வெள்ளி, 24 மார்ச், 2023

சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன?

 🙏☘️🔥🌻🌲🪔🐥🦚🌹🌀🌸         


*"சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன?"*

____________________________


 விளக்கம்:--

திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா


பழமையான நெறிகள் பலவாகக் குறிக்கப்பட்டன. அது புறநிலை நின்று காணப்பட்டதால் அப்படி அமைந்தன.


 அம்மார்க்கம் முற்றும் யோக நெறிகள் பாற்படும்.


 *"யோகம் என்றாலே சேருதல், கூடுதல் என்றே பொருளாம்."*


அன்று காணப்பட்ட அந்த யோக நெறி முக்கியமாக - 4 பிரிவோடு விளங்கியது.


 அவையாவன ;--


- (1) ஞான யோகம்

 (2) பக்தி யோகம்

 (3) கர்ம யோகம்

 (4) ராஜ யோகம் என்னும் மகா யோகம் ஆம். 


இவை எந்த ஒன்றாலும் கூடக் கடவுளைக் கலந்து கொள்ளலாம் என்பது ஆன்றோர் கருத்து.


 இவர்களுடைய முடிவான, *"கடவுட் கலப்புதான்"*- முன்பே *_உடலை விட்டு நீங்கி மறைந்து போவதுதான்"* என்று அறிந்திருக்கின்றோம்.


அந்த முடிவால் *"கடவுள் அனுபவ வாழ்வில்,"* அக்கடவுளைப் போன்ற *"நிலைத்திருத்தற்கு வழியில்லாக் குறை"* அன்று தோன்றவில்லை.


 ஆனால் இப்பொழுது தோன்றிவிட்டதால், அக்குறை தவிர்க்கும் ஒரு பரிகாரம் காண வேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்பட்டு விட்டதாம்.


இதனை நிறைவேற்றுவதற்கு என்றே நம் இராமலிங்க அடிகளார் தோற்றுவிக்கப்பட்டார்.


*"அனக சுத்த சிவநெறி;---"*

--------------------------------------------


அவர் புற நெறிகளை எல்லாம் மறுத்து, *"அகத்திலிருந்து உதிக்கும் "அனக" நெறியைக் கண்டுபிடித்து"* வெளிப்படுத்தினார்.


 அந்த அனக நெறியும் சைவ தெய்வக் கற்பனையின் மீது அமைக்கப்பட நேர்ந்ததால், *"சுத்த சிவ நெறியாகப்"* போற்றிக் கொள்ளப்பட்டது.


*"சுத்த சிவம் என்பது"* உண்மையில் உள்வளர் *"அருட்பெருஞ்ஜோதியே"* ஆம். 


மற்றபடி சகள, நிஷ்கள (உருவ, அருவ) தோற்றங்களையோ, சகுண நிர்க்குண தத்துவங்களையோ கொண்ட *"சிவசம்பந்தங் குறிக்கும் நெறி அல்ல"* இந்தச் சுத்த சிவ சன்மார்க்கம் என்பது.


சச்சிதானந்த பரம் பொருளின் எல்லாம் வல்ல *"அருள்"* அல்லது *"தயவு"* தான் அந்த மெய்ப்பை உடன் கொண்டு வாழும் உத்தம நெறியாய்க் கற்பிக்கின்றார். 


இதனை ;---


ஒன்றே சிவ(ம்) அதை ஒன்றுஞ் சன்மார்க்கமும்

ஒன்றே !! யென்றீ(ர்) இங்கு வாரீர்!!

நன்றே நின்றீ(ர்) இங்கு வாரீர் (திருவருட்பா)

என்ற பாவால் குறிப்பிடுகின்றார்.

 *"அருட்பெருஞ்ஜோதிபதியை ஒன்றுவதற்கு அவர்தம் அருளே வழியாகும்."*


அன்பறிவோடு இன்பாம்(அன்பு+ அறிவு+ இன்பு) அவனை அடைதற்கு

*"வன்பற்ற அன்பே வழி"*


 ---(தயவுக் குறள்)


என்ற தயவுக் குறளாலும்,


 *"அன்புருவக் கடவுளை அடைவதற்கு அன்பே மார்க்கம்"* எனத் தெளிவுறலாகின்றதாம்.


வேறு வேறாகிய புற நெறிகள் எல்லாம் மனிதனை மறைத்துவிடுகின்றன.


 *_அருளொடு உண்ணின்று(உள் நின்று) உதிக்கும் இந்த அருள் அனக நெறி ஒன்றே மனிதனை அவ்வருள் வடிவாக மாற்றி அழிவின்றி வாழச் செய்வதாம்._*


 இம்மாதிரியான இன்ப வாழ்வு, முந்தின உலக நெறிகளுக்கு அதீதமானது.


*"எல்லாம் ஒரு வழி ?"*:--

-------------------------------------------


எம்மதமும் சம்மதம் என்று சொல்லிக் கொண்டும், எதிற் சென்றாலும் இறுதியில் அடையும் முடிவு ஒன்றே என்றும் கூறுகின்ற சமரச ஞானிகள் அடைகின்ற முடிவு யாவரும் அறிந்ததே !


 அம்முடிவு சூனியமான ஏமாற்றமே ஆகும்.


 இவர்கள் ஒன்றான உண்மைக் கடவுளை அறிந்தவர்கள் அல்லர்.


 பலவான பேதத் தோற்றமும், குண சக்திச் செயல்களும் கொண்ட கற்பனா தெய்வங்களையே, தெய்வச் சின்னங்களையே கருத்திற் கொண்டு வழிபட்டு அடைகின்ற முடிவு நிலைகள், எல்லாம் *"இறப்பைத் தவிர வேறு எந்த ஒன்றாக இருக்க முடியும்?!!"*


மேலும் இவர்கள் வழிபடும் பலவாகிய நாம ரூபங்களைக் கொண்ட தெய்வங்களும் ஒன்றையே குறிக்கும் என்று மட்டும் சொல்லி விட்டால் போதுமா ? அது எங்ஙனம் பொருந்தும் ?


 அவர்களில் எல்லா விதமான வந்தனை வழிபாடுகளையும் ஏற்றுப் பலன் அளிக்கின்ற ஒன்றான கடவுளை அவர்கள் எங்கே அறிகின்றார்கள் ?


*"உண்மைச் சத்விசாரமாகிய கண்ணைத் திறந்து அருள் ஒளியில் இருந்து கண்டால்தான் அந்த ஒன்றான கடவுளைக் காண்பார்கள்"*. 


முதலில், கண்டு, புறநிலை வழிபாட்டால் ஓரளவு பயனடைந்து------


 மேல்,  *"முழுப் பயன்பெற்று வாழவேண்டி, அந்தக் கடவுள் நிலையிற் பொருந்தி, அருள் வாழ்வு மேற்கொண்டு வாழ வேண்டியவர்களாகின்றார்கள்."*


ஆகையால், எல்லோருக்கும் உரிமையான - ஒன்றான அருட்ஜோதி ஆண்டவரை அறிந்து - அகத்திற் கலந்து நின்று - அருளாகிய பெருநெறி பற்றி ஒழுகுதலே - சிறந்த முறையாகும்.


*"இந்த அருட்பெருநெறியே எவர்க்கும் பொருந்தும் சுத்த சன்மார்க்கமாம்"*


☘️🌻🔥 *"தயவு "*🔥🌻☘️

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு