மெய் மொழியும் ஒழுக்கமும் ! பாகம் 1,
சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள் !
தமிழ் நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள, வடலூரின் அருகில் உள்ள பார்வதி புறத்தில் வள்ளலார் --சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் --சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை --சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை தோற்றுவிக்கிறார் ,ஏன் எதற்க்காக அங்கு தோற்றுவித்தார் என்பதை தெரிந்து கொண்டால் உலக மக்களுக்கு உண்மை விளங்கும் ,
- வள்ளலாரே அளிக்கும் அருள் விளக்கம்,!
- மெய் மொழியும் ஒழுக்கமும் ,
இயற்கையில் தானே விளங்குகின்றவராய் உள்ளவர் என்றும் ,இயற்கையில் தானே உள்ளவராய் விளங்க்குகின்றவர் என்றும் ,இரண்டும் படாத பூரண இன்பம் ஆனவர் என்றும் ,
எல்லா அண்டங்களையும் ,எல்லா உலகங்களையும் ,எல்லா பதங்களையும்,எல்லா சத்திகளையும்,எல்லா சத்தர்களையும்,எல்லாக் கலைகளையும்,எல்லா பொருள்களையும்,எல்லா தத்துவங்களையும்,எல்லா தத்துவிகளையும்,எல்லா உயிர்களையும்,எல்லா செயல்களையும்,எல்லா இச்சைகளையும்,எல்லா ஞானங்களையும்,எல்லா பயன்களையும்,எல்லா அனுபவங்களையும்,மற்றை எல்லா வற்றையும் ,
தமது திருவருட் சத்தியால் ;--1,தோற்றுவித்தல்,2,வாழ்வித்தல்,3,குற்றம் நீக்குவித்தல்,4,பக்குவம் வருவித்தல்,5,விளக்கஞ் செய்வித்தல்,என்னும் ஐந்தொழில்கள் முதலிய பெருங்கருணைத் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும்,எல்லாம் ஆனவர் என்றும்,ஒன்றும் அல்லாதவர் என்றும் சர்வ காருண்யர் என்றும்,சர்வ வல்லபர் என்றும்,எல்லாம் உடையராய்த் தமக்கு ஒருவாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத தனிப்பெரும் தலைமை .
- ''அருட்பெரும்ஜோதியர் ''என்றும்
அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய் அறிவு என்னும் பூரணப் பொதுவெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் ,
- மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது !
அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே யாகிய கடவுளை இவ்வுலகின் இடத்தே ஜீவர்களாகிய நாம் அறிந்து,அன்புசெய்து அருளை அடைந்து,அழிவில்லாத சத்திய சுகப் பூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல்,
பல்வேறு கற்பனைகளால் பல்வேறு சமயங்களிலும்,பலவேறு மதங்களிலும் ,பல்வேறு மார்க்கங்களிலும்,பலவேறு லஷ்யங்களைக் கொண்டு,நெடுங் காலம் பிறந்து,பிறந்து அவத்தை வசத்தர்களாகிச சிற்றறிவும் இன்றி விரைந்து,விரைந்து பல்வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்து,இறந்து,வீண் போயினோம்.போகின்றோம் .
ஆதலால் இனிமேலும் ஜீவர்களாகிய நாம் விரைந்து,விரைந்து ,இறந்து இறந்து வீண் போகாமல் உண்மை அறிவு,உண்மை அன்பு, உண்மை இரக்கம் முதலிய சுப குணங்களைப் பெற்று நற்செய்கை உடையவர்களாய் ,எல்லாச சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும் ,எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்கும்
சுத்த சன்மார்க்கத்தைப் பெற்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் பெரும் சுகத்தையும் பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு ;-மேற் குறித்த அருட்பெரும்ஜோதி என்னும் உண்மைக கடவுள் தாமே திருவுளம் கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷ்யமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற
- ஓர் ஞானசபையை ;--
''இக் காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் ,அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து அருளி திருநடனம் செய்து அருள்கின்றோம்'' என்னும் திருக்குறிப்பை இவ்விடத்தே ,தாயினும் சிறந்த தயவு உடைய நமது கருனையாங் கடலாராகிய அருமைத் தந்தையார் ,அருட்பிரகாச வள்ளலார் முன்னிலையாகப் பலவாற்றாலும் பிரசித்திப்பட {வெளிப்பட }வெளிப்படுத்தி
அருட்பெரும்ஜோதி சொரூபராய் ,அப்பெருங்கருணை வள்ளலாரது உடல்,பொருள்,அவைகளைக் கொண்டு பொற்சபை,சிற்சபைப் பிரவேசஞ் செய்து அருளி ,அரிய அவரது திருமேனியில் தாம் {அருட்பெரும்ஜோதி }கனிவுறக் கலந்து அருளிய ,எல்லாம் வல்ல சித்தத் திருக்கோலங் கொண்டு
அருள் அரசாட்சித் திருமுடி பொறுத்து அருள் விளையாடல் செய்து அருளும் நிமித்தம் எல்லா உலகங்களில் உள்ளவர்கள் யாவரும் ஒருங்கே ,இஃது என்னே !இஃது என்னே !என்று அதிசயிக்கும்படி வெளிப்பட எழுந்தருளும் தருணம் அடுத்த அதிசமீபித்த தருணமா இருத்தலினால்,அங்கனம் வெளிப்படும் திருவரவு பற்றி யாதொரு சந்தேகமும் வேண்டுவதில்லை .
உண்மையை அறிந்து கொள்ள காத்து நிற்கும் அல்லது நிற்க வேண்டிய நாம் எல்லாவரும் மேற்குறித்த அற்புதத் திருவரவு நேரிட்ட கணத்தில் தானே ,சுத்த சன்மார்க்க அரும் புருஷார்த்தங்களின் பெரும் பயனாகிய எக்காலத்தும் நாசம் அடியாத சுத்த தேகம்,{அல்லது சுவர்ணதேகம்} பிரணவ தேகம்,ஞான தேகம்,என்னும் சாகாத கலை அனுபவமும் ,சுத்த பிரணவ ஞான தேக சித்தித் தேகங்களும் தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லா வற்றையும் நடத்துகின்ற தனிப்பெரும் வல்லபமும் .
கடவுள் ஒருவரே !
கடவுள் ஒருவரே என்று அறிகின்ற உண்மை ஞானமும் ,கரும சித்தி,யோக சித்தி, ஞான சித்தி,முதலிய எல்லா சித்திகளையும் பெறுகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்ப சித்திப் பெருவாழ்வை அடைவதற்கான --சுத்த சன்மார்க்கத் தனிப்பெரு நெறியைப் பற்றுவதற்கு உரிய உண்மை ஒழுக்கங்களில் நாம் எல்லவரும் தனித்தனி ஒழுகவேண்டியது அவசியம் ஆகையால் அவ் ஒழுக்கங்கள் எவை என்பதை உணர வேண்டுவது இன்றி அமையாததாகும்.
திரு அருட்பிரகாச வள்ளலார் வடலூர்ப் பெருவெளியில் சன்மார்க்க போதனை செய்து வரும் காலங்களில் இந்த உண்மை நெறிகளை வரைந்து தருமச் சாலையில் உள்ள சுவரில் ஒட்டி வைத்து '' இந்நெறிகளை பெற்று உய்யுங்கள் என்பதை மக்களுக்கு தெரியப் படுத்தயுள்ளார் .அந்த ஒழுக்கங்கள் என்ன என்பதைப் பார்ப்போம் .
- 1,} இந்திரிய ஒழுக்கம் ,
காது;--கொடிய சொல் செவிபுகாது நாதம் முதலிய தோத்திரங்க்களை உற்று கேட்டல்,மற்றவை கேளாது இருத்தல் ,கொடுஞ் சொல் முதலியவை செவிபுகாமல் நிற்றல்,
உடம்பு --அசுத்தங்களைத் தீண்டாது இருத்தல்,
கண் --கொடூரமாகப் பாராது இருத்தல்,--
வாய் ;--ருசியின்மீது விருப்பம் இன்றி இருத்தல் --
மூக்கு;--சுகந்தம் விரும்பாது இருத்தல் என்னும் ஞானேந்திரிய ஒழுக்கமும் ,--
வாயின் உள் உள்ள நாக்கு பேசுதல்;--இனிய வார்த்தையாடுதல் ,--பொய் சொல்லாது இருத்தல் ,--
மற்ற புற உருப்புகளினால் செய்ய வேண்டியவை !
ஜீவ இம்சை நேரிடும் காலத்தில் எவ்விதத் தந்திரத்திலாவது தடை செய்தல் ,--பெரியோர்கள் {பற்று இல்லாதவர்கள் }இருக்கும் இடத்திற்கு செல்லுதல், என்றால் சாதுக்களிடம் பரிச்சயம் பண்ணுதல் .--உயிர்களுக்கு உபகரிக்கும் நிமித்தம் சஞ்சரித்தல்.--உயிர்களுக்கு உபகார நிமித்தம் கையால் உபகரித்தல்,--மலஜல உபாதைகள அளவு மீறாமலும் கிரமங் குறையாமலும் ,ஒழித்தல் ,--
சுக்கிலத்தை அக்கிரமத்தில் அதிக்கிரமத்தில் விடாது நிற்றல் {இது மந்ததரனுக்கு }--எவ்வகையிலும் சுக்கிலம் வெளிப்படாமை நிறுத்துதல் ,{இது தீவிததரனுக்கு}--இடைவிடாது கோசத்தைக் கவசத்தால் மறைத்தல் ;--இதுபோல் உச்சி ,மார்பு,முதலிய அங்கங்களையும் மறைத்தல்;--வெளியில் சஞ்சரிக்கும் காலத்தில் காலில் கவசம் தரித்தல்:--அழுக்கு ஆடை உடுத்தாது இருத்தல் முதலியன இந்திரிய ஒழுக்கம் .
- 2,} கரண ஒழுக்கம் ;--
கரண ஒழுக்கமாவது ;--
மனம்;--சிற்சபையின் கண் { அதாவது புருவமத்தியில் }மனதைச் செலுத்துவது தவிர மற்று எந்த வகை ஆபாசத்திலும் செலுத்தாமல் இழுத்து மேற் குறித்த இடத்தில் நிறுத்தல் ,--
புத்தி;--பிறர் குற்றம் விசாரியாது இருத்தல்,--தன்னை மதியாது இருத்தல்,--
சித்தம்;--செயற்கை குணங்களால் உண்டாகிய கெடுதிகளை நீக்கி இயற்கையாகிய சத்துவ மயமாய் இருத்தல்.--
அகங்காரம் ;--பிறர் மேல் கோபிக்காமல் இருத்தல் .--தனது சத்துருக்களாகிய தத்துவங்களைக் கோபித்தல்,--அக்கிரம அதிக்கிரம புணர்ச்சி {உடல் உறவு } செய்யாது இருத்தல் முதலியன கரண ஒழுக்கமாகும் .
- 3,} ஜீவ ஒழுக்கம் .--
- 4,} ஆன்ம ஒழுக்கம் ;--
இங்கனம் மேலே கூறிய ஒழுக்கங்களில் உள்ள ,இந்திரிய ஒழுக்கம்,கரண ஒழுக்கம் .என்னும் இவற்றை நாம் ஒவ்வொருவரும் உண்மை உணர்ச்சியுடன் மேற் கொண்டு ஒழுக வேண்டும்.
ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம், என்னும் இருவகையான அரிய ஒழுக்கங்கள் திருவருள் துணை பெற்ற பின்னர் அன்றி கைக்கூடாது ,ஆதலால் அவ் ஒழுக்கங்களைப் பெற்று ஒழுக வேண்டுவதற்கும் ஆன நன் முயற்ச்சிகளில் பழக வேண்டும் என்பதை வள்ளலார் மிகவும் வலியுறுத்தி உள்ளார் .அன்றியும் '--
இவ்வண்ணமான ஒழுக்கங்களில் இயன்ற மட்டில் ஒழுகப் பெற்று ,இடம் தனித்து இருத்தல்,இச்சை இன்றி நுகர்தல்,தெய்வம் பராவல்,பிற உயிர்க்கு இரங்கல்,பெருங்குணம் பற்றல்,பாடிப்பணிதல்,பத்தி செய்து இருத்தல்,முதலிய நற் செய்கைகளில் பலகால் முயன்று பழகிப் பழகி இருத்தல் வேண்டும்,
- அன்றியும் ;--
சைவம், வைணவம்,சமணம்,பவுத்தம்,முதலாகப் பல பெயர் கொண்டு பலபட் விரிந்த அளவிறந்த சமயங்களும் ,அச்சமயங்களிற் குறித்த சாதனங்களும்,தெய்வங்களும்,கதிகளும்,தத்துவ சித்தி விகற்ப பேதங்கள் என்றும்,அவ் வச்சமயங்களிற் பலபட விரிந்த வேதங்கள்,ஆகமங்கள்,சாத்திரங்கள்,புராணங்கள்,முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்றும்,
வேதாந்தம்,சித்தாந்தம் ,முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த மதங்களும்,மார்க்கங்களும்,--சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்றும்.கேள்விப் பட்டு இருக்கின்றனம்.{அருட்பெரும்ஜோதி ஆண்டவரால் சொல்லப்பட்டது }
ஆகலின் அத்திரு வார்த்தைகளில் உண்மையான நம்பிக்கைக் கொண்டு அவற்றின் உண்மைகளை உள்ளபடியே உணர்த்தப் பெற்று அவைகளின் அனுபவங்களை அடைதல் வேண்டும் .மற்றபடி எந்த சமயம் ,மதம் ஆசாரங்களை சிறிதும் அனுட்ட்டியாது { பற்று வைக்காமல் } நிற்றலும் --அவற்றில் சத்திய உணர்ச்சி கொள்ளாமல் விடுதலும் வேண்டும்
- அன்றியும் ;--
அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வருகை !
வள்ளலார் இதை ஏன் அவ்வளவு அழுத்தமாக சொல்லுகிறார் என்றால்-- ,அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ,--முன் அறிவித்தபடி ஞானசபைக்கு வருவதாக இருந்தது ,ஆனால் வள்ளலார் சொல்லியபடி ஞானசபை வழிபாட்டு முறைகளும், செயல் பாட்டு முறைகளும் ,கண்காணிப்பு முறைகளும்,பாதுகாப்பு முறைகளும்,ஞானசபைக்கு உள் சென்று சுத்தம் செய்பவர்களும் விளக்கு வைப்பவர்களும் வள்ளலார் சொன்ன பனிரண்டு வயதுக்கு உட்பட்டவர்களும் ,எழுபத்திரண்டு வயதுக்கு மேற்பட்டவர்களும் ஞான்சபைக்குள் செல்லாமல் மற்றவர்கள் சென்று இருப்பார்கள் போல் தெரிகிறது அதனால் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஞானசபைக்கு வருவது தடை ஏற்பட்டு காலதாமதம் உண்டாகி இருக்கும் போல் தெரிகிறது
இவை எல்லாம் வள்ளலாருக்குத் தெரிந்து,தான் சொன்னபடி யாரும் செயல்பட வில்லை என்று மனம் சஞ்சலம் அடைந்து வடலூர் விட்டு மேட்டுக குப்பம் சென்றுவிடுகிறார் ..
கருணையே வடிவான வள்ளலார் மேட்டுக குப்பம் சென்றாலும் அங்கும் மக்களுக்கு இடைவிடாது சுத்த சன்மார்க்க போதனைகளை போதித்துக் கொண்டே இருந்தார்கள் .அனைவரிடமும் அன்பும் தயவும் கருணையும் இடைவிடாது காட்டிக் கொண்டே இருந்தார்கள் .
அருட்பெரும்ஜோதி ஆண்டவர்;-- வள்ளலார் இருக்கும் இடமான மேட்டுக்குப்பம் வருவதாக அறிவிப்பு கிடைத்து இருக்கிறது ,அதனால் மீண்டும்'' மெய்மொழியும் ஒழுக்கமும் என்ற தலைப்பில் மக்களுக்கு எழுதிவைத்தும் ,போதித்தும் வந்து இருக்கிறார் ,மேலே சொன்ன ஒழுக்கங்களை சொல்லிக் கொண்டே வந்து பின் என்ன சொல்கிறார் என்பதை கவனித்து பார்க்க வேண்டும் படிக்க வேண்டும்,
இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண் காலம் கழித்துக் கொண்டு இருக்காதீர்கள் .
மேலே சொன்ன ஒழுக்கங்களை கடைபிடித்து வந்தீர்களானால் மேலே சொன்ன நற்செய்கை களையும் உள்ளபடி பெற்று ,வள்ளலார் சித்திப் பெறப்போகும் சித்திவளாகம் என்னும் இச்சன்னிதானத்தில் ,அனைவரும் தரிசிக்க பெறவும் ,அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வந்து அமரப் போகிறார் ,அதுசமயம் நீங்கள் எப்படி இருக்க இருக்கவேண்டும் என்பதை வள்ளலார் தெரியப்படுத்துகிறார் ,
உலக முகப்பட்ட பராக்கினால் விலகி ஏமாந்து விடாமலும்,நமது எல்லாம் வல்ல ஆண்டவனார் அற்புதத் திருவரவு குறிக்கும் வெளிப் படுகைக்கு எதிர் பார்க்கும் நிலையினராய் ,எல்லா அண்ட சராசரங்களையும் தமது தனித் திருவருட் செங்கோல் கொண்டு நடாத்துவித்து அருளும் பேரருட் பெருங்கருணை வாய்ந்த தனிப்பெருந் தலைவனது அரிய திருவருகைச் சம்பந்தமான வழிபடுகை அல்லது மங்கலம் புனைதல் ,முதலிய திருப்பணியின் இடம் நமது கரணம் இந்திரியங்களை விடுத்துக்
குதூகலத்துடன்
விந்து விளக்கம்,நாத ஒலி,என்பவற்றால் புறக்கடையில் விலகப் படாமலும்,ஆண்டவர் உடைய அருள் அற்புத ஞான சித்தத் திருமேனியின் மங்கலத் திருக் கோலத்தைக் கண்காட்சியாக ,உடல் குழைய ,உள்ளங் குளிர,ஆனந்தக் கண்ணீர் கொண்டு பரவசத்துடன் ,தரிசிக்கப் பெரும் ,பெரும் புண்ணிய உடையவர்களாய் எதிர்ப்பட வாய்க்கப் பெறவும் நின்றோமே யானால் ,
நாம் எல்லவரும் சுத்த சன்மார்க்கத்தினுக்கு உரிமை உடையவர்களாகி,அறிவு வந்த காலமுதல் கண்டு அறியாத அற்புதக் காட்சிகளையும்,கேட்டு அறியாத அற்புதக் கேள்விகளையும்,அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும் அடைந்து ,அறியாத அற்புதக் குணங்களையும் ,செய்து அறியாத அற்புதச் செயல்களையும் ,அனுபவித்து அறியாத அனுபவங்களையும்,வெளிப்படத் தரிசிக்கும் அதே கணத்தின் உள்ளே பெற்றுப் பெருங் களிப்புடன் எக்காலத்தும்,எவ்விடத்தும்,எவ்விதத்தும் ,தடைபடாத சத்திய சுக பூரணப் பெருவாழ்வு என்னும் ,பேரின்ப சுத்திப் பெருவாழ்வில் வாழப் பெறுவோம் ,
இது சத்தியம்,சத்தியம்,சத்தியம்,
மேலே குறிப்பிட்ட மெய் மொழியும் ஒழுக்கமும் என்ற தலைப்பில் சுத்த சன்மார்க்கத்தை கடைபிடித்து வாழும் மக்களுக்கு,துன்பம்,துயரம்,அச்சம்,பயம்,மரணம்,கிட்டே நெருங்காது . ஒழுக்கத்தின் வலிமையையும் வல்லமையும் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவுப் படுத்தி உள்ளார் .வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கப் பாதை என்பது, , ஒழுக்கம் நிறைந்த பாதையாகும்,மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும். அனைவரும் ஒழுக்கம் நிறைந்து வாழ்ந்து,என்றும் அழிவில்லாத அருளைப் பெறுவோம்.ஆனந்தமாய் வாழ்வோம்.
வந்தனம் .---அன்புடன் ஆன்மநேயன் -கதிர்வேலு .
தொடரும் ;--
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு