புதன், 1 மார்ச், 2023

இறைவன் நேரிடைப் படைப்பு வள்ளலார்!

 *இறைவன் நேரிடைப் படைப்பு வள்ளலார் !*


*உலகில் வாழும் எல்லா ஆன்மாக்களும் ஆன்ம லாபம் பெற வேண்டி இந்த பஞ்ச பூத உலகம் படைக்கப்பட்டதாகும்.* 


*ஆன்மாக்கள் யாவும் இங்கு வருவதற்கு முன்பு எங்கு இருந்தது என்பதை வள்ளலார் தெரியப்படுத்துகிறார்.* 


*சமரச சுத்த சன்மார்க்க சத்திய விண்ணப்பம்!*



*அறிவென்பது ஒரு சிறிதும் தோற்றாத அஞ்ஞானம் என்னும் பெரிய பாசாந்தகாரத்தில் நெடுங்காலம்  சிற்றணுப்பசுவாகி இருகிக்கிடந்த அடியேனுக்குள் உள் ஒளியாகி இருந்து அப்பாசாந்தகாரத்தினின்றும் எடுத்து, எல்லா பிறப்பு உடம்புகளிலும் உயர்வுடைத்தாகிய உயர்ந்த அறிவுள்ள இம் மனிதப் பிறப்பு உடம்பில் என்னை விடுத்துச் சிறிது அறிவு விளங்கச் செய்த  தேவரீரது திருவருட் பெருங்கருணைத் திறத்தை எங்கனம் அறிவேன் ! எவ்வாறு கருதுவேன்! என்னவென்று சொல்வேன் ! என்கிறார்.* 


*இதில் ஓர் உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்* 


*ஆன்மாக்களில் பக்குவ ஆன்மா,பக்குவா பக்குவ ஆன்மா,அபக்குவ ஆன்மா என மூவகையாக பிரிக்கப் படுகிறது.*


*வள்ளலாரை  இயக்கிய ஆன்மா இறைவனால் நேரிடையாக அனுப்பி வைத்த பக்குவ ஆன்மாவாகும்! முன் பிறவி எதுவும் எடுக்காமல் வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் வந்தவர்கள் போல் வந்த ஆன்மா நான் அல்ல என்பதை தெரியப்படுத்துகிறார்.* 


*வள்ளலார் இறைவனால் வருவிக்க உற்றவர் !*


*வள்ளலார் பாடல்!*


அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்


சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்


இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த


உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.! 


*மேலே கண்ட பாடல் உண்மையை வெளிப் படுத்துகின்றது* 


*பள்ளிக்குச் செல்லாமல் பாடம் கற்காமல் ஆசிரியர் இல்லாமல் எல்லாம் தெரிந்தவர் வள்ளலார்*


*ஆதலால் தான்  வள்ளலாருக்கு பள்ளியில் பயிற்றாது,  இறைவன் தானே எல்லாக் கல்வியும் பயிற்றினார் மேலும் வள்ளலாரே சொல்கிறார்*


*குமாரப் பருவத்தில் என்னைக் கல்வியிற் பயிற்றும் ஆசிரியரை இன்றியே என் தரத்தில் பயின்று அறிதற்கு அருமையாகிய கல்விப் பயிற்சியை என் உள்ளகத்தே இருந்து பயிற்றுவித்து அருளினீர் என்கின்றார்* ( சமரச சுத்த சன்மார்க்க சத்தியபெரு விண்ணப்பம்)


*மேலும்.. கற்றதும் நின்னிடத்தே,பின் கேட்டதும் நின்னிடத்தே என்கின்றார்,மேலும் பள்ளியிற் பயிற்றாது என்தனைக் கல்வி பயிற்று முழுதும் உணர்வித்தாய் என்கின்றார் ,மேலும் ஓதாது உணர உணர்த்தி உள்ளே நின்று உளவு சொன்னதும் நீதான் என்கிறார், மேலும் ஓதும் மறை முதற்கலைகள் யாவையும் ஓதாமல் உணர உணர்விலிருந்து உணர்த்தினாய் என்கின்றார்* 


*மேலும் ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனைக் கேட்க எனைத்தான் ஓதாமல் உணர்ந்து உணர்த்தினாய் என்கின்றார்,ஓதாமல் அனைத்தும் உணர்கின்றேன் என்கின்றார்,""""ஓதாது  உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே ஆதாரமாகிய அருட்பெருஞ்ஜோதி!"* *என்பன போன்ற அகச் சான்றுகள் திருவருட்பாவில் ஏராளமாக இருக்கின்றன.*


*வள்ளலார் பாடல்!*


*கற்றேன்சிற் றம்பலக் கல்வியைக்* *கற்றுக் கருணைநெறி*


*உற்றேன் எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்*


*பெற்றேன் உயர்நிலை பெற்றேன்* 


*உலகில்* *பிறநிலையைப்*

*பற்றேன்* *சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே.!*


*என்னும் பாடலிலே உலகியலில் பிறர் நிலை எவற்றையும் நான் பின் பற்றவில்லை,சிவானந்தப் பற்றையே பற்றினேன் என்கின்றார்*


*இப்படிச் சொன்னவர் எப்படி வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மறபினில் வந்த ஒருவராவார் சன்மார்க்கிகள் சிந்திக்க வேண்டும்*


*வள்ளலார் பாடல்!*


வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட

*மரபினில்யான் ஒருவன்அன்றோ* வகைஅறியேன் இந்த


ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ

இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ


மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு

மகன்அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ


கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்

கொடுத்தருள்நின் அருள்ஒளியைக் கொடுத்தருள்இப் பொழுதே.! 


*என்னும் பாடல் ஆறாம் திருமுறையில் "பிரியேன் என்ற தலைப்பில்" பதிவு செய்துள்ளார், அந்த பாடலை,மேலோட்டமாக படிக்காமல் ஊன்றி படித்தால் அதில் உள்ள உண்மைகள் விளங்கும்* 


*ஆடல் செய்யும் பருவத்தே பாடல் செய்யத் தொடங்குதல்!*


*வீதியிலே விளையாடித் திரியும் அச்சிறு பிள்ளைப் பருவத்திலேயே வள்ளல் பெருமானார்,அருட்பாடல்களைப் பாடும் வல்லமை பெற்று இருந்தார்கள்.பெருமானாரேசொல்லுகின்றார்.*


*உருவத்திலே சிறியேனாகி ஊகத்தில் ஒன்றுமின்றித் தெருவதிலே சிறுகால் வீசி ஆடிடச் சென்ற அந்தப் பருவத்திலே நல் அறிவளித்தே உனைப்பாடச் செய்தாய் என்கின்றார்.* 


*மேலும் பாடும் வகை அணுத்துணையும் பரிந்தறியாச் சிறிய பருவத்தே அணிந்தணிந்து பாடும் வகை புரிந்தாய் என்றும்,ஐயறிவிற் சிறிதும் அறிந்து அனுபவிக்கத் தெரியாது அழுது களித்தாடுகின்ற அப்பருவத்து எளியேன் மெய்யறிவிற் சிறந்தவரும் களிக்க விரும்பி அருள்நெறியில் நடக்க விடுத்தனை என்றும்,ஏதும் ஒன்ற்றியாப் பேதையாம் பருவத்து எனை ஆட்கொண்டு எனை உவந்தே ஓதும் இன்மொழியால்(தமிழ் மொழி) பாடவே பணித்த ஒருவனே என்றும்*


மேலும் *வெம்மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும் மிகச் சிறிய பருவத்தே நினை நமது பெம்மான் என்றடி குறித்துப் பாடும் வகை புரிந்த பெருமானே ! என்றும்,மேலும் வீதியிலே  விளையாடித் திரிந்த பிள்ளைப் பருவம் மிகப்பெரிய பருவமென வியந்து அருளி அருளாம் சோதியிலே விழைவுறச் செய்து இனிய மொழிமாலை தொடுத்திடச் செய்தணிந்து கொண்ட துரையே என்பன பல சான்றுகளுடன் திருஅருட்பா ஆறாம் திருமுறையில் பாடல்கள் வாயிலாகவும், உரைநடைப் பகுதி வாயிலாகவும் பதிவு செய்துள்ளார்.*


*இந்த உண்மைத் தெரியாமல் வள்ளலார் வாழையடி வாழை என வந்த திருக் கூட்ட மறபில் வந்தவர் என்றும்.திருஞான சம்பந்தர் வள்ளலாருக்கு குரு என்றும்.வள்ளலார் பின்பற்றிய நூல் திருவாசகம் என்றும்,வழிபடும் கடவுள் முருகர் என்றும் திருஅருட்பா பதிப்பித்த வரலாற்று ஆசிரியர்கள் தவறாக பதிவு செய்துள்ளார்கள்* 


*வள்ளலார் பதிவு செய்துள்ளதை கவனிக்கவும்*


*வாலிபப் பருவம் தோன்றுதற்கு முன்னரே,எல்லா உயிர்கட்கும் இன்பந் தருவதற்கு அகத்தும் புறத்தும் விளங்குகின்ற  அருட்பெருஞ்ஜோதி உண்மைக் கடவுள் ஒருவரே உள்ளார் என்று அறிகின்ற மெய் அறிவை விளக்குவித்து அருளினீர் என்று அழுத்தம் திருத்தமாக வெளிப் படுத்துகின்றார்*


*திருக்குறள் வகுப்பு !*


*அப்படியே உண்மை என்று நினைத்தாலும் வடலூரில் திருவாசகம் வகுப்பு நடத்தாமல், அனுக்கத் தொண்டர் வேலாயும் ஐயா அவர்களைக் கொண்டு  திருக்குறள் வகுப்பு வைத்து பாடம் நடத்தச். சொல்லி உள்ளார்,அவற்றில் இருந்து அவை உண்மை அல்ல என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.*


மேலும் சொல்லுகின்றார்! 


*வாலிப்பருவம் தோன்றிய போதே,சைவம்,வைணவம்,சமணம், பவுத்தம் முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும்,அச் சமயங்களிற் குறித்த சாதனங்களும்,தெய்வங்களும்,கதிகளும் தத்துவசித்தி விகற்பங்கள் என்றும்,*


*அவ்வச் சமயங்களிற் பலபட விரிந்த வேதங்கள்,ஆகமங்கள்,புராணங்கள்,சாத்திரங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்தி கற்பனைக் கலைகள் என்றும் உள்ளபடியே எனக்கு அறிவித்து ,அச்சமய ஆசாரங்களைச் சிறிதும் அனுட்டியாமல் தடை செய்வித்து அருளினீர் என்று எல்லோருக்கும் புரிந்து,அறிந்து, தெரிந்து கொள்ளும் பொருட்டு வெளிப் படுத்துகின்றார்,நாம் இன்னும் சமய மதங்களைப் பிடித்து தொங்கிக் கொண்டே உள்ளோம்*.


மேலும் சொல்லுகிறார்.


*வேதாந்தம்,சித்தாந்தம்,போதாந்தம்,நாதாந்தம்,யோகாந்தம்,கலாந்தம் முதலாகப் பலபெயர் கொண்டு பலபட விரிந்த மதங்களும் மார்க்கங்களும்,சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்று அறிவித்து,அவைகளையும் அனுட்டியாதபடி தடை செய்வித்து அருளினீர் என்கின்றார்.*


*நாமும் சாதி சமய மதங்களின் கொள்கைகளை கடைபிடிக்காமல் வள்ளலார் சொல்லியவாறுசுத்த சன்மார்க்க கொள்கைகளைமட்டும் கடைபிடித்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நேரிலே வந்து காட்சி கொடுத்து அருளை வழங்கி, அசுத்த பூமகாரிய தேகத்தை மாற்றி சுத்ததேகம்,பிரணவதேகம்,ஞானதேகம் என்னும் முத்தேக சித்தியைப் பெற்று மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாகி பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோம்* 


*இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது யாதெனில்?*!


*வள்ளல்பெருமான் அவர்களுக்கு தனது சிறுவயது முதலே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் யார்? என்கின்ற  எல்லா உண்மைகளும் தெரியும். மக்களை தன் வசமாக மாற்ற வேண்டும் என்பதற்காகவும்,சமய மதங்களின் பொய்யான கற்பனைக் கதைகளை பொய் என்று தெரிந்து கொள்ளும் பொருட்டும், அவ்வச் சமய மதங்களைப் பின்பற்றுவதுபோல் நடித்து.நம்மை எல்லாம் சமய மதங்களில் இருந்து விடுவிக்கும் பொருட்டு, அவைகளைப் போற்றி பாடுவதுபோல் பல்லாயிரக் கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.*


*இறுதியாக பொய்யானவற்றை பொய் என்று அறிவித்து, உண்மைப் பொது நெறியாம் சுத்த சன்மார்க்க புதிய நன்நெறிக்கு அழைத்துச் செல்கின்றார்*


*வள்ளலார் பாடல்!*


திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்

சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு


வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து

வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்


பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்

பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே


கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்

கண்மையினால் கருத்தொருமித் துண்மை உரைத்தேனே !   


என்னும் பாடலின் வாயிலாக  தெளிவுப் படுத்துகின்றார்


*சிருட்டி நியாயம்!*


*ஆகாசம் அனாதி,அதுபோல் அதற்குக் காரணமான பரமாகாச சொரூபராகிய கடவுள் அனாதி,அனாதியாகிய ஆகாசத்தில் காற்று அனாதி,அனாதியான வெளியில் காற்று எப்படி அனாதியோ,அப்படிக் கடவுளிடத்தில் அருள்சத்தி அனாதியாய் இருக்கின்றது,*


*ஆகாயத்தில் அணுக்கள் நீக்கமற நிரம்பி இருக்கின்றன,அதுபோல் கடவுள் சமூகத்தில் ஆன்மா ஆகாயத்தில் அணுக்கள் சந்தானமயமாய் நிரம்பி இருக்கின்றன,அந்த அணுக்களுக்கு ஆன்மா என்றே பெயராகும்* 


*மேலே கண்ட ஆன்மாக்கள் அபக்குவ பக்குவா ஆன்மா என்று சொல்லப்படும்.இந்த ஆன்மாக்கள் தாவரம்,ஊர்வன,பறவை,மிருகம்,அசுரர்,தேவர்,சாதாரண மனிதர்கள் போன்ற உயிர் இனங்களாகும்,வள்ளல்பெருமான் இறைவனால் வருவிக்கவுற்ற பக்குவ ஆன்மாவாக பிறப்பு எடுத்தவராகும்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

1 கருத்துகள்:

13 ஆகஸ்ட், 2023 அன்று 6:58 PM க்கு, Anonymous Ashok கூறியது…

அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெரும்ஜோதி

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு