திங்கள், 19 ஆகஸ்ட், 2013

கொடிய பாவங்களிலே கொடியது கொலை செய்வது ! புலால் உண்ணுவது !

கொடிய பாவங்களிலே கொடியது கொலை செய்வது ! புலால் உண்ணுவது !

ஆன்மாக்கள் தோறும் இறைவன் அருள் நிறைந்து இருக்கின்ற படியால் மாயையின் காரியமாகிய வேறுபட்ட அறிவை நோக்காமல் இறைவனை நோக்கி எல்லா உயிர்களையும்  சமமாக எண்ணி நடக்க வேண்டும்.

இறைவனுடைய அருள் ஆற்றல் அனைத்து உயிர்கள் இடத்தும் வேறுபடாமல் விளங்குகின்ற படியால் எவ்வுயிர்களையும் பொதுவாக நோக்க வேண்டும்.

அனைத்து உயிர்களும் சிற்சத்தியின் உருவமாகலாலும் எல்லா உயிர்களுக்கும் இறைவனே தணு கரணங்களைக் கொடுத்தலாலும்,அவனது சிற்சத்தியாகிய உயிர்களை அவன் கொடுத்து  அருளிய உடம்பில் இருந்தும் நீக்குதல் நினைக்கப்படாத அபராதம் ஆகலாலும் எந்த உயிர்களையும் இயல்பினால் அல்லாமல் இம்சையினால் உடம்பை விட்டுப் உயிர் பிரியும்படி நேரிட்டால் அந்த உயிர்கள்

இவ்வுடம்பை விட்டு நீங்கும்போது உண்டாகும் வருத்தம் மிகப்பெரியதாக இருக்கும்.கொலை செய்யப்படும் போது உடம்பை விட்டு உயிர் பிரிந்து வேறு உடம்பு எடுப்பதற்கு சிரமப்படும் .அதனால் அந்த உயிர்கள் வேறு உடம்பு எடுக்கும் வரையில் வெளியில் உடம்பு இல்லாமல் அலைந்து கொண்டு இருக்கும்.அந்தப்பாவம் கொலை செயதவர்களையே  சேரும் ,அதனால் கொலை செய்பவர்களுக்கு இறைவன் தண்டனை மிகவும் கொடுமையாக இருக்கும்

ஆதலால் எந்த உயிர்களையும் உணவிற்க்காகவோ ,வேறுவகையிற்க்காகவோ கொலை செய்தல் கூடாது.

கொலையினால் உயிர்கள் படும் துன்பங்கள்.!

கொலை செய்யும் போது கரும்பையும்,எள்ளையும் ஆலையிலும்,செக்கிலும் வைத்து ஆட்டும் போது,நெருக்கத்தில் அரையப்பட்டு நசுக்குண்டு சின்னா பின்னப்பட்டு அக்கரும்பிலும்,எள்ளிலும் இருந்து ரசமும்,எண்ணையும் எப்படிக் கலங்கி வருமோ

அப்படியே உடல் நசுக்குண்டு அரைப்பட்டுச் சின்னா பின்னமாக அதில் இருந்து நடு நடுங்கி அறிவுக் கெட்டுத் திகைப்படைந்து கலங்கி வருவது எவ்வுயிருக்கும் பொதுவானதாகும்.

தமக்குக் கொலை நேரிடுவதை அறிந்த போது உடம்பு நடுங்கியும்,...பதைத்தும்,வியர்த்தும்,....தடதடத்தும் ...,தள்ளாடியும் ,...கால் சோர்ந்தும்,..கண்கள் கலங்கியும்,..இருள் அடைந்தும் ...காதுகள் கும்மென்று அடைப்பட்டும்..நாசி துவண்டும்....வாய் நீர் உலர்ந்தும்....நாக்கு குழறியும்....வயுறு பகீர் என்று திகில் அடைந்தும் ....மனம் திகைத்துப் பறை அடித்தாற் போல் பதபதப்பென்று அடித்தும் துடித்தும் துக்கமும் ,சோர்வும் கொண்டு மயங்கவும் செய்யும் .

மேலும் பாய்மரச் சுற்றில் அகப்பட்ட காக்கை போலவும் ,

நீர்ச் சுழியில் அகப்பட்ட வண்டு போலவும்,

சுழல் காற்றில் அகப்பட்ட துரும்பு போலவும்

உயிர் சுழன்று சுழன்று அலையவும்

உண்டாகின்ற பயங்கரம் எவ்வுயிர்களுக்கும் இயல்பு ஆகலாலும் ,

இறந்தவுடன் அவ்வுயிர்கள் இறப்பினால் பட்ட இம்சையும் மின்றி உடனே பிறப்பு இல்லாமல் வருத்தம் அடைந்து துக்கப்பட வேண்டும் ஆதலாலும் ,

நாம் நமக்கு வேண்டி ஒரு உயிரை கொலை செயவதற்கு சுந்தரம் இல்லை.

இறப்பு கொடுப்பதற்கும்,..பிறப்பு கொடுப்பதற்கும்...இறைவனே சுதந்தரம் உள்ளவன் என்று எண்ணாமல் ,...நம் தேவைக்கு ஆகாமியத்தால் கொலை செய்வதால் மீளா நரகம் நேருமென்று அறிந்து கொள்ள வேண்டும்.;--நமக்கு வரும் துன்பங்களுக்கு எல்லாம் காரணம் ,உயிரைக் கொள்வதும்,அதன் புலாலை உண்பதும் தான் என்பதை அறிவுள்ள ஜீவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.;---வள்ளலார் .

ஆன்மநேயன் ;--கதிர்வேலு.   

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு