திங்கள், 30 ஜனவரி, 2023

வள்ளலாரின் தனிச் சிறப்பு !

 *வள்ளலாரின் தனிச் சிறப்பு !* 


நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்

சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும் - தேவா நின்

பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்

யார்உளர் நீ சற்றே அறை.!


*மனித குலத்தை மாற்றுவதற்காக இயற்கை உண்மை கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வருவிக்க உற்றவர்தான் வள்ளல்பெருமான் என்பதை முதலில் உலக ஆன்மீக சான்றோர்கள்மற்றும் பகுத்தறிவாளர்கள், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்,மற்றும் உயர்ந்த பதவி வகிக்கும் ஆட்சியாளர்கள் அரசியல்வாதிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.*


*மேலும் திருஅருட்பாவை தினந்தோறும் படிப்பவர்களும்,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும்,வள்ளல்பெருமான் உருவப் படத்தை வைத்தும் தினந்தோறும் வழிபடுபவர்களும்,மேலும் தினமும் அன்னதானம் செய்பவர்களுமாகிய எனதருமை சன்மார்க்க அன்பர்களும்,சன்மார்க்க சான்றோர்களாகிய மேடைப் பேச்சாளர்களும் திருஅருட்பாவில் என்ன என்ன கருத்துக்கள் எந்த எந்த இடத்தில் எதற்காக பல பல கோணங்களில்  வள்ளல்பெருமான் சொல்லி உள்ளார் என்பதை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு மேடையில் பேச வேண்டும்*


*ஆளாளாக்கு அவரவர்களுக்கு தெரிந்த உண்மைக்கு புறம்பான ஒவ்வொரு கருத்தைச் சொல்லுவதால் கேட்பவர்களுக்கு குழப்பம் வந்துவிடக் கூடாது ஓர் அளவிற்கு ஒத்த கருத்தாக வேண்டும்*


*சன்மார்க்க அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!*  


*இந்திரியம், கரணம்,ஜீவன்,ஆன்ம ஒழுக்கமும், ஜீவகாருண்ய ஒழுக்கமும் கடைபிடிக்க வேண்டி,சுத்த சன்மார்க்க கொள்கைகளைப்பற்றி சிறந்த பயிற்சி அளிக்க வேண்டும்! அதே நேரத்தில் ஒழுக்கம் நிறைந்து சுத்த சன்மார்க்கத்தை முழுதும் கற்றறிந்து பற்றற்ற வாழ்க்கையை கடைபிடிப்பவர்கள் சுத்த சன்மார்க்கத்தை போதிக்க வேண்டும்.அப்போதுதான் பயிற்சி பெற்றவர்கள் மக்களிடத்தில் சுத்த சன்மார்க்கத்தை முழுமையாக கொண்டு செல்ல முடியும்*


*மரணம் இல்லாப் பெருவாழ்வு !*


*உலகிலே உயர்ந்த கொள்கைகளை சொல்ல வந்தவர் வள்ளலார், அவற்றில் மிகவும் முக்கியமானது,மரணம் அடையும் மனிதன் மரணம் அடையாமல் வாழும் வழியைக் கண்டுபிடித்தவர் வள்ளலார். அடுத்து இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதியை உலகிற்கு தெரியப்படுத்தியவர் வள்ளலார்.*


*கண்டு பிடித்தது மட்டும் அல்லாமல் 51 ஆண்டு காலம் இந்த தமிழ்நாட்டில் பிறந்து வாழ்ந்து மரணத்தை வென்று,தன்னுடைய ஊன் தேகத்தை ஒளி தேகமாக மாற்றிக் (அருள் தேகமாக ) காட்டி வாழ்ந்து கொண்டு இருப்பவர் வள்ளலார் ஒருவரே !*


*வள்ளலார் மறைந்து விடவில்லை ஐந்தொழில் வல்லபத்தை பெற்று அருள் ஆட்சி செய்து கொண்டுள்ளார். சன்மார்க்கிகளின் செயற்பாடுகளை உற்று நோக்கி கவனித்துக் கொண்டுள்ளார்.வள்ளலாரை யாரும் ஏமாற்ற முடியாது,ஏமாற்ற நினைத்தால் ஏமாந்து போவீர்கள். உண்மை தெரியாமல் கண்டபடி வாழ்ந்ததால் இதுவரை தேரினோர் ஒருவரும் இல்லை.*


வள்ளலார் பாடல்!


*அருட்சோதி ஆனேன் என்று அறையப்பா முரசு*


*அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு*


*மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா முரசு*


*மரணம் த விர்ந்தேன் என்று அறையப்பா முரசு.!*


என்று தான் பெற்ற அருட்பெறும் அருட் பேற்றை மேலை கண்ட பாடல் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.


மேலும்...


ஐந்தொழில் நான் செயப்பணித்தாய் அருளமுதம் உணவளித்தாய்

வெந்தொழில் தீர்ந் தோங்கிய நின் மெய்யடியார் சபைநடுவே

எந்தை உனைப் பாடி மகிழ்ந் தின்புறவே வைத்தருளிச்

செந்தமிழின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.! 


என்றும் மேலும்..


துன்பெலாந் தீர்ந்தன சுகம் பலித்தது நினைச்

சூழ்ந்ததருள் ஒளி நிறைந்தே

சுத்த சன் மார்க்கநிலை அனுபவம் நினக்கே

சுதந்தரம தானது உலகில்


வன்பெலாம் நீக்கி நல் வழியெலாம் ஆக்கி மெய்

வாழ்வெலாம் பெற்று மிகவும்

மன்னுயிர் எலாம் களித் திடநினைத் தனை உன்றன்

மனநினைப் பின்படிக்கே


அன்ப நீ பெறுக உலவாது நீடூழி விளையாடுக *அருட்சோதியாம்*

*ஆட்சிதந்தோம்* உனைக் கைவிடோம் கைவிடோம்

ஆணை நம் ஆணை என்றே


இன்புறத் திருவாக் களித் து என்னுள்ளே கலந்து

இசைவுடன் இருந்தகுருவே

எல்லாஞ்செய் 

வல்ல சித்தாகி மணி மன்றினில்

இலங்கும் 

நடராஜபதியே.! 


*மேற்கண்ட பாடல்களில் மரணத்தை வென்றதினால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்ன என்ன பதவிகள் வழங்கியுள்ளார்   என்பதையும் வள்ளல்பெருமான் எந்த உருவத்தில் எந்த சிறப்புடன் விளங்கிக் கொண்டுள்ளார் என்பதையும், அறிவுள்ள அருள் சார்ந்த சுத்த சன்மார்க்கிகள் தெரிந்து கொள்ள வேண்டும்*


வள்ளலார் இறைவனுடன் கலந்து கொண்டார்! 


வள்ளலார்  மறைந்தோ! காணாமலோ! மற்றவர்கள் சொல்வதுபோல் இறந்தோ! மற்றவர்களால் கொலை செய்யப்பட்டோ போகவில்லை.


*வள்ளலாரை யாரும் தொடமுடியாது,அவர் அருகில்  யாரு உட்காரமுடியாது, நேருக்குநேர் அவர் கண்களை எவராலும் பார்க்க முடியாது, நிலம், நீர் அக்கினி காற்று,ஆகாயம், என்னும் ஐந்து பூதங்களும் அவர் மேனியை நெருங்காது, மழை,இடி மின்னல்,புயல் போன்ற இயற்கை செயற்கை ஆக்கிரமிப்புகள் அவரைத் தாக்காது விலகி பறந்து சென்றுவிடும.*


வள்ளலால் பாடல்!


காற்றாலே புவியாலே ககனமத னாலே

கனலாலே புனலாலே கதிராதி யாலே


கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே

கோளாலே பிறஇயற்றும் கொடுஞ் செயல்களாலே


வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்

மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே


ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்

எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார்வீரே.!


என்றும் மேலும்..


ஆராலும் அறிந்து கொளற் கரியபெரும் பொருளே

அம்மே என் அப்பா என் ஐயா என்அரசே


காராலும் கனலாலும் காற்றாலும் ககனக்

கலையாலும் கதிராலும் கடலாலும் கடல்சூழ்


பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப்

படுதலிலாத் தனிவடிவம் எனக்களித்த பதியே


சீராலும் குணத்தாலும் சிறந்தவர்சேர் 

சித்திபுரத் தமுதே என் நித்திரைதீர்ந் ததுவே! 


*மேலே கண்ட பாடல்களில் எதனாலும் எவராலும் அழிக்கமுடியாத தனிவடிவம் ( அருள் ஒளி உடம்பு) பெற்றதை தெளிவாக வெளிப்படுத்துகிறார் வள்ளலார்* 


*இறைவனே வந்து வள்ளலார் உடம்பில் கலந்து கொண்டார்!*


*வள்ளலார் இறுதியாக சத்திய அறிவிப்பு என்ற தலைப்பில்  நான்கு பாடல்கள் இறைவன் அறிவித்த வண்ணம் பதிவு செய்கிறார்! அதில் உள்ள உண்மையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்*


பாடல்கள்! 


1. ஐயன்அருள் வருகின்ற தருணம்இது கண்டீர்

ஐயமிலை ஐயமிலை ஐயன்அடி ஆணை

மெய்யன் எனை ஆட்கொண்ட வித்தகன் சிற் சபையில்

விளங்குகின்ற சித்தன் எலாம் வல்லஒரு விமலன்

துய்யன்அருட் பெருஞ்சோதி துரியநட நாதன்

சுகஅமுதன் என்னுடயை துரைஅமர்ந்திங் கிருக்க

வையமிசைத் திருக்கோயில் அலங்கரிமின் விரைந்தே

மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே.


2.தனித்தலைமைப் பெரும்பதி என் தந்தை வருகின்ற

தருணம்இது சத்தியம்காண் சகதலத்தீர் கேண்மின்

இனித்தநறுங் கனிபோன்றே என்னுளம் தித்திக்க

இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகும் போற்ற

மனித்தஉடம் பிதைஅழியா வாய்மைஉடம் பாக்கி

மன்னியசித் தெல்லாம்செய் வல்லபமும் கொடுத்தே

கனித்தசிவா னந்தமெனும் பெரும்போகம் தனிலே

களித்திடவைத் திடுகின்ற காலையும் 

இங்கிதுவே.


3. சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்

சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்

இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்

இனிவரும் அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்

சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும்

தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்

செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்

திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.


4. *என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார்*

*இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில் அமர் கின்றார்*


*பின்சாரும் இரண்டரை நா ழிகைக்குள்ளே எனது*

*பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்*


*தன்சாதி உடையபெருந் தவத்தாலே* *நான்தான்*

*சாற்றுகின்றேன்* அறிந்திதுதான் *சத்தியம்சத் தியமே*

*மின்சாரும் இடைமடவாய்* *என்மொழிநின் தனக்கே*

*வெளியாகும் இரண்டரைநா ழிகைகடந்த போதே.!* 


*வள்ளலார் தங்கி இருந்த மேட்டுகுப்பம் சித்திவளாகத் திருமாளிகைக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நேரில் வந்து வள்ளலார் உடம்பில் கலந்து பிரியாமல் இருக்கின்றார்என்பதை விளக்கும் பாடல்களே மேலே உள்ள நான்கு பாடல்களாகும்.*


*இப்போது, வள்ளலார் வேறு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வேறல்ல! இருவரையும் பிரிக்க முடியாத அளவிற்கு ஒன்றாகி கலந்து விட்டார்கள். இப்போது யாரை வணங்குவது வழிபடுவது என்பதை சன்மார்க்கிகள் தெளிவுடன் தெரிந்து அறிந்து கொள்ள வேண்டும்.*


*அருட்பெருஞ்ஜோதியை வணங்கினால் வள்ளலார் அதிலே உள்ளார். வள்ளலாரின் உருவ சிலைகளையோ,உருவ படங்களையோ வணங்கினால் அதிலே வள்ளலாரும் இல்லை,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் இல்லை என்பதை அறிவு சார்ந்த சான்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்*


*சன்மார்க்கிகள் இதுவரையில் இருந்த்துபோல் இனியும் வீண்காலம் கழிக்காமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மட்டும் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்*


*வள்ளலார் பாடல்!*


பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பி அருட்சோதி அளித்து என் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்


நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான்பெற்ற நெடும்பேற்றை

ஓதி முடியாது என்போல் இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே! 


*தான் அடைந்த பெரும் பேற்றை அனைத்துலக மக்களும் அடைய வேண்டும் என்று ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் நமக்காக இறைவனிடம்  வேண்டிக் கொள்கிறார்,என்னே பெருங்கருணை வள்ளல்பெருமகனாற்கு!* 


*வள்ளலார் பாடல்!*


இறந்தவரை எடுத்திடும் போ தரற்றுகின்றீர் உலகீர்

இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்


மறந்திருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ நுமக்கு

மறந்தும் இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்


சிறந்திடு சன் மார்க்கம் ஒன்றே பிணிமூப்பு மரணம்

சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே


பிறந்தபிறப் பிதிற்றானே நித்திய மெய் வாழ்வு

பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.! 


*என்கின்றார்.. நாம் உண்மை அறியாமல் மரணம் அடைவதை நினைந்து மிகவும் வேதனையுடன்  அழைக்கின்றார்.வள்ளலார் காட்டிய நேர் பாதையில் தடம்மாறாமல் செல்வோம் மரணத்தை வெல்வோம்*


*இறைவன் திருவருளை முழுமையாக பெற்றவரும், இறைவனிடம் ஐந்தொழில் வல்லபமான ஆட்சியை பெற்று தனிச் செங்கோல் நடத்தும் பொறுப்பை  பெற்றவரும், தனிச்சிறப்பு வாய்ந்தவரும் வள்ளலார் ஒருவரே !*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்*

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு