகப் புலப்பட்டது.அந்த இளம் வயதிலே இகசியத்தை வெளிப்படையாக இறைவன் காட்டி அருளினார்.இவ்வாறு இராமலிங்கம் ஓராண்டு பருவத்தில் பூர்வஞான
சிதம்பரமாகிய தில்லையில் ஒரு திரை விளக்கி தாம் கண்ட அனுபவத்தை தமது நாற்பத்தொன்பதாம் அகவையில் அருள் விளக்கமாலை என்னும் பதிகத்தில் பதிவு செய்துள்ளார்.

தாய் முதலோரோடு  சிறு பருவத்திற் தில்லைத்
தலத்திடையே திரை துக்கத் தரிசித்த போது
மேய் வகைமேற்  காட்டாதே என்தனக்கே யெல்லாம்
வெளியாகக் காட்டிய என் மெய் யுருவாம் பொருளே
காய்வகை  இல்லாது உளத்தே கனிந்த நறுங்கனியே
கனவிடத்தும் நனவிடத்தும் எனைப் பிரியாக் களிப்பே
தூய்வகையோர் போற்ற மணிமன்றில் நடம் புரியுஞ்
ஜோதி நடத்தரசே என் சொல்லும் அணிந்தருளே !

என்னும் பாடல் வாயிலாக உண்மையை அறியமுடிகிறது.

அப்பைய தீஷிதர் !

இராமலிங்கம் சிரிப்பதை கண்ணுற்ற தீஷிதர்,இராமய்யாவிடம் வந்து,நான் இந்த சிதம்பர தில்லை கோயிலில் பல ஆண்டுகளாக திரை தூக்கி தர்சனம் காட்டி வருகிறேன்.பல ஆயிரம் குழைந்தைகளை அழைத்துக் கொண்டு வருகிறார்கள்.இன்று ஒரு அதிசயத்தைக் கண்ணுற்றேன்,இந்த குழைந்தை சிரித்ததையும் ,அதன் சிரிப்பு ஒளியும் இதுநாள் வரையில் நான் கண்டதும் இல்லை,கேட்டதும் இல்லை.உங்களுக்கு ஒரு விண்ணப்பம் இந்த குழைந்தையை எடுத்துக் கொண்டு தயவு செய்து என்னுடைய வீட்டிற்கு வாருங்கள் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார்.அவர் விருப்பபடியே இராமய்யா மனைவி மக்களுடன் அவர் வீட்டிற்கு சென்றார் .

தீஷிதர் அவர் இல்லத்தில் அவர்களை வரவேற்று குளிர்பானம் கொடுத்து அமரச்செய்தார்.பின் கீழே விரிப்பை விரித்து குழைந்தையை வாங்கி விரிப்பில் படுக்க வைத்து,சாஷ்டாங்கமாக குழைந்தையின் காலில் விழுந்து வணங்கினார்.இது சாதாரண குழைந்தை அல்ல,ஒரு ஞானக் குழைந்தை இந்த குழைந்தை என்னுடைய வீட்டிற்கு வருவதற்கு நான் பலகோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்.என்று இராமய்யா சின்னம்மையைப் பார்த்து வணங்கி வழியனுப்பி வைத்தார் .

இமாலிங்கம் எட்டாவது மாதத்தில் இமாய்யா காலமானார்.சின்னம்மை தம் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு, சென்னையை அடுத்த சின்னக்காவனம் எல்லையில் உள்ள, தம் தாய் வீடான பொன்னேரிக்குக் குடி பெயர்ந்தார்.மூதத பிள்ளையாகிய சபாபதி சாஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி அவர்களிடம் பயின்று புராணச் சொற்பொழி ஆற்றலில் வல்லவராகிக் குடும்பத்தை இலகுவாக நடத்தி வந்தார் .

ஓதாது உணர்தல் ;--

இமாலிங்கம் பள்ளிப் பருவம் எய்தியதும் தமையனார் தாம் பயின்ற சாஞ்ச்ச்புரம் மகா வித்துவான் சபாபதி அவர்களிடம் கல்வி கற்க அனுப்பினார் .இலையைப் இமாலிங்கரின் அறிவுத் தரத்தையும்,பக்குவ நிலையையும் கந்தக் கோட்டம் சென்று கவிபாடும் திறத்தையும் கண்டு மகாவித்துவான் ஆச்சரியமும்,அதிசயமும் கொண்டார்.இச்சிறுவன் இமாலிங்கம் சாதாரண பிள்ளை அல்ல.கல்லாது உணரவும்,சொல்லாது உணரவும்,முற்றும் தெரிந்த வல்லவன் போல் யாவும் தெரிந்தவனாக இருக்கிறான்,இவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் தகுதி நமக்கு இல்லை என்பதை உணர்ந்து கற்பிப்பதை கைவிட்டார்.

இராமலிங்கம் எப்பள்ளியிலும் பயின்றதில்லை,எவ்வாசிரியிடத்தும் படித்ததில்லை,இவருக்கு எப்படி படிக்காமல்,கேட்காமல் அனைத்தும் அறிந்து கொள்ளும் ஞானம் வந்தது ?

அவர்தான் இறைவனால் வருவிக்க உற்றவர் ஆயிற்றே ! ஆதலால் கற்க வேண்டுவனவற்றை இறைவனிடமே கற்றார். கேட்க வேண்டுவனவற்றை இறைவனிடமே கேட்டார்.இராமலிங்கப் பெருமானின் கல்வியும்,கேள்வியும் இறைவனிடத்தே பெற்றதே யொழியே வேறு எவரிடத்தும் ,எந்த ஆசிரியர் இடத்தும் பெற்றதன்று.இறைவன் இராமலிங்கப் பெருமானாரைப் பள்ளியில் பயிற்றாது தானே கல்வி பயிற்றினார் என்பதுதான் உண்மை .

அவரே அதற்கு பதில் சொல்லுகிறார்.

குமாரப் பருவத்தில் என்னைக் கலவியிற் பயிற்றும் ஆசிரியர் இன்றியே என் தரத்தில் பயின்று அறிதற்கு அருமையாகிய கல்விப் பயிற்சியை எனது அறிவிலே உள்ளத்திலே இருந்து பயிற்றுவித்து அருளினீர் என்று உரைநடப்பகுதியான ''சத்திய விண்ணப்பம்' என்ற பகுதியில் தெளிவாக எழுதிவைத்துள்ளார் .

அருட்பா பாடல்களில் ;--

கற்றேன் சிற்றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணைநெறி
உற்றேன் எக்காலமும் சாகாமல் ஓங்கும் யொளிவடிவம்
பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகிற் பிறநிலையைப்
பற்றேன் சிவானந்தப் பற்றே என் பற்றெனப் பற்றினனே !            

நாதா பொன்னம்பலத்தே அறிவானந்த நாடகஞ்செய்
பாதா துரும்பினும் பற்றாத என்னைப் பணி கொண்டு எல்லாம்
ஓதாது உணர உணர்த்தி உள்ளே நின்று உளவு சொன்ன
நீதா நினை மறந்தென் நினைக்கேன் இந்த நீணிலத்தே !

கற்றது மற்ற்அவ்வழி மாசூதது என்று எண்ணாத்
தொண்டர் எலாம் கற்கின்றார் பண்டு மின்றுங் காணார்
ஏற்றதும்பு மணிமன்றில் இன்பநடம் புரியும்
என்னுடைய துரையே நான் நின்னுடைய அருளால்
கற்றதும் நின்னிடத்தே பின் கேட்டதும் நின்னிடத்தே
கண்டது நின்னிடத்தே உட் கொண்டது நின்னிடத்தே
பெற்றது நின்னிடத்தே இன்புற்றது நின்னிடத்தே
பெரியதவம் பிருந்தன் என் பெர்ரி அதிசயமே !

ஏதும் அறியாது இருளில் இருந்த சிறியேனை
எடுத்துவிடுத்து அறிவு சிறிதேய் ஏந்திடவும் புரிந்து
ஓதுமறை முதற் கலைகள் ஓதாமல் உணர
உணர்வில் இருந்தி அருள் உண்மை நிலைகாட்டித்
தீது நெறி சமயநெறி செல்லுதலைத் தவிர்த்துத்
திரு அருண் மெய்ப் பொது நெறியில் செலுத்தியும் நான் மருளும்
போது மயங்கேல் மகனே என்று மயக்கம் எலாம்
போக்கி எனக்குள் இருந்த புனித பரம் பொருளே !

சாதிகுலம் சமயம் எலாம் தவிர்த்து எனை மேல் ஏற்றித்
தனித்த திரு அமுதளித்த தனித் தலைமைப் பொருளே
ஆதி நடுக்கடை காட்டா அண்ட பகிரண்டம்
ஆருயிர்கள் அகம் புறம் மற்று அனைத்தும் நிறை ஒளியே
ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனைக் கேட்க எனைத்தான்
ஓதாமல் உணர்ந்து உணர்வாம் உருவுறச் செய் உறவே
ஜோதி மயமாய் விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்
தூய நடத்தரசே என் சொல்லும் அணிந்தருளே !

பள்ளியில் பயிற்றாது என்தனைக் கல்வி பயிற்றி முழுதும் உணர்வித்து ஓதாது உணர உணர்விலிருந்து உணர்த்தி உள்ளே நின்று உளவு சொன்ன நீ தான் எனது அருள் தந்தை என்பதை அவரே விளக்குகிறார்.

மேலும் ;--ஆடல் செய்யும் பருவத்தே பாடல் செய்யத் தொடங்குதல்.

ஆதியிலே எனை ஆண்டு என் அறிவகத்தே அமர்ந்த
அப்பா என் அன்பே என் ஆருயிரே அமுதே
வீதியிலே விளையாடித் திரிந்த பிள்ளைப் பருவம்
மிகப் பெரிய பருவம் என வியந்தருளி அருளாம்
சோதியிலே விழைவுறச் செய்து இனிய மொழி மாலை
தொடுத்திடச் செய்து அணிந்து கொண்ட துரையே சிற்பொதுவாம்
நீதியிலே நிறைந்த நடத்தரசே இன்றடியேன்
நிகழ்த்திய சொன் மாலையும் நீ நிகழ்த்தி அணிந்தருளே !

உருவத்திலே சிறியேனாகி யூகத்திலே ஒன்றும் இன்றித்
தெருவத்திலே சிறுகால் வீசி யாடிடச் சென்ற அந்தப்
பருவத்திலே நல்லறிவு அளித்தே உனைப் பாடச் செய்தாய்
அருவத்திலே உருவானாய் நின் தண்ணளி யார்க்குளதே !

பாடும் வகை அணுத்துணையும் பரிந்தரியாச் சிறிய
பருவத்தே அணிந்தணிந்து பாடும் வகை புரிந்து
நாடும் வகை உடையோர்கள் நன்கு மதித்திடவே
நல்லறிவு சிறிதளித்துப் புல்லறிவு போக்கி
நீடும் வகை சன்மார்க்க சுத்த சிவநெறியில்
நிறுத்தினை இச்சிறியேனை நின் அருள் என் என்பேன்
கூடும்வகை உடையர் எல்லாம் குறிப்பை எதிர் பார்க்கின்றார்
குற்றம் எல்லாம் குணமாகக் கொண்ட குணக்குன்றே !

ஐயறிவிற் சிறிதும் அறிந்து அனுபவிக்கத் தெரியாது
அழுது களித்து ஆடுகின்ற அப்பருவத்து எளியேன்
மெய்யறிவிற் சிறந்தவருங் கழிக்க உனைப்பாடி
விரும்பி அருள் நெறி நடக்க விடுத்தனை நீ அன்றோ !

ஏதும் ஒன்று அறியாப் பேதையாம் பருவத்து
என்னை ஆட்கொண்டு எனை உவந்தே
ஓதும் இன்மொழியால் பாடவே பணித்த
ஒருவனே என்னுயிர்த் துணைவா
வேதமும் பயனும் ஆகிய பொதுவில்
விளங்கிய விமலனே ஞான
போதகம் தருதற்கு இது தருணம்
புணர்ந்து அருள் புணர்ந்தருள் எனையே !

வெம்மாலைச் சிறுவரோடும் விளையாடித் திரியும்
மிகச்சிறிய பருவத்தே வியந்து நினை நமது
பெம்மான் என்றடிகுறித்துப் பாடுவகை புரிந்த
பெருமானே நான் செய்த பெருந்தவப் மெய்ப்பயனே
செம்மாந்த சிறியேனைச் சிறுநெறியில் சிறிதும்
செலுத்தாமல் பெரு நெறியில் செலுத்திய நற்றுணையே
அம்மானே என் ஆவிக்கான பெரும் பொருளே
அம்மலத்தென் அரசே என் அலங்கல் அணிந்தருளே !

மேலே கண்ட பாடல்கள் அனைத்தும் அகச்சான்றுகளாகும் இராமலிங்கம் என்னும் வள்ளல்பெருமான் அவர்களை,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்... சிறுவயதிலே ஆட்கொண்டார் என்பது நன்கு விளங்குகின்றன.வள்ளல்பெருமானின் ஆன்மாவில் இறைவன் அமர்ந்து செயல் பட்டுக் கொண்டு உள்ளார் என்பதை சன்மார்க்க அன்பர்களும் மற்றும் உலகமக்கள் அனைவரும் அறிந்து,தெரிந்து  கொள்ள வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும் .

கந்த கோட்டவழிபாடு !

 
                     

       

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு